டென்னிஸ் (1)


   Image result for tennis paintings
எனக்கு ஒரு கெட்ட பழக்கம். எல்லா கெட்ட பழக்கங்களையும் போல யாருக்கும் இதைப் பற்றித் தெரியாது. அதாவது உங்களைத் தவிர. அவனையும் தவிர. சரி, நான் கதைக்கு வருகிறேன். நான் இப்படித் தான் - எதையும் நேரடியாய் சுருக்கமாய் சொல்லத் தெரியாது. கண்ணாடிக் குடுவைக்குள் மாட்டின பட்டாம்பூச்சி போல் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பேன்.

எங்களது கல்லூரி வளாகத்துக்குள் தான் நான் படித்த பள்ளியும் இருக்கிறது. அதாவது இங்கே அதை ப்ரி-யுனிவர்ஸிட்டி என்பார்கள். இங்குள்ள பிரதான வழிகள், ஊடுபாதைகள், இங்குள்ள ஒவ்வொரு மரம், அதில் வசிக்கும் பல விசித்திரமான பட்சிகள், சாலையின் கருமையில் ஈரப் பாதை வரைந்து அசையாமல் செல்லும் பெரிய ரோஸ் நிற நத்தைகள், இங்கு நீண்ட காலமாய் பணி செய்யும் தோட்டகாரர்கள், பணியாளரர்கள், வயதான பேராசிரியர்கள், இதன் நிர்வாகிகள், இங்கு வெயிலின் போது நிழல் பரப்பும் இடங்கள், இங்கு குளிர்மையை நிரந்தரமாய் அதக்கி வைத்திருக்கும் ரகசிய பிரதேசங்கள், இங்கு மாணவர்கள் நடமாட்டம் எதிரிப் படையெடுப்பை போல் அதிகமாகி வரும் நேரம், இங்கு இடங்கள் அனாதரவாய் விடப்படும் சமயங்கள், இங்கு எந்தெந்த இடங்களில் நேரங்களில் மனிதர்கள் தம் நடை மற்றும் உடல் மொழியில் சன்னமாய் உருமாறுவார்கள், இங்கு எப்போது நாய்கள் கூட்டமாய் உறுமியபடி காவலைத் தொடங்கும், எப்போது அவை ஊடுபாவி பரவும் நிழல்களை துரத்திப் போகும், எந்த பாதையில் வந்தால் அவை தொந்தரவு செய்யாது என நான் அணுஅணுவாய் அறிவேன். ஆனால் நான் எப்போதும் சுற்றித் திரியும் வெளிப்புற மனுஷி அல்ல. நான் வெளியே செல்வதே இல்லை.
 கடந்த சில மாதங்களாய் நான் வகுப்பறை, உணவறை, தேநீர் கடைகள் பரப்ப்ப்பட்ட பொதுவிடம் மற்றும் நூலகம்இந்த எளிய எல்லைகளுக்குள் என்னை வகுத்துக் கொண்டிருக்கிறேன். வகுப்புகள் முடிந்த பின் நூலகத்தின் யாரும் கவனிக்காத ஒரு மூலையில் பதுங்கிக் கொண்டு ஒவ்வொரு நூலாய் திறந்து புரட்டி விட்டு யோசித்தும் கனவு கண்டும் பொழுதைப் போக்குவேன். நான் எந்த நூலையும் படித்ததாய் நினைவில்லை. ஆனால் மாலை நான்கில் இருந்து இரவு ஏழு வரை அங்கு தான் அடை இருப்பேன்.
 ஒருநாள் நான் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்த அலமாரி அருகே ஒரு பெண் வந்தாள். அவளது முகத்தின் ஒரு பகுதி மட்டும் நெருப்பில் வெந்தது போல் வெளிறி இளஞ்சிவப்பாய் இருந்தது. அவள் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஒரு மேஜை முன்னால் போய் இருந்தாள். நான் அவளைத் தொடர்ந்து சென்று அவள் எதிரே அமர்ந்தேன். அவள் வாசிப்பதை, அவள் முழங்காலை மெல்ல ஆட்டியபடி அடிக்கடி புன்னகைப்பதை கவனித்தேன். அந்த தழும்புகள் சட்டென அவள் நிமிர்ந்து என்னைப் பார்த்து சிநேகமாய் புன்னகைத்தாள். நான் மெல்லியதாய் பதறினேன். பலவீனமாய் பதில் புன்னகைந்து செய்து விட்டு அங்கிருந்து அகன்றேன். அவள் வாசிப்பதை தொடர்ந்தாள்.
நான் அலமாரியின் பின்னிருந்து அவளை கவனித்தேன். அவள் எழுந்து சென்ற பின் அவள் வாசித்த பக்கத்தில் உள்ள வரிகளை படித்துப் பார்த்தேன். பிறகு மீண்டும் திரும்பினேன். நான் இதற்கு மேல் சொல்லப் போவதில்லை. ஏனென்றால் கதை நீண்டு கொண்டே போகிறது. இந்த சம்பவத்துக்காக நான் இதைக் கூற வரவில்லை. ஆகையால் நாம் சுருக்கமாய் அடுத்த சம்பவத்துக்கு வருவோம். நான் அடுத்தடுத்த நாட்களில் அவளைப் பின்தொடர ஆரம்பித்தேன். இதில் எதையும் நான் திட்டமிடவில்லை. அது என்னை மீறி நடந்தது.
அவள் எந்த வகுப்பு என அறிய முடியவில்லை. அவள் கூட்டமாய் வெளியே வரும் மாணவிகள் மத்தியில் தோன்றி தனியே பிரிந்து நூலகத்துக்குள் செல்வாள். அவளை எந்த வகுப்புகளிலோ தாழ்வாரங்களிலோ நான் கண்டதில்லை. அவளது வருகையும் திரும்பி மறைதலும் எனக்கு மாயமாகப் பட்டது. ஆகையால் நான் அவளைப் பின் தொடர்ந்து அவள் வீடு வரை சென்றேன். முதல் சில நாட்கள் பாதி வழி வரை சென்று விட்டு திரும்பி விடுவேன். ஒருநாள் அவளது வாசல் வரை சென்றேன். பிறகு எதிரே உள்ள கடைக்கு சென்று பழரசம் வாங்கி அருந்தினேன். பிறகு சற்று தூரம் சென்று தெருமுனையில் மறைந்து நின்றேன். நான் எதிர்பார்த்தது போல் அவள் சிறிது நேரத்தில் வெளியே வந்தாள்.
 தனது முகத்தழும்புகளை மறைக்கும் வண்ணம் ஒரு துப்பட்டாவை முகத்தோடு தழைத்து தோள் வரை இட்டிருந்தாள். ஒரு வெள்ளை சட்டையும் நீலப் பாவாடையும் அணிந்து கையில் ஒரு பையுடன் நடந்து வந்தாள். நான் எதேச்சையாய் என்பது போல் அவளைக் கடந்து போனேன். புன்னகைத்தேன். அவள் புருவத்தை லேசாய் உயர்த்தி ஆச்சரியம் காட்டினாள்; தெற்றிப் பல்லை லேசாய் காட்டி முறுவலித்தாள். வீட்டுக்கு வரும் வழியெங்கும் ஒரு அபூர்வமான மலரின் வாசனை என்னை பின் தொடர்ந்த்து. நான் அவ்வப்போது திரும்பிப் பார்ப்பேன். யாரும் இருக்க மாட்டார்கள்.
மறுநாள் நான் அவளைப் பின் தொடர்ந்து துணிச்சலாக அவளுக்கு வெகு அருகாமையிலே சென்றது. அவள் வீட்டுக் கதவை தட்டி விட்டு அது திறக்க உள்ளே சென்று மறைந்தாள். சில நொடிகள் உறைந்து நின்றேன். பிறகு வாயில் கதவை போய் தட்டினேன். மெல்ல மிக மெல்ல. பிறகு உரக்க. அது சட்டென திறந்து வழிவிட்டது.
 என் கண்முன்னே அரை வெளிச்சத்தில் ஒரு பெரிய முற்றம் விரிந்தது. தூசு மண்டிய, மக்குள் பொருட்களின் நெடி அண்டிய இடம். அது ஒரு தாழ்வாரம் போல இருந்தது. அது வீடு அல்ல, அங்கு மனிதர்கள் இல்லை என்பதை ஜீரணிக்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது. உள்ளே சென்று சுற்றுமுற்றும் பார்த்தேன். சுற்றிலும் பெரிய மதிற்சுவர். நிறைய பழைய உடைந்த பொருட்கள் இறைந்து கிடந்தன. ஒரு கிழிந்த பெட்டி, உடைந்த தொட்டில், நிறைய காகிதஙகள், இரண்டு கால்கள் உள்ள மரநாற்காலி, குடை, வைக்கோல் இப்படிஆள் புழக்கமே பல ஆண்டுகளாய் இல்லாதது போன்ற இடம் அது. அந்த மதிற் சுவருக்குள் ஒரே ஒரு வீடு தான் இருந்தது. அதன் வாயிற் கதவில் ஒரு பெரிய துரு பிடித்த பூட்டு தொங்கியது. அவள் இதற்குள் வந்த பின் எங்கே போயிருக்கக் கூடும் என்கிற கேள்வியே எனக்குள் எழ வில்லை. அதற்குள் நான் ஓடி வெளியே வந்து விட்டேன். வீட்டுக்கு செல்லும் வரையில் எனக்குள் சிந்தனையே எழ வில்லை. யாரோ ஸ்டிரா போட்டு எனக்குள் உள்ள உணர்வுகளை, எண்ணங்களை முழுக்க உறிஞ்சி விட்டது போல்.
அடுத்த நாளில் இருந்து அப்பெண்ணை நான் எங்கும் காணவில்லை. அவளை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. நான் கல்லூரி வளாகம் முழுக்க அவளைத் தேடி அலைந்து விட்டு களைத்துப் போய் செம்பூக்கள் தொங்கும் ஒரு பெரிய மரத்தின் அடியில் போய் சாய்ந்தேன். அவள் வீடு வரைச் செல்ல என்னை ஏதோ பயம் தடுத்தது. தோளை தொங்கப் போட்டபடி வீடு திரும்பினேன். என் வீடுள்ள தெரு முனையில் திரும்பிய போது யாரோ என் தோளைத் தொட்ட உணர்வு. அந்த அபூர்வ மலர் வாசனை என்னை மெதுவாய் கடந்து போனது. சில வினாடிகள் நான் ஸ்தம்பித்து நின்றேன்.
ஒருமுறை விளையாட்டுக்காய் என் இயல்பியல் பேராசிரியையை பின் தொடர்ந்தேன். அவருக்கு நாங்கள் எந்திர மனுஷி என பெயரிட்டிருந்தோம். யாரிடமும் ஸ்நேகமோ பரிவோ காட்ட மாட்டார். ராணுவ ஒழுங்குடன் தான் ஒவ்வொன்றையும் செய்வார். அவரைக் கண்டு அஞ்சாதவர்கள் இல்லை. சக ஊழியர்கள் கூட அவரைக் கண்டு ஒதுங்கிச் சென்றார்கள். அவர் எந்திரமா மனுஷியா என எல்லா மாணவர்களுக்கும் குழப்பம் இருந்தது. என்னை ஒருமுறை வகுப்பில் கடிந்து கொண்டார். அன்று மாலை அவரை ரகசியமாய் பின் தொடர்ந்தேன்.
 அவர் உணவகத்தில் சாப்பிடுவதை கதவருகே நின்று கவனித்தேன். அவர் உண்மையில் வீட்டுக்குத் தான் போகிறாரா என அறிய அவருக்குப் பின்னால் சென்று அவரது கார் நிறுத்துமிடம் வரை சென்றேன். அங்கே வந்த மலிவான சேலை அணிந்த சில பெண்களிடம் அவர் தலையை அசைத்தபடி சிரித்து உரையாடினார். அவர்கள் தோட்டத்தில் புற்தரையை பராமரிப்பதை பார்த்திருக்கிறேன். பேராசிரியர் இவர்களிடம் எல்லாம் அளவளாவுவார் என்பதை நம்ப முடியவில்லை. பிறகு அவர்கள் காரின் பின்னிருக்கையில் தம்மை திணித்துக் கொண்டனர். நானும் அவர்கள் நடுவே என்னை நுழைத்துக் கொண்டேன். கரிய சுருள் மயிர்கள் நெற்றியில் தளும்பும் ஒரு பெண் தன் மடியில் எனக்கும் இடம் அளித்தார். அவர்கள் கன்னடத்தில் எதையெதையோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. அவர்கள் நான் பேராசிரியர் சொல்லித் தான் நான் ஏறிக் கொண்டேன் என நினைத்திருக்க வேண்டும். பாதி வழியில் அவர்கள் இறங்கிக் கொள்ள நான் மட்டும் பின்னிருக்கையில் தனித்திருந்தேன். பேராசிரியரின் கண்ணுக்கு நான் படவில்லை என்பது ஆச்சரியம். அவர் வானொலியில் கிஷோர் குமார்  பாடல்களை ஒலிக்க விட்டு கூடவே மெல்லியதாய் பாடிக் கொண்டு சென்றார். “மேரா நஸீபுமே…”
 ஒரு அனாதை இல்ல வளாகத்தில் கார் சென்று நின்றது. நான் சட்டென கீழே குனிந்து பதுங்கினேன். பேராசிரியர் காரில் இருந்து இறங்கி, வளாகத்தில் ஒரு அழுக்கான உதைப்பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் மனம் பறி கொடுத்தது போல் அவர்களைப் பார்த்து நின்றார். ஒரு சிறுவன் சத்தமாய் ஒலியெழுப்பியபடி பந்தை பறித்து தூக்கிக் கொண்டு சுற்றி ஓடுவான். பிற குழந்தைகள் அவனைத் துரத்துவார்கள். அவன் பந்தை கீழே போட்டு விட்டு எதிர்பாராத நொடியில் ஒரு உதை விடுவான். ஒருமுறை பந்து பேராசிரியரிடம் வந்தது. குழந்தைகள் அவர் அருகே வந்து நின்றனர். அவர் பந்தை எடுத்து நீட்டினர். அவர்கள் வாங்காமல் வெறித்துப் பார்த்தபடி அசையாது நின்றனர். பேராசிரியர் பந்தை கீழே வைத்தார். சில நொடிகள் அமைதி. சட்டென அந்த பையன் ஓடி வந்து பந்தை பொறுக்கியபடி காரைச் சுற்றி ஓடினான். குழந்தைகள் அவனைத் துரத்தினார். அவன் மீண்டும் மைதானம் நோக்கி ஓடினான். இது மேலும் இருமுறை நடந்தது.
நான் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கார் பின் கதவைத் திறந்து காற்றில் வழுக்கி இறங்கி குதிகால் படாமல் சிறிது தூரம் நடந்தேன். பிறகு திரும்பி நடந்து பேராசிரியரின் எதிர் திசையில் அவரை நோக்கி நடந்தேன். அவரை எதிர்கொண்டதும் வணக்கம் வைக்க வேண்டும். “நீயா இங்கேயே? என்ன பண்ணுகிறாய் இங்கே?” என ஆச்சரியமும் குழப்பமுமாய் கேட்பார். நான் உடனேஇங்கே எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வேலையில் இருக்கிறார். பார்க்க வந்தேன். கூடவே எனக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். ஆகையால்…” என ஒரு வசனத்தை சொல்லிப் பார்த்து நாவில் உருட்டிக் கொண்டு நடந்தேன். ஆனால் அவர் எதிரே வந்ததும் அவர் என்னை பொருட்படுத்தவே இல்லை. நானாகவே வணங்கினேன். அப்போதும் வியப்பின்றி வெறுமனே ஒரு தலையசைவும் என்னை கடந்து விட்டார்.
நான் வாயிற் கதவைத் திறந்து வெளியே நடந்தேன். சட்டென என் கையில் ஒரு தொடு உணர்வு. அப்பையன் என் கையை பற்றிக் கொண்டு கூட நடந்து வந்தான். கையை உதறத் தோன்றினாலும் மனம் வராமல் அவனுடனே நடந்தேன். இன்னொரு கையில் உதைப்பந்தை அணைத்திருந்தான். வீட்டுக்குச் சென்ற போது மின்சாரம் இல்லை. அம்மா கையில் மெழுகுவர்த்தியுடன் வரவேற்றாள். என்னுடன் அவன் படுக்கையறை வரை வந்தான். மேலே தூக்கி விட்டு என் அருகே தூங்க வைத்தேன். திரும்பிப் படுத்து பந்தை அணைத்தபடி உறங்கினான். நள்ளிரவில் எழுந்து கட்டிலுக்குக் கீழே படுத்துக் கொண்டான்.
தொடர்ந்து சில நாட்கள் நான் தனித்து நடக்கையில் அவனது பிஞ்சு விரல்களின் தொடு உணர்வு என்னை விசை போல் இழுத்துச் செல்வான் அவன்.

Comments