கசாப்பு கடைக்காரர் - ஆகா ஷாஹித் அலி


Image result for agha shahid ali

ஜமா மஸ்ஜிதின் அருகில் உள்ள
அந்த சந்தில்,
அவர் கிலோ கணக்கில் கறியை
நாளிதழ் தாளில் பொட்டலம் கட்டிட,
அவரது மணிக்கட்டில்
செய்தி மை படிகிறது,
அவரது உள்ளங்கையில்
செய்தி வரிகள் ஈரமாய் படிகின்றன:


அவரது விரல் நுனியில்
குருதியாய் படியும் உருது -
அது அவர் நாவில் சரளமாய் உருளும்,
கத்தியால் கத்தி மீது
கூர் தீட்டப்பட்ட மொழி அவருடையது.

அவர் பண்டிகை ஆடுகளை
 துண்டாடுகிறார், தோலை நாய்களுக்கு
வீசுகிறார்.

புன்னகைத்தபடி நான் காலிபின் ஒரு வரியை
சொல்கிறேன்; அவர் ஈரடியை
நிறைவு செய்கிறார், புன்னகை செய்தபடி
மிர்ரிடம் இருந்து ஒரு வரியை ஒப்பிக்கிறார்.
நான் அந்த ஈரடியை முடித்து வைக்கிறேன்.

அவர் எனக்கான விலா எலும்புகளை பொதிகிறார்.
நான் காசை நீட்டுகிறேன். பாக்கி சில்லறை
எங்களிடையிலான பணிவன்பை மூட்டமாக்கின்றன,
எங்களது சொற்றொடர்கள் பாதி அசையில் முறிந்து போகின்றன,

காலிப்பின் கஸல்கள் ஓசை ஒழுங்கு துறந்து தனியாகின்றன.

(தமிழில் – ஆர். அபிலாஷ்Comments