வெகுஜன இலக்கியம் ஏன் காலமானது?


 Image result for கேபிள் டிவி
பாலகுமாரன் குறித்த என் கட்டுரைக்கு முகநூலில் வந்த எதிர்வினைகளில் ஒன்றில் இந்த கேள்வி எழுந்தது. ஏன் வெகுஜன இலக்கியம் தன் மணிமகுடத்தை துறந்தது? ஏன் பாலகுமாரன், ராஜேஷ்குமார், சிவசங்கரி, பட்டுக்கோட்டை பிரபாகர்களின் பொற்காலம் முடிவுக்கு வந்தது? முத்தையா வெள்ளையன் என்பவர் இக்கேள்வியை எழுப்பி இருந்தார். இதை ஒட்டின விவாதம் சுவாரஸ்யமானது என்பதால் இங்கு பகிர்கிறேன்.


முத்தையா வெள்ளையன்:

ஒரு சின்ன கருத்து பரிமாற்றம்: அன்றைக்கு இருந்த வணிக பத்திரிகைகள் இன்றும் சில இருக்கின்றன.அவை புஷ்பா தங்கதுரை, பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, அனுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதி இவர்கள் வரிசையில் பாலகுமாரனை சேர்த்தார்கள். சிறுபத்திரிகையிலிருந்து வெகுஜன பத்திரிகையில் வெற்றிகரமாக வலம் வந்தார் பாலகுமாரன். இது பாலகுமாரனுக்கு அடுத்து வந்த தலைமுறையினருக்கு ஏன் வாய்க்கவில்லை என்பது ஆய்வுக்குரிய விஷயம்.
இதில் பிரபஞ்சன், எஸ்.ரா, ஜெயமோகனும் அடக்கம். இதில் விதிவிலக்கு ஜெயகாந்தனும் தனுஷ்கோடி ராமசுவாமியும்.
மேலும் காதலும் வாழ்கையும் மாறிவிட்டது. ஊருக்கு ஒரு அக்கா எப்படியாவது காதல் ஜோடிகளை சேர்த்து வைப்பார். இன்று அந்த அக்காக்களை காணோம். காதல் தோல்வியால் தாடி வளர்த்து அவரும் கஷ்டப்பட்டு ஊரையும் குடும்பத்தையும் கஷ்டபடுத்தும் அண்ணன்களை இன்று காணவில்லை. வணிகம் உலகமய வாழ்கையை எப்படி புரிந்து கொள்வது என்பதில் எழுத்தாளர்கள் காணமல் போயினர். இந்த கருத்து சரியாக இருக்கலாம். தப்பாகவும் இருக்கலாம்.

ஆர். அபிலாஷ்:

வெகுஜன இலக்கியம் காணாமல் போனதற்கு.ஒரு நல்ல காரணத்தை ஜெ.மோ தன் “நவீன தமிழிலக்கிய அறிமுகம் நூலில் சொல்லி இருப்பார். அது கேபிள் டிவியும் சீரியல்களும். வெகுஜன நாவல்கள், பாக்கெட் நாவல்கள், தொடர்கதைகள் ஒரே பொழுதுபொக்கு சாதனமாய் ஒரு காலத்தில் இருந்தன. தொண்ணூறுகளில் கேபிள் டிவி படையெடுத்ததும் டிவி தொடர்கள், சினிமா, பாடல் ஒளிபரப்புகள் இந்த பொழுதுபோக்குப் பொறுப்பை எடுத்துக் கொண்டன. தொடர்கதை எழுத்தாளர்கள் சினிமாவுக்கும் டிவி தொடர்களுக்கும் எழுதச் சென்றனர். இது ஜெ.மோவின் தரப்பின் சுருக்கம்.
 ஆனால் வெகுஜன இலக்கியத்தின் வீழ்ச்சிக்கு து மட்டுமே காரணமா எனத் தெரியவில்லை. மேற்கில் இன்னும் வெகுஜன எழுத்து தழைக்கிறது. ஒருவேளை இங்கு ஒப்பீட்டளவில் வெகுஜன எழுத்துக்கான வாசகர்களே குறைவு என்பது காரணமோ?
வாசிப்பின் மீது ஈர்ப்பு கொண்ட, மதிப்பு கொண்ட சமூகம் அல்ல தமிழ் சமூகம். கேரளாவுடன் ஒப்பிட்டாலே இதை நன்கு உணரலாம். நான் இங்கு ஆங்கில வகுப்பில் வைக்கம் பஷீரைக் குறிப்பிட்டால் மலையாளி மாணவர்கள் பரிச்சயமாய் தலையசைக்கிறார்கள். அவர்களுக்கு பஷீர் பற்றி சொல்ல சில வார்த்தைகள் இருக்கின்றன. பஷீரின் ஒரு கதையையாவது படித்திருக்கிறார்கள். ஆனால் புதுமைப்பித்தனைக் குறிப்பிட்டால் ஒரு தமிழ் மாணவர் கூட படித்திருப்பதில்லை. இது கூட பரவாயில்லை. நான் சென்னையில் குருநானக் கல்லூரியில் பாடம் நடத்திய போது இது நடந்தது: ஒரு வகுப்பில் “தந்தைப் பெரியாரைத் தெரியுமா?” எனக் கேட்டேன். ஒரு மாணவனுக்குக் கூட பெரியாரைத் தெரியவில்லை.
தமிழகம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது.
வெகுஜன இலக்கியவாதிகள் ஆண்டு வந்தது குண்டூசி நுனி இடத்தைத் தான். அதையே அவர்கள் இழந்தார்கள்.
இன்னொரு விசயம: நீங்கள் குறிப்பிட்டுள்ளது  போல ஜெமோ, எஸ்.ரா போன்றோர் வெகுஜன இலக்கியம் பக்கம் நகர விரும்பியதாக தெரியவில்லை. அவர்கள் ஓரளவு பெரும் வாசக தரப்புக்காக தம்மை இன்னும் லகுவாக்கி இருக்கலாம். அவ்வளவே! மற்றபடி வெகுஜன பரபரப்பு நாவல்கள் எழுத அவர்கள் முயலவில்லை. அவர்கள் முகநூல் போன்ற மக்கள் தொடர்பு சாத்தியங்களில் இருந்து கூட விலகியே இருக்கிறார்கள். முகநூலில் இருந்து உருவாகி வந்த சில இடைநிலை எழுத்தாளர்களே இன்று பாலகுமாரன், சிவசங்கரியின் இடத்தை எடுத்துக் கொள்கிறார்கள். ஜெ.மோ, எஸ்.ரா போன்றோர் ரெண்டாயிரத்துக்குப் பின் பிரசுர சாத்தியங்கள் வலுவான நிலையில் அதிக வாசகர்களைப் பெற்றனர். இடைநிலை நூல்களில் இருந்து தீவிர இலக்கியம் நோக்கி நகர்ந்தவர்கள் இவர்கள். இவர்கள் பொழுதுபோக்குக்காக ஜெ.மோ, எஸ்.ராவை நாடி வரவில்லை. இதை அவர்கள் அறிவார்கள்.
 ஆனால் சற்று எளிதான மொழியில் தீவிர சமாச்சாரங்களை இந்த வாசகர்கள் நாடுகிறார்கள். ஆக கடந்த பத்தாண்டுகளில் நமது தீவிர இலக்கிய எழுத்தும் சற்றே லகுவாக படிக்க எளிதாக வாசகனிடம் நேரில் பேசும் பாணியில் மாறி உள்ளது. ஜெ.மோவின் “அறம்”, எஸ்.ராவின் “எனதருமை டால்ஸ்டாய்”, “கதாவிலாசம்” போன்ற நூல்களை உதாரணம் காட்டலாம்.

Comments