அறக்கட்டளை அரசியல்


ஒரு நண்பர் தனக்குத் தெரிந்த ஒரு அனாதைக் குழந்தைக்கு பண உதவி தேவைப்படுகிறது, உதவ முடியுமா எனக் கேட்டார். நானே தத்தளிக்கும் நிலையில் இருப்பதால் அவரை ஏதாவது ஒரு அறக்கட்டளையை நோக்கி திசை காட்டலாம் என உத்தேசித்தேன். அப்போது தான் அந்த பெரும் குழப்பம் என்னை சூழ்ந்தது. எனக்குத் தெரிந்து இப்படி அறக்கட்டளை நட்த்துபவர்கள் நான்கைந்து பேர் இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு பேரும் தெளிவாக வாய்க்கால் வரப்பு வகுத்திருக்கிறார்கள். பெண்களுக்கு மட்டும் உதவுகிறவர்கள், நோயுற்ற குழந்தைகளுக்கு மட்டும் ஆதரவு தருபவர்கள், குறிப்பிட்ட சமூதாயத்தை சேர்ந்தவர்களுக்கான தனித்த அறக்கட்டளை, பொறியல், மருத்துவம் படிக்கும் மத்திய வர்க்க, ஏழை மாணவர்களுக்கு மட்டும் கருணைக் கண் திறப்பவர்கள் என்று. இந்த பாகுபாடுகளுக்குள் அந்த அனாதைக் குழந்தை வராததால் ஒன்றுமே செய்ய முடியாது.

எனக்கு அப்போது சில வருடங்களுக்கு முன் துக்ளக்கில் பார்த்த விளம்பரம் ஒன்று நினைவுக்கு வந்தது: கறவை தீர்ந்த வயதான மாடுகளை பராமரிக்கும் தொழுவங்களை நடத்தி வரும் தொண்டு நிறுவனம் ஒன்றின் விளம்பரம் அது; நூறு ரூபாயில் இருந்து லட்சம் வரை மாதாமாதம் நன்கொடையாக அளிக்கலாம். அதைக் கொண்டு மாடுகள் மிகவும் சௌகர்யமாய் பராமரிக்கப்படும். ஆனால் இவர்கள் எருமை மாடுகளை கவனிக்க மாட்டார்கள். நாய்க்கோ பூனைக்கோ அடிபட்டாலோ ஆதரவின்றி தவித்தாலோ இவர்களிடம் செல்ல முடியாது. அதற்கு புளூகிராஸ் போல வேறு நிறுவனங்கள் உண்டு. மிருக நல போராளிகளும் இப்படி தனி வகை. ஒருவர் சாலையில் அடிபட்டுக் கிடந்தால் இவர்களின் ஆம்புலன்ஸை அழைக்க முடியாது. இவர்களிடம் உள்ள ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டு, அனுபவம் மற்றும் பயிற்சியைக் கொண்டு உணவின்றி, ஆதரவின்றி, காயம்பட்டு தவிக்கும் மனிதர்களுக்கும் உணவளிக்கவும் முதலுதவி செய்யவும் முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள்.
 அதேநேரம், அறக்கட்டளை நபர்களைப் போல நிர்தாட்சண்ணியமாய் மறுக்க மாட்டார்கள். நெகிழ்வான இரக்கமிக்க மனிதர்கள் இவர்கள். முடிந்தால் மனிதர்களுக்கும் சோறிடுவார்கள்; பரிவு காட்டுவார்கள். அதே நேரம் இவர்களுக்கு இயல்பிலேயே மனிதர்கள் மீது அவநம்பிக்கை உண்டு. மிருகங்கள் மீது நன்னம்பிக்கை அதிகம் உண்டு. ஆகையால் மனிதர்களை விட மிருகங்களை இன்னும் லகுவாக நெருங்கி உதவுவார்கள். தினமும் அரிசியுடன் கறிக்கடையில் மீதமாகும் தோல், கோழிக்கால் ஆகியவற்றை வேகவைத்து தெருத்தெருவாய் போய் ஐம்பதில் இருந்து நூறு நாய்களுக்கு உணவளிப்பவர்கள் சென்னையில் உண்டு. எத்தனை தெருக்களில் பசித்தலையும் மனிதர்களுக்கு இது போல் உணவளிக்கும் தனிமனிதர்கள் உண்டு?
இப்படி தொண்டு செய்கிறவர்கள் மீது எனக்கு அளப்பரிய மரியாதை உண்டு. இறைவனுக்கு நிகரானவர்கள் இவர்கள். ஆனால் துயரப்படும் ஜீவன்களுக்கு உதவுகையில் நாங்கள் இன்னின்னாரைத் தான் பொருட்படுத்தி ஆதரவளிப்போம் என பாகுபாடு காட்டும் தருணத்தில் இவர்களும் சாதாரண அற்ப மனிதர்கள் ஆகி விடுகிறார்கள்.
வேதனைப்படும் ஜீவன்கள் எல்லாருமே ஒன்று தானே? உங்களிடம் பத்து லட்சம் தொண்டு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்ட தொகையாக இருக்கிறது. அதை அதை புற்றுநோய் பாதிக்கப்பட்டோருக்கு மட்டுமே அளிப்பேன், மாரடைப்பு சிகிச்சைக்காக எல்லாம் தர மாட்டேன், ஏனென்றால் என் தாய் புற்றுநோயால் தான் இறந்தார், மாரடைப்பால் அல்ல என ஒரு தொண்டாளர் கூறுகிறார் என்றால் அது சிறுபிள்ளைத்தனம் என்றே எனக்குத் தோன்றுகிறது. பெரும்பாலானோர் இப்படித் தான் நிபந்தனை விதிக்கிறார்கள்.
 இது ஒரு வசதி கருதி எனும் வாதத்தை நான் ஏற்கவில்லை. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? பரிவுக்கும் உதவும் கனிவுக்கும் எங்கு யார் தாழ்ப்பாள் இட்டு தடுத்திட முடியும்? அதற்கு பாகுபாடுகள், வகைமைகள், விதிமுறைகள் எதற்கு சொல்லுங்கள்?
நான் ஒரு ஆசிரியனாக ஆயிரக்கணக்கான மாணவர்களை பயிற்றுவித்திருக்கிறேன். இன்னின்னோர் தான் என் வகுப்புக்கு வரலாம் என நான் நிபந்தனை விதிப்பதில்லை. பல சமயங்களில் என் வகுப்பில் இல்லாதோர் கூட வந்து பங்கேற்கிறார்கள். கடந்த பத்து வருடங்களாய் நான் எழுதி வருகிறேன். இந்த சமுதாயத்தை சேர்ந்தோர், இப்படியான கருத்தியல் கொண்டோர் தான் என்னைப் படிக்கலாம் என நான் யாருக்கும் தகுதி கோருவதில்லை. என் முதல் நாவல் மாற்றுத் திறனாளி பெண்ணைப் பற்றியது. அதை மாற்றுத்திறனாளிகள் மட்டுமே படிக்க வேண்டும் என நான் கோருவதில்லை. தலித் படைப்பாளிகள் தம்மை தலித் வாசகர்கள் தாம் வாசிக்கலாம் என கூறுவதில்லை. இமையம் போன்றோர் தாம் தலித் எழுத்தாளரே அல்ல; மனிதர்கள் அனைவரும் ஒன்று என்கிறார்கள். இலக்கிய, பண்பாட்டு, அரசியல் தளங்களில் மூன்றாம் பாலினத்தோர், இஸ்லாமியர், பெண்கள் போன்ற ஒடுக்கப்பட்டோர் யாரும் தனித்தில்லை; சமூகத்தில் நல்லுணர்வு கொண்டோர் அவர்களுடன் கைகோர்த்தே நிற்கிறார்கள். இந்த சமூகத்தில் பயன்மிக்க பல விசயங்கள் இப்படி அனைவருக்குமானவையாகவே உள்ளன. உதவியைத் தவிர.
மனிதர்கள் இயல்பில் துயரும் பிறஜீவன்களைக் கண்டு உள்ளம் கசியும் இயல்பினர் தாம். அடுத்து என்ன செய்வது, எப்படி உதவுவது எனத் தான் அவர்களுக்குத் தெரிவதில்லை. அறக்கட்டளை இப்படியானவர்களால் தாம் துவங்கப்படுகின்றன. ஆனால் அறக்கட்டளையாக நிறுவனமயமாகும் போது இதே மனிதர்கள் சட்டத்துக்கு மேல் சட்டமாய் அடுக்குகிறார்கள். கருணையும் அன்பையும் விட கொள்கையும் நோக்கமும் விதிமுறையும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. அரசாங்கத்தின் ஆடுவளர்க்கும் திட்டம் போல இந்த தொண்டு பணிகளும் மாறுகின்றன.
எனக்கு இந்த அரசியலுடன் உடன்பாடில்லை. நான் என் இதயத்தைக் கேட்டு செயல்படும் எளிய மனிதன். என்னால் இவர்களை புரிந்து கொள்ள முடியவில்லை!

Comments

நிசப்தம் Va.Manikandan-ஐ தொடர்பு கொண்டாள் உதவி கிடைக்கும்.