டென்னிஸ் (5)


Image result for tennis paintings

விடுமுறை முடிந்த பிறகு நான் அந்த டென்னிஸ் ஆடுகளத்துக்கு செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தேன். அவனை எங்கும் காணவில்லை. அந்த எண்ணில் அழைத்தால் பயன்பாட்டில் இல்லை. அவன் நண்பர்களும் இப்போது பயிற்சிக்கு வருவதில்லை.
அவனைப் பற்றி விசாரிப்பதோ அவனைத் தேடுவதோ அர்த்தமற்றது என நினைத்தேன். ஒருவேளை நானாக தேடிச் சென்று பின் தொடர்ந்து உறவை ஏற்படுத்தினது தான் தவறோ? நான் இனி இயல்பாக எல்லாரையும் போல் இருக்க வேண்டுமோ? இந்த எண்ணம் என்னை தொடர்ந்து அலைகழித்தது.

இப்போது வெகுவாக நான் மாறி விட்டேன் என என் வகுப்புத் தோழிகள் சொல்கிறார்கள். வீட்டிலும் என் பொறுப்பான நடத்தையை பாராட்டுகிறார்கள். பொருத்தமாய் ஆடை அணிகிறேன். முடியை நீளமாய் வளர்க்க தொடங்கி விட்டேன். அடுத்தவர் கண்ணை நோக்கி துணிச்சலாய் பேசுகிறேன். தேவையின்றி யாரையும் எதையும் கவனிப்பதில்லை.
ஆனாலும் ஒரு நாள் எனக்கு சம்மந்தமில்லாத வேறு துறை பேராசிரியரின் பின்னால் நான் சென்று எதையோ பேச முயன்றிட அவர் குழம்பி விட்டார். இன்னொரு முறை பரீட்சை நாளன்று தவறான பேருந்து ஏறி தொலைவாய் சென்று, அங்கிருந்து திரும்ப பேருந்து கிடைக்காமல், வாடகைக் கார் பிடித்து கல்லூரி வந்தால் பரீட்சை முடிந்து விட்டது. இதற்கு நான் முன்பிருந்தது போல் ஊர் பொறுக்குவதும், யாரையாவது துரத்துவதுமே மேலானதோ? இப்படி மாற்றி மாற்றி குழப்பியபடி ஒரு மாலை ஆடுகளத்தருகே ஒரு ஹாட் சாக்லேட்டுடன் இருந்து யோசித்தேன். புத்தகத்தை திறந்து வைத்து நடந்து முடிந்தவற்றை எண்ணி கனவு கண்டேன்.
 அப்போது அந்த மஞ்சள் டென்னிஸ் பந்து என் காலடிகளை நோக்கி உருண்டு வந்தது.
Comments