“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (5)


 Image result for haiku basho
ஹைக்கூவில் எப்படி கருத்து சொல்வது கூடாதோ அப்படியே ஒப்பீடு, உருவகம் ஆகியவற்றுக்கும் இடமில்லை. எந்த தரப்பையும் எடுக்காமல், எதையும் வலியுறுத்தாமல், நியாயப்படுத்தாமல், விளக்காமல் தர்க்க மொழியில் இடமில்லாத ஒரு தூய காட்சியை அல்லது ஒரு படிமத்தை சித்தரித்து விட்டு இடத்தை காலி பண்ணுவதே ஒரு சிறந்த ஹைக்கூவின் பண்பு.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜம்ஸித்தின் ஹைக்கூ கவிதைகளுக்கு இப்போது வருவோம். அவர் எனக்கு அனுப்பித் தந்த ஹைக்கூக்களில் கச்சிதமானவையும் உண்டு; நவீன கவிதையின் குறைகள் உடையனவும் உண்டு, முதலில் அவரது சிறந்த ஹைக்கூக்களை பார்ப்போம்.

சிறந்தவை:

கோடை மதியம்
 குளிர்ச்சி தந்தது
 தூண்டில் ஊசி

*இக்கவிதை ஒரு விளக்க முடியாத அனுபவத்தை தருகிறது. நீருக்கடியில் மீனின் வாய் வந்து கவ்வுவதற்காக காத்துக் கிடக்கும் தூண்டிலா அல்லது கவிதைசொல்லி கையில் வைத்து உணர்கிற தூண்டிலா? நமது அகத்தின் அதர்க்கமான, பகுத்தறிவை மீறிச் செல்கிற பரிமாணத்தை சுட்டுகிறது என்பதைத் தாண்டி இதை நாம் விளக்க இயலாது. இதன் சர்ரியல் அனுபவத்தை ரசித்தேன்.

பாதி அப்பிள்
ஒரு சிலந்தி ஏறி
 இரவுக்குள் இறங்கும்

·       மிக காட்சிபூர்வமானது இக்கவிதை. பாதி கடித்த ஆப்பிள் பகலின் ஒரு துண்டு போல் தெரிகிறது. அங்கிருந்து சிலந்தி இருளுக்குள் இறங்குகிறது. ஆனால் சிலந்தி இரவில் தான் இருக்கிறது. இரவில் இருளுக்குள் தான் பயணிக்கிறது. ஆயினும் அது பகலில் இருந்து இரவுக்குள் காலடி எடுத்து வைக்கிற சித்திரம் வருகிறது இங்கு. பகலைப் போன்ற பாதி கடித்த ஆப்பிள் எனும் மறைமுகமான ஒப்பீடு இதில் வருவது ஒரு சிக்கல் தான் எனினும் அவ்வளவு உறுத்தலாய் அது இல்லை. முதல் கவிதையைப் போன்றே இதிலும் ஒரு முரண் வருவதை நீங்கள் கவனிக்கலாம். இது ஹைக்கூவில் முக்கியமானது.
வறள் சேற்று நிலம்
வரிசையாக அடிமாடுகளின்
 கால் தடம்
·       தமிழக வறட்சியை நினைவுறுத்தும் சித்திரம். அடிமாடுகள் எங்கே செல்கின்றன? அதுவும் வரிசையாக? கசாப்புக்காக கேரளா நோக்கியா? ஆனால் சத்தமான சமூக விமர்சனம் இல்லை என்பது பாராட்டத்தக்கது. இது ஒரு கச்சிதமான ஹைக்கூ அல்ல. ஆனாலும் இதன் மௌனம் என்னை கவர்ந்தது.

Comments