பாலகுமாரன் எனும் பேரலை (5)


 Image result for balakumaran
பாலகுமாரனின் தனிச்சிறப்பு முந்தைய பதிவில் நான் குறிப்பிட்ட ந்த உணர்வுவேகமும் அதில் தன்னை இழந்து கரைந்து ஒன்றிலிருந்து அதற்கு முற்றிலும் மாறுபட்ட இன்னொன்றாகிப் போகும் லாவகமுமே, அப்படி ஆவதற்கு தன்னையே முரண் கொள்வதாகும் என்பது குறித்த துணிச்சல் வேண்டும். பாலகுமாரனிடம் அத்துணிச்சல் நிறைய இருந்தது.

சுயமுரண்களையும், நேர்த்தியாய் தொகுக்க முடியாத மனத்தின் பாய்ச்சல்களையும் பாலகுமாரன் வடிகட்டுவதோ தர்க்க வடிவுக்குள் கொண்டு வருவதோ இல்லை. தமிழின் உன்னதமான இலக்கிய படைப்பாளிகள் கூட இப்படி துணிச்சலாய் பாதாளம் நோக்கி கண்ணை மூடிப் பாய்ந்ததில்லை. (இப்படியான இருளில் விளக்கின்றி நடக்கும் மொழியை பிரஞ்சு தத்துவஞானியும் பின்அமைப்பியல் பெண்ணியவாதியுமான சிக்ஸு பெண் மொழி என்றார். மனத்தை வகிடெடுக்காமல் கலைந்த கூந்தலாய் காட்டுவது, தான் சொன்னதை தயக்கமின்றி அடுத்த நொடி மீறிச் செல்லும் விதமாய் ஒரு பாத்திரத்தை பேச அனுமதிப்பதே படைப்பூக்கமிக்க மொழி, அதுவே பெண்ணின் இயல்பான மொழி என்றார் சிக்ஸு. பாலகுமாரனின் புனைவுகளில் பல இடங்களில் இந்த மொழி முகம் காட்டுகிறது.)
இந்த பிரவாகமான மொழியை பாலகுமாரன் விட்டேந்தியாய் நின்று மனிதர்களை விவாதிக்கவும் சித்தரிக்கவும் பயன்படுத்தவில்லை. கதாகாலட்சேப பாணியை அவர் பின்பற்றினார். தொடர்ந்து நாவலுக்குள் பேசிக் கொண்டே போனார். பாலகுமாரனுக்குள் இருந்த தெளிவான அறிவு முதிர்ந்த ஆண் விழிக்கும் போது இந்த பேச்சு அலுப்பூட்டியது; ஆனால் அவருக்குள் ஆர்ப்பரித்து அடங்கும் பெண்மை விழிக்கும் போது இந்த பேச்சு ஆர்வமூட்டியது; உண்மைக்கு வெகுஅருகில் அவர் கதைகளை இது நகர்த்தியது.
பாலகுமாரன் தன் நாவல்களில் தன் பாத்திரங்கள் வழியாக நம்மிடம் மட்டும் பேசவில்லை; சிலநேரம் ஒரு பாத்திரம் மூலம் இன்னொரு பாத்திரத்திடம் பேசினார். தடுக்கி விழப் போகிறவரை தாங்கி நிறுத்தினார்; ஆறுதல் செய்தார்; அறிவுரைத்தார். ஆனால் இது வெறும் உபன்யாசக் கதையாகவும் அவர் நாவல்களை மாற்றவில்லை.
அவரது வாழ்க்கைப் பார்வையை அவர் நம் காதுவலிக்க திரும்ப திரும்ப நாவலில் சொல்வார். ஆனால் அதற்கு நேர்மாறான கருத்துக்களையும் தன்னையறியாமல் சித்தரிப்புகளினூடே வலியுறுத்துவார். “நீ இனி குழம்பக் கூடாது; இப்படியே உணர்வலையில் தட்டுத்தடுமாறி உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் அழிக்கக் கூடாது. நிதானம் கொள்.” என பாத்திரங்களை நோக்கி சொல்வார். ஒரு பாத்திரத்தைக் கொண்டு இன்னொரு பாத்திரத்துக்கு அறிவுரை சொல்வார். அப்பாத்திரமே தனக்குத் தானே அறிவுரைக்கும்.
மெர்க்குரிப் பூக்களில்தகாத உறவு கேடானது எனும் சேதி உள்ளது. திருமணமான சியாமிளியுடன் ரகசிய காதலுறவில் இருக்கிறான் சங்கர். இந்த உறவு சாத்தியப்படாது என புரிந்ததும் இருவரும் பிரிகிறார்கள். அதுவே ஆரோக்கியமானது என பேசுகிறார்கள்; பாலகுமாரனும் அதை நேரடியாய் வலியுறுத்துகிறார்தாம்பத்யம் நிலையானது; உறுதியானது என்கிறார். சங்கர் தன்னைப் பிரிந்து வெறுத்து ஒதுக்கும் போது சியாமிளி எனக்கும் இனி இந்த உறவு தேவையில்லை என முடிவெடுக்கிறாள். ஆனால் அடுத்த நிமிடமே, காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருக்கும் அவனைத் தேடிச் சென்று உதவுகிறாள். அங்கே அவன் தன்னை அவமதிக்க அவமதிக்க அவள் துன்புறுகிறாள், ஆனால் அவனை மறக்க முடியாது மீள மீள அவனிடமே செல்கிறாள்.
அவன் சியாமிளியை மறக்க அரசியலில் ஈடுபடுகிறான். அவசரமாய் ஒரு திருமணம் செய்து கொள்கிறான். தன் மனைவியை கனிவாய் ஆதுரமாய் நடத்த வேண்டும், இனிமேல் இவள் தான் எனக்கு எல்லாம் என நினைக்கிறான்.
 சியாமிளியும் தான் அதுவரை வெறுத்து வந்த கணவனை இனி பிரியமாய் புரிதலுடன் நடத்த வேண்டும் என முடிவெடுக்கிறாள். செயல்படுத்துகிறாள்.
ஆனால் இருவரின் மனமும் இந்த புதிய சரியானவாழ்க்கையில் இல்லை; சங்கரையும் சியாமிளியையும் இப்போது ஒரு வெறுமை சூழ்கிறது என்பதை பாலகுமாரன் குறிப்புணர்த்துகிறார்.
அவர்கள் எடுத்த முடிவே சமயோஜிதமானது; பிறரது நலனையும் கவனத்தில் எடுத்துக் கொண்ட மனிதநேயமிக்க முடிவு அது. ஆனால் அம்முடிவே அவர்களின் ஆன்மாவையும் கொன்று விடுகிறது. பாலகுமாரன் உபதேசிக்க்கிற ஒரு பார்வையுடன் அவரே முரண்படும் இடம் இது. ஒரு பக்கம் அவர் திடமாய் ஒன்றை சொல்கிறார்; ஆனால் கதைக்குள் நம்மால் இவ்வளவு திடமாய் வாழ்க்கையில் இயங்க முடியாது என்பதை குறிப்புணர்த்துகிறார். பாலகுமாரனுக்குள் இருக்கும் உபதேசி நம்மை அதிகம் உறுத்தாம் இருப்பது இந்த முரண்களால் தான்.
பாலகுமாரனை கராறாய் மதிப்பிடும் ஜெயமோகன் தனது கட்டுரை ஒன்றில் (“பாலகுமாரனும் வணிக இலக்கியமும்”) பாலகுமாரனை வரும் தலைமுறையினர் பொருட்படுத்தி வாசிக்க மாட்டார்கள். வணிக இலக்கிய அலமாரி ஒன்றின் தூசுபடிந்த தட்டில் அவர் நூல்கள் தூங்கும் என்கிறார். ஆனால் இன்றைய விமர்சன நோக்கு உலகம் முழுக்க மாறி வருகிறது. ஐரோப்பாவில் இன்று வணிக, இடைநிலை படைப்பாளிகளை நுணுக்கமாய் ஆராய்ந்து நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் இந்நிலை விரைவில் தோன்றும். இன்றைய தலைமுறையினரின் மனம் ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் இருக்கிறது. பாலகுமாரன் எழுதிய எண்பது தொண்ணூறுகளை விட இதுவே காயத்ரிகளின் சாவித்ரிகளின் சியாமிளிகளின் காலமாய் இருக்கிறது. ஆகையால் பாலகுமாரன் தொடர்ந்து வாசிக்கப்படுவார் என்றே எனக்குத் தோன்றுகிறது.
அப்படியே இந்த காலகட்டமும் விரைவில் நகர்ந்து போனாலும், உடைப்பெடுத்த நதிவெள்ளம் போன்ற இந்த மொழிக்காகவே பாலகுமாரன் நீண்ட காலம் படிக்கப்படுவார். இல்லாவிட்டாலும் பிரச்சனையில்லை!


நன்றி: தீராநதி, ஜூன் 2018


Comments

Basheer said…
//எழுதிய எண்பது தொண்ணூறுகளை விட இதுவே காயத்ரிகளின் சாவித்ரிகளின் சியாமிளிகளின் காலமாய் இருக்கிறது.// மிகச்சரியான அவதானிப்பு