“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (4)

Image result for albert camus
ஆல்பர்ட் காம்யு


ஹைக்கூவும் புலன் மயக்கமும்

 புலன் மயக்கத்தின் அபத்தம் இக்கவிதைகளுக்கு அபாரமான களிப்பு, மனத்திளைப்பை, வெகுளித்தனமான குதூகலிப்பை தருகிறது.
அதென்ன புலன் மயக்கம்?

ஜென் நமது தர்க்கரீதியான புரிதல்கள் புலன்மயக்கத்தின் விளைவு தான் என சொல்கிறது. உதாரணமாய், ஒரு இழப்பு நேர்கையில் நாம் ஏன் துக்கிக்கிறோம்? அதற்கு முன், துக்கம் என்பது ஒரு தன்னியல்பான உணர்வா (பசி, காமம் போல)? இல்லை. பிறகு துக்கம் எப்படி உருக்கொள்கிறது?

காலம் மற்றும் வெளி சார்ந்த கட்டமைப்புகள் நமது துக்கத்தை சாத்தியமாக்குகின்றன. துக்கத்திற்கு ஒரு கால அளவு உண்டு. இடம் சார்ந்த நினைவுகளும் உண்டு. காம்யுவின் அந்நியன்நாவலில் மெர்சால்ட்டுக்கு ஒரு கடிதம் வருகிறது. அம்மா இறந்து விட்டாள் என அது சொல்கிறது. மெர்சால்ட்டுக்கு துக்கம் கொள்ளவா வேண்டாமா என குழப்பமாகிறது. ஏனெனில் அம்மா எப்போது இறந்தாள் என அக்கடிதம் சொல்லவில்லை. காலம் துல்லியமாய் தெரியவில்லை என்றால் மரணத்தின் மதிப்பை எப்படி அளவிடுவது? மரணத்தின் மீதான நமது உணர்வுத்தாக்கம் என்பது காலம் போகப் போக குறைவது. அம்மா நேற்று இறந்தாள் என்றால் கதறி அழலாம், போன மாதம் இறந்தாள் என்றால் அந்தளவுக்கு மனம் உடைந்து அழ முடியுமா? இந்த கேள்வி தான் மெர்சால்டை அலைகழிக்கிறது. இன்று அழுகிற ஒருவன் அதே போல் ஒரு வருடம் கழித்தும் சாப்பிடாமல் குளிக்காமல் வேலை செய்யாமல் அம்மாவுக்காக அழுது துக்கம் அனுசரித்தால் உலகம் அவனை பைத்தியம் எனச் சொல்லும். அப்படி எனில், இவ்வளவு காலம் மட்டுமே இந்தளவு துக்கம் காட்டலாம் என சமூகம் தீர்மானித்து வைத்துள்ளதா? அப்படி எனில் துக்கத்தை நாம் சமூக விதிமுறைகளின் படி நடிக்கிறோமா?
இறந்த காலம் எனும் இலக்கண பகுப்பு இன்றி மரணத்தைப் பற்றி நாம் பேச முடியுமா? ஒருவேளை நம் இலக்கணத்தில் கடந்த காலம் இல்லையெனில் ஒருவர் இறந்து போக இயலுமா? (”காலமாகி விட்டார்எனும் நிகழ்காலமும் கூட கடந்த காலத்தின் பினாமி காலம் தானே. அதன் பொருள் காலமானார்”)
ஒருவர் இறந்து போனார் என்பதை உறுதிப்படுத்த காலத்தை அடுத்து இடமும் அவசியம். எங்கு இறந்தார் என்பது தெரியாவிட்டால் நம்மால் நிம்மதியாய் கண்ணீர் சிந்த இயலாது. அவரைப் பற்றி துக்கத்தில் நம் மனம் உலையும் போது அவருடன் இருந்த நினைவுகள் நம்மை மூச்சுத்திணறச் செய்கின்றன. ஒவ்வொரு நினைவும் ஒரு இடத்துடன் சம்மந்தப்பட்டிருக்கிறது. அந்த இடங்களை அழித்து விட்டு அவரை நீங்கள் நினைத்துப் பார்க்க இயலுமா? இயலாது.
காலமும் வெளியும் நமது கற்பிதங்கள் என ஒருவர் நிரூபித்தார் மரணம் கூட கற்பிதம் ஆகாதா? ஆகலாம். ஆகாமலும் போகலாம். ஆனால் நமது கவலைகள், மகிழ்ச்சி, துக்கம், உற்சாகம் ஆகியவை நமது மனம் நிகழ்த்தும் மயக்கத்தின் விளைவுகள் தாம் என்பதை மேற்சொன்ன விசயம் காட்டுகிறது.
 இதை உணரும் ஒருவர் குழந்தைத்தனமாய் இவ்வுலகை காணத் துவங்குகிறார். அவர் அபாரமான சுதந்திரத்தை பெறுகிறார். எல்லா எல்லைகளையும் கடக்கிறார். இதைத் தான் ஜென் நமக்கு உணர்த்த முயல்கிறது. ஒவ்வொரு ஹைக்கூ கவிதையின் பின்னும் இந்த ஆன்மீக மனநிலை உள்ளது.


Comments

சிறப்பு. உங்கள் பதிவு சிந்திக்க வைத்தது. துக்கம் கூட ஒரு காலத்துக்குத்தான். அதுவாகவே போகப் போக கரைந்து விடும். ஒன்று போனால் இன்னொன்று. வாழ்த்துகள்.

நமது வலைத்தளம் : சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!
'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடமும் பொதுவான பத்துக் கேள்விகளை முன்வைத்து அவற்றுக்கான பதில்களைத் தொகுத்துத் திரட்டி வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளோம். நீங்களும் இம்முயற்சியில் இணைந்து கொள்ளலாமே? - #சிகரம்