பாலகுமாரன் எனும் பேரலை (4)


 Image result for balakumaran
தங்குதடையின்றி பலவித முரணான இசைவான மன உணர்வுகள் சுழித்தோடும் ஆற்றுப்பெருக்காய் தன் மொழியை பாலகுமாரன் வைத்திருந்தது ஒரு அற்புதம்.

 இரும்புக்குதிரைகள்நாவலில் ஏழை இளம்பெண் காயத்ரி காதலெல்லாம் தனக்கு சரிப்படாது என சிந்திக்கிறாள். “தனக்கென்னவோ இவர்களை விடலைப்பையன் என்று தான் நினைக்க முடிகிறதே தவிர இவர்களோடு பேச முடியும், சிரிக்க முடியும் என்றே தோன்றவில்லை. … தெருவில் நடக்கையில் பரக்க பரக்க பார்க்கும் பையனை எப்படி நேசிப்பது?” (96).
 இதை அடுத்து அவள் சிந்தனை முன்னுக்குப் பின் முரணாய் வளர்ந்து போகும். வாலிப பையன்களா? அவர்கள் பால் எனக்கு என்ன ஈர்ப்பு வர முடியும்? இப்படி நினைத்தவள் அடுத்து தன் வீட்டுக்கு ஒருநாள் அப்பாவை பார்க்க வந்து இலக்கியமும் தத்துவமும் பேசி திளைத்துக் கொண்டிருந்த வாலிபர்களை சிலரை எண்ணி லயிக்கிறாள். அந்த இளைஞர்கள் தன் மீது காட்டிய அலட்சியம் அவளை ஈர்க்கிறது.
முதலில் அப்பா வயதுள்ள ஒருவரின் அனுபவமே தன்னை ஈர்க்கும் என்றவள் இப்போது ஏன் ஏற்கனவே மணமான இந்த இளைஞர்களை நோக்கி ததும்பி சரிகிறாள்? இந்த மனநிலை ஏன் இப்படி என பாலகுமாரன் விளக்குவதில்லை.
 ஏன் சாத்தியமில்லாத காதல் இலக்குகள் அவளை ஈர்க்கின்றன? அவள் வாழ்வு இப்படித் தான் நிழலுருவங்களை நாடிப் பாய்ந்து அல்லோலப்படப் போகிறதா? ஏன் அப்படி? தெளிவாக யோசிக்கத் துவங்கும் ஒரு பெண் தன்னையறியாது தெளிவின்மையை நோக்கி வழுவும் இந்த இடம் அழகானது. வாழ்க்கையின் ஆழம், அழகு, உண்மை, சிலாக்கியம் இந்த பகுத்தறிவை மீறின தெளிவின்மையில் தான் இருக்கிறது.
ஒரு பெண் தன் கணவன் தன்னை தேவடியா என அழைத்தாள் சிலிர்ப்பாளா? அல்லது கொந்தளிப்பாளா? சூழல், தொனி, மன அமைப்பு என பல காரணிகள் இதை தீர்மானிக்கும். ஒரு சமயம் இதைக் கேட்டு வெறுப்பாகும் ஒரு பெண் இன்னொரு சமயம் இதைக் கேட்டு லயித்து சுகிக்கலாம். “மெர்க்குரிப்பூக்களில்இதை ஓரிடத்தில் பாலகுமாரன் தொட்டுக் காட்டுகிறார்:
விரல்கள் அவள் உடம்பு முழுக்க அலைந்து என்ன செய்வது என தெரியாமல் தவித்தன. சாவித்திரி கூச்சத்துடன் நெளிந்து இன்னும் நெருக்கமானாள்.
என்ன தேடறேள் இப்போ?’ – சாவித்திரி கொஞ்சினாள். கணேசன் சாவித்திரியின்  காதைக் கடித்தான். ‘தேவிடியா தேவிடியாஎன முணுமுணுத்தான்.
சாவித்திரி கணேசனின் கன்னத்தை கிள்ளினாள்.
வெளியே சொன்னால் வெட்கக்கேடு. எப்பக் கண்டாலும் பொண்டாட்டியைத் தேவிடியான்னு கூப்பிடறது. தேவிடியாளைத் தான் பொண்டாட்டியா நினைச்சுப்பான்னு கேள்விப்பட்டிருக்கேன் இங்க என்னமோ தலைகீழ் பாடமா இருக்கே!’ ” (மெர்க்குரிப்பூக்கள், 19)
இதைச் சொல்கிற சாவித்ரி மிக முதிர்ச்சியானவள். ஆண்களின் ஆதிக்க மனப்பான்மையை அவள் நாவலில் இன்னொரு இடத்தில் விமர்சிப்பாள். “தங்கச்சிஎன சுப்பையா அவளிடம் நெகிழும் போது அவள் கூடவே கலங்குகிறாள். ஆனால் அடுத்த நாள் இந்த நெகிழ்வு ஒரு போலித்தனம் என்கிறாள்.
 தன் கணவன் கணேசனின்தேவடியாவிளியும் ஒரு ஆண்-மைய கர்வம் என அவளுக்கு பிறிதொரு சமயம் தோன்றலாம். இரண்டுமே சரி தான். இரண்டிலுமே அவள் இருக்கிறாள். மனிதர்கள் இப்படி இருப்பார்கள்; இதுவே மனிதனின் உண்மை இயல்பு; இதுவே மனித மனத்தின் அழகு என பாலகுமாரன் சுட்டிக்காட்டுகிறார்.

Comments

ஒரு எழுத்தாளனின் சிந்தனையின் வடிவங்கள் மற்றும் அவரது மனதின் கட்டமைப்புகளை படம் பிடித்து காட்ட முயற்சிக்கும் உங்களது பதிவு அற்புதம் நண்பரே. உமது எழுத்திலும் நல்ல முதிற்சி தெரிகிறது.