நீங்க சொன்னா தலைகீழாத் தான் இருக்கும் (4) – “சகோதரிகள்”


 Image result for அசோகமித்திரன்
Image result for பாலகுமாரன்

”சகோதரிகள்” நாவல் தகப்பனின் ஆதரவற்ற ஒரு குடும்பத்துப் பெண்கள் உறவுகளில் சந்திக்கும் ஏமாற்றங்களை, துக்கத்தை, அவலத்தை சித்தரிக்கிறது. ஆண்களால் தொடர்ந்து கைவிடப்படும், ஏமாற்றப்படும், ஒடுக்கப்படும் பெண்களின் கதை என்பதே இதன் ஒற்றை வரி சுருக்கம். இது ஒரு டிவி சீரியல் கதை என உங்களுக்குத் தோன்றலாம். ஆம் அதே கதை தான். ஆனால் கே.என் செந்தில் இதே கதையை அபாரமான ஒரு இலக்கிய பிரதி ஆக்குகிறார்.

இந்த ஒற்றை வரியை அவர் அசோகமித்திரனின் “தண்ணீர்” நாவலின் சட்டகத்துள் கொண்டு வைக்கிறார். பாலகுமாரனின் தளுதளுப்பான மனம் பொங்கி பிரவாகிக்கும் மொழிநடையை எடுத்தாள்கிறார்; பாலகுமாரனின் தனித்து போராடும் பெண்களை ஒரு புதிய கோணத்தில் (காமம் இன்றி) உள்ளே கொண்டு வருகிறார். ஒரு பக்கம் மிகவும் நெகிழ்வான உணர்ச்சிகரமான கதைப்போக்கு, இன்னொரு பக்கம் அசோகமித்திரன் தன் பாத்திரங்கள் மீது காட்டும் கட்டுப்பாடு – இந்த ரெண்டுமே இந்நாவலில் உள்ளது. ரெண்டுமே இதன் பலங்கள்.
அசோகமித்திரனின் ஜமூனா, சாயாவும் இந்நாவலில் வரும் வசந்தி, திலகாவும் ஒன்றல்ல. ஆயினும் இந்நால்வருக்கும் ஒரு நுணுக்கமான தொடர்பு உள்ளது.
அசோகமித்திரனைப் போன்றே செந்திலும் நாவலின் பாத்திரங்கள் தாம் சந்திக்கும் அவலங்களினால் ஒருவரை ஒருவர் நுணுக்கமாய் பாதிப்பது, ஒருவரது அந்தரங்க வாழ்க்கை இன்னொருவரது வாழ்க்கையுடன் வலைப்பின்னல் போல் தொடுக்கப்பட்டுள்ளதை காட்டுகிறார். இவ்வளவு சின்ன நாவலில் இவ்வளவு பிசிறு தட்டாமல் களத்தை அமைப்பது எளிதல்ல. மூன்று நாவல்களை எழுதிய ஒருவனாக என்னால் இதை அனுபவரீதியாய் சொல்ல முடியும். செய்நுட்பத்தைப் பொறுத்தமட்டில் “சகோதரிகள்” ஒரு சாதனை. (இது புரியாமல் வெறுமனே இது நாடகத்தனமாய் இருக்கிறது என ஒப்பாரி வைப்பவர்களைக் கண்டால் எரிச்சல் வருகிறது. நாவல் என்பது வெளியே தெரிவது மட்டுமல்ல; அதனுள் பல நுணுக்கங்கள் உள்ளன.)
 “தண்ணீரில்” நாம் காணும் இருத்தலிய தொனி (ஆல்பர்ட் காமு தாக்கம்) செந்திலின் நாவலில் இல்லை. இதுவே பிரதான வேறுபாடு.
இதற்கு மேல் நான் இந்நாவலைப் பற்றி எழுதினால் அது நாவலை விட பெரிதாக அமைந்து விடும் என்பதால் உங்களையே படித்து உணரும் படி வேண்டுகிறேன்.
இத்தொடரை முடிக்கும் முன், “சகோதரிகளில்” என்னை கவர்ந்த பகுதிகளில் ஒருசிலவற்றை கீழே தந்துள்ளேன். நாவலை படிக்க உத்தேசம் (அல்லது அவகாசம்) இல்லாதவர்கள் இதைப் படிக்கலாம்:
1.      சில தினங்களுக்குப் பின் கைலாசம் வீட்டு வாசலிலேயே அவளை
இறக்கி விட்டுப் போனான்.மறுநாள் காலையில் ஹாரனை உரக்க
ஒலிக்கவிட்ட பின்னும் பதில் இல்லாததால் பைக்கில் அமர்ந்தபடியே திலகாவை பெயர் சொல்லி அழைத்து கண்ணாடியில் தலைமுடியை சரிசெய்வதை இந்திராணி பார்த்து உள்ளே அழைத்து டீ கொடுத்து சம்பிரதாயமாக விசாரித்தாள். அவன் இந்திராணிக்கு பின்னால் நின்று கொண்டிருந்த திலகாவையும் அவள்குனியும் போது வசந்தியையும் மாறி மாறி பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தான்.
திலகா விடுவிடுவென வந்து அவனை இழுத்து அம்மாவின் காலில் விழ முயன்றாள். அவன் உள்ளேகாயும் உள்ளாடைகளைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.”
2.      திலகா தன் மனதை மீறி உடல் செல்வதைக் கட்டுபடுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். ஆணின் துணைக்கு ஏங்குகிறேனா? என கேட்டுக் கொண்டாள். அந்த எண்ணத்தை விரட்டுவது போலதலையை அசைத்து மறுத்தாள். பேருந்தின் நெரிசலில் ஆண்களின் உடல் படும்போதெல்லாம் கடும்சினத்துடன் திரும்பி முறைப்பாள். அருவருப்படைவாள். இன்று இறங்குகையில் தவறுதலாக ஒருவனின் விரல் அவள் புறங்கையில் உரசிய போது தன் உடல் முழுக்க அந்தஸ்பரித்தின் சுகம் ஊடுருவிச் செல்வதை உணர்ந்து அச்சம் கொண்டாள். அப்போது கைலாசத்தின் நினைவு எழுந்தது. கண்களை இறுகமூடி கால்களைக் குறுக்கி போர்வையால்தலையையும் சேர்த்து மூடிக் கொண்டதும் பக்கத்து படுக்கையில் வசந்தியின் போர்வைக்குள்ளிலிருந்து அவளது சிரிப்புச் சத்தமும் வளையல்களின் ஓசையும் திலகாவுக்குக் கேட்டது.”
3.      வசந்தி மும்மரமாக அடுத்தடுத்தபீஸ்களைத் தைத்துக் கீழே தள்ளிக் கொண்டிருக்கையில் ஒரு நிழல் அவள் முதுகின் மீது விழுவதை உணர்வாள். ஒரு வினாடி கால்கள் தைக்க மறந்து நிற்கும். பின் அது அவன் என அறிந்ததும் முன்னை விட வேகமெடுக்கும். ”
4.      தூசு படிந்து நிற்கும் அவன் பைக்கின் கண்ணாடியை துடைத்து அதில் தன் முகத்தைப் பார்த்தாள். அவன் கண்களுக்குள் தன்னைப் பார்ப்பது போல இருந்தது”


Comments