“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (3)பாஷோவின் ஜென்

 Image result for basho
ஹைக்கூ நம் சிந்தனையை ரத்து செய்ய கோருவது. அது நம்மை சிந்தனையற்ற, நீர் வளையங்கள் அற்ற ஒரு பரப்பிற்கு நகர்த்தும் ஒரு இலக்கிய வடிவம். உதாரணத்திற்கு, பாஷோவின் இந்த மிகப்பிரபலமான கவிதையை பாருங்கள். இதற்கு ஏகப்பட்ட மொழியாக்கங்கள் உள்ளன. நான் டியோன் ஒடொனோல் என்பவரின் மொழியாக்கத்தை எடுத்து அதை தமிழாக்கி தருகிறேன்.


ஒரு பழைய அமைதியான குளம்
தொன்மையான நிச்சலத்தின் கண்ணாடி அது
ஒரு தவளை-குதிக்கும்-தொபுக்கடீர்

அமைதியான குளமொன்றில் தவளை சட்டென குதிக்கிறது; நீர் தெறிக்கிறது; ஒலி எழுகிறது. மீண்டும் ஒலி அடங்கி, குளம் நிலைபெற்று அமைதி திரும்புகிறது. இது தான் காட்சி. இது தனக்கு என்ன சொல்கிறது என்பது பாஷோவுக்கு முக்கியமில்லை. தவளை குதிக்கவில்லை; தவளை எழுப்பும் அந்த ஒலியே தவளையாக அவருக்குத் தெரிகிறது. இது ஏன் அப்படி எனக் கேட்டால் விளக்கமில்லை. ஒரு குழந்தைத்தனமான மனநிலை இது. நவீன கவிதை சிலநேரம் இதே மனநிலையை ஒரு முதிர்ச்சியுடன் முன்வைக்கும். ஆனால் ஹைக்கூ அதே குழந்தைமையுடன் அதை வெளிப்படுத்தும். நவீன வாழ்க்கை தரும் புரிந்துணர்வு, சமூக பொறுப்புணர்வு, விழிப்புணர்வு, அறைகூவல், கேள்வி கேட்கும் விருப்பம், விமர்சிக்கும் நோக்கு, அவதானிக்கும் மனப்பாங்கு ஆகியவற்றுக்கு ஹைக்கூவில் இடமில்லை. 

மற்றொரு ஹைக்கூவில் பாஷோ இருக்கும் குடிசையின் கூரை எரிந்து போகிறது. அட, இப்போது பௌர்ணமி நன்றாய் தெரிகிறது என பாஷோ களிப்படைகிறார். இதை நேர்மறையான அணுகுமுறை என கருத முடியாது. ஏனெனில் நிலவையாவது காண்கிறேனே என மகிழ்வது நேர்மறை எனில் அதன் பின்னால் கூரை எரிந்து விட்டதே எனும் கசப்பை காணாமல் தவிர்க்கும் புத்திசாலித்தனம் மறைந்திருக்கிறது. பாஷோவிடம் இப்படி எந்த அணுகுமுறையும் இல்லை. பேதையாய் வாழ்வின் சின்ன சின்ன அதிசயங்களை கண்டு வியப்பது, எதிலும் தர்க்க விளக்கங்களை நாடாதிருப்பது அவரது உளவியல். இது ஒரு ஜென் மனநிலையுமே. இதிலென்ன ஜென் உள்ளது?

தவளை நீருக்குள் குதிக்கிறது என சொன்னால் யாரும் கேள்வியின்றி ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ஒருவேளை தவளை குதிக்கும் போது, அதாவது அது தாவி எழும்பி காற்றில் அரை நொடி மிதந்து செல்கையில், நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் அது நீரை நெருங்கி அமிழ்ந்து நீர்ப்பரப்புக்குள் மறைவதை பார்க்கவில்லை. அதற்குள் மிக வேகமாய் தவளை மறைந்து விட்டது. ஆனால் தவளை குதித்ததை அது குதிப்பதை முழுக்க பார்க்காமலே எப்படி கண்டீர்கள்? அந்த தொபுக்கடீர் எனும் ஓசை தவளை குதித்து மறைந்த காட்சியின் இடத்தில் அந்த ஒலி வந்து அமர்கிறது. தவளைக்கு பதில் ஒலி குதிக்கிறது; நீர்ப்பரப்பை கிழித்து தவளை எழுப்பும் ஒலி தோன்றி மறைகிறது. இப்படியும் பார்க்கலாம் (சாரி கேட்கலாம்) தானே? இந்த இடத்தில் பார்ப்பதும் கேட்பதும் ஒன்றாகிறது.
கூரை எரிந்து விட்டது எனும் போது சட்டென புலனாகும் ஆகாயத்தை நாம் பார்க்க தவறுகிறோமே எனும் இரண்டாவது ஹைக்கூ முதல் சாத்தியத்தை மறுக்கவில்லை. கூரை எரிந்ததும் உண்மையே; அதே போல வானம் அப்போது வெகு சிலாக்கியமானது என்பதும் உண்மையே. நாம் ஒன்றை மறுத்து இன்னொன்றை விடாப்பிடியாய் கவனிப்பது அபத்தம் என்கிறது இக்கவிதை. இப்படி சொல்கிறது என்று கூட சொல்லக் கூடாது. இப்படியும் பார்க்கும் ஒரு மனநிலையை நமக்கு சித்தரிக்கிறது.
Comments

Sendhilkumar AV said…
இயற்கையில் எல்லாமே இரண்டு தன்மைகள்தான் ஆனால் இரண்டையும் வெவ்வேறாக பார்க்காமல் ஒரே மாதிரி கவனிப்பது அல்லது சும்மா இருப்பது அல்லது சம நிலையில் இருப்பது இயற்கையின் நோக்கத்தையே தகர்த்தெரிந்து விடுவது போல.