பாலகுமாரன் எனும் பேரலை (3)


 Image result for balakumaran
தன் புனைவுக்குள் எல்லாரையும் பாலகுமாரனாக்குவது பாலகுமாரனின் பலவீனம் எனில், எல்லா பாலகுமாரத்தனத்திலும் பெண்மையின் நெகிழ்வை, பிரவாகத்தை, அதர்க்கமான ஸ்நேகத்தை ஊடுரச் செய்வது அவரது பெரும் பலம். பாலகுமாரனின் ஆண்கள் கூட மீசை வைத்த பெண்கள் தாம்.

இந்த பெண் என்றதுமே நளினமான அன்பான பரிவான பிரகிருதி மட்டும் அல்ல. பெண்ணின் மிக நுணுக்கமான கடும் குரோதங்களையும் பாலகுமாரன் அபாரமாய் சித்தரித்திருக்கிறார்.
 மெர்க்குரிப்பூக்களில்கொல்லப்பட்ட கணேசனின் மனைவி சாவித்ரி மிக கனிவான முதிர்ச்சியான நிதானமான புத்திசாலியான பெண்ணாக தோன்றுகிறாள். மனம் பதறாமல் தொலைநோக்குடன் முடிவுகள் எடுக்கிறாள். தொழிற்சங்க தலைவர் கோபாலனுடன் தொழிலாளிகள் போராட்டங்கள் பற்றி அவள் விவாதிக்கையில் கொள்கையை விட கட்சியை விட மக்களின் பசியை ஆற்றுவது, குடும்பங்கள் ஏழ்மையில் தவிக்காமல் இருப்பதே முக்கியம்; அதற்காய் நிறுவன முதலாளியுடன் தொழிற்சங்கம் பேரம் பேசலாம்; சற்றே கோரிக்கைகளை நெகிழ்த்தலாம் என சொல்கிறாள்.
அந்த முதலாளி மீது அவளுக்கு வெஞ்சினம் இல்லையா? தன் கணவனை அழித்த அந்த நிறுவன மேலாண்மையை முற்றோடு அழிக்க வெறியில்லையா?
நாவலின் துவக்கத்தில் அவள் தொழிற்சாலை நிர்வாகத்தின் ஆதரவை மறுத்து தோழர்களுக்கு தோள் கொடுக்கிறாள். அப்போது அவளுக்கு அதுவே சரி என படுகிறது; தன் கணவனின் உயிர்பலிக்கான சரியான பதில் அதுவே என நம்புகிறாள். ஆனால் இப்போது ஏன் தொழிற்சாலை நிர்வாகத்தை முழுக்க எதிர்த்து அழிக்க வேண்டியதில்லை எனும் தரப்பை எடுக்கிறாள்? அதுவே நடைமுறைக்கு உகந்தது என்றா?
 ஆம். சாவித்ரியின் நிலைப்பாட்டுக்கான ஒரு தர்க்க விளக்கம் இது. ஆனால் இந்த நிதானமும் நடைமுறை விவேகமும் மட்டுமே சாவித்ரி அல்ல.
 காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு அவள் வீட்டுக்குள் பதுங்கி இருக்கிறார் கோபாலன். அறிவழகனை அழித்து விட்டு சுப்பையா அச்செய்தியை ரகசியமாய் கோபாலனுக்கு அனுப்புகிறான். இதை அறியும் சாவித்ரியின் எதிர்வினையை பாலகுமாரன் சொல்வதில்லை.
சுப்பையா ஓரிரவில் கோபாலனை சந்திக்க அவள் வீட்டுக்கு வருகிறான். ரகசியமாய் வீட்டுக்குள் வந்து அவன் பேசிக் கொண்டிருப்பதை சாவித்ரி அறிகிறாள். அவர்களின் அறைக்கு வெளியே நின்று பேச்சை கவனிக்கிறாள். அவர்கள் அங்கே பீடி புகைக்கலாமா என தயங்கும் போது அவள் கதவுக்கு கீழுள்ள இடைவெளி வழியாக தீப்பெட்டியை தள்ளுகிறாள். சுப்பையா கிளம்பி செல்லும் முன் அவள் அவனை உபசரிக்கிறாள். அவன் மறைவில் இருக்கும் போது அவள் அவன் குடும்பத்தினரை சென்று சந்தித்து ஆறுதல் சொல்லப் போவதாய் சொல்கிறாள். இதெல்லாம் ஒரு சமிக்ஞை. அவள் அவன் செயலை ஏற்பதன், அதற்கு நன்றிக் கடன் பட்டிருப்பதன் சமிக்ஞை.
அவளால் எல்லா மனிதர்களையும் தடையின்றி நேசிக்கவும் முடியும்; தன் கணவனின் மரணத்துக்கு மறைமுக காரணமான ஆலை முதலாளியை கூட மன்னிக்க முடியும். அதேவேளை தன் வாழ்வை அழித்தவன் மீது ஒரு தெளிவான குரோதமும் அவளுக்குள் ஜுவாலையாய் உயர்கிறது. ஒரு பக்கம் நிதானமாய் இருந்தபடியே இன்னொரு பக்கம் ஆவேசமாய் தன் கணவனைக் கொன்றவனின் ரத்தத்துக்காய் ஏங்குகிறாள். இப்படி இரண்டு எதிர்குணங்கள் சமமாய் இயங்கும் பெண் மனத்தை தமிழில் இப்படி நுணுக்கமாய் பேசத் தக்கவர்கள் வெகுஜன இலக்கியத்தில் யாருமில்லை.

Comments