இச்சை என்பது மூன்று நிமிட சமாச்சாரம் அல்ல (3)


Image result for desire painting

என்னை மிகவும் மூச்சு முட்ட செய்யும் ஒன்றே என்னை புத்துணர்வூட்டவும் செய்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் உறவில் சுலபத்தில் நாம் இந்த இருமையில் ஒன்றை மட்டுமே ஒருவர் மீது சுமத்தி, அது மட்டுமே அவர் என கருத வாய்ப்பதிகம். இவர் என்னை மூச்சுத் திணறடிக்கிறார் என எண்ணும் போது இவரிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதே நம் ஒரே பிரார்த்தனையாக இருக்கிறது. நாம் நம்மை அறிவது போல்நாம் நமது முரண்களை உணர்வதைப் போல - அடுத்தவரை அறிய முடிவதில்லை. இது பிரிவுகளுக்கு இட்டுச் செல்கிறது.
 நாணயத்தை சுண்டும் போதும் தலை விழுகிறது என்றால் அதன் பொருள் அடுத்த முறை அது விழும் போது பூவாகவும் இருக்கலாம் என்பதே. சந்தர்ப்பமும் மனநிலையையும் வாழ்க்கை நிலையும் சாதகமாக இருந்தால் இப்போது நீங்கள் நேசித்த ஒருவரை வெறுக்க காரணமாக உள்ள விசயமே அவரை மோகிக்க மீண்டும் காரணமானதாக மாறலாம்.
கீழே வருவது அறிவியல் இச்சைக்கு தரும் விளக்கம்:

 புணர்ச்சி மற்றும் இனவிருத்திகாக மட்டுமே நாம் எதிர்பாலினத்தின் பால் ஈர்க்கப்படுகிறோம். நமது காதல் இனவிருத்தியில் நாம் ஈடுவதற்காக இயற்கை நம் உடலை வைத்து ஆடும் ஒரு விளையாட்டு; ஒருவரிடம் நம் காம நோக்கம் நிறைவேறின பின் அவரை விடுத்து அடுத்த துணையை நாடிச் செல்வதே வலுவான எதிர்கால தலைமுறையினரை உருவாக்க உதவும்.”
என்னைப் பொறுத்தமட்டில், இது ஒரு தட்டையான விளக்கம். நாம் இனவிருத்திக்கு அப்பாலும் ஏன் நேசத்துக்கு உரியவர்கள் மீது இவ்வளவு உணர்வுபூர்வமான ஈடுபாட்டுடன் இருக்கிறோம்? நமது இருப்பு, மகிழ்ச்சி, நிறைவு, வாழ்வின் அர்த்தம் ஆகியவை எப்படி நாம் இச்சிக்கும், விரும்பும், நேசிக்கும் ஒருவரின் அருகாமையால் ஒரு மேஜிக் போல சுலபத்தில் சாத்தியமாகிறது எனும் கேள்விகளுக்கு மேற்சொன்ன அறிவியல் விளக்கத்தில் பதில் இல்லை.
ஒரு நண்பர் என்னிடம் இக்கேள்வியை கேட்டார்: “என்ன தான் பெரிய மனதுடன், தர்க்க ரீதியாய் யோசித்தாலும், ஒரு பெண் நம்மை நிராகரிப்பதை நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை இல்லையா? அது அவளது சுதந்திரம் என அந்நிராகரிப்பை மன்னித்து நம்மால் ஏற்க முடிவதில்லை தானே?”
புணர்ச்சிக்காக மட்டுமே ஒரு பெண்ணை நாடுகிறோம் என்றால் நிராகரிப்பு ஏமாற்றத்தையே ஏற்படுத்தக் கூடாது. இந்த உலகில் உடல்களுக்கா பஞ்சம்? மேலும் இச்சை பெருகும் போது எல்லா பெண்ணுடல்களும் ஒன்று தானே? ஆக, நமது ஏமாற்றத்திற்கான காரணமே வேறு:
ஒரு பெண் (ஆண்) நம் வாழ்வில் வரும் போது நம்மை உருமாற்றுகிறார்; நமது உரையாடல்களில் வண்ணமேற்றுகிறார்; நம் இருப்பில் தித்திப்பை, கிளர்ச்சியை, வெளிச்சத்தை கொணர்கிறார்; மேலும் அர்த்தபூர்வமாய் இவ்வாழ்வை அறிய உதவுகிறார். வாசனை மிக்க ஒரு மலர்க்கொத்து நம் அறைக்குள் வருவது போன்றதே பிரியத்துக்கு உரியவர் நம் வாழ்வுக்குள் நுழைவது. அவர் இல்லாமல் ஆகும் போது நம் அறை வாசனையற்றதாக ஆகிறது. நம் மொழி சொற்கள் இல்லாமல் வெறுமையாகிறது. நம் பகல்களில் இருள் சூழ்கிறது. நம் இருப்பு எடையிழக்கிறது. எதிலும் அர்த்தம் காண முடியாமல் போகிறது. இதைத் தான் நம்மால் உண்மையில் தாங்க முடியாமல் போகிறது. மூன்று நிமிட செக்ஸ் நிறைவேற்றம் மட்டுமே நம் இச்சையின் நோக்கம் எனில் உலகம் இவ்வளவு சிக்கலாய், குழப்பமாய், எதிர்பாராமைகள் நிறைந்ததாய் இராது.
இச்சை நம் பாலுறுப்புகளில் குடியிருக்கிறது என அறிவியல் கோருவது உண்மை அல்ல; இச்சை நம் மொழியில், நாம் உருவாக்கும் பல்வேறு குறியீடுகள், உருவகங்களில் வாழ்ந்து தழைக்கிறது; பல்கி பெருகுகிறது. அடுத்தவர் மீதான இச்சை நம் மீதான, நமது இருப்பு மீதான, நமது வாழ்வின் அர்த்தங்கள் மீதான இச்சையாக திரும்புகிறது.
 இந்த உருமாற்றம் இச்சையைப் பற்றி யோசிக்கும் பேசும் கற்பனை செய்யும் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ்கிறது. இதனால் தான் தன்னை நிராகரிக்கும் பெண்ணை தாக்கி அழிக்க ஒரு ஆண் விழைகிறான். தன்னை நிராகரிக்கும் ஆணை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என ஒரு பெண் தவிக்கிறாள். ஏனெனெனில் அவர் உங்கள் உடலை நிராகரிக்கவில்லை; உங்கள் இருப்பை, வாழ்வில் உங்கள் நிலைப்பை, உங்களை பாதுகாக்கும் நம்பிக்கைகளை மறுக்கிறார். சிதைக்கிறார். நீங்கள் யாருமில்லை; நீங்கள் யாருடனும் இல்லை; உங்களுக்கு இங்கு இடமே இல்லை என உங்களை ஒரு நிமிடம் எண்ண வைக்கிறார். அதை உங்களாலோ யாராலோ தாங்கிக் கொள்ள இயலாது. உங்கள் கழுத்தில் கத்தி வைப்பவரை கூட மன்னிப்பீர்கள். ஆனால் வெறும் தூசாக உங்களை மாற்றியவரை மன்னிக்கவே இயலாது.
இச்சிப்பது என்பது இச்சிப்பது மட்டுமே அல்ல. நீங்கள் யார் எனும் கேள்விக்கான விடை தேடலே இச்சையில் இருந்து தான் துவங்குகிறது. அடுத்த முறை ஐ லவ் யூ சொல்லும் போது அதை நீங்கள் உங்களுக்கும் தான் சொல்லிக் கொள்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள்.
பி.கு: நான் காதலையும் காமத்தையும் தனித்தனியாய் காணவில்லை. இச்சை என இரண்டையும் சேர்த்தே குறிக்கிறேன்.

நன்றி: தீராநதி, 2018Comments

Anonymous said…
I don't know whether ur articles like this are getting due readership, sir?!
Have u read Alain Badiou's "In praise of love"?