நீங்க சொன்னா தலைகீழாத் தான் இருக்கும் (3) – “சகோதரிகள்”

Image result for hemingway
ஹெமிங்வே

முந்தின பதிவில் நான் எழுப்பின கேள்விகள் இவை:
1)   எதார்த்தவாதம் அவசியம் இல்லையா? கதை எதார்த்த வாழ்வை பிரதிபலிக்க வேண்டாமா?
2)   ஒரு கதையில் ஒருவர் கண்ணீர் விடுகிறார். அந்த கண்ணீர் வாசகனுக்கு வர வேண்டியதல்லவா? கதாபாத்திரம் மட்டும் அழுது புலம்பினால் அது அபத்தமல்லவா?
இனி பதில்கள்.


1)   எதார்த்தம் எப்படி ஒரு சித்தரிப்பு பாணியோ மிகையும் அப்படியான ஒரு பாணியே. எதார்த்தம் வெறுமனே ஒரு மொழி மட்டுமே எனும் இடத்துக்கு இன்றைய பின்நவீனத்துவ விமர்சகர்கள் வந்து விட்டார்கள். ஆனால் நாம் இன்னும் ஷகீலாவை விட்ட பாடில்லை.
2)   கதாபாத்திரம் உணர்ந்தால் போதாது, அதை வாசகனும் உணர வேண்டுமே என்பது ஹெமிங்வே சொன்ன வாக்கியம். அது இன்றும் உயிருடன் ஒரு புலியைப் போல நம் இலக்கிய வெளிகளில் உலவுகிறது. ஆனால் நான் ஏற்கனவே சொன்னது போல கதைமொழியே உண்மையின் பிரதிபலிப்பு என்னும் இடத்திற்கு நாம் (உலகளாவிய விமர்சகர்கள்) இன்று வந்து விட்டோம். இன்றைய எழுத்தாளர்கள் மீ-எதார்த்த மொழியில், மிகையுடன், தம் விழியோர கண்ணீரை வாசகன் மீது சுண்டி விடுபவர்களே. (ஜெ.பி சாணக்யா, தேவிபாரதி, எஸ். செந்தில்குமார், லஷ்மி சரவணகுமார், போகன், சுரேஷ் பிரதீப்… [சட்டென நினைவுக்கு வந்த பெயர்களை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். விடப்பட்டவர்கள் மன்னிக்கவும்.])

அதாவது, இன்றைய கதைகள் வாசகன் நெஞ்சைத் தொட வேண்டியதில்லை என்பதல்ல என் தரப்பு. தொட வேண்டும், உங்களை பாதிக்க வேண்டும், அழவும் சிரிக்கவும் செய்ய வேண்டும், உண்மை போலவே உங்களுக்கு தோன்ற செய்ய வேண்டும். ஆனால் அது இன்று ரொம்ப முக்கியம் அல்ல. ஒரு கதையில் வரும் சம்பவம் நடக்க சாத்தியமற்றது என தோன்றினாலும் பிரச்சனை இல்லை. ஏன் எனும் கேள்விக்குள் நான் போகவில்லை. அது ஒரு சிக்கலான தத்துவ விவாதத்தில் போய் முடியும் என்பதால்.
  
இனி கே.என் செந்திலின் நெடுங்கதையான “சகோதரிகளுக்கு” வருவோம். அதை ஒரு குறுநாவல் என்றே அழைக்க விரும்புவேன் – அதில் நாவலுக்கான கூறுகள் வலுவாக உள்ளன. இதனாலே எந்த சிறுகதையையும் விட அதிகமான கவனத்தை அக்கதை (குறுநாவல்) பெற்றது. ஆனால் சுரேஷ் பிரதீப்பை தவிர நாவலை பெரும்பாலானோர் சரியாய் உள்வாங்கவில்லை. விமர்சனங்கள் பெரும்பாலும் வீட்டைப் பெருக்கி குப்பையை அள்ளி மாடியில் இருந்து தெருவில் வீசுவது போன்றே அமைந்துள்ளது. எதார்த்தமாக இருக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி இவ்விமர்சனங்கள் போகவில்லை (எனக்கு சான்றிதழ் தர மறுத்த டாக்டர் நினைவுக்கு வந்தது இதனால் தான்).  
கே.என் செந்திலும் இந்த வகையான “கரார்” விமர்சகர் தான். ஆனால் ஆச்சரியமாக அவரது படைப்பில் இந்த சிக்கல் இல்லை. அசோகமித்திரனும் பாலகுமாரனும் கலந்த ஒரு கதையோட்டத்தை அவர் பயன்படுத்துகிறார். எனக்கு இது மிகுந்த வியப்பை அளித்தது. நான் இதை மிகவும் ரசித்தேன்.
நாவலைப் பற்றி சற்று விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.Comments