டென்னிஸ் (2)


Image result for tennis paintings

நான் பின் தொடர்ந்த இன்னொரு சம்பவம் என் அப்பா சம்மந்தப்பட்டது. “நீ தினமும் கல்லூரிக்குப் போகிறாயா? இல்லை ஊர் சுற்றுகிறாயா?” என காலையில் அப்பா முகம் கறுக்க கடுகடுப்பாய் கேட்டார். நான் முனகியபடி தலையாட்டி விட்டு வந்து விட்டேன். ஆனால் அன்று அப்பாவைப் பின் தொடர முடிவெடுத்து அவர் பின்னால் பேருந்து நிறுத்தம் வரை சென்றேன்.

அவர் முதல் பேருந்தில் இருந்து வெகுவாய் சிரமப்பட்டு இறங்கி எடுக்கப் போகும் கூட்டமான மற்றொரு பேருந்தில் மூச்சிரைக்க ஏறி வாசல் படியில் தொங்கியபடி வந்தார். நான் சுலபமாய் ஏறி உள்ளே சென்று விட்டேன். எனக்கு உட்கார இடமும் கிடைத்தது. முதல் நிறுத்தம் வந்ததும் கூட்டம் சற்றே குறைந்தது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி பத்து நிமிடம் நடந்தால் அவரது அலுவலகம். அங்கு அவர் நுழையும் போது எதேச்சையாய் என்பது போல் அவர் பார்வையில் பட வேண்டும், அப்போது அவர் கேட்பார்இப்படி நான் யோசித்துக் கொண்டிருந்த போது நின்று கொண்டிருந்தவர்களை விலக்கிபடி அப்பா என் இருக்கை அருகே வந்தார். நான் ஜன்னல் அருகே இருந்ததால் முதலில் அவர் என்னை கவனிக்கவில்லை. அவர் என்னருகே இருந்த முதியவரை தள்ளி இருக்க கேட்டார். நான் தோள்களைத் தாழ்த்தி துப்பட்டாவால் தலையை மூடி ஒடுங்கிக் கொண்டேன். என் இதயம் எகிறித் துடித்தது.
 அப்பா இருக்கை விளிம்பில் அமர்ந்து எதிர் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு வந்தார். அவர் முகமெங்கும் வியர்வை பூத்துள்ளதை, ஆழமாய் அவர் மூச்சு விடுவதை, தொப்பை ஏறி இறங்குவதை அரைக்கண்ணால் பார்த்தேன். தன் கையில் இருந்த பையை இன்னொரு கைக்கு மாற்றிக் கொண்டார். தன் கண்ணாடியை உருவி முகத்தை துடைத்துக் கொண்டார். இந்த இடைவெளியில் நான் சட்டென முடிவெடுத்துஅப்பாஎன மெல்ல அழைத்தேன். அவர் அதிர்ந்து திரும்பிப் பார்த்தார்.
 நீங்க எப்போ ஏறுனீங்க?”
அவர் அதிர்ச்சி விலகாது நோக்கினார்: “நீயா? நான் வேறே ஏதோ பொண்ணுன்னு நினைச்சேன்.”
புன்னகைத்தேன்.
 தலையில என்ன துப்பட்டாவால மூடியிருக்க?”
ஆமாம்
உன் கண்ணாடி எங்கே?”
வெளியே வந்தால் போட்டுக்கிறதில்ல?”
ஏன்?”
“….”
வேறே யாரோன்னு நினைச்சேன்.”
அவர் மீண்டும் ஒருமுறை என் முகத்தில் உற்று நோக்கினார். தன் பின்னங்கழுத்தை தொட்டுக் காட்டி சொன்னார், “முடி வெட்டினியா? இதென்ன பாய்கட்டா?”
ஆமாப்பாஇல்லப்பா, லைட்டா டிரிம் பண்ணினேன். முடியை இப்படி சீவியிருக்கிறதுனால இப்போ உங்களுக்கு வித்தியாசமா தெரியுது. காலையில் கூட பார்த்தீங்களே
நான் பார்க்கவே இல்லியே?”
அவர் தன்னையே மறுப்பது போல் தலையை அசைத்தார்.
மாலை வீடு திரும்பிய போது அப்பா என்னை பேருந்தில் பார்த்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. நான் அவருக்கு தேநீர் கொண்டு கொடுத்த போது என் கண்களை சந்திக்கவே தயங்கினார்.
சரி, நான் இனி சொல்ல வந்த கதைக்கு வருகிறேன்.
இப்போதெல்லாம் நான் நூலகத்துக்குப் போவதில்லை. ஒருவித ஒவ்வாமை. நான் மாலை வேளைகளில் கூடைப்பந்து விளையாட்டரங்கின் படிக்கட்டில் அமர்ந்து படிப்பேன். அல்லது படிக்கிற பாவனையில் யாராவது ஒரு நபரை மட்டுமே தொடர்ந்து கவனிப்பேன். அவர் யார் என்பதெல்லாம் முக்கியமில்லை. அவரை மையமாக்கி அந்த சூழலை ஒரு திரைப்படம் போல் உள்வாங்குவேன்.
 ஆனால் அப்போதெல்லாம் பின்னிருந்து மூச்சுக்காற்று என் கழுத்தைத் தீண்டும். அந்த அபூர்வமான வாசனை என்னை மரங்கள் அடர்ந்த பகுதியை நோக்கி இழுக்கும். அரங்கு காலியாக இருக்கும் போது சின்ன காலடிகள் சுற்றிச் சுற்றி ஓடும் ஒலிகண்ணை மூடிக் கொள்வேன்.
 ஒருநாள் அரங்கில் கடுமையான கூட்டம். அப்போது கல்லூரிகள் இடையிலான போட்டி ஒன்று நடந்து கொண்டிருந்தது. உட்கார இடம் இன்றி நான் வெளியே வந்தேன். அப்படித் தான் நான் அவனைப் பார்த்தேன். எங்கே?

Comments