பிக்பாஸ் 2


Image result for பிக்பாஸ் 2

தமிழர் சினிமா பைத்தியம் தான். அதற்காக பாஜகவுக்கு (முன்பு அம்மாவுக்கும்) அரசியல் களத்தில் குழப்பில் விளைவிக்க வேண்டும் என்றாலும் நடிகர்கள். பிக்பாஸ் என்றாலும் நடிகர்கள்.
பிக்பாஸில் எல்லா பங்கேற்பாளர்களும் வாய்ப்பு இல்லாத, ஒன்றிரண்டு படங்கள் மூலம் சற்றே முகபரிச்சயம் பெற்ற நடிகர்கள், அல்லது டிவியில் சினிமா நிகழ்ச்சிகள் தொகுப்பவர்கள், அல்லது பாட்டுபாடுபவர்கள்… அலுப்பாக இருக்கிறது. பிரபலங்களின் சச்சரவுகள், விவாகரத்தாகி பிரிந்திருக்கும் ஜோடிகளின் மறுசந்திப்பு (தாடி பாலாஜியும் முன்னாள் மனைவியும்) ஆகியவை ஆர்வமூட்டும் விசயங்களே. ஆனால் அதை மட்டுமே மக்கள் எவ்வளவு நாட்கள் பார்க்க வேண்டும்?

ஒரு சமூக சேவகர், ஒரு அரசியல் போராளி, அரசியலில் அதிக வேலையில்லாத ஒரு குட்டித் தலைவர், ஒரு துடிப்பான எழுத்தாளன் … இப்படி ஒரு அணி சேர்க்கை இன்னும் அதிரடியாய் இருக்கும். சரிக்கு சமமாய் சினிமா ஆட்களும் இருக்கட்டுமே! ஏனென்றால் சினிமா தவிர்த்த ஆட்கள் இருந்தால் அவர்களுக்கு பேசவும் அரட்டை அடிக்கவும் சர்ச்சிக்கவும் பல்வேறு புது விசயங்கள் இருக்கும். பிக்பாஸ் வழி சமூகத்துக்கு தேவையான பல அபிப்பிராயங்கள், கருத்துக்களை கொண்டு சேர்க்கவும் முடியும். இந்நிகழ்ச்சிக்கும் வெறும் கிசிகிசு பொழுதுபோக்கு என்பதைக் கடந்து மக்களின் பிரச்சனைகளைப் பேசும் நிகழ்ச்சியெனும் ஒரு சமூக இடமும் கிடைக்கும்.
அப்புறம், இந்த விஜய் டிவியில் துணி துவைத்தவர்கள், முகம் அலம்பினவர்கள் என யாராவது ரெண்டு பேரை எந்த நிகழ்ச்சியென்றாலும் உள்ளே கொண்டு வந்து விடுகிறார்கள். பிக்பாஸ் வீடு என தனியாக தேவையில்லை. விஜய் டிவியின் எந்த நிகழ்ச்சியும் ஒரு  பிக்பாஸ் வீடு தான். பார்த்த ஆட்களே தினமும் காலையில் பல் தேய்ப்பதில் இருந்து இரவு தூங்கும் வரை திரும்ப திரும்ப எதிலும் பார்க்க வேண்டும் என்பது பார்வையாளருக்கு நீங்கள் வழங்கும் தண்டனையா? இப்போது பிக்பாஸிலும் இவர்கள் அளிக்கும் வாயுத் தொல்லை.
இந்த பிக்பாஸ் முடியும் போது பார்வையாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் அடைபட்டு பைத்தியமாகும் நிலைக்கு வந்து விடுவார்கள் என நினைக்கிறேன்.

Comments