பாலகுமாரன் எனும் பேரலை (2)


 Image result for balakumaran
பாலகுமாரன் 230க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதி இருக்கிறார். ஒவ்வொன்றிலும் அவர் குரல் அழுத்தமாய் ஆதுரமாய் ஒலித்துக் கொண்டிருக்கும். இதுவே பாலகுமாரனின் பிரதான வசீகரம். இதுவே பாலகுமாரனுக்கு ஒரு கார்ப்பரேட் குருவுக்கு இணையான பக்தர், பக்தைகளை பெற்றுத் தந்தது. கதையோட்டத்தை மீறி ஒலிக்கும்
அவரது உரத்த குரல் நமக்கு உறுத்தலாய் படவில்லை. ஏனெனில் அது அணுக்கமான பரிவான கனிவான தவிப்பான உணர்ச்சித் ததும்பலான குரலாக இருந்தது

இன்னும் நுணுக்கமாய் சொல்வதானால் அது ஒரு பெண்ணின் குரலாக இருந்ததுஅன்பையும் குரூரத்தையும் விவேகத்தையும் பத்தாம்பசலித்தனத்தையும் ஒன்றுக்குப் பின் இன்னொன்றாய் அள்ளிக் கொடுத்து திக்குமுக்கடிக்கிற ஒரு பெண்மை அவருக்குள் இருந்தது. தர்க்கத்தையும் பகுத்தறிவையும் அறிவின் தராசுகளையும் கடந்து ஏக்கத்தின் இச்சையின் தவிப்பின் மூர்க்கத்தின் கண்மூடித்தனத்தின் நிதானத்தின் இறுமாப்பின் பெண்மை அவருக்குள் நிறைந்து ததும்பியது.
ஒரு ஈவிரக்கமற்ற வில்லனிடம் கூட கனிவின் சிறு தீற்றலை இது படரவிட்டது. “மெர்க்குரிப்பூக்கள்நாவலின் மிருகத்தனமான பாத்திரமென்றால் அது அறிவழகன். ஏழ்மையிலும் புறக்கணிப்பிலும் வளர்ந்த அவன் இளைஞனாகி கூலிக்கு வன்முறையை ஏவுகிறவன் ஆகிறான். அவனுக்கு வாழ்க்கை மீது பரிவோ நம்பிக்கையோ எதிர்பார்ப்போ இல்லை. யாரிடமும் இருந்தும் எதையும் பிடுங்கலாம்; ஒரு சின்ன எரிச்சலுக்காக ஒரு அப்பாவியை கொல்லலாம் என நம்புகிற மனிதன். அவன் ஸ்லெடட்டோ என்றொரு மிக மெல்லிய கூர்மையான கத்தியை வைத்திருக்கிறான். அதை ஒருவர் மீது சொருகினால் ரத்தம் பீறிடாது; கிழித்த இடம் தெரியாது; ஆனால் உள்ளுக்குள் காயம் பலமாய் இருக்கும். தாக்கப்பட்டவர் கடுமையாய் தவித்து துடித்து சாவார்.
 ஒரு தொழிற்சாலை வேலை நிறுத்த போராட்டத்தின் போது அதில் பங்கெடுக்காமல் ஒதுங்கிப் போகிற கணேசன் தெரியாமல் சைக்கிளில் வந்து அறிவழகனை இடித்து விடுகிறான். எரிச்சலிலும் சகமனிதர் மீதான அலட்சிய பாவத்தாலும் அறிவழகன் ஸ்டெலெட்டோவைக் கொண்டு கணேசனை கிழிக்கிறான். அதன் பிறகு அலட்சியமாய் அங்கிருந்து நகர்ந்து விடுகிறான். அவன் எந்த குற்றவுணர்வும் கொள்வதில்லை; அது அவன் ரௌடி வாழ்க்கையில் ஒரு எளிய சாகசம், அவ்வளவே! அவனைக் கொல்வதாய் சபதமெடுக்கிறான் தொழிற்சங்கத்தை சேர்ந்த சுப்பையா.
 சுப்பையா அவனைத் தேடி நீண்ட நாட்கள் அலைந்து ஒருவழியாய் கண்டுபிடிக்கிறான். அப்போது அறிவழகன் ஒரு விலைமகளை ஏமாற்றி விட்டு அடித்து துன்புறுத்தி தள்ளி விட்டு நடந்து வருகிறான். அவன் மீது வாசகர்களுக்கு உச்சபட்ச அருவருப்பும் கசப்பும் ஏற்படும் தருணம் இது. அவனை நெருங்கும் சுப்பையா பேச்சுக் கொடுக்கிறான். தனக்கு தினமும் சாராயம் குடிக்காமல் தூங்க முடியாதென்றும், அங்கு சாராயம் கிடைக்காமல் தான் தவிப்பதாகவும் அறிவழகனிடம் கூறுகிறான். அறிவழகனிடம் விற்க சாராயம் உள்ளதா? அவனிடம் மதுவின் நெடி அடிக்கிறதே? அறிவழகன் உடனே தன் பாக்கெட்டில் உள்ள சாராய புட்டியை சுப்பையாவிடம் நீட்டுகிறான். சுப்பையா ஒரு வாய் குடித்து விட்டு அதன் விலையைப் பற்றி விசாரிக்க, அறிவழகன் அது தான் தன் தேவைக்காக வைத்திருந்த சாராயம், சுப்பையா தன்னால் மதுவின்றி தூங்க முடியாது தவிப்பதாய் சொன்னதாய் அவனுக்கு அளித்ததாய் சொல்கிறான். நாவலில் அறிவழகன் அடுத்தவர் மீது அக்கறை காட்டும் ஒரே தருணம் இது.
 ஏன் இந்த அக்கறை சுப்பையா மீது அவனுக்கு வருகிறது? அவன் தன்னைப் போன்ற அடித்தட்டு ஆள் எனும் உணர்வா? ஏன் அந்த ஏழை விலைமாதை குரூரமாய் அவன் நடத்தினான்? அவள் தன் தாயை நினைவுபடுத்தினாள் என்பதானாலா?
இந்த உலகின் தனக்கு இடமே இல்லை எனும் எண்ணம் அவனை ஒரு மிருகமாக்குகிறது; ஆனால் அவனும் சற்றே மனிதத்துடன் நடந்து கொள்ளும் ஒரு சிறு இடம் நாவலில் வருகிறது.
 இதைப் படித்ததும் எனக்குத் தோன்றியதுபாலகுமாரனால் ஓரு வில்லனைக் கூட துளி கூட அன்போ அக்கறையோ இன்றி உருவாக்க முடியாது. அவர் ஒரு சைக்கோ கொலைகாரனை சித்தரித்தால் கூட அவனது மனம் ஏதோ ஒரு வெளிச்சப் பொறியில் பிரகாசமடைவதை அவர் காட்டாமல் இருக்க மாட்டார்.

Comments