இச்சை என்பது மூன்று நிமிட சமாச்சாரம் அல்ல (2)


Image result for desire painting

இச்சையை ரெண்டாக பிரிக்கலாம்: 1) உடனடியானது மற்றும் தற்காலிகமானது (immediate and short-lived) 2) படிப்படியாய் திரண்டு வளர்வது (cumulative).
முதலாவது உடனடியாய் உருவாவதாலே தற்காலிகமாகவும் இருக்கிறது. இரண்டாவது நமது உணர்வுகள், கற்பனை, நம்பிக்கை, சிந்தனை, கனவுகள், நினைவில் மீட்டு லயித்தல் என பல கெலிடோஸ்கோப் துண்டு சித்திரங்களால் உருக்கொள்கிறது. ஒருவரை நீங்கள் போகிற போக்கில் பார்த்து ரசிக்கிற போது இப்படி துண்டுதுண்டாய் அவரைப் பற்றின ஒரு சித்திரம் நமக்குள் உருவாவதில்லை.

நமது நாட்டில் பல கோடி மக்கள் காதலிப்பவர்களை மணப்பதில்லை. ஆனால் அதற்காக அவர்கள் போலியான, பாசாங்கான திருமண உறவிலும் இல்லை. பார்த்தவுடன் மோகம் தோன்றாத ஒருவரிடம் கூட போக போக ஒரு பிரியம் தோன்ற வாய்ப்புண்டு. திருமணம் எனும் சமூக அமைப்பு இன்றும் வலுவாக நிலைப்பதற்கு ஒரு காரணம் அதில் இருவகை மோகங்களுக்கும் சாத்தியமுண்டு என்பதே.
 தொடர்ந்து ஒருவருடன் வாழ்ந்து அவரை ரசிக்கவும் சமாளிக்கவும் அவருடன் இணக்கமாக உணரவும் நம்மால் திருமணத்துக்குள் முடிகிறது. இந்த உறவு நீடித்தும் இருக்கிறது. அதேவேளை இந்த உறவில் உக்கிரமான இச்சையும் அதன் விளையாட்டு பாவனைகளும் சாத்தியமில்லாமல் போகும் போது நீங்கள் திருமணத்துக்கு வெளியே உறவுகளை அமைத்துக் கொண்டு அங்கு தேவையானதை பெறவும் முடியும்.
திருமணத்துக்குப் பின் வேலையிடங்களில் எதிர்பாலினத்துடன் பழகும் கணவன் மனைவி ஒன்று அதிக ஆபத்தில்லாத கடலை போடுதல்கள், சீண்டலான உரையாடல்கள், பரஸ்பர பார்வை பரிமாற்றங்கள் என ஒரு எல்லைக்குள் நிற்கும் உறவுகளை உருவாக்கிக் கொள்வதை இன்று மிக அதிகமாக பார்க்கிறேன். சமூக வலைதளங்கள் இந்த மீறல்களை இன்னும் சுலபமாக்குகின்றன. ஆனால் மிக மிக அரிதாகத் தான் திருமணம் கடந்த உறவுகளை சீரியஸாக எடுத்துக் கொண்டு அதற்காக குடும்ப அமைப்பை கைவிட ஆணோ பெண்ணோ தயாராகிறார்கள். சமூக பழியை அஞ்சி அல்ல அவர்களை இப்படி திருமணத்துக்குள் நிலைப்பது. “தகாதஉறவுகளில் நீடித்த தன்மை இல்லை, அவை தற்காலிகமானவை, அவை திருமண உறவை விட போலியானவை, மேம்போக்கானவை என இவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
அப்படி இருக்க இன்று ஏன் மணமுறிவுகள் அதிகமாக நிகழ்கின்றன? முன்பை விட ஆணும் பெண்ணும் இன்று அதிக நேரம் வெளியே இருக்கிறார்கள். பரஸ்பரம் நேரப் பகிர்வும் அருகாமையும் இன்று குறைந்து விட்டன. ஒருவருடன் நீங்கள் செலவழிக்கும் காலம் குறைய குறைய (அதாவது ஒருவருடன் அதிக நேரம் இருந்து அலுப்பதனால் அல்ல) அவர் மீதான ஆர்வம் குன்றுகிறது; அவரைப் பற்றின சாதகமான சித்திரமும் சிதிலமுறுகிறது. அவர் மெல்ல மெல்ல உங்கள் உலகில் இருந்து இல்லாமல் ஆகிறார்.
இன்னொரு கேள்வி: ஒருவருடன் நீண்ட காலம் சேர்ந்திருக்கையில் அவர் மீது அலுப்பும் கோபமும் அதிகமாவதில்லையா? பழக பழக இச்சை வளருமெனில் நீண்ட கால உறவுகளில் ஏன் நேர்மாறாக நடக்கிறது?
இதுவும் உண்மை தான். ஒருவரது தொடர்ச்சியான அருகாமை கசப்பையும் ஏமாற்றத்தையும் தரலாம். இது இயல்பே என நினைக்கிறேன். எது ஒன்றை சிறப்பை கொணர்கிறதே அதுவே சீரழிவையும் தரும். அன்பு மட்டுமே வெறுப்பாக மாறுகிறது; மாற்றம் மாற்றமின்மையையும், நம்பிக்கைகள் அவநம்பிக்கைகளும் கொண்டு வருகின்றன. நீங்கள் இத்தனை நாள் இச்சை கொண்டிருந்த ஒருவர் மீது உங்களுக்கு மெல்ல மெல்ல அலுப்பு ஏற்படும் என நான் நினைக்கவில்லை.
மாறாக நீங்கள் செக்ஸியாக கருதின ஒன்று இப்போது கசப்பாக மாறலாம். சில மாதங்களுக்கு முன்னால் கிளர்ச்சி ஏற்படுத்திய ஒருவரது குழந்தைத்தனம் இப்போது முதிர்ச்சி இன்மையாய் படலாம். சுட்டியாய் தோன்றின முன்கோபம் இப்போது பொறுப்பின்மையாய் தோன்றலாம். விசயம் ஒன்று தான். அது மாறாமல் அப்படியே இருக்கிறதுஅதன் மீதான எதிர்வினை மட்டுமே மாறி இருக்கிறது.
இது எப்படி சாத்தியம்? ஒரே காரணம் எப்படி இருவேறு முரண்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்?
 நிச்சயம் ஏற்படுத்தும். அன்றாட வாழ்விலே கவனித்தோமானால் எத்தனையோ உதாரணங்களைக் காண முடியும். இதோ இந்த கட்டுரையை நான் அலுப்புடன். வெறுப்புடன், கசப்புடன் தான் எழுதுகிறேன். அதேவேளை என் எழுத்தை நான் என் உயிரை விட அதிகமாய் நேசிக்கிறேன். எந்தளவு நேசிக்கிறேனோ அந்தளவு அதை வெறுக்கவும் செய்கிறேன். அது மகிழ்ச்சியும் தரும் அளவுக்கு எனக்கு துன்பத்தையும் அளிக்கிறது. அது என்னை விடுவிக்கும் அளவு என்னை பிணைத்தும் வைக்கிறது. கண்டாலே எரிந்து விழும் மனைவியிடம் செல்லும் கணவனைப் போன்றே நான் என் எழுத்தை நாடி, தயக்கத்துடன், கசப்புடன், என்னையே கடிந்தபடி, செல்கிறேன். ஏன்? வேறு யாரும் தராத அபாரமான மகிழ்ச்சியை, களிப்பை, கிளர்ச்சியை அது தருகிறது என்பதால்.
உலகில் எல்லா திகைப்பூட்டும் அனுபவங்களுக்கும் இப்படி இரு பக்கங்கள் உண்டு. இரண்டும் சேர்ந்தே நம்மை வந்தடைகின்றன. ஆனால் இதற்கும் தாம்பத்யத்துக்குமான வித்தியாசத்தையும் நான் அறிவேன்.
(தொடரும்)

Comments