நீங்க சொன்னா தலைகீழாத் தான் இருக்கும் (2) – “சகோதரிகள்”

Image result for kashmir pellet gun
சுட்டிராதீங்க ஐயா, இனி மேல் உணர்ச்சிகரமா எழுத மாட்டேன்.

நான் ஸ்கூட்டர் ஓட்ட துவங்கிய சமயம் ஓட்டுநர் உரிமம் வாங்க விண்ணப்பித்தேன். என் ஸ்கூட்டர் உபரியான சக்கரங்கள் இணைக்கப்பட்டது. அதிகாரிகள் முதலில் அதைக் காரணம் காட்டி மறுத்தார்கள். அதை சாலையில் ஓட்டுவது ஆபத்தானது என்றார்கள். ஒருவர் வந்து “உங்களைப் போன்றவர்கள் உரிமம் வாங்க வேண்டியதில்லை. சும்மா ஓட்டுங்க” என்றார். நான் பிடிவாதமாக இருந்தேன். அவர்களுக்கு கையூட்டு கொடுக்கலாம் என ஆலோசனை வந்தது. மறுத்தேன். கடைசியில் அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள்: “உங்களுக்கு வாகனம் ஓட்டும் உடல் தகுதி உண்டென ஒரு மருத்துவ சான்றிதழ் வாங்கி வாருங்கள். உரிமம் தருகிறோம்.” அதற்காக ஒரு அரசாங்க மருத்துவரிடம் சென்றேன். அவர் என் தெருவை சேர்ந்தவர். ரொம்ப கராறானவர் என பெயர் பெற்றவர். நான் அவரிடம் விபரங்களை சொன்னேன். ஊன சதவீதம் 60% கீழ் இருந்தால் எனக்கு உரிமம் பெற வசதி என சொல்லி உதவுமாறு கோரினேன். நான் அப்போது என் இடது காலில் காலிப்பர் எனும் ஒரு கருவியை அணிந்திருந்தேன். அது தான் என்னை நிற்க வைத்தது; நேராக நடக்க உதவியது. மருத்துவர் சில நொடிகள் என்னை உற்றுப் பார்த்தார். சிந்தித்தார். அடுத்து அவர் சொன்னார், “நீங்க காலிப்பரை கழற்றுங்க”. கழற்றினேன்.

“இனி நடங்க”
“இல்ல டாக்டர் அதில்லாம என்னால நடக்க முடியாது.”
“நடங்க. நடந்தீங்கன்னா நீங்க சொல்ற மாதிரி 60% உள்ளாகவே சான்றிதழ் தருகிறேன். இல்லெண்ணா 90% மேல் போடுவேன்.”
“டாக்டர் அப்படி நீங்க சொல்ற மாதிரி நடக்க முடியுமுன்னா எனக்கே சான்றிதழே தேவையில்லையே.”
“இந்த மாதிரி பேச்செல்லாம் எங்கிட்ட வேண்டாம். முடிஞ்சா நட. இல்ல …”
நான் குழம்பிப் போனேன். அதன் பிறகு காலிப்பரை அணிந்து கிளம்பி வந்து விட்டேன். நான் போகும் போது அவர் என்னை நிறுத்தி தான் எப்போதும் விதிமுறைப்படியே செயல்படுவதாய், தன்னால் சட்டவிரோதமாய், கடமையை மீறி செயல்பட முடியாது என்றும் தெளிவுபடுத்தினார். நான் விக்கித்து நின்றேன். இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள். ரொம்ப கராறானவர்கள், அதனாலே ரொம்ப முட்டாள்தனமானவர்கள்.
தமிழின் விமர்சகர்கள் இந்த டாக்டரைப் போன்றவர்கள். அவர்கள் முட்டாள்கள் அல்ல, ஆனாலும் ஒரே விதிமுறையைப் பற்றி தொங்கிக் கொண்டிருப்பவர்கள். தங்களிடம் உள்ள அளவுகோலால் உலகத்தையே அளக்க வேண்டும் என நினைப்பார்கள். அதற்குள் அடங்காத எதையும் ஒத்துக்கொள்ளவோ பொருபடுத்தவோ மாட்டார்கள். கணிசமான விமர்சகர்கள் அப்படித் தம் கையில் வைத்து மிரட்டும் ஆயுதம் / அளவுகோல் எதார்த்தம்.
ஒரு கதையில் மொழி எதார்த்தமாக இருக்க வேண்டும். அன்றாட வாழ்வை அப்படியே பிரதிபலிக்க வேண்டும். அல்லாவிடில் அக்கதை மிகையானது எனும் முடிவுக்கு இவர்கள் சுலபத்தில் வருவார்கள். இந்த எதார்த்த உபாசகர்களுக்கு சு.ரா, அசோகமித்திரன் போன்றோர் லட்சியம். இவர்களைப் படிக்காத விமர்சகர்களுக்கும் கூட ஒரு கதையை படிக்கும் போதே “இப்படியெல்லாம் நடப்பில் சாத்தியமா?” எனும் கேள்வி எழுந்து கொண்டே இருக்கும். பிசிறு தட்டினால் உடனே புத்தகத்தை தூக்கி கடாசி விடுவார்கள். ஆனால் ஒரு இலக்கிய பிரதியில் (ஏன் ஒரு வெகுஜன பிரதியில் கூட) மொழியின் எதார்த்தத்தை தாண்டி ரசிக்கத் தக்க நிறைய அம்சங்கள் உண்டு – வசனம், காட்சி சித்தரிப்புகள், கதைக்களம், கதை சொல்லப் படும் கோணம், கதைக்குள் கையாளப்படும் கருத்தாக்கம்… இப்படி.
 ஆனால் நம் விமர்சகர்கள் கைக்கடிகாரம் ரிப்பேர் செய்பவரைப் போன்றவர்கள் – அந்த நடுங்கி ஓடும் சின்ன முள் அதைத் தாண்டி கதைக்குள் எதையும் பார்க்க மாட்டார்கள். ஒரு காலத்தில் மலையாளிகள் ஷகீலா மீது பைத்தியமாக கிடந்தது போல இவர்கள் எதார்த்தத்திடம் கட்டுண்டு கிடக்கிறார்கள்.
ஒரு கதையில் யாராவது அழுதாலோ குரலெடுத்து கத்தினாலோ கூப்பாடு போட்டாலோ உடனே அக்கதையை தூக்கி கடாசி விடுவார்கள். ஒரு கதையில் நாடகீயமான மோதல்கள், தழுதழுப்பான சித்தரிப்புகள் வந்தால் இது மெலோடிராமா என முடிவுக்கு வருவார்கள். நண்பர்களே நீங்கள் வாழும் இந்த பூமி என்ன ஐரோப்பிய சினிமா போல கிசுகிசுவென மென்மையாய் மனிதர்கள் பேசிக் கொண்டு உறுத்தாமல் பரஸ்பரம் உற்றுப் பார்த்து திரியும்படியாகவே இருக்கிறது? இங்கே எவ்வளவு பேர் சத்தமாய் பேசுகிறார்கள், இங்கே எவ்வளவு கண்ணைப் பறிக்கும் வர்ணங்கள், இங்கே நொடிக்கொரு தரம் அழுது கசிந்து புலம்பாதவர்கள் எத்தனை பேர்? திறந்த வெளியில், எளிய மக்கள் வாழும் புலத்தில் நிகழும் கதைகள் மிகையாகத் தான் இருக்கும். அந்த மிகையே அங்கு கலை.
அசோகமித்திரன் கதைகள் அப்படி மௌனமாய், நறுக்குத்தெறித்த வசன்ங்களுடன் இருக்க ஒரு காரணம் அது நிகழும் ஒண்டுக்குடித்தன வீடுகள், நெரிசலான, மனிதர்கள் சுதந்திரமாய் கையை நீட்டிப் பேசக் கூட இடமற்ற தெருக்கள். அங்குள்ள நகர மனிதர்களின் தனிமை, அவர்களின் தனிமனித புழுக்கம். ஆனால் நாம் எழுதும் எல்லா கதைகளும் அப்படி உணர்ச்சியற்ற விலகல் தன்மை கொண்ட சித்தரிப்புகளாய் இருக்க அவசியம் இல்லை.
நான் இவ்வளவு கொந்தளிக்க காரணம் சமீபத்தில் நரன் மற்றும் கெ.என் செந்திலின் கதைகள் எதிர்கொள்ள நேர்ந்த “எதார்த்தவாத” ஸ்டெர்லைட் படுகொலைகள் தாம்.
இப்போது உங்களுக்கு இரண்டு கேள்விகள் எழலாம்:
எதார்த்தவாதம் அவசியம் இல்லையா? கதை எதார்த்த வாழ்வை பிரதிபலிக்க வேண்டாமா?
ஒரு கதையில் ஒருவர் கண்ணீர் விடுகிறார். அந்த கண்ணீர் வாசகனுக்கு வர வேண்டியதல்லவா? கதாபாத்திரம் மட்டும் அழுது புலம்பினால் அது அபத்தமல்லவா?
இக்கேள்விகளுக்கான பதிலை அடுத்த பதிவில் அளிக்கிறேன்.


Comments

B Mangalam said…
Realism too is a framework,a received mode of representation.it is not ,indeed,"realistic"!
Awaiting your sequel to this.