“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (1)


Image result for அப்துல் ரகுமான்

Image result for சுஜாதா

முன்குறிப்பு: நண்பரும் கவிஞருமான ஜம்ஸித் ஸமான் அவரது ஹைக்கூ கவிதைகள் சிலவற்றை என்னிடம் பகிர்ந்திருந்தார். பெரும்பாலான கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. வேறு சில கவிதைகளில் அவற்றின் வடிவம் சார்ந்து மட்டும் எனக்கு அவரிடம் கூற சில கருத்துக்கள் இருந்தன. அவற்றை ஒரு சிறு குறிப்பாக எழுதினால் பலருக்கும் பயன்படும் என்பதால் ஸ்மானின் அனுமதி பெற்று

தமிழில் ஹைக்கூ

ஹைக்கூ தமிழுக்கு புதிதல்ல. சுமார் அரைநூற்றாண்டாக அது இங்கே வேர்விட்டு செழித்து வளர்கிறது. ஒரு காலத்தில் அது மிக பிரபலமாக இருந்ததுண்டுஅப்துல் ரகுமான் போன்ற பிரசித்த வானம்பாடி கவிஞர்கள் ஹைக்கூவை வளைத்து வளைத்து டூயட் பாடினார்கள். அப்போது வாராந்திரிகளில் ஹைக்கூவுக்கென தனி பக்கம் ஒதுக்கினார்கள். வாசகர்கள் லட்சம் லட்சமாய் ஹைக்கூ எழுதி பிரசுரித்தார்கள். அதன் சுருக்கமான வடிவம், முடிவில் ஒரு திருப்பம் ஆகியன அதை எழுதவும் படிக்கவும் எளிதாக ஆக்கியது. விளைவாக தமிழில் ஹைக்கூ ஒரு துணுக்கின் அந்தஸ்தை பெற்றது. ஜோக் வாசிப்பது போல் நம்மவர்கள் ஹைக்கூ வாசித்து புரட்டிச் சென்றார்கள். (.தா. பறந்து விலகிய / தாவணி / கொடியில் காய்ந்தபடி)
 அதன் பிறகு சுஜாதா ஹைக்கூவுக்கு தனி வெளிச்சம் கொணர்ந்தார். ஹைக்கூவின் வடிவம், நுண்ணுணர்வு, ஜப்பானிய பாரம்பரியத்துக்கு அதற்கு உள்ள இடம் பற்றி சீரியஸாக இங்கு எழுதியவர் அவர் தான். குறிப்பாக நமது வணிக எழுத்தாளர்கள் எழுதியவை எல்லாம் ஹைக்கூ அல்ல என உணர்த்திய அவர் தான்.

இரு கேள்விகள்

நமது தீவிர இலக்கியர்கள் எனக்குத் தெரிந்து ஆரம்பத்தில் இருந்தே ஹைக்கூவை பொருட்படுத்தியதில்லை. ஆத்மாநாம், நகுலன், தேவதேவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன் ஆகிய பல முக்கிய கவிஞர்களும் ஹைக்கூ எழுதியதில்லை. யுவன் ஹைக்கூ மொழியாக்கி இருக்கிறார் (”பெயரற்ற யாத்ரீகன்”). உயிர்மையில் தொகுப்பான வெளியான இந்நூல் மிக முக்கியமானது. ஆனால் அவரும் தமிழில் ஹைக்கூ எழுதியதில்லை. அதாவது தமிழ் படைப்பாளிகள் ஹைக்கூவை மிகவும் சிலாகித்து படிப்பவர்கள். ஆனால் ஹைக்கூ வாளை அவர்கள் உறையில் இருந்து உருவினதில்லை. அதற்கு ஒரு காரணம் தமிழ்ச் சூழலுக்கு அது பொருந்தி வருமா எனும் ஐயம் தான். (1) அவர்கள் ஏன் அப்படி சிந்தித்தார்கள்? (2) வானம்பாடிகள் எழுதியவை ஏன் ஹைக்கூ இல்லை?

முதல் கேள்வி

இந்த கேள்விகளுக்கான விடையை பார்த்து விட்டு, ஹைக்கூ எழுதுகையில் கவனம் கொள்ள வேண்டிய விசயங்கள் என்ன எனப் பார்ப்போம். இதற்கான உதாரணங்களாய் நான் ஜம்ஸித்தின் சில கவிதைகளை தருகிறேன்.
முதல் கேள்விக்கு வருகிறேன்:
உலகம் முழுக்க உள்ள காவிய, நாட்டுப்பாடல், நவீன கவிதைகளுக்கு ஒரு பொதுவான முக லட்சணம் உண்டு. அதாவது, இங்கிலாந்தின் முதல் காவியம்போவுல்ப்”, பதினேழாம் நூற்றாண்டில் மில்டன் எழுதிய காவியம்பேரடைஸ் லாஸ்ட்ஆகியவை நம்மூர் கம்பராமாயணத்தில் இருந்து மிகப்பெரிதாய் வேறுபடாதவை. நுண்ணுணர்விலும் நோக்கத்திலும் நம்பிக்கைகளிலும் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஹைக்கூவுக்கும் ஒரு நவீன கவிதைக்குமான வேறுபாடு என்பது முடிச்சுப்போட முடியாதது. இதனாலே ஆங்கில இலக்கிய வகுப்புகளில் எப்போதும் ஹைக்கூவை அறிமுகப்படுத்தவோ விவாதிக்கவோ மாட்டார்கள்.
அமெரிக்காவில் ஐம்பதுகளில் பீட் தலைமுறை தோன்றிய போது ஹைக்கூ கவிதைகளுக்கு மவுசு தோன்றியது. ஜென் பௌத்தம் உலகெங்கும் தன அகன்ற சிறகுகளை விரித்து நிழல் பரப்பிய போது அதனுடன் ஹைக்கூவும் கூடுதலாய் பரவியது. இன்றும் ஜென் சிந்தனையில் ஆர்வம் கொண்டோர் ஐரோப்பாவில் ஹைக்கூவையும் முன்னெடுக்கிறார்கள். ஆங்கிலத்தில் கணிசமான ஹைக்கூ கவிதைகள் எழுதப்படுகின்றன. (எனது முதல் நூலானஇன்றிரவு நிலவீன் கீழ்இத்தகைய ஆங்கில ஹைக்கூக்களின் தொகுப்பாகும்.) இப்படி ஹைக்கூ என்றுமே ஒரு உதிரி இயக்கமாய் தழைத்துள்ளது. ஆனால் ஜப்பானில் அது ஒரு பிரதான கலாச்சார வடிவம். அங்கு எளிய மக்கள் பௌத்த ஆலயங்களில் உள்ள மரங்களில் தங்கள் பிரார்த்தனையின் பாகமாக ஹைக்கூ கவிதைகளை சுருள் ஒன்றில் எழுதி தொங்க விடுவார்கள் என படித்திருக்கிறேன்.

Comments