பாலகுமாரன் எனும் பேரலை (1)


 Image result for balakumaran

இந்த கட்டுரையை எழுதுவது பற்றி உரையாடுகையில் ப்ரியா கல்யாணராமன் என்னிடம் வினவினார்: “நீங்க பாலகுமாரன் விசிறியா?” நான் தயங்காமல் உடனேஆமாம்என்றேன். பிறகு யோசித்துப் பார்த்த போது எனக்கே அது வியப்பாக இருந்தது.
 என்னிடம் உங்களுக்குசுந்தர ராமசாமி / பிரமிள் / லா..ரா / சி.சு. செல்லப்பா / கா..சு பிடிக்குமா?” எனக் கேட்டால் நான் சில நொடிகள் குழம்புவேன்; தவிப்பேன்; பிறகு இவர்களைப் பற்றின என் மதிப்பீட்டை நழுவி வழுவிச் சொல்வேன். ஏனென்றால் இலக்கிய மதிப்பீடு மிக சிக்கலானது; தொடர்ந்து மாறுவது; இலக்கியத்துள் ஒருவரது ஆகிருதி இது என துல்லியமாய் சொல்வது மிக மிக சிரமம்.

 ஆனால் பாலகுமாரனை நான் என்றும் மதிப்பிட்டதில்லை. அவரை படிநிலையில் எங்கே வைப்பது என தலையை புண்ணாக்கியதில்லை. என் நினைவுகளுடன், என் மென் உணர்வுகளுடன், என் தனிமையுடன், உறவுநிலைகள் குறித்த என் தவிப்புடன், என் அழகுணர்வுடன், இந்த சமூகத்திடம் என்னால் வெளிப்படுத்த முடியா அன்புடன் தொடர்ந்து உரையாடியவர் அவர்.
 அவரது நாவல் ஒன்றில் ஒரு வடகிழக்கு மாநில கூர்க்கா பாத்திரம் வருவார். அந்த கூர்க்கா தேநீரை எப்போதும் பொறுமையாய் ரசித்து அருந்துவார்; அதன் வெதுவெதுப்பு வாசனை சுவை ஆகியவை தன் மூச்சில் தன் பிரக்ஞையில் தன் நினைவுகளில் கலந்து தானற்று போகும்படி ரசித்து அருந்துவார். பதின்வயதில் இந்த இடத்தைப் படித்த பின் நான் தேநீர் அருந்தும் விதமே மாறியது. இப்படி பாலகுமாரனிடம் இருந்து தாக்கம் பெற்று மெல்ல மெல்ல நிறைய விதங்களில் நான் மாறிய நூறு நூறு சந்தர்பங்களைக் கூற முடியும். பாலகுமாரன் ஒரு குரல்; என்னை அடித்து கரையிலொதுக்கி அலைகழித்த ஒரு பேரலை.
 அவர் நிறைய பலவீனங்கள் கொண்ட எளிய மனிதரும் தான். அதை அவர் மறைக்க முயன்றதும் இல்லை. அவருக்குள் விவேகமும் சாமர்த்தியமும் வெகுளித்தனமும் ஒரே சமயம் தெரிந்தன. நான் இதையெல்லாம் அவரிடம் ரசித்தேன். அதனால் தான் நான் அவருக்கு வாசகன் அல்ல; ஒரு ரசிகன். இந்த கட்டுரையில் நான் அவரை கராறாய் மதிப்பிடப் போவதில்லை. அவரைப் பற்றின எனது அபிப்ராயங்கள், புரிதல்கள், அவதானிப்புகளை பகிர்கிறேன்.
பாலகுமாரன் தனது பிரசித்தமான ஆரம்ப கால நாவலானமெர்க்குரிப் பூக்களைஎழுதுகையில் எனக்கு ஒரு வயதிருக்கும். என் பன்னிரெண்டாவது வயதில் அவரது நாவல்கள் எனக்கு பல்வேறு வெகுஜன புனைவுகள் மத்தியில் அறிமுகமாயின. அந்த காலத்தில் என்னுடன் வெகு அணுக்கமாய் உரையாடும், ஆலோசனைகள் சொல்லும், பெண் அன்யோன்யம் பற்றி கிளுகிளுப்பாய் நட்பாய் பேசும் ஒரு குரலாய் அவர் மாறினார்.
 பாலகுமாரன் நாவல்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஒன்று தான். அவர் நூல்களில் ஒலிப்பது ஒரே அங்கலாய்ப்பு, ஆவேசம், இச்சை, நம்பிக்கை தான் என புரிந்து கொண்டேன். ஆனாலும் அந்த சொற்களை மீள மீள கேட்க நான் விரும்பினேன். இது தான் அவருக்கும் பிற வெகுஜன, இலக்கிய படைப்பாளிகளுக்குமான வித்தியாசம்.
 நீங்கள் சுஜாதாவை அவர் தரும் துல்லிய புகைப்படம் போன்று பளபளப்பான சொற்சித்திரங்களுக்காக, வசனங்களின் நுணுக்கங்களுக்காக, எதிர்பாரா வாழ்வியல் விநோதங்கள், அபத்தங்களுக்காக படிப்பீர்கள். அந்த நகைச்சுவை, அந்த சாமர்த்தியம், அந்த நளினத்தில் மட்டுமே சுஜாதா இருப்பார். மற்றபடி அவர் தான் சொல்லும் கதையில் இருந்து வெகுவாக விலகி இருப்பார். சுருக்கென்று குத்தி விட்டு, சட்டென விலாவில் தொட்டு சிரிப்பு மூட்டி விட்டு, இருளில் ஒளி பாய்ச்சி சில வினாடிகள் உங்களை திகைக்க விட்டு விட்டு நகர்ந்து விடுவார். ஆனால் பாலகுமாரன் தன் எல்லா பாத்திரங்களிலும் இருப்பார். வசனங்களில் சிறு சிறு தொனி வேறுபாடுகளுடன் ஒலிப்பது பாலகுமாரனின் மனக்குரலாகவே இருக்கும்.
Comments

நன்றாக எழுதி உள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி அபிலாஷ் சந்திரன்.
Anonymous said…
நல்ல எழுத்து .