இச்சை என்பது மூன்று நிமிட சமாச்சாரம் அல்ல (1)


Image result for desire painting
ஒரு அழகிய பெண்ணை (அல்லது ஆணை) காணுறுகிறீர்கள். பார்த்ததுமே மனம் கொள்ளை போகிறது. காலம் காலமாய் இப்படித் தான் காம இச்சை புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. கம்பனின் வரிகளை நாம் மறக்க முடியுமா? ராமனை தெருவில் காணும் சீதையின் உடலில் நேரும் பரிதவிப்பின், நிலைகொள்ளாமையின், எரியும் ஆசையின் விளைவுகளை அவர் அழகாய் பட்டியலிடுகிறார். அவ்வளவு தான்: உடலில் இருந்து உடலுக்கு இச்சை ஒரு மின்சார அலை போல் வந்து அடிக்கிறது. பார்த்ததும் காதல் என்பதே தவிர்க்க முடியாத நிதர்சனம். வேறெப்படியும் அது நிகழ முடியுமா தெரியவில்லை.

இப்படி பார்த்து தன்னை இழந்து காதலில் விழுந்த ஒரு பெண்ணுடன் (ஆணுடன்) காபி அருந்திக் கொண்டிருக்கிறீர்கள். அவள் (அவன்) கண்களுக்குள் உங்களை மறந்து லயித்திருக்கிறீர்கள். ஒரு சைகை, ஒரு சிறு அசைவு, ஆடையின் சலசலப்பு, முடி நெற்றியில் புரளும் பாங்கு, ஒரு வித்தியாசமான கழுத்தசைவு, மூக்கில் அந்த ஒற்றைப் பருஅப்படியே எந்த நினைவும் இன்றி அம்முகம் எனும் பாற்கடலில் நீந்தியபடி இருக்கிறீர்கள். அப்போது அந்த இடத்தை இவளை (இவனை) விட அழகான சிலர் கடந்து போகிறார்கள். உங்கள் கண்கள் சட்டென தன்னிச்சையாக அந்த கடந்து செல்லும் வசீகரத்தை கவனிக்கிறது. உடனே மீளவும் செய்கிறது. அந்த கடந்து போன அழகை பெரிதாய் கவனித்து உள்வாங்கி இருக்க மாட்டீர்கள். ஆனால் கண்கள் பதிவு செய்ய தவறி இருக்காது. இப்போது உங்கள் இச்சை யார் மீது செயல்படுகிறது? இச்சை ஒன்றில் இருந்து இன்னொன்றாய் தாவிப் பறக்கும் ஒரு பட்டாம்பூச்சியா? எல்லா முகங்களிலும் தேனுறிஞ்சும் இச்சை ஒன்று தானா?

ருஜிதா எனும் என்னுடைய தோழி ஒருவர் (உளவியல் படித்தவர்) இவ்விசயத்தில் எம்.பில் ஆய்வு செய்திருக்கிறார். அதாவது நாம் விரும்பும் ஒருவரிடத்து எப்படி ஒரு சில விசயங்களை மட்டும் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் கவனிக்கிறோம், எப்படி பிறவற்றை காண்பதை தவற விடுகிறோம், இது ஏன் எப்படி நடக்கிறதுஇந்த விசயங்களை அவர் ஒரு பரிசோதனை மூலம் ஆய்வு செய்தார். வழக்கமான உளவியல் ஆய்வு முறைமை தான்உங்களிடம் பல்வேறு புகைப்படங்களைக் காட்டுவார்கள்; சில படங்களில் முன்பும் பின்னாலும் ஆட்கள் இருப்பார்கள்; நீங்கள் யாரையெல்லாம் எப்படியெல்லாம் கவனிக்கிறீர்கள் என விபரங்களை சேகரித்து கூட்டி கழித்து ஒரு முடிவுக்கு வருவார்கள்.
நான் மேலே குறிப்பிட்ட சம்பவத்தில், உங்கள் காதலி (காதலன்) அழகில் நீங்கள் திளைக்கையில் அவரை foreground என்றும், கடந்து போகும் கவன ஈர்ப்பு வசீகரத்தை background என்றும் ருஜிதா அடையாளப்படுத்துகிறார். சிலநேரம் பின்னணியிலும் முன்னணியிலும் உங்கள் இச்சை டென்னிஸ் பந்து போல் பறக்கிறது. அது ஓரிடத்தில் நிலைப்பதில்லை.
 உங்களது இச்சை என்பது தெளிவாக ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை மட்டும் மோகித்து தோன்றுவதல்ல; எதை, யாரை எல்லாம் கவனிக்க தவறுகிறீர்களோ அதுவே உங்கள் மோகத்தை வடிவமைக்கிறது. நமது காதல்கள் கூட்டாஞ்சோறு காதல்கள் என்பது என் ஆய்வாள தோழியின் அவதானிப்பு. இதனால் தான் இன்று மோகித்தவர் நாளை அலுக்கிறார்கள்; நாளை நம்மை மனதை கலைக்கப் போகும் புயல்கள் இன்று நம்மை அசைப்பதில்லை. மோகத்தை மனமே உருவாக்குகிறது; சிதறிச் சிதறிச் சென்றாலும் தற்காலிகமாய் தானாய் ஒரு உருவத்தைப் பெறும் பாதரசத்தைப் போல் நம் மோகம் இருக்கிறது.
மோகம் ஒரு கூட்டாஞ்சோறு என்பதை நான் ஏற்கிறேன். ஆனாலும் இரண்டு விசயங்களில் என்னால் ருஜிதாவுடன் உடன்பட இயலவில்லை.
1)   மோகம் நொடியில் தோன்றுவதாய் நாம் நம்பினாலும் அது மறுநொடியில் அழியவும் கூடும். இது ருஜிதாவின் அவதானிப்பு. இது சரி எனில் ஏன் சிலர் மீதான நம் மோகம் மட்டும் சுலபத்தில் அழியாமல் இருக்கிறது?
2)   பழக பழக காதல் அலுக்கலாம். ஏனெனில் நாம் முன்பு கவனிக்கத் தவறிய பிழைகள், பிசிறுகள், சிக்கல்களை இப்போது மனம் அதிக கவனத்துடன் பெரிதுபடுத்தி நமக்குக் காட்டலாம். இதற்குக் காரணம் உறவுகளின் போது நாம் நமது இச்சையின் இலக்கை முழுமையாய் கிரகிப்பது இல்லை. அரைகுறையாய், நமக்கு தேவையான விசயங்களை மட்டுமே உள்வாங்குகிறோம். காதலியின் (காதலனின்) தெத்துப் பல்லின் அழகான குழந்தைத்தனத்தை ரசிப்போம். ஆனால் சொத்தைப் பல்லின் அருவருப்பை மிகத் தாமதித்தே உள்வாங்குவோம். உறவுகள் முறிவதன் காரணம் இப்படியான குறைபட்ட, அரைகுறை புரிதலே என்பது ருஜிதாவின் அவதானிப்பு. இது உண்மையா?
நான் மாறுபடுகிற முதல் விசயத்தில் இருந்து துவங்குவோம்.
சிலரது அழகு நம்மை உடனடியாய் ஆழமாய் சஞ்சலப்படுத்தும்; அது நமது புலன்களின் வழி நிகழும் ஒரு மாயம் தான். நான் மறுக்கவில்லை. ஆனால் ஆனால் நம்மைக் கடந்து போகும் அந்த சிலரது பேரழகு, மனதுக்குள் நுழைந்து இறகுகளை குடையும் அந்த ஆவேசமான இச்சையை ஏன் தூண்டுவதில்லை. ஏன் அவர்களை பார்த்து என்ன அழகுஎன போகிற போக்கில் நினைக்காமலே நினைத்து விட்டு மறந்து விடுகிறோம்? இன்னொரு சந்தர்பத்தில் நாம் ஆற அமர அந்த கடந்து போகும் வனப்பை ரசித்து சிலாகித்திருப்போம். ஆனால் அந்த வனப்பிடம் மனம் கொள்ளை கொடுப்போமா என்பதில் உறுதியில்லை.
உங்கள் காதலியிடம் (காதலனிடம்) இருக்கையில்அந்த காதல் பெருகும் வேளையில்வேறு எந்த சக்தியும் உங்கள் கவனத்தை சுலபத்தில் கலைக்க முடியாது. இது உங்கள் கவனத்தை தக்க வைக்க, இச்சையை வளர்க்க இயற்கை மேற்கொள்ளும் ஒரு தந்திரம் என வைப்போம். ஆனால் அத்தந்திரத்தை ஏன் இயற்கை உங்கள் காதலியிடத்து (காதலனிடத்து) பிரயோகிக்கவில்லை? ஆரம்பத்தில் அவரை உதாசீனிக்க, இன்னொருவரை கவனிக்க ஏன் இயற்கை தூண்டவில்லை? முதலில் அவளை (அவனை) கண்ட போது foregroundஇல் இருந்தாரா backgroundஇலா? இதை யார் தீர்மானிப்பது?
நாம் கருத்திற் கொள்வது நிறைய வசீகரமானவர்கள் இருக்கும் ஒரு சூழலை. அங்கு நொடிக்கு நொடி உங்கள் கவனம் கலையவும், ஒருவரை விட இன்னொருவர் அதிக அழகு எனும் நம் மதிப்பீடுகள் மாறவும் வாய்ப்பு அதிகம். இது போன்ற வளாகங்களில் நான் பல காதல் ஜோடிகளை கவனிக்கிறேன். இரண்டு கச்சிதமான அழகி, அழகன்களா இந்த ஜோடிகள் பெரும்பாலும் இருப்பதில்லை. இருந்தும் ஒரு மேலான எதிர்பாலினத்தைக் கண்டு ஏன் அவர்கள் மனம் பிறழ்வதில்லை? (வசதியும் அதிகாரமும் கூடிய) ஒரு சிறந்த உடலை கண்டுபிடித்து புணர்வதே காதலின் நோக்கம் என உளவியல் வலியுறுத்துகிறது. ஆனால் காதலில் இத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறாதவர்களையே மனம் தேர்ந்தெடுக்கிறது. ஏன்?
 எனது இன்னொரு தோழியிடம் இது பற்றி விசாரித்தேன். அவர் சொன்னார்: “நான் எனது காதலனுடன் இருக்கையில் வேறொரு அழகன் அங்கு வந்தால் உடனே பொறாமைப்படுவேன். இவனை இன்னொருவள் அடையப்போகிறாரே என என் மனம் தவிக்கும்.”
நான் கேட்டேன்: ஒருவேளை அந்த அழகன் தனியன் என்றால்?
அவர் சொன்னார்: “அப்போது நான் அவன் தரப்பை எடுத்துக் கொள்வேன். அவனைப் போல் தனியாக அவ்வளவு அழகை வைத்துக் கொண்டு சுதந்திரமாய் என்னால் இருக்க இயலவில்லையே என எண்ணி தவிப்பேன்.”
இவ்வளவு சஞ்சலப்படும் இப்பெண் சற்றும் காதலனிடம் இருந்து விலகுவதில்லை. இது எப்படி சாத்தியமாகிறது?
நான் அத்தோழியிடம் மேலும் ஒரு கேள்வியை எழுப்பினேன். நீங்கள் உங்கள் காதலனுடன் இருக்கையில் இன்னொரு ஆணைக் கண்டு மனம் அலைபாய்கிறது. ஆனாலும் அந்த பேரழகனுக்காக உங்கள் காதலனான அழகனை நீங்கள் கைவிடப் போவதில்லை. இது ஏன்? நான் அவருக்கு நான்கு பதில்களை அளித்து அதில் ஒன்றை தேர்வு செய்யக் கேட்டேன்.
) என் காதலன் மீதான இச்சை இன்னும் ஆழமானது, உறுதியானது
) அறிந்த காதலனை இழந்து அறியாத ஒருவனை அடைய அஞ்சுகிறேன். தெரியாத எதிர்காலத்தை விட தெரிந்த நிகழ்காலம் மேல்.
) என் காதல் மீது எனக்குள்ள உறுதிப்பாடு, நம்பிக்கை, பிடிப்பு என்னை அதில் தொடர வைக்கிறது
) எனக்கு காரணம் தெரியவில்லை; என் மனம் அப்படித் தான் என்னை இட்டுச் செல்கிறது.
தோழி முதல் காரணத்தை தேர்ந்தார். உடல் கவர்ச்சி தற்காலிகமானது என்றார். அப்படி எனில் அவரது இச்சை எக்கவர்ச்சியினால் ஏற்படுவது?
அதுவும் உடல் கவர்ச்சி தான் என்றாலும் அது உடலின் மீது மட்டும் ஏற்றப்பட்டது அல்ல. ஒருவரை தொடர்ந்து நேசிக்கும் போது அவரை அணுவணுவாய் கிரகிக்க துவங்குகிறோம். சுபாவ அடிப்படைகள், விசித்திரங்கள், நம்பிக்கைகள், எண்ணங்கள், சைகைகள், உடல் மொழி, வாசனை, பழக்கவழக்கங்கள் என பல விசயங்களை இச்சிக்க துவங்குகிறோம். இது பழக பழக வளர்ந்து கொண்டே போகிறது.
 இதனால் தான் நாம் மோகிக்கும் ஒருவர் மீது வெறுப்பு கொண்டு பிரியும் போதும் நம் மனம் ஒரு பக்கம் அவர் இன்றி இருக்க இயலாது தவிக்கிறது. அது (வழக்கமாய் உளவியலாளர்கள் சொல்வது போல) நாம் மோகித்தவரின் சிறந்த அம்சங்களை மட்டும் நினைவில் வைத்திருந்து நாம் அவரைப் பற்றி ஏற்படுத்திய மாய பிம்பத்தை அவருக்குப் பதிலியாக வைத்து பூஜித்து, காலாவதியான நம் காதலை விடாப்பிடியாய் தொடர்வது அல்ல. நாம் ஆசையாய் வாங்கின ஒரு கார் விபத்தாகி நொறுங்கி விட்டதெனில் நாம் ஏமாற்றமடைவோம். ஆனால் இன்னொரு கார் வாங்கினதும் ஏமாற்றம் மறைந்து விடும். ஆனால் உறவுகளில் இந்த விட்டு விலகல் மிக மிக வேதனையாக இருக்கிறது. இது நாம் நினைவுகளை உண்மையாக எடுத்துக் கொள்ளும் பிழையினால் மட்டும் ஏற்படுவதல்ல. வேறெப்படியும் நம்மால் அவரை மோகிக்க முடியாது என்பதாலே வேறெப்படியும் மறக்க முடியாமலும் இருக்கிறது.
(தொடரும்)

Comments