சாதியை ஏன் திராவிட கழகங்கள் ஒழிக்கவில்லை? (1)


Image result for அண்ணா எம் ஜி ஆர்

இக்கேள்வியை பலரும் எழுப்பி இருக்கிறார்கள். திராவிட கட்சிகள் சாதியுடன் சமரசம் பண்ணிக் கொண்டன என்பது ஒரு பார்வை. திராவிட கட்சிகள் என்றுமே சாதியை ஒட்டுமொத்தமாய் ஒழிக்க முட்டி முனைந்ததில்லை என்பது மற்றொரு வரலாற்று ரீதியான பார்வை.
நமது நீதிக் கட்சி, திராவிட கழகம் துவங்கி திமுக வரை சாதி ஒழிப்பு ஒரு மேலோட்டமான கொள்கையாக இருந்தது உண்மையே. ஆனால் இக்கட்சிகள் ஒருவிதத்தில் தம் பிரதான கொள்கையாய் கொண்டது பிராமண சாதி ஆதிக்கத்தை முறியடிப்பதையே. அத்தோடு சமூக நீதி, சமத்துவம் ஆகிய கொள்கைகளையும் முன்னெடுத்தன. 

ஆகையால் இங்கே பல்வேறு முற்போக்கு சிந்தனைகள் முளைக்கும் வளமான விளைநிலம் ஏற்பட்டுள்ளது. இங்கே நீங்கள் சுலபத்தில் சீர்திருத்த கருத்துக்களை பேசி தாக்கம் ஏற்படுத்த முடியும். இங்கே விளிம்புநிலையினருக்கு (அறிவுத் துறையில், அரசியல் சமூக தளங்களில்) இயல்பில் திறந்து கொள்ளும் கதவுகள் கேரளா, வங்காளம் போன்ற இடதுசாரி கோட்டைகளில் கூட திறப்பதில்லை.
ஆனால் அதேவேளை இன்னொரு பக்கம் இங்கே கொடூரமான சாதிய ஒடுக்குமுறை தாக்குதல்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இங்கே மூன்றாம் பாலினத்தோரை பிச்சைக்காரர்களாய், பாலியல் தொழிலாளிகளாய் நடத்துவதும், பெண்களை சாமர்த்தியமாய் ஒடுக்குவதும் நடந்து கொண்டிருக்கின்றன. முற்போக்கு – பிற்போக்கு விசைகள் தொடர்ந்து மோதி முயங்கும் வெளி தமிழகம். ஆனால் ஒப்பிட்டால் கேரளாவில் பெண்களுக்கான சுதந்திர வெளி ஊசிமுனை அளவே; அங்கு ஆண்கள் பெண்களை இழிவுபடுத்துவதும் ஒடுக்குவதும் பட்டவர்த்தம். அங்கு சாதிய உணர்வுகள் பெயரிலே படமெடுத்து எதிரே வருபவரை நோக்கி சீறுகின்றன. நடிகை பார்வதி மேனன் கூட தன் சாதிப் பெயரை துறக்க தமிழ்க்கவிஞர் குட்டிரேவதியுடனான உரையாடல் தேவைப்பட்டது – இத்தனைக்கும் கேரளா ஒரு முற்போக்கு மாநிலம்.
இச்சூழலுக்காக நாம் பெரியார் உள்ளிட்ட நமது சீர்திருத்தவாதிகள், சிந்தனையாளர்கள், தலைவர்களை கையெடுத்து வணங்கலாம். ஆனால் இத்தலைவர்களால் ஏன் சாதியை முழுக்க ஒழிக்க இயலவில்லை எனும் கேள்வி எழும் போது ஒரு பக்கம் இருந்து தோன்றும் முயற்சிகளால் மட்டும் சமூகம் மாறுவதில்லை என்பதை குறிப்பிட வேண்டும்.
ஒரு சமூகத்தில் பல்வேறு சமூக பொருளாத பண்பாட்டு விசைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் – கண்ணுக்குத் தெரியாதபடி எளிய விசைகள், வெளிப்படையாய் நம்மை இயக்கும் வலுவான விசைகள். ஒவ்வொரு காலகட்டத்திலும் நமது சமூகத்துக்கு ஒரு மாற்றத்துக்கான தேவை ஏற்படுகிறது. அப்போது மக்கள் ஒரு குறிப்பிட்ட விசைக்கு இடம் அளிக்கிறார்கள்; அது மேல் வந்து முன்னேகிப் பாய ஊக்கமளிக்கிறார்கள். அவ்விசையின் முகமாய் தோன்றும் ஆளுமைகள், தலைவர்களை மக்கள் கொண்டாடி வழிபடுவார்கள். ஆனால் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் மக்களின் தேவை, நோக்கம், லட்சியம் மாறுபடுகிறது.
ஒரு காலத்தில் பெரியாரை, அண்ணாவை தலைவர்களாய் கொண்ட அதே சமூகம் தான் எம்.ஜி.ஆர் முன்பும் மண்டியிட்டது. கலைஞரை புறக்கணித்து அடுத்து ஜெயலலிதாவின் கார்ப்பரேட் சமூகநல அரசியலையும் அது ஆராதித்தது. இந்த ஒவ்வொரு பத்தாண்டு அல்லது கால்நூற்றாண்டு காலகட்டங்களில் தமிழகத்தில் பொருளாதாரம் மெல்ல மெல்ல காத்திரமான மாற்றங்களுக்கு உள்ளாகி வந்தது. லட்சியவாதம் முழுக்க விழத் துவங்கிய காலத்தில் எம்.ஜி.ஆரும், முழுக்க சீரழிந்த காலத்தில் ரஜினியும் இச்சமூகத்தின் முகங்கள் ஆயினர். தமிழகம் கார்ப்பரேட்மயமாக்கலை நோக்கி நகர்கையில் ஜெயல்லிதா தோன்றி கோலோச்சினார்.
இந்த மாற்றங்களுக்கு இடையில் நாம் சாதி ஒழிப்பை சற்றே மறந்து போய் விட்டோம்.
இதைப் பற்றி முக்கியமான வினாக்கள் எழுப்பி எழுத்தாளர் ஜி.முருகன் முகநூலில் ஒரு பதிவு போட்டிருந்தார்:
 கைவிடப்பட்ட சாதி ஒழிப்பு
...
தலித் அமைப்புகள் தவிர்த்து சாதி ஒழிப்புப் போராட்டம் பெரியாரோடு நின்றுவிட்டதாகவேத் தோன்றுகிறது.
சாதி ஒழிப்பில் பெரியார் காட்டிய தீவிரத்தை வேறு யாரும் எடுத்துச் செல்லவில்லை. சில அமைப்புகள் அதை சம்பிரதாயமாகவே தொடர்கின்றன. நலிந்து ஒலிக்கும் அவற்றின் குரல் மக்களின் காதுகளுக்கு சென்று சேர்வதில்லை.
தலித் அமைப்புகளின், சிந்தனையாளர்களின் குரல்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை, சில நேரங்களில் புலம்பல்களாக எதிர்கொள்ளப்படுகின்றன, எரிச்சலோடும் பார்க்கப் படுகின்றன.
சாதி ஒழிப்பை முன்னெடுத்திருக்க வேண்டிய திராவிடக் கட்சிகள் வாக்குப் பொறிக்கிகளாக மாறிப்போனது நாம் அறிந்ததே. இவை சாதி முரண்களை அதிகப்படுத்தி பலன் தேடுமே அல்லாது அதை அகற்றத் துணியாது என்பதே நிஜம்.
வன்னியர் சங்கம் பாமகவாக மாறி அது பெற்ற அரசியல் வெற்றிக்குப் பிறகு ஒவ்வொரு சாதியும் நாற்காலிகளைக் கனவு காணும் அரசியல் மையங்களாக ஆனது சாதி ஒழிப்புக்கு நேர்ந்த பெரிய பின்னடைவு.
ஆனால் சாதியப் படுகொலைகளும், சாதி ஆணவப் படுகொலைகளும் காலாகாலத்துக்கும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.
வன்செயல்கள் நிகழும் போது கண்டிக்கும் அரசியல் தலைவர்களும் (சிலர் வாயைத் திறப்பதில்லை) கவனம் குவிக்கும் மீடியாக்களும் பின்னர் அவற்றை மறந்துவிடுகின்றனர்.
ஆனால் சாதி வன்மம் சமூகத்தின் ரத்த நாளங்களில் புகைந்து கொண்டே இருக்கிறது. சந்தர்ப்பம் வாய்க்கும்போது கச்சநத்தம் கிராமத்தில் நடந்தது போல பெரும் தீயாக கொழுந்துவிட்டு எரிகிறது, உயிர்களை பலி வாங்குகிறது.
இந்த வன்செயல்கள் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீத மக்களுக்கு மட்டுமே நேர்வதால் மீதமுள்ள 80 சதவீத மக்களுக்கு அதன் வலி தெரியாமல் போகிறது. தன் குடும்பம், தன் சாதி, தன் இனம், அதன் நலன் என வாழும் மக்களால் இந்த வலியை பொதுவானதாக மாற்றிப் புரிந்துகொள்ள முடிவதில்லை.
சாதி ஏற்றத் தாழ்வு சமூகத்தின் பெரும் பிரச்சினையாக, கறையாக, கொப்புளமாக மாறி அதன் வலி அதிகரிக்கும் போது அதை பெரும்பாலானவர்கள் உணரும் போதுதான் சாதி ஒழிப்புக்கு சாதகமான வழிகள் திறக்கும் என்று தோன்றுகிறது.
இல்லையென்றால் நல்ல ஆட்சியாளர்கள் கையில் அரசு இருக்க வேண்டும். சாதிய வன்முறைகள் சமூகத்தின் பெரும் தீங்கு என உணர்ந்து அதைக் கலைவதற்கான முன்னெடுப்புகளை அவர்கள் செய்ய வேண்டும். ஆனால் அதற்கான சூழல் பின்னடைந்து போவதே நடந்து கொண்டிருக்கிறது. அரசியலில் உயர்சாதி இந்துக்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், வர்ணாசிரம தர்மத்தை மீண்டும் நிலைநாட்டியே தீருவோம் என்று திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கையில் சாதி ஒழிப்புக்கான சாத்தியங்கள் குறைந்து போவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
சாதிய வன்முறையை தனக்குள் கொண்ட ஒரு சமூகம் நிச்சயம் அறிவார்த்தமான சமூகமாக இருக்க வாய்ப்பே இல்லை. நம்மை நல்லவர்கள் என்றும் அறிவாளிகள் என்றும் சொல்லிக்கொள்வதற்கு வெட்கப்படவே வேண்டும்.

Comments