பொன்மாலைப் பொழுதுவரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பேசுகிறேன். வாராவாரம் அவர்கள் நடத்தும் “பொன்மாலைப் பொழுது” எனும் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் இம்முறை அடியேன். தலைப்பு “நாவல் எழுதும் கலை”.

 வரும் அரைக்கல்வியாண்டில் எங்கள் கல்லூரியில் நான் புனைகதை எழுதுவது குறித்து சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் (certificate course) நடத்த இருக்கிறேன். அதற்கான ஒரு முன்னோட்டமாய் இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தலாமா என ஒரு அலோசனை. ஆகையால் எனக்கு தரப்பட்ட்ட ஒன்றரை மணிநேரத்தை உரை ஆற்றி ஆற்றி கொல்லாமல், நாவல் வடிவம் குறித்த என் நம்பிக்கைகள், உலகளவில் பொதுவாய் நிலவும் அபிப்ராயங்களை சுருக்கமாய் பேசி விட்டு, ஒரு நாவலின் முதல் அத்தியாயத்தை பார்வையாளர்களில் சிலரை எழுதச் செய்து பயிற்சி அளிக்கலாம் என ஒரு திட்டம்.
இம்முறை “பொன்மாலைப் பொழுதை” ஒருமணிநேர நாவல் பட்டறையாய் நடத்தப் போகிறேன்.
விருப்பமுள்ள இளம் படைப்பாளிகள், வேடிக்கை பார்க்கும் ஆர்வலர்கள், எட்டிப் பார்க்கப் போகும் நண்பர்கள் அனைவரையும் நிச்சயம் வருமாய் வேண்டுகிறேன். என்னவெல்லாம் செய்து பார்க்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

Comments