இருவர்: ஒளிப்பதிவு காட்டும் உளப்பாங்கு (5) "தளபதிபடத்துக்கும் ஒளிப்பதிவு சந்தோஷ் சிவனே. அதில் ஆட்சியர் அரவிந்த் சாமி மம்முட்டி மற்றும் ரஜினியை ஒரு பேச்சுவார்த்தைக்கு அழைப்பார். எந்த சுமூக முடிவுக்கும் வராமல் பேச்சு தடித்தபடி இருக்கும். அரவிந்த் சாமிக்கு அந்த ரௌடிகள் மீது ஒரு பூடகமான வெறுப்பு இருக்கும். ஆனால் இன்னாரை இதனால் வெறுக்கிறேன் என அவரால் உறுதியாய் சொல்ல இயலாது. ஆகையால் ரௌடிகள் ஏன் சட்டத்துக்கு உடன்பட வேண்டும் என்பதை பட்டும்படாமல் சொல்லிக் கொண்டு போவார். அப்போது அவரது மனம் ஒரு குழப்பத்தில் இருப்பதை சொல்ல சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு கருவி சுழன்றபடி இருக்க செய்வார். அரவிந்த சாமியின் கோணத்தில் இருந்து அவரது மேஜையை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரையாவது காட்டி வருவார்கள். சட்டென ரஜினி குறுக்கிட்டு கத்துவார். “உங்களுக்கு எங்களைப் போன்ற ஏழைகளைக் கண்டால் பிடிக்கவில்லை. நீங்கள் காக்கி சட்டையும் வெள்ளை சொள்ளை ஆடையும் அணிந்து செய்வதை நாங்கள் அழுக்கான தோற்றத்துடன் செய்தால் பிடிக்கவில்லைஎன்பார். உடனே அரவிந்த சாமியும் வன்மம் பெற்றுஉன்னைப் போன்ற பொறுக்கிகளை தான் நான் வெறுக்கிறேன். அது உண்மை தான்என ஒத்துக் கொள்வார். அந்த கணம் அரவிந்த் சாமியின் மனம் நிலைப்பெறும். அவரது குழப்பம் மறைந்து விடும். அதுவரை சுழன்று கொண்டிருந்த ஒளிக்கருவி சட்டென நின்று நிலையாக பதிவு செய்யும்.


மனம் நிலையின்றி தவிப்பதை இப்படி ஒளிக்கருவியை சுழல விட்டு காட்டும் பாணியை சந்தோஷ் சிவன்இருவரிலும்பயன்படுத்துகிறார்.
ஒன்று தமிழ்ச்செல்வனும் செந்தாமரையும் படுக்கையில் சுழலும் பித்தான காதல் காட்சி.இன்னொன்று தமிழ்ச்செல்வனிடம் தனக்கு அமைச்சர் பதவி வேண்டி ஆனந்தன் வரும் போது தமிழ்ச்செல்வன் தன் சுழல்நாற்காலியில் அசைந்தாடியபடி ஆனந்தனை நோக்கும் காட்சி. “தளபதியில்அரவிந்த் சாமியைப் போன்றே இங்கு தமிழ்ச்செல்வனுக்கும் மனம் நிலையாக இல்லை. அவனால் தெளிவாக தன் நண்பன் மீதான அசூயையை, கோபத்தை, பயத்தை காட்ட முடியவில்லை. தமிழ்ச்செல்வன் இடம் வலமாய் அசைந்தபடி பூடகமாய் பேச ஆனந்தன் நிலையாக அவனைப் பார்க்கிறான். அவனுக்கு தன் நண்பனின் தவிப்பு புரிகிறது. அவன் புன்னகைத்தபடி கேட்கிறான்: “அப்படீன்னா செல்வம் எனக்கு மந்திரிப் பதவி தர மாட்டீங்க தானே?”. அந்த கேள்வியுடன் தமிழ்ச்செல்வன் நாற்காலியில் சுழன்றாடுவதும் நிற்கிறது. அவன் நிலைப்பெற்று ஆனந்தனை நேராக நோக்கி தன் நிலைப்பாட்டை விளக்குகிறான். ஆனந்தன் இனிமேல் தன் எதிரி என்பதை உறுதிப்பட உணர்த்துகிறான். இனிமேல் அவனால் முன்னோ பின்னோ போக முடியாது. வரலாறு நிலைப்பெற்று விட்டது.இதை அடுத்து கட்சி நிறுவனர் வேலுத்தம்பியின் மரணம் நிகழ, இரங்கலின் போது மேடை ஏறும் ஆனந்தன் தன் கட்சி மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். அமைச்சர்கள் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என கோருகிறான். இந்த சமயத்தில் ஆனந்தன் நிலையற்று தவிக்கிறான். தன் தாய்க்கட்சியை விமர்சித்து அதை விட்டு விலகுவது அவனுக்கு எளிதாக இல்லை. ஆக அவன் எதிர்மறையாக பேச பேச மையம் கொள்ளாமல் அவன் பேச்சு சுழன்று சுழன்று வருகிறது. இதைக் காட்டதளபதிபாணியில் படக்கருவி சுழல்கிறது. ஆனந்தன்சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும்என கோருகிற வரையில் அது சுழல்கிறது.


 அறுதியாக அவன் குற்றச்சாட்டை வலுவாக வைத்த பின்னர் படக்கருவி நிற்கிறது. ஏனெனில் அவனால் இனி திரும்பி செல்ல முடியாது. இனி தான் இறைத்த சொற்களை அவனால் அள்ளி எடுக்க இயலாது. தமிழ்ச்செல்வன் அவனுக்கு இனி தீர்க்கமான எதிரி. இந்த தீர்மானமான நிலையை எட்டிய பின் ஆனந்தனின் மனம் அமைதியாகிறது. அதனாலே படக்கருவி நிலைப்படுகிறது.
பிரதான பாத்திரங்களின் மனம் கொள்ளும் பல்வேறு உணர்வுநிலைகளை, உள்ளத்தின் தடுமாற்றங்களை, மானிட உறவாடலில் நிகழும் அதிகார நிலைமாற்றங்களை கதை, வசனம், உணர்ச்சிப்பெருக்கு வழியாக அன்றி படக்கருவியின் கோணம் மூலமாகவே இவ்வளவு அழுத்தமாய் சொல்ல முடிந்ததேஇருவர்படத்தை தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு சாதனை என நிறுவி விடுகிறது. அதற்காய் அந்தஇருவரையும்எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நன்றி: உயிர்மை, 2018

Comments