ராஜன் குருக்கள்
ராஜன் குருக்கள் ஒரு முக்கியமான வரலாற்றாசிரியர்; ஆய்வாளர்;
சமூக விஞ்ஞானி.
ராஜன் குருக்கள் சன்னமாய் புன்னகைத்தபடி மிக மென்மையாய்,
அதிராமல் பேசும் பேச்சாளர். புதியவர்களுடன் சட்டென ஸ்நேகம் பாராட்டும் ஆசிரியரின் குணநலன்
கொண்டவர். எங்கள் (கிறைஸ்ட்) பல்கலையில் பேராசிரியர்களுக்கான ஒரு கலந்துரையாடல் மூன்று-நாள்
நிகழ்ச்சி கடந்த வாரம் நிகழ்ந்தது. அதன் இறுதி நாள் சிறப்புரை வழங்கவே ராஜன் குருக்கள்
வருகை புரிந்தார்.
ராஜன் குருக்களை போல் அவ்வளவு சுவாரஸ்யமாய், அறிவார்த்தமாய்
பேசுகிற மற்றொருவரை நான் கல்விப்புலத்தில் இதுவரைக் கண்டதில்லை. காலை முதல் மாலை அவர்
கிளம்பும் வரை தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். பங்கேற்பாளர்கள் சொக்கிப் போய் அமர்ந்திருந்தனர்.
இப்படி பேசும் இன்னொரு நபர் இருக்கிறார் என்றால் அது நமது எஸ். ராமகிருஷ்ணன் தான்.
இரண்டு விசயங்கள் அவரிடம் ஈர்ப்பை ஏற்படுத்தின. ஒன்று, அசராது
அவர் அளிக்கும் புதுப் புது தகவல்கள். ஒவ்வொரு விசயத்தைப் பற்றி பேசுகையிலும் அது சம்மந்தமாய்
அவர் தன் மந்திரத் தொப்பியில் இருந்து எடுத்துக் காட்டும் ஒரு கதை, வரலாற்று நிகழ்வு
ஒன்று பற்றின குறிப்பு, மேற்கோள்கள்.
நமது பெரும்பாலான எழுபதுகளின் அறிவுஜீவிகளைப் போல ராஜன் குருக்களும்
ஒரு மார்க்ஸியவாதி. ஆனால் கட்சி அறிவுஜீவி அல்ல. எந்த கருத்தியல் ஹேங் ஓவரும் இல்லாத,
சமூக வரலாற்று பிரச்சனைகளுக்கு கலந்தாய்வின் பொருட்டு தன் மனதுக்குள் உறைநிலையில் இருக்கும்
கார்ல் மார்க்ஸை அவ்வப்போது தோளைத் தட்டி எழுப்பி உரையாடுபவர். மார்க்ஸியம் ஒரு நிறுவனமாய்,
கட்சியாய் மாறும் போதே அது உடனே படிநிலைகளைப் பெற்று, சமூகத்தின் பல ஆதிக்க சக்திகளின்
சமரசக் களமாய் மாறி விடும்; கட்சியாக மாறின பின் கம்யூனிஸ்ட் கட்சியே கம்யூனிசத்துக்கு
எதிராக செயல்படத் துவங்கும் என அன்று துணிச்சலாய் சாடினார். கேரளாவின் நில சீர்திருத்த
சட்டம் நிறைவேற்றப் பட்ட போது நடந்த பேரங்களை, அநீதியை, அப்போது பாட்டாளி மக்கள் கைவிடப்
பட்டதை குறிப்பிட்டார். யாருக்கும் எதற்கும் வக்காலத்து வாங்கும் அவசியம் அற்றவனே ஒரு
சுதந்திர அறிவுஜீவி. ராஜன் குருக்கள் அப்படியானவர். இது என்னை மிகவும் கவர்ந்தது.
வரலாறு எவ்வளவு ஆர்வமூட்டும் துறை என அன்று நான் உணர்ந்தேன்.
வரலாற்றில் இருந்து நிகழ்வுகளை கோர்த்தெடுக்க தெரிந்த ஒரு பேச்சாளர் அதைக் கொண்டு மக்களை
திகைக்க வைக்க முடியும். ராஜன் குருக்கள் கோட்பாடுகளிலும் தேர்ந்தவர். ஆகையால், அவர்
அன்று நவீனத்துவத்தில் இருந்து பின்நவீனத்துவம் எப்படி உருப்பெற்று வந்தது எனப் பேசும்
போது அதை கோட்பாட்டு விவாதமாக அன்றி ஒரு வரலாற்றுச் சித்திரமாய் மாற்றிக் காட்டினார்.
உலகம் தர்க்க ஒழுங்குக்குள் அடங்குவது என நவீனத்துவவாதிகள்
நம்பினர்; ஆனால் பின்நவீனத்துவர்கள் அதை ஏற்பதில்லை. இக்கருத்தை அவர் இயல்பியலில் ஏற்பட்ட
பல மாற்றங்களைச் சுட்டிக் காட்டி விளக்கினார். ஒரு சிக்கலான தத்துவக் கருத்தை இப்படி
பௌதிகமான வடிவில் காண்பதும் புரிவதும் எளிதாக இருந்தது.
ராஜன் குருக்கள் அன்று துறையிடை (interdisciplinary) படிப்பு
பற்றி பேச உத்தேசித்திருந்தார். ஒரு துறையில் மட்டும் விற்பன்னனாய் ஒருவர் இருப்பது
ஒரு நவீனத்துவ வழமை. இன்று பின்நவீனத்துவம் வந்த பின் நாம் பல துறைகளில் ஆர்வம் கொண்டு
அவற்றின் அரவணைப்பில் புது சிந்தனைகளை, ஆய்வுமுடிவுகளை, பார்வைகளை வந்தடைவதை இன்று
முக்கியமாய் நினைக்கிறோம். இப்படி துறையிடை ஆய்வுகளை அவர் ஒரு பின்நவீனத்துவ பாய்ச்சலாய்
காண்கிறார். இதைப் பற்றி பேசும் முன் நவீனத்துவ-பின்நவீனத்துவ வேறுபாடுகளை விளக்கவே
வரலாற்று ரீதியான பல சம்பவங்களை அவர் சித்தரித்தார். ஆனால் பேச்சார்வத்தில் அவர் நேரம்
கடந்ததையே உணரவில்லை. தன்னுரையின் சிறு பகுதியையே அவர் அன்று பேசினார் என நினைக்கிறேன்.
இப்படி ஒருவர் தன்னை மறந்து லயித்து பேசுவதே ஒரு அற்புத அனுபவம். ஒரு நல்ல உரை திட்டமிட்டபடி
கராறாய் இருக்கலாம். அது ஒரு வகை. இது இன்னொரு பாணி. அரேபிய இரவுகள் மாதிரியான உரை.
இதுவும் வெகு சுவாரஸ்யமே.
அன்றைய நாள் முடியும் போது, இப்படி ஒரு மனிதர் என் ஆசிரியராக
இருக்கவில்லையே அல்லது இவர் என்னுடன் பணி புரியவில்லையே எனும் ஏக்கம் என்னைத் தழுவிக்
கொண்டது. “தங்க மீன்கள்” படத்தில் நாயகன் வெள்ளிப் பாத்திரங்களை பாலிஷ் செய்யும் பட்டறையில்
வேலை செய்வான். அங்கு அவனுக்கு வருமானம் சொற்பமே. என்றாலும் வேலைநாள் முடியும் போது
உடம்பெல்லாம் வெள்ளித் துகள்கள் ஒட்டிக் கொள்ள அவன் மினுமினுத்தபடி தெரிவான். ஒரு வெள்ளி
மனிதனாய் மாறுவான். அப்போது தன்னை முழுக்க வேறொரு மகத்தான மனிதனாய் அவன் உணர்வான்.
ராஜன் குருக்களை (அல்லது ஜெ.மோ, எஸ்.ரா) மாதிரியான ஆளுமைகளுடன் ஒரு நாளை செலவிடும்
போது நாமும் அப்படியே உணர்கிறோம்.
என்ன ஒரு அலாதியான நாள்!
Comments