இளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்


Image result for தேவதேவன்
தேவதேவன்

ஒரு இளங்கவிஞருக்கு நான் அளித்த எளிய அறிவுரை இது:
மனதின் முரண்களை, உள்முரண்களை, அதர்க்கமான பாய்ச்சலை கவிதையில் பேசுவது முக்கியம் என நினைக்கிறேன். நிறைய எழுதுங்கள். தினம் ஒரு கவிதை என கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். கவிதைப் பழக்கம் உங்கள் தினப்பழக்கங்களில் ஒன்றாக வேண்டும். பின் அதுவே பிரதான பழக்கமாக வேண்டும். வாழ்த்துக்கள்

அவர் இதை அடுத்து ஒரு கேள்வி கேட்டார்:
இந்த புரிய முடியாத குறியிடுகள் பற்றி உங்க கருத்து?


தமிழ் நவீன கவிதை குறியீடு, படிமம் மட்டுமல்ல தேவையற்ற புதிர்மையால் நிறைந்தது. ஆனால் கவிதை இன்று இத்தகைய சிலந்தி வலை சிடுக்குகளை கடந்து விட்டது. என் புரிதல் படி சமகால கவிதைக்கு குறியீடுகள் முக்கியமல்ல. இன்றைய கவிதை இன்றைய மனநிலையை பேச வேண்டும். இன்றைய மனநிலை என்றால் என்ன? முன்னுக்குப் பின் முரணாய் இயங்குவது. ஒன்றை சொல்லி விட்டு அடுத்த நொடியோ அதற்கு நேர்முரணான ஒன்றிக்கு நகர்வது. இதை மிக இயல்பாக எடுத்துக் கொள்வது. உணர்ச்சி மிகுந்து தவிப்பது. அந்த தவிப்பில் ஒரு பித்து நிலையில் உழல்வது. இறைஞ்சுவது, கொதிப்பது, வெடித்து ஒளிச்சிதறலாய் தெறிப்பது, வேடிக்கை செய்வது, எந்த பிடிப்பும் இன்றி பகடி மேல் பகடியாய் செய்வது.

சமீபத்தில் கவிஞர் பெருந்தேவி தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு வரும் ஸ்ரீவள்ளியின் கவிதைகளில் முதலில் நான் குறிப்பிடும் உணர்வுநிலைகள் அழகாய் வெளிவருகின்றன. அவை நமக்கான கவிதைகளாய் தெரிகின்றன. அதேநேரம் ஒரு தொன்மையான தமிழை, பழந்தமிழ் பிரயோகங்களை எடுத்தாள்கிறது. சமகால கவிஞர்கள் நகர வேண்டிய திசை இது தான்.
Image result for நகுலன்
நகுலன்
தொண்ணூறுகளில் இதே மொழியுடன் சிதறல் மனநிலையுடன் எழுதியவர் தேவதேவன். அதன் பிறகு என்.டி ராஜ்குமார். இக்காலகட்டத்தில் தோன்றிய பெண் கவிஞர்களையும் இப்பட்டியலில் சேர்க்கலாம். உடலை எழுத வேண்டும் எனும் கொள்கை அறிவுப்புடன் இயங்கிய இவர்களின் கவிதைகளில் நான் இன்று முக்கியமாய் கருதும் பல பின்நவீனத்துவ குணாதசியங்களாய் உள்ளது. நேரடி விவாத பாணியில் அதிகம் எழுதக் கூடியவர் என்றாலும் மனுஷ்ய புத்திரனின் காதல் / அகக் கவிதைகளில் மேற்சொன்ன இறைஞ்சலை, மனச்சிதறலைக் காண்கிறேன். அவரது அகக்கவிதைகள் இவ்வாறு முக்கியமானவை (நான் தொடர்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுகிறவை அவ்வகை கவிதைகள்). இவர்களுக்கு முன்னால் நகுலன் இவ்வகை கவிதைகளில் கோலோச்சினார்.
Image result for என்.டி ராஜ்குமார்
என்.டி ராஜ்குமார்
 இவர்களுக்கு நடுவில் பல கச்சிதமான நவீனத்துவ கவிஞர்கள் தோன்றி உள்ளார்கள்.  அவர்களின் பாணியில் இன்றும் பலர் எழுதுகிறார்கள். அவர்களையும் நான் கொண்டாடுவேன். அற்புதமான கவிஞர்கள் அவர்கள். ஆனால் சமகாலத்துக்கான கவிதை அவையல்ல என்பதில் தெளிவாக உள்ளேன். ஆகையால் நான் இளங்கவிஞரிடம் சொன்னேன்:
நாம் குறியீடுகளின் காலத்தை கடந்து விட்டோம். அவை இனி முக்கியமல்ல
மனதின் பித்துநிலையை கவிதை காட்டினால் போதும். அதற்கு வேண்டுமெனில் குறியீடுகளை பயன்படுத்தலாம். நேரடியாகவும் சொல்லலாம்.”Comments