மாபியா நாட்டை ஆண்டால்…

Image result for karnataka election horse tradingகர்நாடகாவில் யாருக்கும் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு பாஜக அரங்கேற்றும் அதிகார அடவாடித்தனங்களை, குதிரை பேரத்தை பார்க்கையில் இது எந்தளவுக்கு மாபியாக்கள் நிழலுலகை ஆள்வதை ஒத்திருக்கிறது என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. ஹுஸைன் செய்தி Dongro to Dubai போன்ற நூல்களில் மாபியா சூழலை, எழுதப்படா விதிகளை, முரட்டு அதிகார பரவலாக்கலை விவரிக்கிறார்.

 ஒரு மாபியா டான் மும்பைக்கு துபாயில் இருந்து வந்து தன் கண்ணில் படுகிற இடங்களில் மனதைத் தொடுகிறவற்றை குறித்துக் கொள்கிறார். அடுத்து தன் உதவியாளர்களுக்கு ஆணை இடுகிறார். அவர்கள் நில உரிமையாளர்களின் விருப்பம், அந்த நகராட்சியின் விதிமுறைகள், நியாய அநியாயம் பற்றியெல்லாம் துளியும் அக்கறை கொள்ள மாட்டார்கள். யாரிடமும் கேட்டு பேரம் பேசி காலம் தாழ்த்த மாட்டார்கள். கொடு என்றால் அந்த இடத்தை விட்டு உரிமையாளர் ஓடி விட வேண்டும். அதிகாரிகள் மாபியா முன் கூழைக்கும்பிடு போடுவார்கள். ஒன்றிரண்டு மாதங்களில் அங்கு மாபியா டானின் அலுவலகங்கள், அவரது வணிக வளாகங்கள் நெடிதுயரும்; பட்டவர்த்தமாய் செயல்படும். பாஜக தனக்கு ஆதரவேயற்ற அல்லது முழு ஆதரவற்ற மாநிலங்களை கைப்பற்றும் செயல் இப்படித் தான் இருக்கிறது.
 காங்கிரஸ் குதிரைபேரம் செய்த்ததற்கும், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு மாநில ஆட்சிகளை கட்டுக்குள் வைக்க முயன்றதற்கும் பாஜக அதை செய்வதற்குமான முக்கிய வித்தியாசம் இது. காங்கிரஸ் எப்போதும் சமரசத்துக்கு, பேரம் பேசுவதற்கு ஒரு கால அவகாசத்தை, வாய்ப்பை கொடுத்தது. ஆனால் பாஜக யானை ஒரு எறும்புப் புற்றை நசுக்குவது போல, ஒரு மாபியா டான் ஒரு நகரத்தை குறுகிய அவகாசத்தில் ஆக்கிரமிப்பது போல கண்மூடித்தனமாய் மாநில ஆட்சிகளை கைப்பற்றுகிறது. நாங்கள் எத்தனை இடங்கள் வென்றாலும் இழந்தாலும் இங்கு எங்கள் ஆட்சி தான் நடக்கும். அதற்காக எந்த எல்லைக்கும் போவோம் என்னும் ஒரு காட்டுத்தனமான அணுகுமுறை அவர்களுடையது. பாஜக முன்வைக்கும் தங்குதடையற்ற அநீதி ஒரு காட்டுத்தீயை போல் ஒரு வனத்தை தின்று தன் பசியை அடக்கும் சுபாவம் கொண்டது. அதன் முன் சக்தி குறைந்த, சிறிய அளவிலேனும் தார்மீக குணம் கொண்ட யாரும் தாக்குப்பிடிக்க முடியாது.
 தமிழகத்தில் பாஜக குழந்தைக் காலடிகளைக் கூட எடுத்து வைக்கவில்லை இன்னும். ஆனால் ஆட்சி அவர்கள் கையில். ஊடகங்கள் முழுக்க அவர்களிடம் ஊதியம் பெற்று காலில் விழுகின்றன. எம்.ஜி.ஆர் மரணித்த வேளையில் தமிழகத்தில் ஒரு வெற்றிடம் உருவாகியது. அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் தமிழகத்தை இது போல் வலுக்கட்டாயமாய் கைப்பற்றவில்லை. ஆனால் ஜெயலலிதா மரணத்தின் போது பாஜக மொத்தமாய் தமிழகத்தை ஆக்கிரமித்து அதிமுகவை ஒரு நாய்க்குட்டியை போல் நடத்திய விதம் ஒரு ஜனநாயக படுகொலை மட்டுமல்ல மாபியா பாணியிலான அராஜக கைப்பற்றலும் தான்.
எல்லா இடத்திலும் தானே ஜெயிக்க வேண்டும், நிறைந்திருக்க வேண்டும், அதற்கு காத்திருக்க அவகாசம் இல்லை, பொறுமை இல்லை, எதிரே வருபவனை வெட்டி சாய்த்து முன்னேறு எனும் இந்த ஆவேசம், மூர்க்கம், வெறி இந்த தேசத்தை வேறெப்போதும் இல்லாத அளவுக்கு சீரழிக்கப் போகிறது.

Comments

Anonymous said…
தவறு. மோடி இல்லாமல் இருந்தால் சின்னம்மாதான் இப்போதைய முதல்வர். அதற்கும் பாஜகவைத்தான் குத்தம் சொல்வீங்க..