நாவல் எழுதும் கலை: நிகழ்ச்சியும் அதன் எதிர்வினைகளும்
அபிலாஷ் சாருக்கு,
                     வணக்கம்.நலம் என்று நம்புகிறேன்.அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நீங்கள் ஆற்றிய உரை மற்றும் பயிற்சி பட்டறையின் காணொளி பார்த்தேன்."நாவல் எழுதும் கலை" என்ற தலைப்பை வெறும் உரையாக இல்லாமல் நாவல் எழுதும்  ஆர்வமுள்ளவர்களை ஓரிரு பத்திகள் எழுத வைத்து அவர்கள் தேர்ந்து கொண்ட களத்திற்குள்ளேயே லாவகமாக மாற்றியும் ,சேர்த்தும் நுட்பங்களை எடுத்துரைத்த விதம்
கனசதுரத்தை மாறுபட்ட முறைகளில் சுழற்றி விளையாடி தீர்க்கும் கணித புதிரை எனக்கு ஞாபகப்படுத்தியது.

கட்டுப்படுத்தப்பட்ட வகுப்பறை சூழலில் மாணவர்களை நேரடியாக பங்கெடுக்க வைக்கும் போது உருவாகும் சவால்களை ஒரு ஆசிரியராக நன்குணர்வேன்.
துல்லியமான நேர கணக்கீடுகள், தேர்ந்த திட்டமிடல் ஆகியவற்றில்  கறாரான பேராசிரியர் வெளிப்பட்டார்.
புனைவிலக்கியத்தில் சான்றிதழ் படிப்புக்கான வகுப்பு எடுக்க போவதாக பதிவிட்டு இருந்தீர்கள். வாய்ப்பு இருந்து அந்த வகுப்புகளின் காணொளியை பதிவிட்டால் எழுத 

வருபவர்களுக்கு வழிகாட்டும் நட்சத்திரமாய் என்றென்றும் இருக்கும் .
                      பிரியங்களுடன்,
                    ஜானகிராமன்

இன்றைய மாலை பொழுது கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இனிதாகக் கழிந்தது. சிறுகதை எழுதும் நடை குறித்தும் நாவல் எழுதும் கலை பற்றியும் உரையாற்றினார் அபிலாஷ். தொலைக்காட்சி தொடர்களில் மற்றும் திரைப்படங்களில் காட்சி வடிவில் காணக்கிடைக்கும் சுவாரஸ்யங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் எழுத்து வடிவிலும் கொடுப்பதில்தான் ஒரு நாவலாசிரியரின் திறமை இருக்கிறது எனவும், சிறுகதை எழுதுவதற்கும் நாவல் எழுதுவதற்குமான வேறுபாடுகளையும் எளிமையாக விளக்கினார். பள்ளி விடுமுறைக் காலமாதலால் பல பெற்றோர்கள் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர். நிகழ்வு முடியும் வரையில் குழந்தைகளும் அமைதியாக இருந்தது ஆச்சர்யம். இறுதியில் எழுதுவதில் ஆர்வமுள்ள ஐந்து பேர்களுக்கு சிறு சூழ்நிலையை காட்சி போல விளக்கி அதனுள் வரும் சம்பவங்களை சிறு பத்தியாக அவரவர் கற்பனைக்கேற்ப எழுதி வாசிக்கும் பயிற்சியும், அவர்கள் எழுதியதில் உள்ள நிறைகளை பெரிதாகவும் குறைகளை அவர்கள் மனங்கோணா வண்ணம் நயம்பட எடுத்துரைத்தார். இன்றைய மாலை பொழுது வந்திருந்தவர்களுக்கு மறக்க முடியாததொரு தருணமாகவும் இனிமையான நினைவுகளுடனும் நிலைத்திருக்கும்
-     பல்லவி. எஸ் (முகநூல் பக்கத்தில் இருந்து)

அன்புள்ள ஜானகிராமன் மற்றும் பல்லவி
நன்றி. நிகழ்ச்சி மிகவும் நிறைவாக அமைந்தது. நான் எதிர்பார்த்ததை விட பெரிய கூட்டம். எல்லா இலக்கிய கூட்டங்களிலும் போல நிறைய இளைஞர்கள், 18-24 வயதுக்குள்ளான இளைஞர்கள், இளம் நங்கைகள். 25-45 வயதுக்குள்ளானவர்கள் குறைவு (நூலக பணியாளர்களை தவிர்த்தால்). பார்வையாளர்களிடம் பிரதானமாய் துலங்கியவை ஒழுக்கமும் கவனமும்.
அவர்கள் இலக்கிய வாசகர்களா? சிறுபத்திரிகை மரபை அறிந்தவர்களா? பொதுவான கூட்டமா? கேளிக்கை பேச்சுகளுக்காய் குழுமியவர்களா? நானோ ரொம்ப சீரியசான சில விசயங்களை, எழுத்தின் தொழில்நுட்பம் பற்றி, பேச இருக்கிறேன். சிலர் குழந்தைகளை அழைத்து வந்திருந்தார்கள். எனக்கு பார்த்ததுமே சிறு கலக்கம் ஏற்பட்டது.
ஆனால் ஆரம்பம் முதல் முடிவு வரை அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தார்கள். எதிர்வினையாற்றினார்கள். எட்டரைக்கு கூட்டம் முடிந்த பின்னரும் தொடர்ந்து இளைஞர்கள் என்னிடம் வந்து பேசியும் அறிமுகமாகியும் இருந்தார்கள். சமீபத்தில் எனக்கு மிகவும் திருப்தி அளித்த சந்திப்பு இது.
எனக்கு நாவல் பட்டறையாக இதை நடத்த திட்டம் இருந்தது. ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தது. அனைத்து பார்வையாளர்களுக்கு எழுதும் ஆர்வம் இருக்குமா என அவர்கள் ஐயப்பட்டார்கள்.
 வழக்கமாய் பொன் மாலைப்பொழுது கூட்டங்களில் எழுத்தாளர் அரைமணி பேசுவார். மிச்ச 40-60 நிமிடங்கள் விவாதங்கள் நடக்கும்.
ஆகையால் - நான் ஆரம்பத்தில் விரும்பியது போல - சுமார் நூறு பேரை ஒரு நாவலின் முதல் அத்தியாயத்தின் சில பத்திகளை எழுதச் செய்வது நடைமுறையில் சாத்தியமல்ல என அவர்கள் கூறினார்கள். எனக்கு இது நியாயம் எனப் பட்டது. மாறாக, பங்கேற்பாளர்களில் 10-20 பேர்களை எழுதக் கேட்கலாம். மிச்ச பார்வையாளர்களை கேள்வி-பதில் விவாதத்தில் ஈடுபட செய்வோம் என கூறினேன்.
நான் சரியாக அரைமணி நேரம் பேசினேன். ஒரு சம்பவத்துக்கும் கதைக்குமான வித்தியாசம் என்ன, கதைக்கும் சிறுகதைக்குமான வித்தியாசம் என்னென்ன, சிறுகதையின் அடிப்படையான குணாதசியங்கள் என்னென்ன ஆகிய கேள்விகளை முன்வைத்து பேசினேன்.
அடுத்து, ஐரோப்பிய புத்தொளி கால நம்பிக்கைகளுக்கும் சிறுகதையின் வடிவத்துக்குமான தொடர்பை தொட்டுக் காட்டினேன்.
ஐரோப்பிய புத்தொளி காலம்m (14-17 நூற்றாண்டுகள்) ஞானம், இலக்கியம், தத்துவம், அறிவியல், பண்பாடு ஆகிய பல அறிவுத்துறைகளுக்கு தனி ஊக்கத்தை, உயிரோட்டத்தை அளித்தது. எந்தரமயமாக்கலுடன் புத்தக பிரசுரம் பரவலாக, நாளிதழ்கள் பெருக, செய்தி அறிக்கைகளின் இடக்கையை பற்றிக் கொண்டு சிறுகதை எனும் குழந்தை நடைபோட்டது. வேகவேகமாய் வளர்ந்தது. செய்தி அறிக்கையின் மொழிக்கும், செய்தித்தாளின் சட்டகத்துக்கும் சிறுகதைக்கும் ஒரு முக்கியமான தொடர்பு உள்ளது.
 இன்னொரு பக்கம், நாளிதழ்களின் பெருக்கத்தை பயன்படுத்தி நாவலும் தொடர்கதை வடிவில் தோன்றி செழிக்கிறது. இதை விவாதித்தேன்.
அடுத்து, நாவலுக்கும் சிறுகதைக்குமான வித்தியாசங்களை விவரித்தேன்.  நாவலுக்கு ஏன் கதையோ கதையின் வேகமான நகர்த்தலோ முக்கியமல்ல, கதையின் சம்பவங்களின் இடையில் தோன்றி மறையும் சிறு சிறு தருணங்களை எப்படி ஒரு பிரம்மாண்டமான, சிக்கலான, விரிவான சிலாக்கியமான விவரணையாக வளர்த்தெடுப்பது என பேசினேன். பல சமயங்களில் நாவல் வாசகர்கள் நினைத்து சிலாகிப்பது கதையை அல்ல, இத்தருணங்களையே.
அடுத்து, காலம் மற்றும் வெளியின் அடிப்படையில் எப்படி நாவலை புரிந்து கொள்வது என்றும் பேசினேன்.
நாவலின் பிரதான சுவாரஸ்யம் என்ன? நேரமே இல்லாமல் ஆளாளுக்கு பறந்தோடிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் தடித்தடியான நாவல்களுக்கான மதிப்பு குறையவில்லை. மாறாக இன்று நாவல்கள் அதிகமாய் விற்கின்றன. என் பல்கலையில் எல்லா வகுப்புகளிலும் 50 மாணவர்களில் 10 பேராவது ஒரு பெரிய நாவலுக்குள் மூழ்கிப் போய் அமர்ந்திருப்பதைக் காண்கிறேன். சிறுகதை படிப்பவர்களை நான் தீவிர இலக்கிய சூழல்களில் மட்டுமே காண்கிறேன் (கவிதையும் அப்படியே. ஆனால் கவிதைக்கு முகநூலில் இன்று தனி இடம் உருவாகி உள்ளது). இது ஏன் மற்றும் எப்படி நடக்கிறது?
நாவலில் காலம் உறைந்து நிற்கிறது; காலம் போவதே தெரியாமல் காலம் இலையோரம் தேங்கி நிற்கும் நீர்த்துளி போல் நிலைத்து தளும்புகிறது.
காலம் இங்கு வேகமாகவும் செல்லவில்லை, அது நகராமலும் இல்லை, ஆனால் காலம் நகராமல் உறைந்து போய் இருக்கிறது எனும் உணர்வு நாவல் வாசிப்பில் அவ்வப்போது நமக்கு ஏற்படுகிறது. இதுவே நாவலின் பிரதான கிளர்ச்சி, அனுபூதி, சிலாகிப்பு.
இவ்வாறு ஒரு நாவலில் காலத்தை உறைய வைப்பது எப்படி என விவாதித்தேன்.
இன்னொரு பக்கம், காலமும் வெளியும் (வரலாறு மற்றும் நிலவெளி விவரணைகள், பயணம்) எவ்வாறு ஒரு பிரம்மாணத்தை தோற்றுவிக்க நாவலில் பயன்படுகின்றன என்றும் பேசினேன்.
இதன் பிறகு இளம் எழுத்தாளர்களிடம் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தை அளித்து, தாம் எழுதப் போகும் நாவலின் முதல் அத்தியாயத்தின் சில பத்திகளை அச்சந்தர்ப்பத்தை அடிப்படையாய் கொண்டு எழுதி வாசிக்கக் கேட்டேன். மற்றவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. ஆர்வமூட்டும் நேர்மையான கேள்விகள். தீவிர விவாதங்கள் நடந்தன. இதன் பின் இளம் எழுத்தாளர்கள் படித்துக் காட்டினர்; அதைப் பற்றின என் கருத்துக்களை தெரிவித்தேன். அத்துடன் பட்டறை முடிவுக்கு வந்தது.
இந்த பட்டறையின் காணொளியை துவக்கத்தில் தந்துள்ளேன். பார்த்து விட்டு எனக்கு எழுதுங்கள்.
பின்குறிப்பு:
ஒரு தகவல் பிழையும் விடுபடலும்.
1)   அன்னா கரனீனாவில் பியர் என நான் சொல்கிற இடத்தில் லெவின் என வர வேண்டும்
2)   மகாபாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட தமிழ் நாவல்களைப் பற்றி பேசும் போது எஸ்.ராவின் “உபபாண்டவம்” ஜெயமோகனின் “வெண்முரசு” ஆகிய முக்கிய பிரதிகளை சொல்ல தவறி விட்டேன். காணொளி காணும் போது அடச்சே என இருந்தது. மன்னிக்கவும்.

Comments

devan kumaran said…
அன்புள்ள அபிலாஷ் அவர்களுக்கு,
வணக்கம். காணொலியில் தங்களின் பயிற்சிப் பட்டறை நிகர்த்த உரையை கண்டேன். சிறப்பு. இது வாசிப்பிற்கான பயிற்சி அல்ல என்று நீங்கள் கூறிய போதிலும் வாசிப்பில் அது நுண்ணிய திறப்புகளை திறந்து விட்டது. வாசிப்பின் கோணத்தை மாற்றியது. நாவலின் எந்த இடத்தில் காலம் உறைகிறது என்பது போன்ற விஷயங்களில் மனதை செலுத்த முடிகிறது.
வெண் முரசு நாவல் வரிசையில் நீர்க்கோலம் நாவலில் மற் களம் மற்றும் களம் நிறைத்தல் எனும் இரு அத்தியாயத்தில் வலவனுக்கும் ஜூமுதனுக்குமான மற்போரை விவரித்திருப்பார் ஜெமோ அவர்கள். அவரே மற்போர் களத்தில் இருப்பது போன்ற உணர்வு. ஒவ்வொருவரின் உள நிலையையும் சித்தரித்திருந்து தங்களின் உரையை கேட்ட பின்பு கூடுதல் அழகு பெற்று விளங்குகிறது.
தங்களின் உரைக்கு நன்றி. நானும் எழுதலாம் என்று தோன்றியதே எனக்கு வியப்பாக உள்ளது. அந்த அளவு சிறப்பான உரை
அன்புடன்
தே. குமரன்
தருமபுரி .