எழுதும் முன்பான அந்த தயக்கம்…
இருப்பதிலேயே ரொம்ப எளிதான காரியம் எழுதுவதே. இருப்பதிலேயே
ரொம்ப கடினமான விசயமும் அது தான். காரணம் நம் மனம்.
நான் என்ன எழுதப் போகிறோம் என்பது முழுக்க நம் கட்டுப்பாட்டில்
இல்லை. குறிப்பாய் நீங்கள் புனைவு எழுதும் போது. அதுவும் நாவல் எழுதும் போது.
எழுதும் நம் விரல்களை அது நடுங்க செய்கின்றது. எழுத ஆரம்பிக்கும்
முன்னரே மனதை இருளில் பதுங்கச் செய்கிறது. அல்லது எழுதுவதை ஒத்திப் போட வைக்கிறது.
சிறுகதையில் நாம் செல்லும் திசை என்ன, இலக்கு என்ன என்பது
குறித்த தெளிவு உள்ளது. மொழியும் உத்வேகமும் அகப்பாய்ச்சலுமே அப்போது நம் கட்டுப்பாட்டில்
இல்லாமல் இருக்கும். மற்றபடி சிறுகதையின் போது கடிவாளம் நம் கையில் தான். குதிரை என்னதான்
எகிறி வானுக்கும் பூமிக்குமாய் குதித்து பறந்தாலும் அதை நாம் கட்டுப்படுத்த முடியும்.
கட்டுரை ஒரு காளை வண்டி ஓட்டுவது போல. இன்னும் பாதுகாப்பான
பயணம்.
நாவலை எழுதும் போது தினம் தினம் ஏதாவது ஒரு ஆச்சரியம் நம்மை
காத்திருக்கும். நிறைய சிறு சிறு தருணங்களை விரித்து எழுத வேண்டி வரும். அப்போது என்ன
தான் உண்மையில் நிகழும் என்பதை நாம் அறியோம்.
நாவலில் சுலபத்தில்
விடுவிக்க முடியாத சிக்கல்கள், நாடகீய மோதல்கள், வாழ்க்கையின் தப்புத் தாளங்கள், அடர்ந்து
கொண்டே செல்லும் இருட்டான பாதைகள் அதிகம் அடுத்தடுத்து வந்தபடி இருக்கும். எழுத்தாளன்
தன்னை ஒவ்வொரு சிக்கலிலும், பிரச்சனையிலும், நெருக்கடியிலும் செலுத்தி மெல்ல மெல்ல
மீண்டு வர வேண்டி வரும்.
நாவல் உங்களை மனதளவில்
கடுமையாய் உருக்குலைக்கும் அனுபவம். ஒவ்வொரு முறையும் நாவல் எழுதி முடிக்கையில் உடல்
நலம் பாதிக்கப்பட்டு தளர்ந்து போவதாய் எஸ்.ராமகிருஷ்ணன் ஒருமுறை குறிப்பிட்டார். நாவலின்
ஆலகால விஷத்தை ஜீரணிப்பது எப்படி என ஹரூக்கி முராகாமி தனது What I Talk about When
I Talk about Running எனும் நூலில் பேசுகிறார்.
நாவல் எழுதுகையில்
ஒருவர் நிச்சயம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்; அது கசடுகள், இடர்பாடுகள், பித்துநிலைகளில்
மாட்டித் தவிக்கும் மனத்தை விடுவிக்க உதவும் என்கிறார் முராகாமி. அகத்தை இயக்குவது
ஒருவித உடல் ஆற்றல் என்பது முராகாமியின் பார்வை. இந்த உடல் ஆற்றல் பயன்படுத்தப்படாமல்
மனதுக்குள் திரண்டு விடும். அதிகமாய் கற்பனையிலும் சிந்தனையிலும் உழலும் புனைவெழுத்தாளன்
நமது ஆழ் மனத்தில் புதைக்கப்பட்ட அதர்க்கமான, சமூகத்தால் ஏற்கப்படாத எண்ணங்களை (நாவலின்
ஊடே) நேரில் கையாள்பவன். இது ஆபத்தானது. வெளிப்படாமல் தேங்கும் உடலாற்றல் இப்போது அவனைத்
தாக்கி அழித்து விடும். மிதமிஞ்சிய காமம், தியானம், விளையாட்டு, இசை, ஓவியம் உள்ளிட்ட
கலைகளில் ஈடுபடுகிறவர்கள் சட்டென மன சமநிலை இழந்து தடுமாறுவதற்கு இதுவே காரணம்.
இதனால் தான் எழுதுவது இருப்பதிலேயே அதிக கடினமான காரியம்
என்கிறேன். பயிற்சியும் ஒழுக்கமும் உண்டெனில் தினமும் உட்கார்ந்து எழுதி விடலாம். ஆனால்
எழுதுகையில் எழுந்து வரும் பைசாசங்களை எதிர்கொள்வது எளிதல்ல.
நான் நாவல் எழுதும் காலகட்டத்தில் தினமும் எழுதுவேன். ஆனால்
ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அதை ஆரம்பிக்க திணறுவேன். காலையில் பத்து மணிக்கு எழுத திட்டமிடுவேன்;
ஆனால் அந்நேரத்துக்கு ஆரம்பிக்க மாட்டேன். பல்வேறு விசயங்களை படித்தும் எழுதியும் நாவலை
தள்ளிப் போட்டபடியே இருப்பேன். இனிமேல் தள்ளிப் போட முடியாது எனும் நிலை வரும் போது
சட்டென கோப்பைத் திறந்து அத்தியாயத்தை முந்தின நாள் விட்டதில் இருந்து தொடர்ந்து எழுதுவேன்.
கொஞ்ச நேரத்தில் எழுதும் செயலையே மறந்து எழுதத் துவங்கி விடுவேன். களைந்து ஓயும் வரை
எழுதுவேன்.
இதற்காகவே இவ்வளவு நேரம் தயங்கினோம் என அப்போது எனக்கு லஜ்ஜை
ஏற்படும். ஆனால் இந்த எண்ணமெல்லாம் எழுதி முடித்து கொஞ்ச நேரம் தான். அடுத்து பகலிலும்
இரவு தூங்கும் வரையிலும் பதற்றம் ஒரு நிழலைப் போல் என்னைத் தொடர்ந்து வரும். அடுத்த
நாள் மீண்டும் என் நாவல் பிரதியை திறக்க தயங்குவேன், அஞ்சுவேன், அதைக் கடந்து வேறு
வேலைகளில் ஈடுபடத் துவங்குவேன். மனதை மீண்டும் கட்டுப்படுத்தி, ஆறுதல் செய்து, நிதானப்படுத்தி
எழுத்தில் ஈடுபட போராடுவேன். இது ஒரு சுழற்சி. நாவலின் இறுதி அத்தியாயத்தை முடித்து
முற்றுப்புள்ளி வைக்கும் வரை அதே சுவரில் திரும்பத் திரும்ப தலையை மோதியபடி இருப்பேன்.
துவங்கும் வரை நாவல் எழுதுவது தான் உலகிலேயே கடினமான சவால்.
ஆனால் எழுதத் துவங்கிய பின் காதலியை அரவணைத்து உடலோடு உடல் பின்னி முத்தமிடுவது போல்
இயல்பான சுகமான சுலபமான லகுவான ஒன்று. ஒரே சிக்கல் ஆரம்பித்த எதையும் தற்காலிகமாய்
நிறுத்திய பின் அடுத்த நாள் ஆரம்பிக்க வேண்டும் என்பது.
Comments