மனுஷ்ய புத்திரன் மொழிபெயர்ப்பு கவிதைகள் பற்றி அசதா அருள்

அபிலாஷ் மொழிபெயர்த்து தொடர்ந்து இங்கு பதிந்துவரும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளைக் கவனித்து யாரேனும் எழுதியிருக்கிறார்களா தெரியவில்லை. சிறப்பான மொழிபெயர்ப்பு. மனுஷ்யபுத்திரன் கவிதைகளின் லயத்தைப் பற்றிக்கொண்டு ஆங்கிலத்தில் அவற்றை மொழிபெயர்ப்பது ஒரு சுகானுபவம். மொழிபெயர்ப்பிலும் அவை முழுமை குன்றாத பிரதிகளாக வருவதைக் காண்பது நிறைவு. இதனால் இம்மொழிபெயர்ப்புகள் எளிதானவை எனப் பொருளாகாது. மனுஷ்யபுத்திரனின் ‘சிக்னேச்சர்’ தமிழ்ப் பதங்களுக்கு நேரான ஆங்கில வார்த்தைகளுக்காக சிலநேரம் நின்று தவமிருக்க வேண்டியிருக்கும். மனுஷ்யபுத்திரனின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் மொழிபெயர்ப்பு செம்பதிப்பாக இந்திய அளவில் கொண்டு செல்லப்படுமானால் தமிழ்க்கவிதைகளின்  செறிவானதொரு பக்கத்தை இந்திய இலக்கிய உலகம் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். பாராட்டுகள் அபிலாஷ்.

Comments