தன்னைப் பற்றி மட்டும் எழுதுவதன் பிரச்சனைகள்


இணையம் எப்போதும் “சரி உன்னைப் பற்றிச் சொல்” எனத் தான் நம் முதுகில் அமர்ந்து கதை கேட்கும். சமூகவலைதளங்கள் சூடுபிடிக்கும் முன், வலைப்பூக்களின் காலத்திலும் நிலைமை இது தான். நான் உயிரோசை எனும் இணையதளத்தில் தான் (உரைநடை) எழுதத் தொடங்கினேன். ஒவ்வொரு வாரமும் ஒரு கட்டுரை. அவ்வாரம் என் வாழ்வில் என்ன ஆர்வமூட்டும் வகையில் நடக்கிறது என சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருப்பேன். பத்திரிகை, நூல்களில் படிக்கிற வேறு விசயங்களைப் பற்றியும் அவ்வப்போது எழுதுவேன். ஒருநாள் மனுஷ்ய புத்திரன் என்னை அழைத்து ஒரு அறிவுரை சொன்னார்: “வெளியே நடக்கிற புது விசயங்களைத் தேடி அறிந்து எழுது. உன் எழுத்தில் திரும்ப திரும்ப நீயே வருவது அலுப்பூட்டுகிறது.” மெல்ல மெல்ல சுயபுராணங்களை நான் கைவிட்டேன். சற்று காலத்துக்குப் பிறகு தான் அதன் பலன்களை நான் அறிந்து கொண்டேன்.

இன்று தமிழ் எழுத்துலகம் படுப்பது, தூங்குவது, பல்துலக்குவது எல்லாம் முகநூலில் தானே. ஆக, சுய-கதை கூறல் இன்று மலிந்து விட்டது.
இப்பதிவுகளைப் படிக்கையில் எனக்கு வருத்தம் ஏற்படும். இவ்வளவு எழுத்துத் திறன் இருந்தும் தம்மை இப்படி சிறிய வட்டத்துக்குள் அடைத்துக் கொள்கிறார்களே?
 நான் இன்றும் விடாப்பிடியாக என் அனுபவத் தரப்பில் இருந்தே எதையும் பார்த்து பரிசீலிக்க வேண்டும் என நினைக்கிறவன். ஆனால் அந்த கால் சிட்டிகை அனுபவத்துக்குள் ஒரு பூச்சி போல விழுந்து கிடக்கக் கூடாது என கவனம் கொள்கிறவன். இந்த பின்புலத்தில் இருந்தே தன்னனுபவ எழுத்தின் ஐந்து குறைகளை, ஆபத்துக்களை இங்கே பட்டியலிடுகிறேன்.
1)   சுய எழுத்து நம்மை ஒரு சின்ன வட்டத்துக்குள் வைக்கும். ஜெயமோகன் சொல்வார், ஒரு எழுத்தாளனின் அனுபவங்கள் கைப்பிடி அளவே என. பல ஊர்கள், தேசங்கள் பயணித்தவர்களுக்கும் (அபாரமான கற்பனையும் தகவல் அறிவும் இல்லையெனில்) அதைக் கொண்டு நூற்றுக்கணக்கான பக்கங்களை எழுத முடியாது. இரண்டாம் வருடம் முதல் நீங்கள் சொன்னதையே திரும்ப சொல்லவும், புதுப்புது வடிவங்களில் அதை பிரதியெடுக்கவும் துவங்குவீர்கள். உங்கள் பெயரைக் கண்டதுமே வாசகன் நீங்கள் எழுதப் போவதை பகடியாய் ஒப்பிப்பான். அது ஒரு அவல நிலை. ஒரு எழுத்தாளன் வாசகனை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
2)   எழுத்தாளனாய் இருப்பது எப்படி ஒரு வாழ்வுமுறையோ அதே போல அது ஒரு பிம்பமுமே. எந்த கட்டுரையிலும் (பதிவிலும்) “நான்” வந்து கொண்டே இருந்தால் உங்களை நாட்குறிப்பாளன் என்ற அளவிலே வாசகன் நினைத்துக் கொள்வான்.
3)   “இப்படித் தாங்க நான் ஒருநாள்” இப்படி ஆரம்பிப்பது ஒரு பொறி. இது பழகி விட்டால் எதையும் விலகி நின்று எழுத முடியாது. குஜராத்தில் கலவரம் நடந்தாலும் “இப்படித் தாங்க மதுரையில் ஒரு தடவை நடந்துச்சு. அன்னிக்கு என்ன நடந்துதுன்னு சொன்னா உங்களுக்கெல்லாம் குலை நடுங்கும்…” என்று தான் ஆரம்பிக்க முடியும். இல்லாவிட்டால் இப்படி ஆரம்பித்து “ஆனால் நான் இப்போ குஜராத் சம்பவத்தை பற்றி ஒண்ணு சொல்லணும்” என விசயத்துக்கு வருவார்கள். நீங்கள் “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்கள்” ஆவீர்கள். நம் மொழியின் எந்த சொல்லும் சொற்றொடரும் நம் முதுகின் மீது ஏறி அமரக் கூடாது. மொழியை புதுமையாய் வைத்துக் கொள்ள முதலில் பழக்கங்களின் சுமையை இறக்கி வைக்க வேண்டும். அதற்கு “நான்”, “எனக்கு”, “எனது” “எங்கள்” சுட்டுப்பெயர்களை பெருக்கி வெளியே தள்ள வேண்டும்.
4)   புனைவில் கூட நீங்கள் சுயசரிதை பாணியை தொடர்ந்து பின்பற்றினால் நீங்கள் கண்டிராத, அனுபவித்திராத களங்களை எழுத முடியாது. எல்லா கதைகளும் உங்கள் அலுவலகத்தில், ஊரில், வீட்டில், உறவுகள், நண்பர்கள் இடையில் தான் நடக்க வேண்டி வரும். அசோகமித்திரனின் கதைகளில் சூழலும் மனிதர்களும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் கதைசொல்லி அவராக இருக்க மாட்டார். இதனாலே அவரால் “பயணம்” மாதிரி ஒரு கதை எழுத முடிந்தது. இலக்கியத்தில் வெற்றிகரமான படர்க்கை கதைசொல்லலின் உதாரணம் ஜெயமோகன். அவர் என்னென்ன விதமான மாறுபட்ட கதைகளில் கதைசொல்லி இருக்கிறார் என சிந்தித்தால் திகைப்பூட்டும். (நீங்கள் பின்நவீனத்துவ எழுத்தாளர் எனில் இச்சிக்கல் இராது. ஏனெனில் இக்கதைகளில் “நான்” என்பதே ஒரு புனைவு தான். சாரு நிவேதிதா ஒரு உதாரணம்.)
5)   எழுத்தில் நாம் “நம்மைக்” கடந்து செல்லும் போது எழுத சாத்தியமுள்ள லட்சம் லட்சம் கருக்கள் கண்ணில் தென்படும். இதில் உங்கள் அகமும் ஜொலித்தால் நீங்கள் அற்புதமான ஒரு எழுத்தாளனாகலாம்.

Comments