மனசாட்சி என்றால் என்ன?


முன்குறிப்பு: இப்பதிவில் “நீங்கள்”, “உங்கள்” எனும் சொற்கள் சிவில் சமூகத்தை குறிக்கின்றன.
எனக்கு மிகவும் எரிச்சலூட்டுகிற சொல்லாக “அறம்” நீண்டகாலமாய் இருந்தது. மெல்ல மெல்ல அறத்தில் நம்பிக்கை கொள்கிறவனாய் நான் மாறி விட்டேன். (அறத்தை நான் இப்போது மானுட நிலைப்பாடுகளை கடந்த ஒன்றாக காண்கிறேன். ஒருவித பிரபஞ்ச அறம்.) இப்போது என்னை அதிகம் எரிச்சலூட்டும் சொற்கள் “சமூக நீதி”, “மனசாட்சி” போன்றவை. ஏன் என சொல்கிறேன்.

இச்சொற்கள் இச்சமூகத்தில் அனைவரும் சமம். அனைவரின் பிரச்சனைகளும் ஒன்று என அனுமானிக்கின்றன. ஒரு இளம்பெண் நகரத்தில் வீதியில் தாக்கப்படுவதும், இன்னொரு இளம்பெண் ஏதோ குக்கிராமத்தில் பலாத்காரம் செய்யப்படுவதும் இங்கு ஒன்றாக பார்க்கப்படுகிறதா? இல்லை. கிராமத்துப் பெண்ணுக்காய் இந்தியா முழுக்க மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் செல்வார்களா? மாட்டார்கள். பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கின ஒரு அனாதைப் பெண் மேற்கொண்டு படிக்க வழியின்றி, குடும்ப ஆதரவு இன்றி, பிச்சையெடுத்து வாழ்கிறாள் என செய்தி வந்தால் எத்தனை லட்சம் கண்கள் கண்ணீர் வடிக்கும்? மாரில் அடித்து அழும்? வா.மணிகண்டன் போன்றவர்கள் உடனடியாய் உதவிக்கு செல்வர். (நான் இதைப் பாராட்டுகிறேன்) ஆனாலும், ஒரு திருநங்கை பிச்சையெடுப்பதைக் கண்டு பத்து பேர் கண்ணீர் சிந்துவார்களா? ம்ஹும். அது ஏன் மத்திய வர்க்க / ஏழை மாணாக்கரின் படிப்புக்கு இளகும் மனம் மற்ற விசயங்களுக்கு இளகுவதில்லை?
இப்படி நம் சமூகத்தில் பெரும்பாலான மக்களுக்கு பச்சாதாபம் காட்ட முடிகிற விசயங்கள் மட்டுமே சமூக நீதிக்கு உட்படுகின்றன. பெரும்பாலும் இவை மத்தியவர்க்க, பெரும்பான்மை மக்களின் பிரச்சனைகளாக இருக்கின்றன. ஒருவர் துன்புறுவது காண்கையில் அவர் இடத்தில் நம்மை வைத்து பார்க்கும் அளவுக்கு அவர் நம்மை, நம் வர்க்கத்தை, ஒத்திருக்க வேண்டும். அவர் துயரம் நம்மால் உணர முடிவதாய், அவரது நிலை நாம் என்றோ கடந்து வந்ததாய் இருக்க வேண்டும். இல்லாவிடில் நாம் உச்சுகொட்டி விட்டு கடந்து விடுவோம். உணர்ச்சிவசப்பட்டு கோரிக்கை வைக்கவோ போராடவோ மாட்டோம்.
நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் வேளையில் என் பெற்றோர் கூடுதல் சக்கரங்கள் பொருத்திய (ஊனமுற்றோருக்கான) ஒரு ஸ்கூட்டர் வாங்கி அளித்தனர். அதைக் கொண்டு நான் சுதந்திரமாய் ஊர் சுற்றினேன். எனக்கு இறகுகள் முளைத்தது போல் இருந்தது. என் பள்ளியில் என்னைப் போல் ஒரு மாணவன் இருந்தான். அவன் கையால் பெடல் செய்யும் ஒரு சைக்கிளில் வந்து செல்வான். பள்ளி முடிந்து நாங்கள் பல கல்லூரிகளுக்காய் விண்ணப்பத்திருந்த சமயம் அது. ஒரு நண்பனைத் தேடி அவன் வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது தான் அந்த ஊனமுற்ற பையனைப் பார்த்தேன். அவன் என் நண்பனின் அண்டைவீட்டில் வசித்தான். நான் அடிக்கடி அங்கு வருவதைக் கண்டு அவன் அன்று என்னை நாடி வந்திருந்தான். நான் எங்கு படிக்கப் போகிறேன் என விசாரித்தான். நானும் பதிலுக்கு விசாரித்தேன். அவன் சொன்னான் “உன்னைப் போல ஒரு வண்டி இருந்தா நானும் கல்லூரிக்குப் போவேன். இல்லாட்டி இன்னை வீட்டிலேயே உட்கார வச்சிருவாங்களோன்னு பயமா இருக்கு”. நீண்ட காலமாகியும் நான் அந்த பையனின் சொற்களை மறக்கவில்லை. ஏனெனில் அவன் நிச்சயம் கல்லூரிக்கு சென்றிருக்க மாட்டான். அவன் வாழ்நாள் முழுக்க யார் தயவிலோ வாழ்ந்து சிறுமைப்பட்டு வாழ வேண்டும். அவனைப் போன்றோருக்காய் நான் கண்ணீர் சிந்துவேன். ஆனால் சமூகம் கொந்தளிக்காது. ஏனெனில் அவர்கள் அவனை தம்மில் ஒருவராய் பார்ப்பதில்லை.
பெங்களூரில் என் கல்லூரிக்கு அருகில் பார்வையற்றோருக்கு ஒரு விடுதி உள்ளது. காலையும் மாலையும் பார்வையற்றோர் கைகளை கோர்த்தபடி சாலை ஓரமாய் நடந்து செல்வதைக் கண்டிருக்கிறேன். அவர்களுக்கு என உதவ தனியார் சமூக அமைப்புகளோ, அறக்கட்டளைகளோ, அரசு அமைப்புகளோ இல்லை. இதுவே ஐ.ஏ.எஸ் படிப்பதற்கான மாணவர்களுக்கு உதவ எத்தனை எத்தனை தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன? ஐ.ஏ.எஸ் படிக்க முடியவில்லை என ஒரு மாணவன் தீக்குளித்தால் இங்கு லட்சக்கணக்கானோர் கொதிக்க மாட்டார்கள்? ஆனால் அந்த பார்வையற்ற இளைஞர்களில் ஒருவர் தம் மேல் நெருப்பை மூட்டினால் அது இங்கே செய்தியாகுமா?
இன்று ஒரு முகநூல் விவாதத்தின் போது ஒரு தோழி “மனசாட்சி” என்ற சொல்லை பயன்படுத்தினார். மனசாட்சி உள்ளோர் தமிழக பிரச்சனைகளில் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள் என்றார். சரி தான். ஆனால் நீங்கள் தலையில் தூக்கி வைக்கும் அந்த மனசாட்சி எப்போதும் ஏன் உங்கள் அனுபவப் புலத்திற்கு வெளியே இருக்கும் மற்றமையினருக்காய் துடித்தெழுவதில்லை? ஏன் எப்போதும் பெரும்பான்மையினரை பாதிக்கும் விசயங்களுக்கு மட்டுமே நாம் கொந்தளிக்கிறோம்? தேர்ந்தெடுக்கப்பட்ட விசயங்களுக்கு மட்டும் அக்கறை கொள்ளும் அந்த மனசாட்சி என்ன மனசாட்சி?
நம் மனசாட்சி இருவிதங்களில் செயல்படுகிறது: 1) ஒருவர் உதவி கேட்டால் சில சமயங்களில் இரங்கி உதவத் தூண்டுகிறது. 2) வேறு சிலர் உதவி கேட்காமலே பாய்ந்து சென்று உதவச் செய்கிறது. அதைத் தம் பிரச்சனையாய் காணச் செய்கிறது. மனசாட்சி எல்லாருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே விதமாய் எதிர்வினையாற்றும் என சொல்லாதீர்கள். நான் அதை நம்ப மாட்டேன்.
நான் கல்லூரியில் சேர்ந்த புதிதில் அங்கு பயன்படுத்த ஒரு சக்கரநாற்காலி தேவைப்பட்டது. என்னிடம் அன்றாட செலவுக்கு மட்டுமே பணம் இருந்தது. நான் பல நண்பர்களிடம் விண்ணப்பித்தேன். ரெண்டாயிரம் மூவாயிரம் என பலரிடம் வாங்கி தேற்றி விடலாம் என நம்பினேன். அப்போது நான் அறக்கட்டளை நடத்தும் ஒரு நண்பரிடம் உதவ முடியுமா என விசாரித்தேன். அவர் மறுத்தார். அதற்கு அவர் அளித்த காரணம் தான் விசித்திரம்: அவர் மாணவர்களின் கல்விக்கு மட்டுமே உதவுவாராம். அப்படி எனில் என்னைப் போன்றோர் யாரிடம் செல்ல வேண்டும்? மனசாட்சி பொதுவானது என்றால் ஏன் எல்லா பிரச்சனைகளையும் நாம் பொருட்படுத்துவதில்லை? ஏன் உதவி தேவைப்படுவோரை நாம் பாகுபடுத்துகிறோம்? ஒரு இளம் மாணவர் கல்வி உதவி வேண்டினால் – அவர் கேட்கும் முன்னரே - ஒரு லட்சத்துக்கு பத்து லட்சம் குவிகிறது? இப்படி கேட்காமல் உதவுகிற குணம் ஏன் எங்கள் விசயத்தில் வெளிப்படுவதில்லை? ஏன் உங்கள் கண்கள் சிலருக்கு ரத்தம் வந்தால் மட்டும் அழுகின்றன? அப்படி எனில் மனசாட்சி என்றால் என்ன?
மனசாட்சிப்படி செயல்படும் நமது சமூக நீதிப் போராட்டங்களும் இவ்வாறே தேர்ந்தெடுத்த விசயங்களை, மக்கள் திரளை, பிரச்சனைகளை மட்டுமே பொருட்படுத்துகின்றன.
ஆகையால் “மனசாட்சி” எனும் சொல்லை நான் recycle binக்கு அனுப்புகிறேன்.
ஊனமுற்றோர், திருநங்கைகள் உள்ளிட்ட மற்றமையினருக்கு உதவ நம் மக்கள் முன்வருவார்கள். ஆனால் அவர்களுக்காய் உணர்ச்சிவசப்படவோ அவர்கள் பிரச்சனையை தம் பிரச்சனையாய் கருதி போராடவோ குரல் எழுப்பவோ மாட்டார்கள். இந்த வித்தியாசம் ஏன் என நான் அறிய விரும்புகிறேன்.
இது உண்மை எனில், உங்கள் மனசாட்சி உங்கள் தன்னலத்தின் ஒரு நீட்சி மட்டும் தானே?
பின்குறிப்பு: நான் எழுத ஆரம்பித்த இந்த பத்து வருடங்களில் “மனசாட்சி” எனும் சொல்லை முதன்முதலாய் இப்போது தான் பயன்படுத்துகிறேன். தமிழின் ஆகப் போலியான சொல் இந்த மனசாட்சி!

Comments

மனிதன் சுயநலம் மிக்கவன்.தனக்கும் அந்த பாதிப்பு ஏற்படும் எனும் ஓன்று அவனுக்கு மிகுந்த பதட்டத்தை,?அரவுணர்வை ,கோவத்தை தருகிறது

கல்லூரி மாணவிகளை மதிப்பெண் வாங்க பாலியல் தேவைகளுக்கு கூப்பிடும் அழைப்பு தரும் கோவம்,பதட்டத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட அதற்கு முன் ஆந்திராவில் நடிக்க வாய்ப்புபதருவதற்காக பாலியல் தேவைகளுக்கு நிர்பந்திக்கப்பட்ட நிலையை பற்றி போராடிய பெண்ணுக்கு வரவில்லை.வராது.

நீட் விஷயத்தில் மிக பெரிய அநீதி எது என்றால் மாற்று திறனாளிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி தான்.தமிழ்நாட்டில் 122 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்.

பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் என்றிருந்தால் 122 இடங்களுக்கும் மாணவ மாணவிகள் இருந்திருப்பர். ஆனால் 5 இடங்கள் மட்டுமே நீட் கட்டாயம் என்பதன் காரணமாக மாற்று திறனாளிகளுக்கு கிடைத்தது.மீதி 117 இடங்கள் surrender செய்யப்பட்டன

அரசும்,நீதிமன்றங்களும்,மக்களும் கொதித்து எழுந்து நீட் கட்டாயம் என்பது அநீதி என்று அதனை தூக்கி எறிய இதனை விட வலுவான காரணம் இருக்க முடியுமா?

ஆனால் ஒன்றும் நடக்கவில்லை
Anonymous said…
தல, நியாமான கேள்விகளால், உங்களுக்கு எந்த பதிலும் தேவையில்லையென்றுதான் நினைத்தேன், பேசாமல் இருந்தாலே பெரு உதவிதான். ஆனாலும் தழிழனில்லையா !!

ஊனமுற்றோர், திருநங்கைகள் உள்ளிட்ட மற்றமையினருக்கு உதவ நம் மக்கள் முன்வருவார்கள். ஆனால் அவர்களுக்காய் உணர்ச்சிவசப்படவோ அவர்கள் பிரச்சனையை தம் பிரச்சனையாய் கருதி போராடவோ குரல் எழுப்பவோ மாட்டார்கள். இந்த வித்தியாசம் ஏன் என நான் அறிய விரும்புகிறேன்.
@@
இவ்வித்தியாசங்களை உங்களுக்கு உணர்துகிறேனென்று சில ஆராய்ச்சி இதழ்களை (from Molecular Cell, Trends in Neuroscience or Molecular Neurology) குடலாப்ரேஷன் செய்து விளக்கமுடியும். பிரபஞ்ச அறமென்று ஏதோவொன்று இருக்கிறதென்று காலம் உங்களை நகர்த்தி கொண்டு வந்திருக்கிறதில்லையா-அப்புறம் அதற்கு வேட்டு வைத்ததுபோல ஆகிவிடும். நான் உணர்ந்த வலியினை மட்டும் தான் மற்றவரிடமும் என்னால் உணரமுடியும்-சிறிது காலம் முன்பு Molecular Pain-இதழில் ஒரு கட்டுரை இருந்தது. (if needs, I'd search it) அதில் ஒரு தவறும் இல்லையென்று எனக்கு அனுபவம் உணர்த்துகின்றது. எம்பதி-எல்லோரிடமும் அனைத்து வியத்திற்க்கும் (உம். androgen insensitivity (mutation) may likely be behind the திருநங்கைகள்) இருந்தாலும் பிரச்சனைதான் என்று தோன்றுகிறது. வெறும் எம்பதி மட்டும் தான் இருக்கும். எனக்கு எம்பதிக்கு பதிலாக அந்த ம்யுடேஷனை எப்படி தடுக்கலாம் என்று தோன்றுகிறது. தென், என் கண்முன் இக்குறைபாடுடன் உள்ள இவனுக்கு என்ன பதில் - என்னை அச்செயலூக்கத்திற்க்கு தூண்டுவதற்காகவே இவன் பிறந்தான் என்று (என்னை அவன் காறி உமிழ்ந்தால் வாங்கிகொள்ளவேண்டியதுதான்) நம்பிக்கையாக எடுத்துகொள்ள வேண்டியதுதான்.

இது உண்மை எனில், உங்கள் மனசாட்சி உங்கள் தன்னலத்தின் ஒரு நீட்சி மட்டும் தானே? @@@@ பெரும்பான்மையான நேரங்களில் சரிதான். ஆனால், அத்தனலத்தின் நீட்சியாக/மறைமுகமாகவோ ஏதாவதொரு பொதுநலம் இருக்குமானால் சரிதான். வெளிநாட்டு பல்கலைகழகங்களில் ஆராய்ச்சி செய்கினற (முக்கியமாக மனிதனின் நோய்/குறைபாடு) பெரும்பான்மையனோர்களுக்கும் ‘அறிதலின் இன்பம்’ மட்டுமே கூட ஊக்கியாக இருக்கின்றது. அங்கே தன்னலம் என்பது சம்பளம் வருகின்றதா என்பது மட்டும்தான்.

அப்போது நான் அறக்கட்டளை நடத்தும் ஒரு நண்பரிடம் உதவ முடியுமா என விசாரித்தேன். @@@@ உங்களால் பணத்தினை திரட்ட முடியும் என்பதுதான் ஒரே அளவுகோல். முடியும். ஆதலால் பணத்தினை திரட்ட முடியாத ஆட்களுக்கு பணம் பயன்படுத்தபடுகின்றது - என்பதுதான் என்னுடைய புரிதல். அவருக்கு (அவர் மட்டுமல்ல) அனைத்து பிரச்சனைகளையும் புரிந்து கொள்ளமுடியாது என்பதுதான் design. எனக்கொன்னவோ ஒரே மாதிரியான தோற்றமுடைய இரடையாய் பிறந்த இரு நயன்தாரக்களை ஒரு மனிதனுக்கு கட்டி வைத்தால் - first nightla என்ன என்ன வித்தியாசமென்றுதான் நியுரான் கணக்கு போடும். Just Neuronal plasticity. என்னிடம், தாம்பரத்தில் வரும் முதல் பிச்சைகாரருக்கு 10 ரூபாய் கிட்டும், mount-ல் வரும் 2வது நபருக்கும் 5, மாம்பல்த்தில் வரும் 3 வது நபருக்கு அறிவுரை-எக்மோரில் 4ம் ஆள் வரும் பொழுது - ஏன் இந்த பிச்சைக்கார அரசாங்கம் இதற்கெல்லாம் ஏதுவும் செய்வதில்லை, இத்தைகைய நோய் கூறு மனிதர்கள் உடைய இந்தியாவில் எவ்வளவு ஆராய்ச்சி செய்யலாம் - இப்படியென்றுதான் தொன்றும்.
At least, I'm happy with those people who is showing sympathy/empathy to the 1st beggar, in their level & in their extent. Satisfied with those 'chosen people' who is demonstrating the kindness to others

(Now I have to pray God that no one should come with propaganda that the honorable beggars in India & women are insulted in Abilash's blog)
நன்றி.