இருவர் - ஒளிப்பதிவு காட்டும் உளப்பாங்கு (4)அடுத்து இதே ஒளிப்பதிவு உத்தி எப்படி காதல் காட்சிகளின் போது ஆண் பெண் இடையிலான அதிகார ஏற்ற இறக்கங்களை சித்தரிக்க பயன்படுகிறது என காண்போம்.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடங்களில் வருகிறார். ஒன்று ஆனந்தனின் முதல் மனைவி புஷ்பா. அடுத்து, புஷ்பா இறந்த பின் ஆனந்தனின் வாழ்க்கையில் இளம் நடிகையாக நுழையும் கல்பனா. கல்பனா பாடல் காட்சிகளில் பெரும்பாலும் மையப்படுத்தப்பட்டு தாழ் கோணத்தில் மிகுந்த அதிகார பாவனையுடன் காட்டப்படுகிறார். அவளது படமொன்றின் பிரிவியூவின் போது தான் ஆனந்தன் அவளை காண்கிறான். அப்போது அவள் மேலே திரையில் நடனமாட அவன் கீழே இருந்து காண்கிறான். ஆனந்தன் தாழ் கோணத்தில் காட்டப்பட்டாலும் அவருக்கு மேலே கல்பனா தெரிகிறாள் எனும் உணர்வு உள்ளது (இது அவனை பலவீனப்படுத்துகிறது). மேலும் ஆனந்தன் அவளைக் கண்டு, உருவ ஒற்றுமை ஏற்படுத்தும் அதிர்ச்சியில், தடுமாறிப் போகிறான்.அடுத்து வரும் காட்சிகள் ஆனந்தன் அவளுடன் பழகி அவளை தன்வயப்படுத்திய பின் வருபவை. இப்போது கல்பனா அவனை எப்படி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என பலவிதங்களில் முயற்சி எடுத்து வருகிறாள். ஒரு மலையுச்சியின் வியூ பகுதி. கல்பனா முதலில் கீழே அமர்ந்திருக்கிறாள். அவள் தனக்கு எதிரே நாற்காலியில் இருந்து மேக் அப் போடும் ஆனந்தனை நோக்கி பேசுகிறாள்.

 அவனது முதல் மனைவி புஷ்பாவுக்கும் தனக்குமுள்ள தோற்ற ஒற்றுமை பற்றி விசாரிக்கிறாள். ஆனந்தன் மெல்ல தடுமாறுகிறான். இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில், ஆனந்தன் மேலேயும் அவள் கீழேயும் இருக்கிறாள்.

புஷ்பாவுக்கு தலைகீழாக ஒரு உருவம் இருந்தால் அது நீ தான்என ஆனந்தன் அவளுக்கும் தன் முதல் மனைவிக்குமான வேறுபாடுகளை பட்டியலிடுகிறான். புஷ்பாவை போலன்றி கல்பனா அகங்காரம் மிக்கவள், பெரியவர்களை மதிக்கத் தெரியாதவள், அனைவரையும் கட்டுப்படுத்த தவிப்பவள்அவன் இவ்வாறு பேச பேச கல்பனா கீழிறங்குகிறாள். கீழே வரும் காட்சிகளில் ஆனந்தன் திரும்பவும் தாழ் கோணத்தில் வருகிறான். ஆனால் முதல் காட்சியில் போல் அல்லாது அவன் ஆதிக்கம் செலுத்துகிறான். கல்பனா தன் தோற்ற ஒற்றுமையை, ஆனந்தனுக்கு தன் மீதுள்ள ஈர்ப்பை சுட்டிக் காட்டி பேசி உரையாடலின் போது தன் அதிகாரத்தை மீட்கிறாள். இப்போது இருவரும் சமமாகிறார்கள். அடுத்து மீண்டும் தன் மீது அவனுக்கு உள்ள காதல் நிலையற்றது, உறுதியற்றது எனத் தோன்ற அவள் மீண்டும் கீழே போகிறாள். அவன் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்து அவளை நோக்குகிறான். ஆனாலும் அவளது கேள்விகள் அவனை அசைக்கின்றன. இதை உணர்ந்த அவள்இனி அவனுக்கு கீழே அமர வேண்டியதில்லை எனும் நம்பிக்கையுடன் - கம்பித் தடுப்பின் மீது அமர்ந்தும் சாய்ந்தபடியும் ஆனந்தனை கீழாக நோக்குகிறாள்.

 என்னைப் பார்த்தால் புஷ்பா போல உள்ளதா? என்னையும் காதலிக்க போறீங்களா?” என வினவுகிறாள். ஆனந்தன் பதறுகிறான். அவன் முழுக்க தன் கட்டுப்பாட்டில் உள்ளதை அவள் இப்போது உணர்கிறாள். ஆனால் இந்த அதிகார சமநிலை மீண்டும் மாறுகிறது.

இக்காட்சித் தொகுப்பு முழுக்க இருவரின் உறவில் உள்ள ஊசலாட்டத்தை மணிரத்னம் காட்சிமொழி மூலம் குறிப்புணர்த்தி இருப்பார்.
இதைப் போன்றே தமிழ்ச்செல்வனின் இரண்டாவது மனைவியான செந்தாமரைக்கும் இடையிலான காதல் காட்சியிலும் அதிகார ஊசலாட்டம் சித்தரிக்கப்பட்டிருக்கும். கீழே வரும் காட்சியில் செந்தாமரை தனக்கு போதுமான இடம் இல்லை என தமிழ்ச்செல்வனிடம் புகார் கூறுகிறாள் (அவனுக்கு ஏற்கனவே குடும்பம் உள்ளது). நான் உனக்கு யார், எனக்கு இங்கு என்ன இடம் என வினவுவாள். ஆக தமிழ்செல்வன் இப்போது தாழ்ந்து போக வேண்டும். அந்நிலையில் இருந்து ஒரு நெகிழ்ச்சியான கவித்துவமான வசனம் பேசி அவளை கண்ணீர் விட வைக்கிறான் தமிழ்ச்செல்வன். அடுத்து இருவரும் சமமாகிறார்கள். தாழ் கோணத்தில் இருந்து நேர் கோணத்தில் மிட் ஷாட்டுக்கு காட்சி மாறுகிறது.
Comments

Super... Oru film parkirathula ivlo irukka