இருவர்: ஒளிப்பதிவு சொல்லும் உளப்பாங்கு (2)இனி வரும் தாழ் கோண தூர காட்சியும் (low angle long shot) “செவன் சாமுராயில்வருவதே.
செவன் சாமுராயில்இந்த சமாதி காட்சியின் எழுச்சியில்-இருந்து-வீழ்ச்சிஇறுதியில்-வெறுமை எனும் போக்கு தான் கடைசி காட்சி வரை தொடரும். இதே போல் ஒரு சமாதிக் காட்சியுடன் படம் முடியும். சாமுராய் தலைவர் கம்பெய் தன் சகாக்களிடம் சொல்கிறார்: “நாம் மற்றொரு சமரில் தோற்று விட்டோம். இந்த வெற்றி நமதல்ல, விவசாயிகளுக்கானதே”. அவர் ஏன் தோற்று விட்டோம் என்கிறார், அதுவும் கொள்ளையர்களை முழுக்க கொன்றொழித்த பின்? 1) அந்த சமர் முடிந்ததும் சாமுராய்களின் இடம், அவர்களுக்கான தேவை இல்லாமல் ஆகிறது. அதற்கு மேல் விவசாயிகள் சாமுராய்களுக்கு உணவளித்து கவனித்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு வாய் சோற்றுக்காக சாமுராய்கள் மீண்டும் அலைய வேண்டும். 2) கொள்ளையர்களை கொன்றதற்கு இணையாய் சாமுராய்களும் கொல்லப்பட்டார்கள். இரு தரப்புக்கும் இழப்புகள். விவசாயிகள் மட்டுமே பெரிய இழப்புகள் இன்றி தப்பித்துக் கொண்டார்கள்.


பாரதப் போர் முடிந்த பின்னர் பாண்டவர்களிடம் காந்தாரி கேட்டாளாம்: “விதவைகளும் பிணங்களும் எஞ்சிய இந்த தேசத்தை, சொந்த பிள்ளைகள் இன்றி, உறவினர்கள் இன்றி, நண்பர்கள் இன்றி நீங்கள் இனி மகிழ்ச்சியாய் ஆள முடியுமா?”. பாணடவர்கள் வென்றதும் கௌரவர்கள் தோற்றதும் ஒன்று தான் என மகாபாரதம் அவதானிக்கிறது. போர் முடிவில் பாண்டவர்கள் வெறுமையை எதிர்கொள்கிறார்கள்வெற்றியின் புளகாங்கிதத்தை அல்ல. ”செவன் சாமுராயின்முடிவும் இப்படியான ஒரு இன்மையையே தொட்டுணர்த்துகிறது.
இருவர்இந்தளவுக்கு ஒரு கசப்பான அர்த்தமின்மையை சுட்டவில்லை என்றாலும் தொடர்ந்து விதியால் கைவிடப்படுகிற ஒரு கையாலாகாத துன்பியல் நாயகனின் கதையாகவும் அது உள்ளது. மனைவியை இழந்த பின் ஆனந்தனுக்கு மீண்டும் அதிர்ஷ்டம். அவனது நின்று போன படம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு அது நன்றாக ஓடி அவன் பெரிய ஹீரோ ஆகிறான். அடுத்து அவன் திராவிட கட்சியில் முக்கிய தலைவன் ஆகிறான். தமிழ்ச்செல்வனை முதல்வர் ஆக்குவதற்கான திரைமறைவு வேலைகளை ஆனந்தன் செய்கிறான். ஆனால் தமிழ்ச்செல்வன் ஆனந்தன் தன் நண்பன் அல்ல அரசியல் போட்டியாளன் என அஞ்சுகிறான். இது உள்ளூர பகைமையை வளர்க்கிறது. தொடர்ந்து ஆனந்தன் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறான். படத்தில் அவன் அழுகிற மூன்றாவது தருணம் இது. ஆனாலும் அவன் இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர போராடுகிறான். புதுக்கட்சி ஆரம்பித்து நண்பனை தேர்தலில் முறியடிக்கிறான். ஆனால் அதுவும் அவனுக்கு முழுமையான வெற்றி அல்ல என்பதை நண்பனுடனான அரசியல் மோதல்களில் அவனுக்கு முழு திருப்தியோ உவப்போ இல்லை என்பதில் நமக்கு தெரிய வருகிறது. அது மட்டுமல்ல அவனது காதலி கல்பனா விபத்தில் மாண்டு போகிறாள். தமிழ்ச்செல்வனுக்கு ஆட்சி எப்படி அதிருப்தியும் கவலையும் நிறைந்ததாக இருக்கிறதோ ஆனந்தனுக்கும் அப்படியே. இருவருமே ஊழலுக்கும் சமூக தீமைகளுக்கும் எதிராய் பேசி ஆட்சிக்கு வந்து அதே சீரழிகளுக்கு இடம் கொடுக்கிறார்கள். அவற்றை தம்மால் முறியடிக்க முடியாது என தோல்வியை ஏற்கிறார்கள்.
 அடுத்த தேர்தலுக்கு முன் ஆனந்தன் இறந்து போக அச்செய்தி தமிழ்ச்செல்வனை எட்டுகிறது. இனி தமிழ்ச்செல்வனுக்கு யாரும் போட்டி இல்லை. அவனே நீண்ட காலம் ஆட்சிக்கட்டிலில் இருக்கலாம். ஆனால் அவன் மகிழ்ச்சியாய் இல்லை. தனது அதுவரையிலான அரசியல் வியூகங்கள் மீது கசப்பும் இழப்புணர்வும் தோன்ற அவன் தளர்ந்து போகிறான். தன் நண்பனைப் பற்றின நினைவுகளில் அலைகழிகிறான். அதாவது தமிழ்ச்செல்வனின் வெற்றி இனிமேல் முழுமையான வெற்றியாக இருக்காது. படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை யாருக்கும் எதுவும் முழுமையாய் கிடைப்பதில்லை. ஒருவித சாய்ந்தாடி (seesaw) ஆட்டமாக வாழ்க்கை இருக்கிறது.
இருவரில்இந்த சாய்ந்தாட்டத்தை பாத்திரங்களின் வளர்ச்சி, மாற்றம், எழுச்சி, வீழ்ச்சியை ஒட்டி எப்படி திரைமொழி சித்தரிக்கிறது என பார்ப்போம்.
ஆனந்தன் தமிழ்ச்செல்வனை முதலில் சந்திப்பது திரைப்பட செட்டில். பெரிய அரண்மனை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு அரியணை. ஆனந்தன் அதில் அமர்ந்து பார்க்கிறேன், மிகுந்த தயக்கத்துடன். அடுத்து தனக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள கத்தியை எடுத்து வீசிப் பழகுகிறான். பார்வையாளர்களை நோக்கிபடத்தில் பார்வையாளர்களை நோக்கி அவன் செய்யும் ஒரே சைகை இது மட்டுமே. இனி தான் எதிர்கொள்ளப் போகும் வாழ்க்கையை இப்படித் தான் அடித்து நொறுக்கப் போகிறான் என சொல்கிறானோ? ஆனால் அவனது இந்த தன்னம்பிக்கையும் முழுமையானது அல்ல. செட்டில் ஒரு கல்விளக்கைக் காண்கிறான். உடனே பணிந்து வணங்குகிறான். அடுத்து மதவழமைகளை கேலி செய்து கவிதை பாடியபடி தமிழ்ச்செல்வன் அங்கு வருகிறான். ஆனந்தன் அவனது திசை நோக்கி திரும்புகிறான். இக்காட்சி முழுக்க ஆனந்தன் தமிழ்ச்செல்வனுக்கு பணிந்து அடிபணிந்து செல்கிறவனாக வருவான். தன்னை தமிழ்ச்செல்வனின் ரசிகன் என்றே அறிமுகப்படுத்துவான். ஆனந்தனின் இந்த பலவீனமான உடல்மொழியை குறிப்புணர்த்தும்படியே கீழ் வரும் காட்சியில் foregroundஇல் உள்ள தீபங்கள் நெகிழ்ந்து சாய்வதைப் பாருங்கள்.


மேலே உள்ள காட்சிகள் தாழ் கோண மிட் (low angle mid) ஷாட்கள். இரண்டிலும் கோபுர முகடுகளை, அதைத் தாண்டி விரியும் அந்தி வானை சந்தோஷ் சிவன் சட்டகத்துள் கொண்டு வந்துள்ள விதம் அபாரமானது. தமிழ்ச்செல்வன் ஒரு கோயில் முகட்டில் நின்று கடவுள் மறுப்பு பேசுகிறான் என்பதில் ஒரு நகைமுரண் உள்ளது (வசனங்கள் நடுவே கோயில் மணி ஓசை வேறு சன்னமாய் கேட்கிறது). அதை விட முக்கியமாய், தாழ் கோணத்தில் இருவரையும் விஞ்சி கோயில் முகடுகளும் அவற்றை விஞ்சி ஆகாயமும் உள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க அரசியல் கூட்டங்கள் நடக்கும் நாயக்கர் மஹாலும் இப்படத்தில் இவ்வாறே காட்டப்படுகிறது. வரலாற்றை மாற்றி அமைப்பேன் எனும் மனிதனின் அகந்தையை அதே வரலாறு சிறு கேலியுடன் அமைதியாய் நோக்குவது போல் இதே தாழ் கோணத்தில் தனித்த பிரம்மாண்ட கட்டிடங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றுக்குள் தனியே அலையும் ஆனந்தனும் தமிழ்ச்செல்வனும் பாரதப்போர் முடிந்த பின் குருஷேத்திர களத்தில் திரியும் பாண்டவர்களை நினைவுபடுத்துகிறார்கள். மேலே தரப்பட்ட காட்சிகளில் தமிழ்ச்செல்வனின் அரசியல் உறுதிப்பாடும் ஆனந்தனுக்கு அவன் மீதுள்ள பற்றும் தெரிய வந்தாலும் இருவரின் காலத்தின் முன் வெறும் தூசு எனும் அவதானிப்பும் நுணுக்கமாய் வருகிறது. சந்தோஷ் சிவனின் படைப்பூக்கமிக்க காட்சிமொழி வெளிப்படும் இடம் இது.

Comments

anu raj said…
very nice analysis