இருவர்: ஒளிப்பதிவு சொல்லும் உளப்பாங்கு (1)


 இருவர்படத்தின் நிறைகுறைகளைப் பேசுவது என் நோக்கம் அல்ல. அப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுடன் இணைந்து மணிரத்னம் சித்தரிக்கும் மன உணர்வுகள், சிக்கல்கள், தடுமாற்றங்கள், பாத்திரங்களுக்கு இடையிலான அதிகார நிலைமாற்றங்கள் என்னென்ன என அலசுவதே என் நோக்கம்.
 இப்படம் மணிரத்னத்தின் ஒரு கிளாசிக் என இன்றும் கருதப்படுவதற்கு அதன் திரைமொழியின் நுணுக்கங்கள் பிரதான காரணம். படத்தின் இசை, பின்னணியில் மனிதர்களும் பொருட்களும் பயன்படுத்தப்படும் விதம், இசை, பிளாக்கிங் எனப்படும் கதைமாந்தர்கள் திரைச்சட்டகத்தில் நிறுத்தப்படும் பாங்கு ஆகிய பல மேம்பட்ட கலை அம்சங்கள் இப்படத்தில் நாம் அலச காத்திருக்கின்றன. நான் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் ஒரு சிறு அம்சத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். இப்படத்தில் உள்ள தாழ் கோண (low angle) காட்சிகள்.

பொதுவாக நம் படங்களில் தாழ் கோணம் என்பது நாயகனை கம்பீரமாய் ஆதிக்க தொனியுடன் காட்ட பயன்படுத்துவார்கள். இப்படத்தில் சந்தோஷ் சிவன் + மணிரத்னம் கூட்டணி இந்த உத்தியை ஏமாற்றத்தை, இழப்பை, கசப்பை, பரிதவிப்பை, கழிவிரக்கத்தை சித்தரிக்க பயன்படுத்தி இருப்பார்கள். அதே போல ஒரு காட்சியில் உரையாடும் இருவரின் அதிகார நிலை தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கலாம். உறவாடல் வளர வளர மேலே இருந்தவர் கீழே வரவும் கீழே இருந்தவர் மேலே வரவும் செய்யலாம். சட்டென இருவரும் சமமாகலாம். இதை பின்னணி இசை, குளோசப் ஷாட்களின் வழி முகபாவனைகளை காட்டி வெளிப்படுத்துவார்கள். ஆனால் இப்படத்தில் ஒளிப்பதிவு ஒரு உப்பிரதியாக செயல்பட்டு இந்த சேதியை மிக நுணுக்கமாய் காட்டி நகர்கிறது. இப்படி தாழ் கோணத்தை பயன்படுத்துவதில் மணிரத்னத்திடம் குரொசாவோவின் பாதிப்பு உள்ளது. இதையும் பார்க்கலாம்.
நான் முதலில் பேசப் போகிற காட்சியில் குரொசாவோவின்செவன் சாமுராய்” (1954) படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சியின் பாதிப்பு ரொம்ப தூக்கலாகவே இருக்கும். இக்காட்சியை தன் மொத்த படத்துக்குமான ஒரு திரைமொழி குறிப்பாக ஆக மணிரத்னம் பயன்படுத்தி இருப்பார் எனலாம். “செவன் சாமுராய்ஒரு பக்கம் ஒரு கிராமத்தை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற தம் உயிரையும் துறக்க துணியும், அபாரமான போர்த்திறனை வெளிப்படுத்தும் சாமுராய் வீரர்களின் கம்பீரத்தை, மேன்மையை, வியத்தகு பண்புகளை காட்டுகிறது. இன்னொரு பக்கம், இதே குணநலன்கள் காலத்தின் பிரம்மாண்டத்தின் முன் வியர்த்தமாய், அபத்தமாய், எளிதில் மறந்துவிடக் கூடியதாய் இருப்பதையும் காட்டுகிறது. அதாவது, சுதந்திர போராட்டத்தில் சிறை சென்ற ஒரு தியாகி அடுத்து வந்த பத்தாண்டுகளில் சமூகத்தில் தன் இடம் மெல்ல மெல்ல காலியாவதை நேரடியாய் கண்ணுற்றிருப்பார். அவர் இதற்கு எதிராய் கொந்தளிக்கவோ புகார் செய்யவோ இயலாது. அப்படி செய்தால் அவர் கேலிப்பொருளாகி விடுவார். காலம் அப்படியானது. எல்லாருக்கும் ஒரு சிறிய இடத்தை, அந்த இடத்துக்கான தற்காலிக முக்கியத்துவத்தை காலம் அளிக்கும். அது முடிந்ததும் நாம் ஒரு நாடக நடிகன் அரிதாரத்தை அழித்து விட்டு வீட்டுக்குத் திரும்புவது போல கிளம்ப வேண்டியது தான். நாம் பிடிவாதமாய் மேடையிலே நிலைக்க முடியாது. “செவன் சாமுராய்படத்தில் இந்த இருத்தலிய தொனி வலுவாக தெரியும் (காலத்தின் கையில் மாட்டின வெறும் தோல்பாவைகள் நாம் என்றது இருத்தலியம்).
 நாம் காலத்தை கையாள்வதாய் என்ன தான் நம்பினாலும், போராடி ஜெயித்தாலும், இறுதியில் காலம் நம்மை ஒரு விளையாட்டு பொம்மை போல் எடுத்து ஓரமாய் போட்டு விடும். “செவன் சாமுராயில்கொள்ளையர்களுடன் போராடி நான்கு சாமுராய்கள் இறக்கிறார்கள். கொள்ளையர்கள் ஒழிக்கப்படுகிறார்கள். கிராமத்து விவசாயிகள் உற்சாகமாய் நடவில் ஈடுபடுகிறார்கள். பாடி தம்மை மறந்து ஆடி வேலை செய்கிறார்கள். அவர்களைப் பொறுத்த மட்டில் பருவ நிலை மாறுவது போலத்தான் கொள்ளையர் தொல்லையும் அகன்றிருக்கிறது. அவர்கள் பருவச் சூழலுக்கு ஏற்ப தம்மை உருமாற்றுபவர்கள். சாமுராய்களின் வீரத் தியாகத்தை எண்ணி கலங்கி நிற்க அவர்களுக்கு அவகாசம் இல்லை. ஆனால் கொள்ளையர்களுடனான சமர்களுக்குப் பின் மீந்த மூன்று சாமுராய்களுக்கும் இந்த இழப்பு உள்ளூர நடுக்கத்தை தருகிறது. எல்லா போராட்டங்களின் முடிவும் இப்படி வெறுமையில் தான் என அவர்களுக்கு விளங்குகிறது.
 முடிவில் தனிமையில் ஊர் திரும்ப வேண்டும், யாரும் கூட வர மாட்டார்கள் என அந்த சாமுராய்களின் உள்ளுக்குள் ஒரு எண்ணம் ஓடுகிறது. ஒரு பக்கம் விவசாயிகளின் ஆட்டம் பாட்டம் என்றால் அதற்கு நேர் முரணாய் இன்னொரு பக்கம் சாமுராய்கள் காலமான தம் நண்பர்களின் சமாதிகள் முன்பு அமைதியாக நிற்கிறார்கள். பிறகு கிளம்புகிறார்கள். இது ஒரு தாழ் கோண ஷாட் தான். குன்றின் மீது சமாதிகள் உயர்ந்து வீற்றிருக்க கீழே கைகளை கட்டி நிற்கும் சாமுராய்கள். அவர்களின் வெறுமையை, அவர்கள் எதிர்கொள்ளும் சிறுமையை காட்டுவதற்கான காட்சி இது. இதற்கு முன்பு வரும் மற்றொரு சமாதிக் காட்சியும் முக்கியமானது.
இக்காட்சியில் ஹெயிஹாச்சி எனும் ஒரு சாமுராயின் சமாதியின் முன் சாமுராய்கள் மரியாதை செலுத்துகிறார்கள். இந்த ஹெயிஹாச்சி ரிக்கிச்சி எனும் ஒரு விவசாயியின் காப்பாற்றும் பொருட்டு கொள்ளையருடனான சண்டையில் உயிரை விடுவார். ரிக்கிச்சியின் மனைவியை கொள்ளையர்கள் முன்பு கடத்திப் போய் பாலியல் அடிமையாக வைத்திருப்பார்கள். சாமுராய்கள் உதவியுடன் ரிக்கிச்சி கொள்ளையரின் பதுங்கிடத்தை அடைவார். அப்போது நடக்கும் சண்டையில் தன் மனைவியை அவர் மீண்டும் அவல நிலையில் காண்பார். தன் கணவனை அந்த அவமானகரமான நிலையில் காண நேர்ந்த அப்பெண் அவமானம் தாளாமல் எரியும் குடிசையொன்றுக்குள் புகுந்து தன்னை மாய்ப்பாள். ஆக ரிக்கிச்சி உயிர் பிழைத்தும் மிகவும் அவலமான நிலைக்கு தள்ளப்படுகிறான். அவன் இதற்குப் பதில் உயிரிழக்கவோ தன் மனைவியை ஒரு போதும் காணாதிருக்கவோ விரும்பி இருப்பான். அவன் வாழ்க்கை என்பது அவலத்தில் இருந்து மேலும் அவலத்தின் உச்சத்திற்கு செல்லும். இங்கே ஹெயிஹாச்சியின் தியாகம் போற்றத்தக்கதே. ஆனால் அதேவேளை இவ்வீரம் ஒரு அபலையின் உயிரிழப்புக்கும் அவளது கணவனின் வாழ்க்கை மிகுந்த அவலத்துக்கு உள்ளாவதற்கும் காரணமாகிறது.
 செவன் சாமுராய்படத்தில் எந்தளவுக்கு வீரத்தின், தியாகத்தின் மகத்துவம் பேசப்படுமோ அந்தளவுக்கு எளிய மக்கள் வாழ்வின் நிர்கதியான நிலைமை மற்றும் கைவிடப்பட்ட துயரம் இரண்டும் அழுத்தி பேசப்படுகிறது. படத்தின் ஆதார தொனிகள் என வீரத்தின் திகைப்பு மற்றும் நிர்கதியாய் விடப்படுவதன் கழிவிரக்கத்தை சொல்லலாம். இந்த இரு தொனிகளையும் அழுத்தமாய் வெளிப்படுத்த குரொசாவோ தாழ் கோண ஷாட்களைத் தாம் பயன்படுத்தி இருப்பார். எப்படி எனப் பார்ப்போம்.
இப்படம் முழுக்கவே தொடர்ந்து தாழ் கோண காட்சிகள் வழி சாமுராய்களின் கம்பீரம் குறிப்புணர்த்தப்படும். குள்ளமான அந்த ஜப்பானியர்கள் நமக்கு வெகு உயரமாய் பிரம்மாண்டமாய் தெரிவார்கள். ஆனால் அதே தாழ் கோணத்தில் ஒரு சமாதியின்வீழ்ச்சியின்கோணத்தில் இருந்து இரு வீரர்களைக் காட்டும் போது அது கழிவிரக்க தொனியை சட்டென கொணர்கிறது. ஒரே சமயம் உயர்வும் தாழ்வும் காட்டப்படுகையில் தானே நகைமுரணும் அதன் வழி கழிவிரக்கமும் உச்சம் பெறுகிறது. (ஹெமிங்வேயின் ஒரு மிக மிகச்சிறிய கதையில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்கும் கடையில் பிறந்த மதலைக்கான ஷூக்களை வைத்திருப்பார்கள். இந்த காலணிகள் பயன்படுத்தடவே இல்லை என குறிப்பும் இருக்கும். அன்பு, ஆசை, பிரியம், கனவு, இழப்பு, ஏக்கம், நிலையாமை என முரணான உணர்வுகள் ஒன்றோடொன்று மோதும் வரியுடன் கதை முடியும். இது ஏற்படுத்தும் உணர்வே கழிவிரக்கம்.) மேலே உள்ள அந்த காட்சியில் அந்த சமாதி இல்லை என்றால் எப்படி இருக்கும்? இதன் தொனி முழுக்க மாறி விடும். ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் இரு கௌரவமான துணிவான சாமுராய்கள் என நினைப்போம். ஆனால் சமாதியின் கோணத்தில் இருந்து கீழே இருந்து மேலே நோக்குகையில் மனிதனின் பெரிய சாதனைகளை, உன்னதங்களை மரணத்தின் கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பதாக மாறும். காலனின் பார்வையில் அனைத்தும் துச்சம் அல்லவா!
இந்த ஒளிப்பதிவு ஸ்டைலை, காட்சி மொழியை மணிரத்னம்இருவர்முழுக்க பலவிதங்களில் வெகு அழகாய் பயன்படுத்தி இருப்பார்.
இருவரின்கருவே இரண்டு சாதனையாளர்கள் தொடர்ந்து சந்திக்கும் சறுக்கல்கள், வீழ்ச்சிகள், அவலங்கள் ஆகியவற்றை அவர்களின் பெரும் வரலாற்று வெற்றிகள், துணிச்சலாய் தோல்வியை மீறிச் செல்லும் அவர்களின் மகத்துவம் இவற்றின் பின்னணியில் சொல்லி வாழ்வின் ஆதார முரணை சுட்டுவது. சாதனைகள் மீதான வியப்புணர்வுக்கு குறுக்காய் வீழ்ச்சியின் கழிவிரக்கத்தை சித்தரிப்பது. ஆக அவல உணர்வும் வியப்புணர்வும் படத்தில் மாறி மாறி வருகிறது (”செவன் சாமுராயில்நிகழ்வது போல). இதற்காக முக்கியமாய் தாழ் கோண ஷாட்கள் குரொசாவோ பாணியில்இருவர்முழுக்க பயன்படுகிறது.
நான் முதலில் காட்டும் உதாரணத்தில் இந்த உத்தி நேரடியாகவே பயன்படுகிறது. “செவன் சாமுராய்பாணியில் ஆனந்தன் வாழ்வில் நம்பிக்கை ஒளி பிறக்கும் மறுநொடி இருள் அவனை சூழ்கிறது. அவன் இரண்டடி முன்னேறினால் நான்கு அடிகள் பின்னே சரிகிறான். துவக்கம் முதல் இறுதி வரை யாருக்குமே அறுதியான வெற்றி கிடைப்பதில்லை. படம் துவங்கும் போது ஆனந்தன் மிகவும் போராடி ஒரு சினிமாவில் நாயக வாய்ப்பை பெறுகிறான். சின்ன சின்ன பொருத்தமில்லா வேடங்களுக்கு மத்தியில் மிகவும் எதிர்பாராமலே அவனுக்கு இவ்வாய்ப்பு கிடைக்கிறது. இதே போல எதேச்சையாய் புஷ்பாவை மணக்கிறான். அவளை வேண்டாம் என மறுத்து பின்னர் அவளைக் காண நேர்கையில் தன் மனதை அவளிடம் பறிகொடுக்கிறான். இதை அடுத்து படப்பிடிப்பில் அவன் நடிப்பு மிகவும் பாராட்டப்படுகிறது. படம் வெளியானால் வெற்றி பெறும் என நம்பப்படுகையில் அது பாதியில் நின்று போகிறது. மனம் தளரும் ஆனந்தன் ராணுவத்தில் சென்று சேரலாமா என யோசிக்கிறான். பிறகு மனைவியை ஊருக்கு அனுப்பி விட்டு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் தேடுகிறான். இந்த சூழலில் ஜுரம் வந்து புஷ்பா இறந்து போகிறாள். நல்வாய்ப்புகள், தொடர்ந்து துரதிஷ்டம், மகிழ்ச்சி, அதை ஒட்டி வரும் பேரிழப்புஇப்படியாய் செல்லும் படத்தின் பேரிடி என புஷ்பாவின் மரணத்தைச் சொல்லலாம்.
 புஷ்பாவின் ஈமச்சடங்கு காட்சிக்காக தான் மணிரத்னம்செவன் சாமுராய்ஒளிப்பதிவு சூட்சுமத்தை பயன்படுத்தி இருப்பார். தாழ் கோணத்தில் சமாதியில் இருந்து நாயகன், அவனது நண்பன், மாமனார், உறவினர் ஆகியோரை படக்கருவி காட்சிப்படுத்தும். எழுச்சிக்கான இந்த தாழ் கோணம் சமாதியில் இருந்து மேலே நோக்கி செல்கையில் அவலத்தை உச்சப்படுத்தும்.
ரிக்கிச்சி ஹெயிஹாச்சியின் சமாதி மீது புரண்டு அழும் காட்சியை ஒத்த ஒரு காட்சியும் அடுத்து வருகிறது.
(தொடரும்)Comments

ரமேஷ் said…
வியந்து ரசித்து வாசித்தேன்!.