கன்னட மொழி பயங்கரவாதம்இது சமஸ் தி ஹிந்துவில் சித்தராமையா பற்றி எழுதின “மாநிலங்களில் இருந்து ஒரு தேசியத் தலைவன்” கட்டுரைக்கான எனது எதிர்வினை.
சித்தராமையா தற்போது முன்னெடுக்கும் கன்னடிய தேசியவதம் அவரது ஓட்டரசியலுக்கு பயன்படலாம். கன்னடத்தை பள்ளியில் கட்டாயப் பாடமாக்குவது, கன்னடம் கற்றாலும் யாரும் கன்னடியரே எனும் இரு விசயங்கள் மேம்போக்காக முற்போக்காக தெரியலாம். ஆனால் இரண்டும் ஆபத்தான போக்குகள் என்பது என் நம்பிக்கை. ஏன் என விளக்குகிறேன்.
நான் ஒரு பன்மைத்துவ பண்பாட்டுச் சூழலில் பிறந்து வளர்ந்தவன். குமரி மாவட்டம் கடந்து நெல்லை சென்றால் நீங்கள் ஒரு ஒற்றை மொழி அடையாளப் பற்றை காணலாம். ஆனால் குமரியில் அது இல்லை. அங்கே தமிழருக்கு மலையாளமும் மலையாளிக்கு தமிழும் சரளமாய் வரும். இரண்டும் கலந்த மொழியை இரு சாராரும் பேசுவார்கள். நெல்லையை விட ஆங்கில மோகம் குமரியில் அதிகம். இங்குள்ள பண்பாடும் பன்மைத்துவம் கொண்டதே.

 ஆக மொழியும் பண்பாடும் ஒற்றை வடிவம் அற்றது, அது தொடர்ந்து மாறுவது, அதை ஒரு அடையாளமாய் பிடித்து தொங்க வேண்டியதில்லை எனும் புரிதல் குமரி மக்களுக்கு சிறுவயதிலேயே ஏற்பட்டு விடுகிறது.
எனது மலையாளி நண்பர்கள் சரளமாய் தமிழில் உரையாடுவார்கள் (சின்ன மலையாள கொச்சையுடன்). சிலர் பள்ளியில் மலையாளம் கற்றவர்கள். இருந்தும் தமிழில் வாசிக்கவும் எழுதவும் தெரிந்தவர்களும் இவர்களில் உண்டு. இதையே என் தமிழ் நண்பர்களுக்கும் சொல்வேன். ஒருவேளை நாளை தமிழக அரசு ஒரு சட்டம் பிறப்பிக்கிறது என கொள்வோம்: குமரியில் உள்ளோர் அனைவரும் தமிழை கட்டாயமாய் பள்ளியில் கற்று, தமிழில் பேசியும் எழுதியும் காட்டினால் மட்டுமே பட்டம் பெற முடியும். இது அங்குள்ள மலையாளிகள் மற்றும் தமிழர்களுக்கு ஆபாசமான ஓரு அதிகாரத் திணிப்பாகவே தெரியும். ஏனெனில் அவர்கள் இத்தனைக் காலமும் தமது தேவையையும் விருப்பத்தையும் ஒட்டி தமிழையும் மலையாளத்தை கற்றும் கற்காமலும் தனித்தும் கலந்து பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் அப்படி செய்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நீங்கள் தமிழை கட்டாயமாய் கற்பிக்கும் நொடி ஒரு குமரித் தமிழனிடம் உன் தமிழ் சரியான தமிழ் அல்ல என குறிப்புணர்த்துகிறீர்கள். அங்குள்ள மலையாளியிடம் நீ தமிழ் பேசினாலும் நீ தமிழன் அல்ல என பிடரியில் அறைகிறீர்கள். இது தான் ஒற்றை அடையாள அரசியலின் மிகப்பெரிய ஆபத்து.
சித்தராமய்யா கன்னடம் கற்றவர்களை நாங்கள் கன்னடியராய் கருதுவோம் என சொல்லும் போது அதில் கர்நாடகாவில் வசிக்கும் ஒவ்வொருவரும் இனி கன்னடிய அடையாளத்துள் துண்டு போட்டு இடம் பிடித்தாக வேண்டும் எனும் மறைமுக அச்சுறுத்தல் உள்ளது. பண்பாட்டு நடவடிக்கைகளை முறைப்படுத்தும் எந்தவொரு செயலும் அதிகாரத்தை ஒற்றைப்புள்ளியை நோக்கி குவிக்கும் அரசியல் விளையாட்டு மட்டுமே.
 ஏன் ஒரு கன்னடியர் இந்தியை பள்ளியில் கற்றுக் கொண்டு கன்னடத்தை தேவையானபடிக்கு பேசவோ எழுதவோ கற்றவராக இருக்கக் கூடாதா? கர்நாடகாவின் செறிவான நீண்ட பண்பாட்டை அறிய கன்னட மொழி பரிச்சயம் அவசியம் என ஒருவர் கூறலாம். ஆனால் அந்த பண்பாட்டை அனைவரும் அறிய வேண்டும் என கோருவது ஒரு வன்முறை அல்லவா? நான் ஏன் கர்நாடகாவில் வசித்துக் கொண்டு தமிழ் அல்லது தெலுங்குப் பண்பாட்டை கற்று ஆய்வு செய்யக் கூடாது? அந்த சுதந்திரம் எனக்கு இல்லையா?
 இந்து மதத்தை சமிஸ்கிருத பண்பாடாக கட்டமைக்கும் ஒரு இந்துத்துவர் அம்மன் வழிபாட்டை பொருட்படுத்த மாட்டார். தர்க்காவுக்கு செல்லும் இந்துக்களை என் ஊரில் நான் அறிவேன். அவர்களை நோக்கி ராமனை வழிபடாவிட்டால், தர்க்காவுக்கு சென்றால் நீ இந்துவே அல்ல என கூறும் ஒரு வடக்கத்திய இந்துத்துவருக்கும் கன்னடத்தை ஐயமற கற்காவிட்டால் நீ கன்னடியன் அல்ல எனக் கூறும் சித்தராமையாவுக்கும் என்ன வித்தியாசம்?  ஒருவர் வலியுறுத்துவது மதவாத தேசியம் என்றால், இன்னொருவர் திணிப்பது மொழி சார் இனவாத தேசியம். இரண்டுமே ஆபத்தானவை.
சென்னையில் உள்ள மார்வாரிகளை எடுத்துக் கொள்வோம். அவர்கள் தமிழ் படித்தவர்கள் அல்ல. அவர்களுக்கு சிலப்பதிகாரமும் கம்பராமாயணமும் தெரியாது. அவர்கள் சொற்பொழிகளில் அமர்ந்து கைதட்ட மாட்டார்கள். தமிழ் என் மூச்சு என உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். ஆனால் தமிழர்களுடன் உரையாடி பணி செய்யும் அளவுக்கு அவர்களுக்கு தமிழ் தெரியும். சிலர் படு லோக்கலாக சென்னைத் தமிழ் பேசி சென்னை பண்பாட்டோடு கலந்து விட்டவர்கள். நீங்கள் அவர்களிடம் சென்று நீ தமிழனாய் இருந்தால் மட்டுமே இங்கு இருக்க லாயக்கானவன், தமிழ் பரீட்சையில் திருக்குறள், ஐம்பெருங்காப்பியங்கள் எல்லாம் கற்று, செவ்வியல் தமிழ் மரபை ஆழமாய் உணர்ந்தால் மட்டுமே இங்கே கடை விரிக்க தகுதி உனக்கு உண்டு எனச் சொன்னால் அது எவ்வளவு அபத்தமாய் இருக்கும்.
என்னைப் பொறுத்த மட்டில் ஒரு மார்வாரி அவன் அளவுக்கு ஒரு தமிழனே. அவன் வைரமுத்து, ஜெயமோகன் அளவுக்கு தமிழ் கற்றிருக்க வேண்டியதில்லை. அவன் அ.கா பெருமாள் அளவுக்கு நாட்டார் தொன்மங்களை அறிந்திருக்க வேண்டியதில்லை. நீலகண்ட சாஸ்திரிகளின் சோழர் வரலாறு நூல்களை நுணுகி கற்றிருக்க வேண்டியதில்லை. அவ்வாறு ஒரு மொழியின் பண்பாட்டுக்குள் ஆழமாய் பயணிக்கிறவர்கள் எந்த மாநிலத்திலும் 10% தான் இருப்பார்கள். அவர்கள் தமது ஆர்வத்தினாலும் தேடலினாலும் அவ்வாறு கற்பவர்கள். அவர்கள் தாம் உண்மையான மொழி பிரதிநிதிகள் என்று பொருள் இல்லை.
சித்தராமையா கன்னட மொழியும் பண்பாட்டையும் நாளை மிகத்தீவிரமாய் பிரச்சாரம் செய்தாலும் அசல் கன்னடியர் கூட ஆழமாய் இரண்டையும் கற்கப் போவதில்லை. கன்னடம் கற்க மாட்டாயா என ஒரு வெளிமாநிலத்தவனை நோக்கி கத்தவும், இன தேசியவாதத்தை கூச்சலிட்டு உணர்ச்சிகளை கிளர்த்தவுமே இம்மாதிரியான லட்சியவாதங்கள் இறுதியில் பயன்படும்.
மொழி என்பது உரையாடலுக்கான ஒரு கருவி. பண்பாடு ஒரு சமூகம் தனது வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்வதற்கான ஒரு மார்க்கம். இரண்டையும் தூய்மைப்படுத்துவதோ உன்னதப்படுத்துவதோ குறுகின குழுவாதத்தையும் சீரழிவையும் நோக்கி ஒரு சமூகத்தை தள்ளும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
குமரி மொழிச் சூழலைப் பற்றி சொன்னேன். அங்குள்ள இஸ்லாமியரின் தமிழ் இன்னமும் வித்தியாசமாய் இருக்கும். தோப்பில் மீரானின் காயல்பட்டின இஸ்லாமியத் தமிழுக்கும் ரசூலின் தக்கலை இஸ்லாமியத் தமிழுக்குமே அவ்வளவு வித்தியாசம் உண்டு. ஒரு இஸ்லாமியர் தன் மகன் பள்ளியில் அரபி படிக்க வேண்டும் என விரும்பினால் நான் அதை ஊக்குவிப்பேன். தான் வாழும் சூழலில் அவனுக்கு தமிழ் அவசியப்பட்டால் அவன் நிச்சயம் அதைக் கற்று பயன்படுத்துவான். அரபியும் தமிழும் கலந்த ஒரு புது மொழி உருவாகட்டுமே. அவன் ஏன் பள்ளியில் சைவத்தமிழை கற்றே ஆக வேண்டும் என நாம் வற்புறுத்த வேண்டும்?
நீங்கள் கேரளாவுக்கு சென்று தமிழில் பேசினால் எந்த சிக்கலும் வராது. மலையாளிகள் (கொடூரமாகவேனும்) தமிழில் ஈடாக பேசி உங்களுக்கு உதவுவார்கள். சென்னையில் நீங்கள் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசியே சமாளிக்க முடியும். ஆனால் கர்நாடகாவில் இரண்டும் முடியாது. இங்குள்ள மக்களிடம் ஒரு தேவையில்லாத மொழி பிடிவாதம் உள்ளது (இந்தி மீது மட்டும் அவர்களுக்கு வெறுப்பில்லை).
 நான் கொல்கொத்தா சென்றிருந்த போது அங்கு தெருவோரக் கடையில் உணவளித்தவர் என்னிடம் பேசின ஸ்டைலான ஆங்கிலம் கேட்டு அசந்து போனேன். அதே போல் டாக்ஸி ஓட்டுநரிடம் இரண்டு மணிநேரம் ஆங்கிலத்தில் வங்காள அரசியல் பற்றி விவாதிக்க முடிந்தது. இத்தனைக்கும் அவர் ஏழாவதுக்கு மேல் படிக்காதவர். நான் ஷிலாங் சென்றிருந்த போது அங்குள்ள எளிய மக்களிடமும் ஆங்கிலத்தில் உரையாட முடிந்தது. அவர்களுக்கு அரைகுறையாய் தெரிந்தாலும் நம்மிடம் எப்படியாவது பேச வேண்டும் எனும் தீவிரம் காட்டினார்கள். ஹைதராபாத் மக்களும் அப்படியே. ஆனால் இங்கே கர்நாடகாவில் ஒரு டாக்ஸி ஓட்டுநரிடமோ நன்கு படித்த ஒரு அதிகாரியிடமோ பத்து வினாடி நீங்கள் ஆங்கிலத்தில் உரையாட முடியாது. (ஆங்கிலம் மேலானது என்பது என் வாதம் அல்ல. பொதுமொழியாக ஒன்றை பயன்படுத்தும் அக்கறையை குறிப்பிடுகிறேன்.) பிடிவாதமாய் கன்னடத்தைக் கொண்டு உங்கள் முகத்தில் அறைவார்கள். இந்த மொழி முரட்டுத்தனத்தை நான் வேறெங்கும் கண்டதில்லை. என்னைப் பொறுத்த மட்டில் இது பத்தாம்பசலித்தனம் அன்றி வேறில்லை. சித்தராமையா இந்த மனநிலையை தான் வளர்த்தெடுக்க முயல்கிறார். வட்டாள் நாகராஜின் சற்றே மேம்பட்ட வடிவம் ஆக அன்றி அவரை வேறெப்படியும் என்னால் பார்க்க முடியவில்லை.
நாம் நமது எதிர்கால தலைமுறையினர் எப்படி வாழப் போகிறார்கள் என்பதைப் பற்றியும் யோசிக்க வேண்டும். நாம் இனி பன்முக கலாச்சார சமூகங்களில் வாழப் போகிறோம். இன்ன மொழி என வலியுறுத்தாமல் எல்லா மொழிகளிலும் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக் கொண்டு, பலவித பண்பாடுகளில் இருந்து கடன்பெற்று ஒரு கலவை அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு சாமர்த்தியமாய் வாழும் சமூகங்களே எதிர்காலத்தில் இருக்கும். அவர்கள் தொடர்ந்து ஒரு மாநிலத்தில் தங்குவார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது. ஒரு வங்காளி ஐந்து வருடங்கள் பெங்களூரில் வாழலாம். அப்போது அவன் கொஞ்சம் கன்னடாவும் கொஞ்சம் இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசி தாக்குப்பிடிப்பான். தனக்கன ஒரு உட்-குழுவை ஏற்படுத்தி அங்கே தனக்கான ஒரு பண்பாட்டுடன் வாழ்வான். அவனுக்கு கர்நாடக கொடி எல்லாம் அவசியப்படாது. ஏனென்றால் ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவன் தமிழ் நாட்டிலோ உத்தரபிரதேசத்திலோ இருப்பான். அல்லது வெளிநாட்டுக்குப் போய் விடுவான். கர்நாடக பூர்வ குடிகளும் அவ்வாறே பல்வேறு மாநிலங்களிலும் நாடுகளிலும் தொடர்ந்து பயணிப்பவர்களாக இருப்பார்கள். ஒற்றை மொழியை ஒற்றை இன உணர்வை ஒற்றை கொடியை திணிக்கிற அரசியலுக்கு எதிர்காலத்தில் இடமே இருக்காது.
ஒரு மாநிலத்தின் உரிமைகளை, சுயாட்சியை வலியுறுத்தலாம். ஆனால் மாநிலத்தின்  பண்பாட்டு அடையாளத்தை வரையறுத்து அதைக் கொண்டு உணர்ச்சிகர அரசியல் பண்ணுவது கேவலமானது. சித்தராமையாவிடம் நான் விரும்பாதது இதைத் தான்.
 ஸ்டாலின் நிச்சயம் இதை செய்ய மாட்டார் என நான் நம்புகிறேன். தமிழகம் பழங்குடி அரசியலை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. நமக்கு “நாங்க தமிழர்கள் நாங்க மட்டுமே தமிழர்கள் எல்லாரும் தமிழராய் இருங்க” என மூச்சுக்கு முப்பது முறை கூவ வேண்டிய அவசியம் இல்லை. அவ்விசயத்தில் கன்னடியர் நம்மிடம் இருந்து கற்றுக் கொள்ள ஏராளம் உள்ளது.
சித்தராமையா ஒரு முற்போக்கான அரசியல்வாதி என்றால் அவர் இவ்வாறு கூறி இருக்க வேண்டும்: “நீங்கள் எந்த மொழி பேசினாலும் கன்னடியரே. உங்களுக்கான ஒரே தகுதி நீங்கள் இந்த மாநிலத்தின் பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும். இந்த ஊர் மீது அக்கறை கொள்ள வேண்டும். கன்னடமே அறியாத ஆனால் இங்கு சமூகத் தொண்டாற்றும் ஒரு தெலுங்கர் நிச்சயமாய் கன்னடியர் தான்.” இதுவே தமிழகத்தில் உள்ள அரசியல். இங்கு நாம் மொழியை யார் தொண்டைக்குள்ளும் திணிப்பதில்லை. இங்கு ஒரு கன்னடியர் நல்ல உணவகம் ஒன்றை நடத்தி சேவை செய்தால் அவரை வெளியே போ என துரத்த மாட்டோம். போய் தமிழ் கற்று வா, அப்போ தான் நீ தமிழன் என கூச்சலிட மாட்டோம்.


Comments

obliraj said…
சீமான் வேல்முருகன் வகையறா பற்றி தெரியாமல் பேசுகிறார் சார்
Excellent Article and views Mr.Abhilash. Sorry for typing in English. Regards. Venkatesh