போன தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள்


Image result for hope paintings

என் கல்லூரியில் ஒரு வயதான பேராசிரியர் இருக்கிறார். அவருக்கு ஓய்வுக்கான வயது வந்து விட்டது. அதனால் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அவர் மிகவும் உடைந்து போய் விட்டார். இன்னும் சில வருடங்கள் கூடுதலாய் வேலை செய்ய முடியாதா என ஏங்குகிறார். அந்த ஏக்கத்தில் இன்னும் சில வருடங்கள் மும்முரமாய் வாழ வேண்டும் எனும் ஆர்வமும் இருக்கிறது.

 எனக்கு இச்சேதியை கேள்விப்பட்டதில் இருந்து அவரைப் பார்க்கும் போதெல்லாம் பொறாமை ஏற்படும். அவருக்கு பாதி வயதே இருக்கும் எனக்கு இப்போதே எல்லாவற்றையும் முடித்துக் கொள்ளலாம் என தோன்றுகிறது. இனிமேல் வாழ்ந்து பார்க்க என்ன இருக்கிறது, இனிமேல் எல்லாமே துன்பம் தானே என கேள்விகள் எழுகின்றன. ஆனால் அவருக்கோ வாழ்க்கை மீது அப்படி ஒரு பிடிப்பு இப்போதும் உள்ளது.
என் பாட்டி 89 வயதில் சமீபத்தில் இறந்தார். சரியான கவனிப்பு இருந்திருந்தால் அவர் 120 வயது வரை வாழ்ந்திருப்பார். அவர் வாழ்வில் பெரிய வெற்றிகளை அடைந்ததில்லை. தன் சொத்துக்களை விற்றழித்து விட்டு குழந்தைகளை அண்டி அதிக கௌரவமில்லாமல் கடந்த முப்பது வருடங்களாக வாழ்ந்து வந்தார். அதாவது ஒரு ஆயிரம் முறை தற்கொலை செய்திருக்க வேண்டிய வாழ்க்கை அவருடையது. ஆனால் அது குறித்த கசப்பு அவரது அன்றாட மகிழ்ச்சியை குலைத்ததில்லை. தினமும் நல்ல சாப்பாடு, உறக்கம், அடுத்த நாள் குறித்தான எதிர்பார்ப்புகள், சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றும் கனவுகள் என வாழ்ந்திருக்கிறார். இன்றைய பதின்வயதுப் பெண்ணுக்குக் கூட இப்படியான ஒரு நிறைவு இருக்காது.
 இது அந்த பேராசிரியர் மற்றும் என் பாட்டியின் தலைமுறையினருக்கே உரித்தான ஒரு அபூர்வ சுபாவம். 110 வயது ஆனாலும் அதே ஆர்வத்துடன் வாழத் தலைப்படுவார்கள். மகிழ்ச்சியான அடித்தளங்கள், சமூக கட்டுமானங்கள் அவர்கள் வாழ்வில் நிலைக்கின்றன. அவர்கள் முழுக்க கைவிடப்படுவதில்லை. அவர்களே விரும்பாவிட்டாலும் அவர்கள் தனித்து விடப்படுவதில்லை. அவர்களுக்கு வீடு திரும்பினால் யாரோ இருக்கிறார்கள்; வாழ்வில் அவர்களை எதிர்பார்த்து, அவர்களால் அர்த்தம் பெறும் யாரோ காத்திருக்கிறார்கள். இது அத்தலைமுறையினரின் பெரிய அதிர்ஷ்டம்.
எனக்கு அப்பேராசிரியரைப் போல் ஒரு ஏமாற்றம் வாய்த்திருந்தால் இது தான் சாக்கு என எட்டாவது மாடியில் இருந்து குதித்திருப்பேன். ஏனெனில் நான் வாழ்க்கை முடிந்த பின் அதை வாழ முயலும் தலைமுறை. அவரோ வாழ்க்கை முடிந்தாலும் இறுதி மூச்சு வரை அது முடியவில்லை என நம்பி முன்னேகும் ஒரு தலைமுறை. அசோகமித்திரனின், சு.ராவின் தலைமுறை.

Comments

Anonymous said…
Same Blood...I too got Jealous on them....
But, I am happy that We atleast belong to a generation who are eye-witnessing and living with them....
In our generation and future....we will be telling our future about the extinct generation....