துயரத்தின் ஊற்றுகள்

Image result for woman in bed paintings
இருப்பை அறிதல்


ஜானகிராமன் நேற்று எழுப்பிய மற்றொரு கேள்வி இது: “°மகிழ்ச்சியின் ஊற்று பெருக்குகள் எளிதில் வற்றிவிடுவதாகவும்,துயரத்தின் ஊற்றுகள் பெருகி வழிவாதகவும் இருக்கிறதா?”
இக்கேள்வி மிக மிக சிக்கலானது. ரமணரும் ஜித்து கிருஷ்ணமூர்த்தியும் எதிர்கொள்ள வேண்டிய கேள்வி இது. ஆகையால் இதற்கு ஒரு திருப்தியான பதிலை என்னால் அளிக்க இயலாது.
என் அனுபவம், நம்பிக்கை, மற்றும் வாசிப்பின் அடிப்படையில் எளிமையாக இதற்கு பதிலளிக்க முயல்கிறேன்.
ஒருவர் எந்த முயற்சியும் செய்யாமல் சும்மா இருந்தால் துயரம் அவரை சூழ்ந்து விடுமா? மகிழ்ச்சியை ஒருவர் கடுமையாய் உழைத்து போராடி அடைய வேண்டுமா?

இக்கேள்வி என் மனதில் முதலில் எழுப்பும் சித்திரம் அழும் குழந்தையுடையது. இதைப் பற்றி பேசும் பிரஞ்சு உளவியலாளர் லக்கான ஆசை, தேவை இரண்டுக்குமான வித்தியாசத்தை வரையறுக்கிறார்.
 குழந்தை தன் ஆசை நிறைவேறும் நோக்கில் அழவில்லை. அது தன் தேவையை அடையும் நோக்கில் மட்டும் (பசியை தீர்த்தல்) அழுகிறது. பால் கிடைத்த மறுநொடி அதன் அழுகை நின்று விடும். ஆனால் குழந்தை மெல்ல மெல்ல வளர்ந்து உலகை கண்டறிய துவங்கும் போது அதற்குள் ஆசைகளும் கனவுகளும் பிறக்கின்றன. குழந்தை தான் காணும் பொருட்கள், மனிதர்கள், தன்னிடம் அடுத்தவர் பேசும் மொழி, பருவச்சூழல் ஒவ்வொன்றுடனும் உறவாடத் துவங்குகிறது. இப்போது, குழந்தையின் திருப்தி சிக்கலான ஒன்றாகிறது.
 பால் குடித்ததும் அழுகை நிறுத்தும் குழந்தை அல்ல அது இனிமேல். உலகம் எனும் முலையில் எவ்வளவு தான் பாலை உறிஞ்சினாலும் பசி அதிகமாகுமே அன்றி அடங்காது என்கிறார் லக்கான். ஆசையின் ஒரு சுபாவம் அது பல்கி பெருகியபடியே இருக்கும் என்பது. ஆசை நிறைவேற்றம் என்பது சாத்தியமே இல்லை. எதை அடைந்தாலும் அது அல்ல நாம் அடைய நினைத்தது எனும் உணர்வு மனதில் இருந்து கொண்டே இருக்கும்.
இப்போது மகிழ்ச்சியோ துக்கமோ நம் வசம் இல்லை. அது எப்போதும் தற்காலிகமாக இருக்கிறது. ஒரே ஊற்று தான்: அது கசக்கலாம் அல்லது இனிக்கலாம். அது முழுக்க முழுக்க நாம் மேற்கொள்ளும், நம்முடன் உலகம் மேற்கொள்ளும் உறவாடலைப் பொறுத்தது.
இது ஒரு பதில். இது ஒரு பின்நவீனத்துவ பதில்.
அடுத்து, சற்றே தத்துவார்த்தமான ஒரு பதிலுக்கு வருகிறேன்.
மகிழ்ச்சி எப்போதும் தற்காலிகமாகவும் துயரம் நிரந்தரமாகவும் இருப்பது உண்மை தானே? நான் மேலே குறிப்பிட்டது போல் “நிரந்தர அதிருப்தியே வாழ்வின் அடிநாதம்” என நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் துயரத்தின் ஊற்று வற்றாதது என்பதையும் ஏற்க வேண்டும்.
ஆனால் மனித மனத்துக்கு மொழியின் தளைகளை உடைத்து விடுதலையாகவும் தெரியும். கவிதையிலும் நகைச்சுவையிலும் இது சாத்தியமாகிறது என்றார் மார்ட்டின் ஹைடெக்கர்.
தன்னிலையற்ற நிலையே நமது உண்மையான இருப்பு என்றார் ஹைடெக்கர். ஆனால் அது சுலபம் அல்ல. “நாம் இருக்கிறோம்” என தொடர்ந்து நிருபிக்கவே நாம் முயல்கிறோம். நீங்கள் இக்கடிதத்தையே “ஜானகிராமன்” எனும் பெயரைக் குறிப்பிட்டு தான் ஆரம்பிக்கிறீர்கள். நிறைய ஜானகிராமன்கள் இருப்பதால் விஷ்ணுபுரம் கூட்டத்தில் நான் சந்தித்த ஜானகிராமன் என குறிப்பாக உங்களை அடையாளப்படுத்துகிறீர்கள். ஆனால் நாளை நாம் நண்பர்களாகி நிறைய பேச ஆரம்பித்தால் நீங்கள் “நான் ஜானகிராமன் தான். ஆனால் அப்படியான ஜானகிராமன் அல்ல. வேறுவகையான ஜானகிராமன்” என தொடர்ந்து எனக்கு புரிய வைக்க முயல்வீர்கள். ஒரு கட்டத்தில் “நான் ஜானகிராமன் தான். ஆனால் குறிப்பாக ஜானகிராமன் மட்டும் அல்ல” என சொல்வீர்கள். ஒருவேளை நம்மிடையே உள்ளது ஒரு ஆண் பெண் உறவென்றால் இது இன்னும் உக்கிரமாக துலக்கமாய் நடைபெறும்.
இந்த சுயமுரணைப் பற்றி ஹைடெக்கர் பேசுகிறார். அதாவது நான் எப்போதும் “நான் இது, நான் இவன்” என வலியுறுத்தி மட்டுமே என்னைப் பற்றி உரையாட முடியும். அப்போது என் இருப்பை நான் வரையறுக்கிறேன். ஆனால் அது எனக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. அது என்னை அழுத்துகிறது. மெல்ல மெல்ல நானே வரையறுத்த என் இருப்பை நான் மறுக்க துவங்குகிறேன். இது வெளிப்படையாக அல்ல, மிக மிக நுணுக்கமாய் மறைமுகமாய் நடைபெறுகிறது. அப்படி நான் என்னை மறுத்து அழித்ததும் (என் இருப்பை நானே அழிக்கும் போது) நான் சுதந்திரமாய் மகிழ்ச்சியாய் உணர்கிறேன் (என் உண்மையான இருப்பை அறிகிறேன்).
 ஏனெனில் “நான் இவன்” எனும் வாக்கியம் பொய்யானது. அது என் இருப்பை மறுக்கிறது. “நான் இவன் அல்ல” என்பதே என் இருப்பை சரியாய் சுட்டுகிறது.
ஆகையால், எந்த ஒரு உரையாடலையும் நாம் இப்படித் தான் ஆரம்பிக்கிறோம்:
1)   முதலில் நம்மை ஞாபகப்படுத்துகிறோம். இதன் வழி நம்மை அடையாளப்படுத்துகிறோம். இது செயற்கையானது. இது பொய்யானது என நமக்கு தோன்றுகிறது. அவஸ்தைப்படுகிறோம்.
2)   அடுத்து உடனே மெல்ல மெல்ல நமது தன்னிலையை கடந்து போக முயல்கிறோம்.
3)    சட்டென ஒரு விடுதலை ஏற்படுகிறது. மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறக்கிறோம்.
4)    அடுத்து மீண்டும் தளைக்கப்படுகிறோம்
இதை செக்ஸுடன் ஒப்பிட்டு இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்:
(1)  ஆணும் பெண்ணும் படுக்கையில் தமது உடல்களுடன் வருகிறார்கள்
(2)  ஆடைகளை களைகிறார்கள். இது தம் அடையாளங்களை, தம் பொய்யான இருப்பை, தமது உடலின் பாரத்தை கழற்றி வைப்பதற்கான ஒரு குறியீடு.
(3)  தம்மை இழக்கிறார்கள். மகிழ்வில் திளைக்கிறார்கள்.’
(4)  மீண்டும் ஆடையணிகிறார்கள். தாம் ஆகிறார்கள். பாரம் சுமக்கிறார்கள்.
ஆக, மனிதன் வாழ்நாள் முழுக்க இந்த சுயமுரண்பாட்டுடன் மோத வேண்டி இருக்கிறது. இந்த பார்வையின் படி, துயரமே ஆதி அடிப்படையான மனித நிலை. (பௌத்தம் இதை துக்கம் என்கிறது)
இந்த விவாதத்தில் நான் ஒரே ஒரு அவதானிப்பை சேர்த்துக் கொள்கிறேன்.
மனிதன் தன்னை மறுத்து தன் இருப்பை அறிய விழைகிறான் – அந்த போராட்டமும் சிக்கலுமே அவனது துயரத்தின் காரணம் – எனும் இந்த பார்வை தனிமனிதனை முன்னிறுத்துகிறது. இது உண்மை தான். ஆனால் இது மட்டும் உண்மை அல்ல.
மனிதன் தன் இருப்பை அறிய (அதன் வழி மகிழ்ச்சியாய் இருக்க) பல சமூகக் கட்டமைப்புகளும் அவசியம் ஆகின்றன. குடும்பம், நட்பு, வேலையிட உறவுகள், சமூக உறவாடல்கள், சாதி, மதம், இலக்கியம், கலை … இப்படி எண்ணற்ற கட்டமைப்புகள் வழி நாம் நம்மை எதிர்கொண்டு அழித்து மகிழ்கிறோம். தனியாக அல்ல. இந்த அமைப்புகளில் ஒன்று உங்களை கைவிடுமானால் நீங்கள் தனியாக நின்று மகிழ்ச்சியை அடைய முடியாது. (நீங்கள் தனியாக நிற்பதாய் நம்புகிற போதும் ஆயிரமாயிரம் தோள்களின் மீது தாம் நடந்து செல்கிறீர்கள்.)
விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் அல்லது கலை இலக்கிய பெருமன்றம் அல்லது ஒரு சிறுபத்திரிகையை வாசிக்கும் குழுமம் அல்லது ஒரு குறிப்பிட்ட வகை எழுத்தை வாசிக்கிறவன் அல்லது வாசகன். எப்படி சொன்னாலும் நீங்கள் ஒரு கட்டமைப்புக்குள் நின்றே பேசுகிறீர்கள். வாசகன் என்பது ஒற்றை ஆள் தான். ஆனால் அவன் ஒற்றை ஆள் அல்லனும் தான்.
 நீங்கள் கடைக்கு தனியாக சென்று காசு கொடுத்து ஒரு நூலை வாங்குகிறீர்கள். அப்போதே உங்களை அறியாது ஒரு கலாச்சார, பொருளாதார கட்டமைப்புக்குள் புகுந்து கொள்கிறீர்கள் அங்கு நின்றபடி இலக்கிய கொடுக்கல் வாங்கலை செய்கிறீர்கள்.
ஒருநாள் நீங்கள் அப்படி ஒரு புத்தகத்தை வாங்கப் போகிற போது கடைக்காரர் சொல்கிறார்கள்: “சார் அந்த புத்தகத்தை தடை செய்து விட்டார்கள். இனி அது யாருக்கும் கிடைக்காது.”
அந்த வாக்கியம் எவ்வளவு பெரிய அதிர்ச்சியை, குழப்பத்தை, தத்தளிப்பை உங்களுக்கு ஏற்படுத்தும் யோசியுங்கள். ஏனெனில் அந்த நூல் இப்போது சமூக கலாச்சார பொருளாதார கட்டமைப்புகளுக்கு வெளியே தள்ளப்படுகிறது.
பெருமாள் முருகன் “நான் ஒரு எழுத்தாளனாக செத்து விட்டேன்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். நினைவிருக்கிறதா? ஏன் அப்படிச் சொன்னார்? ஏன் என்றால் அந்த சர்ச்சையின் போது, அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற போது, அவரது புத்தகத்தின் இருப்பு மறுக்கப்பட்டது. அது சமூக கட்டமைப்புகளில் இருந்து வெளித்தள்ளப்பட்டது. அவர் தெருவில் தள்ளப்பட்டார். அங்கே நின்று அவர் கண்ணீர் வடித்தார். நான் செத்து விட்டேன் என்றார். அது ஒரு ஆழமான வாக்கியம். உண்மையான அறிவிப்பு.
ஒரு புத்தகம் பார்க்க தனியாக இருந்தாலும் அது தனித்து இல்லை. ஒரு வாசகன் தனித்து வாசித்தாலும் அவன் தனியாக இல்லை.
இது நம் இருப்பை, மகிழ்ச்சிக்கான தேடலை மேலும் சிக்கலாக்குகிறது.


Comments