ஐ.பி.எல் தடை கோரிக்கை


Image result for watering cricket outfield
அடுத்த வாரம் சென்னையில் நிகழப் போகும் ஐ.பி.எல் போட்டிகளில் வீணாகப் போகும் தண்ணீரையும், காவிரி பிரச்சனையையும் முன்னிட்டு ஐ.பி.எல்லை நடத்தக் கூடாது எனும் கோரிக்கைள் எழுந்திருக்கின்றன. போராட்டங்களும் நடக்க இருக்கின்றன. இதில் இரண்டு விசயங்கள் உள்ளன.
1) கிரிக்கெட்டை பயன்படுத்தி காவிரி நீர் விசயத்தில் தமிழகத்தின் கையறு நிலையை வெளிச்சம் போட்ட காட்ட போராளிகள் விரும்புகிறார்கள்.
 2) நீர் வளம் என்பது நதி நீர் பங்கீடு சம்மந்தப்பட்டது மட்டுமல்ல; இருக்கும் நீரை நாம் எப்படி பயன்படுத்துகிறோம், எப்படி வீணடிக்காமல், மாசுபடுத்தாமல் பாதுகாக்கிறோம் என்பதும் இப்பிரச்சனையில் நாம் இத்தனை நாட்கள் கவனிக்கத் தவறிய ஒன்று.

எப்போதும் ஒரு பிரச்சனையின் போது பழியை அடுத்தவர் மீது போடுவது, மற்றமையின் தலையில் கொள்ளியை வைப்பது நமது வழக்கம். தமிழகத்தின் வறட்சிக்கு, விவசாயிகள் இங்கே தவிப்பதற்கு கர்நாடகா மட்டும் காரணமல்ல. நமது நீர்வளத்தை நாம் போதுமானபடிக்கு பாதுகாக்க தவறி விட்டோம். எப்படி ஐ.பி.எல்லின் போது கிரிக்கெட் மைதானத்தை பராமரிக்க லட்சக்கணக்கான லிட்டர் நீரை வீணடிக்க அனுமதியோம் என இப்போது குரல் எழுப்புகிறோமோ இதே குரலை மணல் கொள்ளையர்கள், நீர் நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முதலைகளை நோக்கி நாம் முன்பே எழுப்பி இருக்க வேண்டும். இதுவரை வெளியே நோக்கி சுட்டிய குற்றம் சாட்டும் விரலை நாம் நம்மை நோக்கி திருப்ப இந்த ஐ.பி.எல் போராட்டம் வழி வகுக்கும் எனில் நாம் மகிழ்வேன்.
மகராஷ்டிராவில் இது போல் கிரிக்கெட் மைதான பராமரிப்புக்கு நீரை பயன்படுத்தல் ஆகாது என ஒரு பிரச்சனை எழுந்த போது அவர்கள் ஐ.பி.எல்லை அங்கே நிறுத்தும் கோரிக்கையுடன் வழக்கு தொடுத்தனர். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா டெஸ்ட் தொடர் ஆட சென்ற போது அங்கு நிலவிய கடும் வறட்சி ஆடுதளங்களின் தயாரிப்பை பெருமளவு பாதித்தது. ஒரு ஆடுதளம் நல்ல பவுன்ஸ் மற்றும் உறுதியுடன் இருக்க நீர் நிறைய வேண்டும். ஆனால் தென்னாப்பிரிக்க மைதானங்களுக்கு போதுமான நீர் கிடைக்காததால் ஆடுதளங்கள் வறண்டு போயின. ஒருநாள் போட்டிகளின் போது ஆடுதளங்கள் மிகுதியாய் சுழல, நமது கால்சுழலர்களான சாஹல் மற்றும் குல்தீப் நிறைய விக்கெட்டுகள் வீழ்த்தினர். இன்னொரு பக்கம் அந்த ஊர் மக்களுக்கோ ஒரு நாளைக்கு பயன்பாட்டுக்கு ஒரு பக்கெட் நீர் என்கிற அளவுக்கே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆச்சரியமாய் அந்த ஊர் மக்கள் “எங்களுக்கு முகம் கழுவ நீர் இல்லாத போது மைதானத்தில் புற்களை நனைக்க ஏரி ஏரியாய் நீரை கொட்டுவீர்களா?” என கேட்டு போராடவில்லை. இது மக்களின் அரசியல் சுரணையின்மையால் விளைகிற மனநிலை அல்ல. கார்ப்பரேட்டுகளுக்கு அனைத்தையும் தாரை வார்த்து விட்டு, எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என திண்ணையில் படுத்து விடும் கண்மூடித்தனம்.
உலகம் முழுக்க இந்த கார்ப்பரேட் கண்மூடித்தனம் வளர்ந்து வருகிறது. நமது இயற்கை வளங்கள் கார்ப்பரேட்டுகளின் தனி சொத்தல்ல, அவை மக்களின் சொத்து. அவற்றை எந்தளவுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை மக்களே முடிவெடுக்க வேண்டும் எனும் உணர்வு நமக்கு வர வேண்டும். இப்போதைக்கு நமது நீர்நிலைகள், நமது காற்று, நமது பொது இடங்கள் நமக்கு சொந்தமானவை எனும் நம்பிக்கையை இழந்து நாம் அந்நியப்பட்டு வருகிறோம். இல்லாவிடில் இது போன்ற வறட்சியில் மக்கள் உலகம் முழுக்க சிக்கி தவிக்க மாட்டார்கள்.
கர்நாடகாவிலும் வறட்சி உண்டு. அங்கும் விவசாயிகள் அல்லல்படுகிறார்கள். அதற்கு பிரதான காரணம் பெங்களூர் போன்ற நீரை உறிஞ்சி மாயமாக்கும் அரக்கனுக்கு தீனி போடும் பரபரப்பு. இந்நகரம் இயங்க தேவையுள்ள ஏராளமான நீரை விவசாயிகளின் வயிற்றில் அடித்து பிடுங்கி ஐ.டி நிறுவனங்களுக்கும் பப்புகளுக்கும் அடுக்குமாடிகளில் தாராளமாய் பயன்படுத்தி வீணடிக்கவும் கர்நாடக அரசு வழங்குகிறது. விவசாயிகள் அல்லல்படும் போது அவர்களை சமாதானப்படுத்த காவிரி பிரச்சனையை முடுக்கி விடுகிறார்கள்.
நம் வளங்களை அபகரிப்பவர்களை நம் வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறோம். அவர்களின் சட்டைக்காலரைப் பிடித்து கேள்வி கேட்கும் காலம் வந்து விட்டது! ஐ.பி.எல்லை தடை செய்வதற்கான போராட்டங்கள் இதற்கான துவக்கப் புள்ளியாக அமையட்டும்!

Comments