நம் காலத்தின் பாசிசம் எது?
எஸ்.வி சேகர் பிரச்சனையை ஒட்டி ராஜன் குறை எழுதிய ஒரு பதிவின் மீதான என் எதிர்வினை இது.
அணி சேர்ந்து அரசியல் போராட்டம் செய்யும் போது எப்படி முரண்களை கையாள்வது என்பதே ராஜன் குறையின் குறிப்பின் மையம். தெளிவும் சித்தாந்த ஒழுங்கும் கொண்டு விவாதித்து முரண்களை கையாள வேண்டும் என அவர் சொல்வதாய் நான் புரிந்து கொள்கிறேன். எனக்கு அவரது தரப்பில் உள்ள மாறுபட்ட கருத்து இது: அணி அமைத்து செய்யப்படும் அரசியலின் அடிப்படையில் சில சிக்கல்கள் இல்லையா? ஒரு மக்களாட்சி அமைப்பில் பிரதிநுத்துவ அரசியலுக்கு குழு செயல்பாடு தேவையே. ஆனாலும் இக்குழு செயல்பாடுகள் மானுட அறத்தை மறுக்கும் எல்லைக்கும் போகலாமே? அப்போது என்ன செய்வது?
குழு அரசியலில் சுயசிந்தனை, ஒருவரது அற உணர்வுக்கு அங்கு இடம் என்ன? என் குழு ஒரு பொதுநல நோக்குக்காக ஒரு தப்பான காரியத்தை ஆதரித்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

தேர்தலின் போது எப்படி செயல்பட வேண்டும்? அணியாகவா தனித்தா? அணியாக எனில் அது ஜனநாயக விரோதம் அல்லவா? அப்போது தனித்தென்றால் இப்போது நாம் கூட்டுமனப்பான்மையை கேள்வியின்றி ஏற்கலாமா?
நமது அரசியலமைப்பு அணி செயல்பாட்டை ஏற்கிறது. அதேவேளை நமது சுதந்திரத்தை, தேர்வுகளை, முடிவுகளை நாம் தனிமனிதர்களாகவே முன்னெடுக்க வேண்டும் என்கிறது.


உதாரணமாய் நீங்கள் ஒரு தனிமனிதராக ஒரு அணியின் சார்பில் வாக்கு அளிக்க முடியாது. ஒரு அணியின் தவறுகளுக்கு பொறுப்பாகி ஒரு தனிமனிதர் சிறை செல்ல முடியாது. சாதி, மதத்தின் அடிப்படையில் தொகுதி சாத்தியமில்லை. தமிழ் தேசியர்கள் எங்கள் தொகுதியில் தமிழ் தேசியர் மட்டுமே போட்டியிட வேண்டும் என கோர முடியாது. ஆக நமது மக்களாட்சி அமைப்பு தனிமனிதருக்கும் அணிகளுக்கும் இடையில் ஒரு சமரசத்தை கோருகிறது. இங்கு தான் பிரச்சனையே எழுகிறது:


ராஜன் குறை இந்துத்துவாவுக்கு எதிரான அணிகள் முழுக்க தீவிரவாதத்தை ஆதரிக்கவோ அனைவரையும் பாசிஸ்டுகள் என முத்திரை குத்தக் கூடாது என்கிறார். இது ஒரு முக்கியமான பார்வை இதை நான் ஏற்கிறேன். ஆனால் ஒரு மக்கள் திரள் கூட்டாக செயல்படும் போது இடதுசாரி கட்சியினரைப் போல சித்தாந்த தெளிவுடன், தர்க்க ஒழுங்குடன், நிதானத்துடன், பிசிறின்றி இயங்குவது சாத்தியமா? அப்படியே அது சாத்தியப்பட்டாலும் ஒழுங்கு, ஒற்றுமை, கட்சிக்கட்டுப்பாடு ஆகிய தேவைகளின் பொருட்டு நியாயம், அறம், உண்மை ஆகியவற்றை கைவிடும் நிலைக்கு நாம் தள்ளப்பட மாட்டோமா? இது நம் வரலாற்றில் இடது அமைப்புகளில் தொடர்ந்து நிகழ வில்லையா? நக்சல்பாரி அமைப்பை இடதுகட்சிகள் மிகக்கொடூரமாய் அழித்தது குறித்த பதிவுகள் இல்லையா? அதற்கு எதிராய் கட்சிக்காரர்கள் அமைதி காத்தது நியாயமா?
பாசிசத்துக்கு எதிரான குரல்களைத் தொகுக்கும் போது நாம் ஆதரிக்கும் மக்களிடையே பாசிசம் தென்பட்டால் என்ன செய்ய? சிங்கூரில் நடந்தது போல் நிகழ்ந்தால் இடதுசாரி தோழர்கள் மௌனம் காத்தது போல் மௌனிக்க வேண்டுமா? பாசிசத்துக்கு எதிரான அணி ஒற்றுமையை பாதுகாப்பது முக்கியமெனில் மௌனிக்கத் தானே வேண்டும்? அப்படியான மௌனம் நம்மை அழிவை நோக்கி இட்டுச் செல்லும்.
என் தீர்வு: இனி வரும் காலத்தில் அறவழியிலான அரசியல் என்பது சிதைவின் அரசியலாக இருக்கும். அணி சேர்க்க வேண்டும். ஆனால் எப்போது வேண்டுமெனிலும் அந்த அணியை சந்தேகிக்கவும் ஆய்வு செய்யவும் தேவைப்பட்டால் உடைத்து எறியவும் தயாராக வேண்டும். அணிகள் தொடர்ந்து தோன்றி உடைகிறவையாய் இருக்கட்டும். அவற்றுக்கு என உறுதியான கட்டுக்கோப்பான சித்தாந்தங்கள் வேண்டாம். மக்களின் எழுச்சியும் மனசாட்சியும் உள்ளுணர்வும் கோரும் நியாயங்களை ஒட்டி அரசியல் உருவாகட்டும். அவற்றின் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது அந்த அமைப்புகள் சிதையட்டும். சிதைவுற்ற இடத்தில் புது அமைப்புகள் பிறக்கட்டும்.
இனி பாசிசம் என்பது வலதுசாரிகள் கட்டமைப்பது மட்டுமாக இருக்காது. பெரிய கட்டுறுதியான அமைப்புகளை யாரெல்லாம் உருவாக்கி வளர்த்தாலும் அது பாசிசத்தை நோக்கி இட்டுச் செல்லும். கேள்விக்குட்படுத்த தகாத சித்தாந்தங்களை யார் முன்வைத்தாலும் அவை அழிவு சக்திகளாய் உருமாறும். இடதோ வலதோ எந்த சாரிகளையும் நான் சந்தேகத்துடனே பார்ப்பேன். வேறு வழியே இல்லை.


Comments

Muthuvelavan said…
இங்கு எல்லாமே பண ஆதாரத்திலேயே நடக்கிறது. பணபலமில்லாமல் கட்சி கிட்சி ஒன்றும் நடக்காது என்கிற நிலைமைக்குக் வந்தாகிவிட்டது. மக்களும் தான் சார்ந்த கட்சியை கண்மூடித்தனமாக ஆதரிப்பது எதிர்ப்பவரை வசைபாடுவது வழக்காகிவிட்டது. என்னைக்கேட்டால் எந்தக்கட்சிக்கும் உறுப்பினர் சேர்க்கையையே அனுமதிக்கக்கூடாது. உறுப்பினர் என்பதாலேயே கண்மூடிக்கொண்டு ஆதரிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டையே அனைவரும் கொண்டிருக்கிறார்கள். ஆரோக்கியமான அரசியல் அதனால்தான் உருவாகவேயில்லை.