ஆஸ்திரேலிய அணியில் இருந்து பெரியாரியவாதிகள் வரை: பாசாங்கா இயல்பா?


Image result for australia ball tampering
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவரும் உப-தலைவரும் (ஸ்மித் மற்றும் வார்னர்) விதிமுறைக்கு மாறாக பந்தை உருமாற்ற முயன்ற குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டு தத்தம் பதவிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். ஸ்மித் குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிக்கு வேண்டி இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்களான கிளார்க், கில்கிறிஸ்ட் ஆகியோர் ஸ்மித் பதவி விலக வேண்டும் என கோரி உள்ளனர். இத்தருணத்தில் பல கிரிக்கெட் ஆர்வலர்கள் முன்னுள்ள கேள்வி கிரிக்கெட்டின் விழுமியங்களை உன்னதமாய் கருதி கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தமது பண்பாட்டு மேன்மையை பறைசாற்றும் ஆஸ்திரேலியர்கள் ஏன் இப்படி வரலாற்றில் இது போல மிக அதிகமாய் விதி மீறல்களை, ஒழுக்கப் பிறழ்வுகளை, பண்பாட்டு சீரழிவுகளை நிகழ்த்தியவர்களாய் இருந்திருக்கிறார்கள் என்பது. இந்த முரணை எப்படி புரிந்து கொள்வது? இது ஒரு வெளிப்படையான பாசாங்கா அல்லது விழுமியங்களை ஆவேசமாய் பறைசாற்றுபவர்கள் எதிர்கொள்ளும் தவிர்க்க இயலாத ஒன்றா? சாதி ஒழிப்பு, சமூக சீர்திருத்தம் என வாழ்வின் வேறு களங்களில், லட்சியவாதிகளின் சரிவுகளைப் பற்றி இது நமக்கு சொல்லும் சேதி என்ன?

குற்றம் நடந்தது தற்போது நிலுவையில் உள்ள தென்னாப்பிரிக்க-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது. ஒரு டெஸ்டை இழந்த பின் ஆஸ்திரேலியா தொடர்ந்து இன்னொன்றையும் அடுத்து இழந்து பெரும் பின்னடைவை எதிர்கொள்ளப் போகும் வேளை. இச்சந்தர்பத்தில் கண்ணியமாக ஒரு அணி நடந்து கொள்ள வேண்டும்; தம் குறைகளை ஏற்றுக் கொண்டு உழைத்து தம்மை மெருகேற்றி மீண்டு வர வேண்டும் என்பது கிரிக்கெட்டின் பொற்கால மரபுகளில் ஒன்று. அதாவது வெற்றி தோல்வியை விட கண்ணியம், நேர்மை, கனிவு, போராட்டம் ஆகிய விழுமியங்கள் மேலானவை என கிரிக்கெட் தோன்றிய காலத்தில் இருந்தே நம்பப்படுகிறது. ஆனால் இவ்விசயத்தில் ஆஸ்திரேலியா எப்போதுமே மிகக் குறைவான மதிப்பெண்களே பெற்று வந்துள்ளது.
 அதாவது கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் எதிரியை தளர்த்தி வீழ்த்த பயன்படுத்தலாம் என்பதை ஆஸ்திரேலிய அணி நம்புகிறது; அதை ஒரு முக்கிய கொள்கையாக பிரகடனப்படுத்தியும் வந்துள்ளது (அதே நேரம் தாம் மிக கண்ணியமாய் நேர்மையாய் ஆடுகிறோம் என்றும் பெருமை பேசுவார்கள்). உதாரணமாக கடந்த இரு பத்தாண்டுகளாய் ஆஸ்திரேலியா எந்த வலுவான அணிக்கு எதிராய் ஆடினாலும் அவ்வணியின் சிறந்த பேட்ஸ்மேனை இடுப்புக்கு கீழ் தாக்கும் விதமாய் மட்டம் தட்டி பேசுவார்கள். களத்தில் தொடர்ந்து அவரை கலாய்த்து விமர்சித்து ஏசி கோபமூட்டி கவனத்தை கலைக்க முயல்வார்கள். ஆட்டத்தொடர் துவங்கும் முன்னரே யார் தமது குறி என அறிவித்தும் விடுவார்கள். .தா. இந்தியாவுடன் தொடர் என்றால் கோலியை குறி வைப்பார்கள். ஏதாவது ஒரு விதத்தில் அவரை எரிச்சலூட்டி கட்டுப்பாட்டை மீறி நடக்கத் தூண்டுவார்கள். சர்ச்சைகள் வெடிக்க வகை செய்வார்கள். இன்னொரு பக்கம் கோலிக்கு எதிராக அபாரமாய் பந்து வீசவும் செய்வார்கள். ஒரு பக்கம் கவன சிதறல், இன்னொரு பக்கம் பந்து வீச்சின் நெருக்கடி. இரண்டு பக்கமும் மோதி ஒருவரை நிலைகுலைய வைப்பார்கள். இதை ஸ்லெட்ஜிங் என்பார்கள். இவ்வளவு காலமாய் ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஸ்லெட்ஜிங்கினால் தான் அத்தனை கெட்ட பெயரும். இப்போது தான் முதன்முறையாய் ஒரு ஒழுக்கக்கேடான ஊழல் செயலுக்காக ஆஸ்திரேலிய அணியினர் விமர்சிக்கப்படுகிறார்கள்.
ஆஸ்திரேலியர்கள் அளவுக்கு கிரிக்கெட்டின் கண்ணியம், கௌரவம், பவித்திரம் பற்றி உச்சக்குரலில் பேசி கொடி பிடிப்பவர்கள் வேறு எங்கும் இல்லை; அவர்கள் அளவுக்கு பொய்ப் பித்தலாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிரிக்கெட் வரலாற்றில் இல்லை. இலங்கையின் முரளிதரன் தமது நாட்டின் மேதையான ஷேர் வார்னுக்கு போட்டியாக வருவார் என்பதை உணர்ந்ததும் அவர் பந்தை வீச வில்லை, எறிகிறார் என பெரும் பிரச்சாரத்தை ஆரம்பித்து அவர் பெயருக்கு நீங்காத களங்கத்தை ஏற்படுத்த பார்த்தனர் ஆஸ்திரேலியர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு உலகின் ஆக வேகமான பந்து வீச்சாளர்களின் வீச்சு பாணியை ஆய்வு செய்த ஒரு குழு ஆஸ்திரேலியாவின் பிரட் லீ கூட பந்தை எறியவே செய்தார் என்பதை கண்டுபிடித்தது. ஆஸ்திரேலியர்கள் அப்போது மூச்சு விடவில்லை.
2008இல் இந்தியா ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடர் ஆடிய போது வழக்கம் போல் ஆஸ்திரேலியர்கள் இந்தியாவின் உணர்ச்சிக் கொழுந்துகளை குறி வைத்து ஸ்லெட்ஜ் செய்தனர். அப்படித் தான் ஹர்பஜனுக்கும் சைமண்ட்ஸுக்கும் சச்சரவு ஏற்பட ஹர்பஜன் பின்னவரை மங்கி என அழைத்ததாயும், அது இனவாத அவதூறு என்றும் மொத்த ஆஸ்திரேலியாவும் கொந்தளித்தது. ஹர்பஜனோ தான்தெரா மா கிஎன ஒரு பிரசித்த இந்திய வசையையே கூறியதாய் சொன்னார். இந்த குற்றச்சாட்டுக்கு சாட்சி ஏதும் இல்லை எனிலும் தண்டனை வழங்கப்பட்டது: ஹர்பஜன் மூன்று டெஸ்டுகளுக்கு தடை செய்யப்பட்டார். ஆனால் 2006இல் இதே ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான டீன் ஜோன்ஸ் ஒரு டிவி வர்ணனையின் போது தென்னாப்பிரிக்க இஸ்லாமிய பேட்ஸ்மேனான ஹஷிம் ஆம்லாவின் தாடியை சுட்டிக் காட்டிதீவிரவாதிஎன கேலி செய்தார். அப்போது எந்த ஆஸ்திரேலிய வீரரும் அதைக் கண்டித்து போராட முன்வரவில்லை. சமீபத்தில் ஆஸ்திரேலியாவின்  டெஸ்ட் பேட்ஸ்மனும் மற்றொரு இஸ்லாமியருமான உஸ்மான் குவாஜா இனவெறி எப்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை நீண்ட காலமாய் அரித்து தின்றிருந்துள்ளது; தான் இளமையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை ஆதரிக்க முடியாதளவு அதன் மீது கடும் கோபம் கொண்டிருந்ததாய் ஒரு பத்திரிகையில் குறிப்பிடுகிறார். ஹர்பஜனுக்கு எதிராய் பொங்கியவர்கள் ஏன் இவ்வளவு காலமாய் இவ்விசயத்தில் அமைதி காத்தனர்?
கடந்த வருடம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் டெஸ்ட் தொடர் ஆட வந்திருந்தது. பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் அணித்தலைவர் ஸ்மித் அவுட் ஆன போது அவர் அதை ரிவ்யூ செய்ய முயன்றார். அப்போது தன் முடிவு சரிதானா என உறுதி செய்ய அவர் ஆஸ்திரேலிய பயிற்சியாளர்களும் பரிசாரகர்களும் அமர்ந்திருக்கும் பால்கனி நோக்கி பார்வையை ஓட்டினார். அது டிவியில் பதிவாக பெரும் சர்ச்சையாக வெடித்தது. தெரியாமல் செய்ததாய் ஸ்மித் கூறினாலும் ஆஸ்திரேலிய அணியினர் விதிமுறைக்கு எதிராக டி.ஆர்.எஸ் முறையை பயன்படுத்தி லாபமடைகிறார்கள் எனும் கோலியின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளதாயே ரசிகர்கள் நம்பினர்.
இம்மாதிரியான ஒழுக்கப்பிறழ்வுகளை ஒரு சிறந்த வெற்றி உபாயமாக சித்தரித்தவர் முன்னாள் ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் வாஹ் என சொல்லப்படுகிறது. கிரிக்கெட்டை ஒரு ஜெண்டில்மேன் ஆட்டமாக பார்க்க வேண்டியதில்லை; அது நம்மை பலவீனமாக்கும்; கிரிக்கெட் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் போக வேண்டிய ஒரு மூர்க்கமான ஆட்டம் என அவர் நிறுவினார். வாஹ் தன் அணியை இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் ஆட அழைத்து சென்ற போது எதிரணியினரை ஹோட்டலிலோ வெளியிலோ பார்த்தால் கூட முறைத்துக் கொண்டு போக வேண்டும், நட்பு பாராட்டக் கூட என தன் அணியினரை அறிவுரைத்தார். இது போன்ற கீழ்த்தரமான சுபாவத்தை அவர் உளவியல் உபாயம் என நியாயப்படுத்தினார்.
2003இல் ஆஸ்திரேலிய அணி மே.இ தீவுகளில் டெஸ்ட் தொடர் ஆடி வந்தது.  நான்காவது டெஸ்டில் 417 எனும் பெரிய இலக்கை மே.இ தீவுகள் அணி அட்டகாசமாய் அடித்து நெருங்கிக் கொண்டு வந்தது. அன்றைய ஆட்டத்தின் நட்சத்திரம் 21 வயதான ராம்னரேஷ் சர்வான். மெக்ராத் அவருக்கு பந்து வீசிக் கொண்டிருந்த போது சட்டென நெருங்கி வந்துபிரையன் லாராவின் ஆண் குறியின் சுவை எப்படி?” என கேட்கிறார். சர்வான் பதிலுக்குஉன் மனைவியிடம் கேளேன்என்கிறார். மெக்ராத்தின் மனைவி அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண விளிம்பில் இருக்கிறார். உடனே அவர் கடும் கோபம் கொண்டு சர்வான் மீது மேலும் வசைகளை பொழிகிறார். ஆஸ்திரேலியினர் வழக்கம் போல் தம் அணி வீரர் பக்கமே நியாயம் என வாதிடுகிறார்கள். ஆனால் சச்சரவை ஒருவர் விலை கொடுத்து அவ்வாறு வாங்க வேண்டும்?
ஆஸ்திரேலியினர் விதிகளை உடைப்பதோ ஒழுக்கம் மீறுவதோ அல்ல சிக்கல். அவர்கள் அளவுக்கு கிரிக்கெட்டின் நாணயம், மகத்துவம், பண்பாடு, நேர்மை பற்றி விதந்தோதுபவர்கள் வேறு யாரும் இல்லை. எப்படி ஒரு பக்கம் ஒரு குற்றத்தை செய்து விட்டு, அக்குற்றத்தை கடுமையாய் கண்டித்து ஒருவர் பேச முடியும்? ஒரு பக்கம் நீங்கள் அநீதியை முன்னெடுத்து விட்டு உங்களை நீதிவானாய் முன்வைக்க எப்படி முடியும்? Ball tampering என்படும் பந்தின் நிலையை அழுக்கு மற்றும் சொரசொரப்பான துணி மூலம் மாற்றி ரிவர்ஸ் ஸ்விங் செய்ய வைக்கும் குற்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஏற்கனவே பல அணிகள் செய்வதாய் சொல்லப்படுகிறது. பாகிஸ்தானியர் இதை செய்வதில் வித்தகர்கள் என்கிறார்கள். ஆனால் ஆஸ்திரேலியினர் அளவுக்கு விதவிதமாய் விதிமுறை மீறல்களில் பாகிஸ்தானியினர் ஈடுபட்டதில்லை. பாகிஸ்தானின் ஒழுக்கமீறலிலும் ஒரு வெளிப்படைத்தன்மை உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியினர் எதை பிறர் செய்யக் கூடாது எனச் சொல்கிறார்களோ அதையே மீள மீள ஆக்ரோசமாய் செய்கிறார்கள். இது ஒரு பாசாங்கா அல்லது உளவியல் இயல்பா?
பின்னது என்பதே என் நம்பிக்கை. நாம் ஒன்றை வெகுவாக ஊன்றி பிரகடனம் செய்யும் போது அதன் அபத்தமும் எதார்த்தமின்மையும் நம் உள்மனதுக்குத் தெரிகிறது. உடனே நம் செயல்கள் நம் சொல்லுக்கு நேர் எதிராக திரும்புகின்றன. இது ஒருவிதத்தில், நமது லட்சியவாதத்தின், விழுமிய பிரகடனத்தின் மிகையை குறைத்து சமனம் செய்வதற்கான நமது மனத்தின் ஒரு முயற்சியே இது எனலாம்.
உட்பகை உணரும் தருணம்பேராசிரியர் ரா. அழகரசனின் கட்டுரைகளின் தொகுப்பு. இதில் ஒரு கட்டுரை தீவிர திராவிட கழக கொள்கைவாதியான அவரது அப்பாவைப் பற்றியது. அப்பா பெரியாரின் சாதி ஒழிப்பு பிரச்சாரத்துக்கு தன்னை முழுக்க ஒப்புக் கொடுத்தவர். அதை இதயபூர்வமாய் நம்பி ஏற்றனவர். ஆனால் அவர் ஒரு கட்டத்தில் தன் சாதியினரின் சங்கம் ஒன்றில் உறுப்பினரும் ஆகிறார். அப்படி இருந்தவாறே சாதி ஒழிப்பு கொள்கையையும் முன்னெடுக்கிறார். இந்த முரண்பாடு ரா. அழகரசனுக்குள் கசப்பை ஏற்படுத்துகிறது. இதைப் பற்றி படிக்கையில் எனக்கு அந்த அப்பாவின் மீது தவறு ஏதும் இல்லை எனப் பட்டது. சாதி ஒழிப்பு என்னதான் ஒரு உயர்ந்த லட்சியம் என்றாலும், அது எதார்த்த உலகுடன் முரண்படக் கூடியது. நீங்கள் எதார்த்தத்த்தில் சாதியை விலக்கி விட்டு சாதியற்று வாழ இயலாது. சாதியை வெளிப்பகையாய் கண்டு மோதுவது எளிது, அது உட்பகையாய் உங்களைத் தின்னும் போது என்ன செய்வீர்கள் என அழகரசன் கேட்கிறார். சாதியை வெளிப்பகையாய் கருதி பிரச்சாரம் செய்வதே அது உட்பகையாய் நம்முள் வளரக் காரணம் என எனக்கு தோன்றுகிறது. சாதி இல்லை, அது தேவையில்லை என மீள மீள கூறும் போது சாதி இருக்கிறது, அது தேவை எனும் எதிரொலி நம்மை நோக்கி திரும்பி வருகிறது. இந்த எதிரொலியை நாம் நமது இன்னொரு குரலாக மாற்றிக் கொள்கிறோம். சுயமுரண் மிக்கவராய் வெளியே தெரியத் துவங்குகிறோம்.
 சாதி இல்லை என்பதிலும் அதுவே எதார்த்தம் என்பதிலும் பாதி பாதியே உண்மை. ஆனால் ஒன்றை நம்பினால் இன்னொன்றையும் பக்க பலமாய் வைத்தே கொள்ள வேண்டும். இதையே துறவிகளுக்கும் அரசியல் செயல்பாட்டாளர்களுக்கும் சொல்லலாம். மிக அதிகமான அவிசுவாசிகளை நான் துறவிகள் மத்தியிலே கண்டிருக்கிறேன். கடவுள் இல்லையோ எனும் கேள்வி அவர்களை அச்சுறுத்துவதே இல்லை; தொடர்ந்து கடவுள் பற்றி சிந்திக்கும் வேளையில் ஏன் இல்லை என்பது பற்றியும் அவர்கள் சிந்தித்திருக்கிறார்கள். அரசியலில் செயல்பாட்டில் இருப்பவர்கள் மிக சுலபமாய் தம் அரசியல் எதிரிகளுடன் அணுக்கமாய் பழகுபவர்களாகவும், அரசியலை அரட்டைக்கு மட்டுமென வைத்துக் கொள்பவர்கள் எதிர் தரப்பினர் மீது கடும் மூர்க்கம் பாராட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் கண்டிருக்கிறேன். நான் முன்பு டி.வி விவாதங்களில் கலந்து கொள்ளும் போது காங்கிரஸ், பா..க கட்சி பிரதிநிதிகளை மிகக் கடுமையாய் சாடி இருக்கிறேன். ஆனால் இடைவெளி வரும் போது நாங்கள் மிகவும் பிரியமாய் பேசிக் கொள்வோம். ஆனால் நிகழ்ச்சி திரும்ப ஆரம்பிக்க நாங்கள் பரஸ்பரம் கடுமையாய் காயமேற்படுத்தும் விதம் பேசுவோம். அடுத்து காரில் வீட்டுக்குப் போகும் போது எங்கள் மிகையை உணர்ந்து அதை சமனப்படுத்தும் விதம் மிகவும் கனிவாய் பரஸ்பரம் களிம்பு தடவுவோம். அவரை நட்பில் வைத்திருந்தோ எனக்கோ என்னால் அவருக்கோ பயனில்லை. ஆனாலும் எங்கள் கோபமும் ஆவேசமும் முழுக்க உண்மையல்ல எனும் உணர்வு எங்களை அப்படி செய்ய தூண்டுகிறது. அதாவது எதுவொன்றை எந்தளவு தீவிரமாய் நம்புகிறோமோ அது அந்தளவுக்கு உண்மையானதல்ல என நம் உள்மனதுக்கு உடனே புலப்படுகிறது. இந்த அபத்தத்தை உணர்ந்தவர்கள் தவிக்கிறார்கள். முரணாய் செயல்படுகிறார்கள்.
கிரிக்கெட்டில் நேர்மறையில் இருந்து எதிர்மறையாய் இது திரும்புகிறது. தமது ஆட்டப் பண்பாடு உன்னதமானது என நம்பி தமது பச்சை நிற கிரிக்கெட் தொப்பியை தேவ துகிலாய் கருதி வழிபடும் ஆஸ்திரேலியினர் எதார்த்த உலகில் கால் ஊன்ற சற்றே முரணாய் செயல்பட வேண்டி இருக்கிறது. மற்றபடி, இந்த நேர்மையற்ற செயல்களால் ஆஸ்திரேலியினர் வரலாற்றில் அதிகம் பயன்பெற்றதாய் சான்றில்லை (துணிவும் திறமையுமே அவர்களை வெற்றியை நோக்கி செலுத்தி இருக்கிறது). ஆனாலும் ஏன் செய்கிறார்கள் என்பதற்கு மேற்சொன்னது மட்டுமே ஒரே பதில்.
கிரிக்கெட்டில் விதிமீறல்களை ஒரு கலையாகவே மாற்றினவர்கள் பாகிஸ்தானியர். ரிவர்ஸ் ஸ்விங், தூஸ்ரா என விதிகளை வளைத்து தான் அவர்கள் பல பவுலிங் அஸ்திரங்களை கண்டுபிடித்து கிரிக்கெட்டுக்கு கொடையாய் வழங்கினர். ஆனால் பாகிஸ்தானியரும் (இந்தியர்களும் [பிளாக்கில் டிக்கெட் வாங்கிஊழலுக்கு எதிரான ஷங்கர் படம் பார்த்து மெச்சுவோம்}) மகோன்னதமான விழுமியியங்களை ஒட்டியே ஆடுகிறோம் என கோரிக் கொண்டு பெருமை பாடுவதில்லை; அதனாலே ஆஸ்திரேலியர் அளவுக்கு வெளிப்படையாய் மீறல்களில் அவர்கள் மாட்டிக் கொள்வதும் இல்லை. சுத்தமே அசுத்தத்தை தோற்றுவிக்கிறது. காந்திகளே கோட்சேக்களை உற்பத்தி பண்ணுகிறார்கள்.
இந்த இருமையின் சுழற்சியில் மாட்டாமல் வாழ்வை இயல்பாய் ஸ்டைலாய் வாழ்வது எப்படி என்பதற்கு இந்த வெள்ளையர்களுக்கு இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியரிடம் முக்கிய பாடம் உள்ளது.

நன்றி: உயிர்மை, ஏப்ரல் 2018

Comments

Ponmahes said…
செம........
Anonymous said…
காந்திகளே கோட்சேக்களை உற்பத்தி பண்ணுகிறார்கள்இந்த வரிகள் மட்டும் நெருடல் சார். மற்றபடி கட்டுரை அருமை