வரலாறு எனும் புனைவு: ஸ்டாலினின் உரை


 Image result for ஸ்டாலின் ராஜாங்கம்
பேஸ்புக் லைவ்வின் முழுபயனை இன்று தான் பெற்றேன். பனுவல் நடத்தும் தலித் வரலாறுகள் கருத்தரங்கில் ஸ்டாலின் ராஜாங்கத்தின் உரை ஒரு அற்புதம். மிகச்சிக்கலான பின்நவீன கருத்துக்களை யாரையும் மிரட்டாமல் மென்னியை நெரிக்காமல் அவர் எடுத்துரைத்தார்.

பின்நவீனத்துவம் தகவல்பூர்வமான புறவயப் பார்வையை சந்தேகிப்பது. அகவயவாதத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது. புறவய தரவுகள், வாதங்கள், சித்தரிப்புகளை அது புனைவு என காண்கிறது. அதாவது திட்டமிட்ட சதி என்று அல்லாமல், சமூகத்தில் உலவும் எதிரிடைகள் எப்படி தொடர்ந்து பொய்களை பரப்புகிறது, எப்படி அது வரலாற்று புனைவாக மாற்றுகிறது என பின்நவீனத்துவம் பேசுகிறது. ஆகவே அது எந்த சித்தாந்தம், நம்பிக்கை, தரப்பையும் ஒரு “கதையாடல்” என்கிறது.
 தேசம் என்பதை நாம் ஏற்கனவே உள்ள ஒரு ஆகிருதி என காண்கிறோம். 

பின்நவீனர்கள் தேசம் என்ற ஒன்றே இல்லை, அது ஒரு கதையாடல் என்றார்கள். தமிழ் தேசியத்தை நீண்ட காலமாய் கோரி வரும் தமிழர்கள் இதை இந்திய தேசியத்தின் மீதான விமர்சனமாய் ஏற்றுக் கொண்டு மகிழ்ந்தார்கள். ஆனால் பின்நவீனத்துவம் தமிழ் தேசியத்தையும் ஒரு கட்டமைப்பாக, கதையாடலாகவே காணும். ஸ்டாலினின் உரை நமது சாதி அமைப்பு எனும் கதையாடலை உருவாக்க எப்படி தமிழ் வரலாறு பயன்பட்டது என்பதை ஒட்டி அமைந்தது. இயல்பாகவே அவர் அயோத்திதாசரின் ஆய்வை குறிப்பிட்டு விவாதித்தார். ஆனால் ஸ்டாலின் ஏனோ தலித், தமிழ் பௌத்தம், அதை ஒடுக்கி மேலெழுந்த இந்து சனாதன மரபு பற்றி வெளிப்படையாக பேசவில்லை. சன்னமாய் அதை சுட்டி விட்டு நகர்ந்தார்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆசிரியர்களுக்கு தீராத ஆர்வம் எற்படுத்துவது ஒரு பிரதியின் தொன்மையை எப்படி தீர்மானிப்பது என்பது. “மூத்த குடி தமிழ்க்குடி” எனும் கோரலின் பின்னால் உள்ள பெருமிதமே ஒருவிதத்தில் சாதியின் பாதுகாக்கும் கதையாடலில் உள்ள பெருமிதமும். பதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு சமயப்பிரதியை (திருமுருகாற்றுப்படை) எப்படி சங்க கால பிரதியாக வரலாற்றாசிரியர்கள் புனைந்தார்கள், அதன் மூலம் எப்படி முருகனை ஒரு தொல் தமிழ் தெய்வமாய் நிறுவினார்கள் என ஸ்டாலின் குறிப்பிட்டார். ஒரு பின்நவீன வரலாற்றாசிரியனின் பணி முருகன் அல்ல தமிழ் தொல் கடவுள், இன்னொருவரே என நிறுவுவதல்ல. இந்த போலியான வரிசைகிரமத்தை கலைப்பதே பினநவீன விமர்சகனின் பணி. அயோத்திதாசர் அதை செய்தார். அவர் பௌத்தம் எப்படி தமிழ் பண்டைய இலக்கியங்களில் பெரும் தாக்கம் செலுத்தியது என்று மட்டுமல்ல, நாம் இன்று அறியும் வடக்கத்திய பௌத்தம் உண்மையான தமிழ் பௌத்தம் அல்ல என்றும் விளக்கினார். இதன் மூலம் இங்கு வேருன்றிய ஒரு விருட்சத்தை அசைத்துப் பார்த்தார். அதன் கிளைகளில் குடியிருந்த பறவைகளை கலைத்து சிதறச் செய்தார்.

உண்மையை பொய்யென்று காட்டும் இடம், இருளில் வெளிச்சம் பாய்ச்சும் இடம், ஒரு கட்டமைப்பை பொலபொலவென உதிர்த்து வெற்றிடத்தை அங்கே உண்டு பண்ணும் பணி பின்நவீனத்துவ விமர்சனத்தில் மிக முக்கியமானது. அது ஆய்வுரீதியாக முக்கியமானது மட்டுமல்ல, ஆன்மீக விடுதலையும் தரக் கூடியது. ஆம், இருமைகளின் சுவர்கள் நொறுங்கும் போது நமக்கு சுவாசிக்க காற்று கிடைக்கிறது. நாம் ஒடுங்கின வெளிகளில் இருந்து விரிந்த பரந்த பிரதேசங்களுக்கு நகர்கிறோம். ஸ்டாலினின் உரை அப்படியான ஒன்றாக இருந்தது.

தினம் தினம் எத்தனை எத்தனை வெற்று டிவி விவாதங்களில் நேரத்தை வீணடிக்கிறோம்! இன்று கொந்தளிக்கும் ஒரு பிரச்சனை நாளை இல்லை. நாளை மாரடிக்கிற ஒன்று நாளை மாலையே காணாமல் போகிறது. ஸ்டெர்லைட் என்றாலும் காவிரி நதி நீர் என்றாலும் எல்லாரும் ஒரே குரலில் பேசுகிறோம். எதையும் மாற்றி யோசி, தலைகீழாய் புரட்டிப் போடு எனக் கோரிய ஒரு மரபு நமக்கு தொண்ணூறுகளில் இருந்தது. அது இன்று முழுக்க செத்து விட்டது. நமது அறிவியக்கம் ஒரு கூட்டிசையாக மாறி விட்டது. நாம் பொம்மலாட்ட பாவைகளாகி விட்டோம். இச்சூழலில் இவ்வுரை பெரிய ஆசுவாசமாக இருந்தது. தொண்ணூறுகளில் கலை இலக்கிய பெருமன்ற கூட்டங்களில் கலந்து கொண்ட நாட்களை நினைவுபடுத்தியது. நன்றி ஸ்டாலின்!

Comments

நல்ல கட்டுரை...