கல்வியில் மதத்தின் இடம் என்ன? (2)


Image result for பசுக்கள் பன்றிகள் போர்கள்

அடுத்து மதசார்பற்ற கல்விச் சூழல் பற்றி பூவண்ணன் கணபதியின் கருத்துக்களும் என் எதிர்வினையும்.
பூவண்ணன் கணபதி: மதங்கள், கடவுள்கள் மீதான வெறுப்பு வேறு அதன் மீதான சந்தேகங்கள் ,நம்பிக்கையினமை ,தர்க்கம் சார்ந்த மறுத்தல்கள் வேறு 

மத நம்பிக்கை தான் மாட்டுக்கறியை ,ஒரே கோத்திர காதலை,பன்றிக்கறியை ,திருமணம் சார்ந்த ,கைம்பெண் சார்ந்த சடங்குகளை தூக்கி பிடிக்கவோ மூர்க்கமாக மறுக்கவோ வைக்கிறது
 

கலையே நம்பிக்கையின்மையின் காரணமாக எழும் ஒன்றாக தான் எனக்கு தோன்றுகிறது
.

நான்:  “மதங்கள், கடவுள்கள் மீதான வெறுப்பு வேறு அதன் மீதான சந்தேகங்கள் ,நம்பிக்கையினமை ,தர்க்கம் சார்ந்த மறுத்தல்கள் வேறு.

மத நம்பிக்கை தான் மாட்டுக்கறியை ,ஒரே கோத்திர காதலை,பன்றிக்கறியை ,திருமணம் சார்ந்த ,கைம்பெண் சார்ந்த சடங்குகளை தூக்கி பிடிக்கவோ மூர்க்கமாக மறுக்கவோ வைக்கிறது

முதலில் இக்கருத்தை விவாதிப்போம்.

எந்த ஒரு சமூகக் குழுவும் தனக்கான அடையாளங்கள், நம்பிக்கைகள், சடங்குகளை கொண்டிருக்கும். அது தன்னைச் சுற்றி ஒரு எல்லையை வகுக்கும். அப்போது தன் எல்லைக்கு வெளியே உள்ளோரை மற்றமையாக கட்டமைக்கும். நீங்கள் குறிப்பிடும் மாட்டுக்கறி வெறுப்பு, சாதி மீறிய உறவுகளை வன்மத்துடன் எதிர்ப்பது, விதவைகளை எரிப்பது போன்ற பல எதிர்மறையான சமூக வழக்கங்கள் இப்படி ஒரு சமூகம் தன்னை வரையறுத்துக் கொள்வதற்கான முயற்சி தான்.
இன்று நாம் ஒரே சமயம் நம்மை தனித்துக் காட்டவும், இன்னொரு பக்கம் நம்மை அனைத்து சமூகங்களுடனும் இணங்கிப் போகிறவர்களாக சித்தரிக்கவும் விரும்புகிறோம். அலுவலகத்தில், வணிக தலங்களில், பொது இடங்களில் அடையாளமற்றவர்களாக, வெளிப்படையாய் மதமற்றவர்களாக, சாதியற்றவர்களாக இருக்கிறோம். ஆனால் வீட்டுக்குள், திருமணம் உள்ளிட்ட சமூகமாக்கல் நிகழ்வுகளில் சாதிய, மத அடையாளங்களை சுமந்தவர்களாகவும் இருக்கிறோம். இது இன்றைய நவமுதலாளித்துவ சூழலின் நிர்பந்தம் காரணமாய் விளைந்த ஒன்று.
 இந்துத்துவாவையும் நான் இப்படித் தான் பார்க்கிறேன் – ஒருவித சுயமுரண் கொண்ட இருப்பு இவ்வகை மக்களுடையது; இஸ்லாமிய நண்பர்களுடன் இனிமையாய் பழகும் இந்துத்துவர்களை அறிவேன்; ஆனால் ஏதோ ஒரு எல்லையை வகுத்திருப்பார்கள் – கோட்டுக்கு அந்தப் பக்கம் போனதும் இஸ்லாமியர் மீது வெறுப்பை உமிழ்வார்கள்.
நவீன கல்வி கைம்பெண் கொடுமை, தீண்டாமை போன்ற சமூக தீங்குகளை அழித்ததாய் நான் கருதவில்லை. நவீன முதலாளித்துவம் அதை செய்தது. நவீன கல்வி அம்மாற்றத்துக்கான ஒரு கதையாடலை, தர்க்கத்தை, மொழியை உருவாக்கிக் கொடுத்தது.
அதாவது குழுவாதம், குழு அடையாளம், அது சார்ந்து தோன்றும் இருமை ஆகியவையே பிரச்சனைகள். மதமும் சாதியும் இதற்கு ஒரு வடிவத்தை, சடங்கு, நம்பிக்கைகள், தொன்மங்கள் ஆகியவற்றை அளிக்கின்றன.
 ஒரு கொலைகாரன் பச்சை சட்டை போட்டிருக்கிறான் – நீங்கள் கொலைகாரனை பழிப்பீர்களா அல்லது பச்சை சட்டையை கைது செய்வீர்களா? மதம் என்பது அந்த பச்சை சட்டை தான்.
நான் இவ்விசயத்தில் மார்வின் ஹாரிஸ்ஸின் தரப்பை எடுக்கிறேன். அவர் ஓரிடத்தில் தென்னமெரிக்க பழங்குடி குழுக்களிடையே உள்ள படையெடுப்பு வழக்கத்தை ஆய்வு செய்வுகிறார். ஒவ்வொரு ஆண்டும் இப்பழங்குடிகளிடையே மக்கள் தொகை அதிகரிக்கையில் குழுக்கள் பரஸ்பரம் படையெடுத்து சென்று எதிரி பழங்குடிக்களை கொன்றழிப்பார்கள். உடனே மக்கள் தொகை குறையும். குறைந்ததும் பழங்குடிகள் இடையே இணக்கம் தோன்றும். வன்முறை மறையும். இம்மக்களுக்கு நிறுவனவாத மதம் இல்லை – எளிய நம்பிக்கைகளை கொண்ட அடிப்படையான ஒரு பண்பாடு மட்டுமே உள்ளது. ஆக, இந்த கொலை வெறி எங்கிருந்து வருகிறது?
 இவர்களுக்கும் இந்துத்துவர்களும் உள்ள வித்தியாசம் என்ன? பண்பாட்டு ரீதியில் இந்துத்துவர்கள் இன்னும் சிக்கலான வாதங்களை, சடங்குகளை, தொன்மங்களை கொண்டிருக்கிறார்கள்; அதிக பணமும் ஆயுதங்களும் அதிகாரமும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் இந்து மதம் என ஒன்று இல்லாவிடிலும் வேறு ஏதாவது வகையில் ஒரு தேசிய இனக்குழுவாய் தம்மை கட்டமைத்து அவர்கள் உருவாகி வந்திருப்பார்கள். இந்துத்துவாவை கட்டமைத்த முன்னோடிகள் (சாவார்க்கர் உள்ளிட்ட) நாத்திகர்கள் என்பதை அறிவீர்கள் தானே?
மார்வின்  ஹாரிஸ் கிறித்துவம் எப்படி மற்றும் ஏன் கர்த்தரை ஒரு தேவதூதனாக, இறைவனாய் கட்டமைத்தது, ரோமப் பேரரசின் மதசார்புக்கும் இதற்குமான தொடர்பு என்ன, பதினாலாம் நூற்றாண்டில் துவங்கி கிறுத்துவம் சிலுவைப்போர்களும், சூனியர்க்காரிகள் மீதான வேட்டையையும் ஏன் பரவலாய் நடத்தியது, இதன் பின்னால் எப்படி சமூக அரசியல் காரணிகள் இருந்தன, இந்த வன்முறை எப்படி மத ஈடுபாடு அல்லது வெறுப்பினால் தூண்டப்பட்டு நிகழவில்லை; சமூக பொருளாதார காரணிகளே இந்நிகழ்வுகளை தூண்டின என “பசுக்கள், பன்றிகள், போர்கள் மற்றும் சூனியக்காரிகள்” நூலில் நிறுவுகிறார்.
 இந்துக்களுக்கு பசு புனிதமானதும், இஸ்லாமியருக்கு பன்றி ஹராம் ஆனதும் மத நம்பிக்கைகளால் அல்ல; லௌகீகமான சில தேவைகளுக்காய் இந்த நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டன என்கிறார். மதம் இல்லை என்றால் இதே போன்ற நம்பிக்கைகளை அறிவியலும் உருவாக்கும். உ.தா., கொழுப்பு மிக்க உணவுப்பொருட்கள் உடல்நலத்துக்கு கேடு எனும் நம்பிக்கையை அறிவியல் பரப்பியது. ஆனால் சர்க்கரை அதை விட கேடானது என்பதை அறிவியல் மறைத்தது. ஏனென்றால், பெரும் ஆய்வுகளுக்கு நிதி அளிக்கும் கார்ப்பரேட்டுகள் துரித உணவுகளின் விற்பனை பாதிக்கப்படுவதை ஒருக்காலும் விரும்ப மாட்டார்கள். எல்லா காலங்களிலும் நமக்கு அவசியமான சில சமூக பொருளாதார அரசியல் தேவைகளுக்கு ஏற்ப நம்பிக்கைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாம் இதற்கு மதத்தை குற்றம் சாட்டுவது அபத்தம்.
மதம் என்பது இங்கே ஒரு சாக்குபோக்கு மட்டுமே. குழுவாத வெறுப்பு இல்லாமல் சமூக கட்டமைப்பே சாத்தியமில்லை. இந்த வெறுப்பை வன்முறையாய் வளர்க்காமல் இருக்க பண்பற்ற சமூகங்கள் வழிமுறைகளை அறிந்திருக்கும். மதம் இந்த வன்முறையை தூண்டுவதாய் நான் நம்பவில்லை. மதம் அதற்கு ஒரு வடிகாலைத் தருகிறது. மதம் இல்லாவிடிலும் வேறு வழிகளில் வன்முறை பரவும்.
சில மத பிரதிகள் மற்றமை மீதுள்ள கடும் குரோதத்தை நான் அறிவேன். ஆனால் அது மதத்தின் பிரதான அம்சம் அல்ல. பெரியாரிடம் பிராமண வெறுப்பு உண்டு. ஆனால் பெரியார் அது மட்டுமே அல்ல. அவர் தன் காலத்தின் அத்தனை பெருங்கதையாடல்களையும் மறுத்து உடைத்தெறிந்தவர். நாம் இன்று பெரியாரில் நமக்குத் தேவையானதை எடுத்துக் கொள்கிறோம். மதத்திலும் அப்படி செய்ய இயலும். உன் மதத்தை ஏற்காதவரின் தலையை கொய்திடு என ஒரு மத நூலில் ஒரு வாசகம் இருக்கலாம் – அதை நாம் புறக்கணிக்க வேண்டும்.
 மாறாக, நம் வாழ்வை, நம் அகத்தை, நம் இருப்பை ஆழமாய் பரிசீலிக்கும் ஒரு பகுதி மதத்தில் உள்ளது; அதை நாம் பிரதானப்படுத்த வேண்டும். அதை நாம் முழுக்க கைவிட்டால் பின்னர் அதனால் மக்கள் வாழ்வில் வெறுமை அடையும் போது ஒரு பக்கம் மதவாத அரசியல்வாதிகளும் கார்ப்பரேட் சாமியார்களும் இம்மக்களை வேட்டையாடுவார்கள்.
 இச்சூழலுக்கு பிரதான காரணம் நமது மதசார்பற்ற நவீன கல்வி தான் எனச் சொல்வேன். மதம் என்றாலே பிற்போக்கானது; நகைப்புக்குரியது எனும் எண்ணத்தை அது மாணவர்களிடம் இன்று விதைத்துள்ளது. ஒரு பக்கம் இவர்கள் மத சடங்குகள், அடையாளங்களை வெளியே முன்னெடுக்கிறார்கள்; ஆனால் கல்வித்துறை சூழலில் மதபிரதிகளை கேலி செய்கிறார்கள். இந்த இரட்டை நிலையை பாதிரியார் ஆவதற்கான பயிற்சியில் உள்ள மாணவர்களிடத்து கூட நான் இன்று காண்கிறேன்.
இந்தியாவின் இறையியல் பண்பாட்டில் இருந்து ஷோப்பன்ஹெர், நீட்சே, ஹைடெக்கர் போன்றோர் தூண்டுதல் பெற்று முக்கியமான தத்துவங்களை உருவாக்கினார்கள். ஆனால் நாம் விநாயகர் ஊர்வலங்களைத் தாண்டி செல்லவில்லை. இங்கு ஒரு பெரும் தத்துவ பண்பாட்டு வறுமை உள்ளது. நமது தமிழ் இலக்கிய கல்வியை எடுத்துக் கொள்வோம். அயோத்திதாசர் பல அற்புதமான ஆய்வுகளை குறள் சார்ந்து செய்துள்ளார். அதை ஒரு பௌத்த பிரதியாக அவர் ஆழமாய் நிறுவுகிறார். நான் அழுக்காறாமை அதிகாரத்தை எடுத்துக் கொண்டு, அதன் பௌத்த நிலைப்பாட்டை அலசி ஒரு கட்டுரையை சமீபத்தில் பிரசுரித்தேன். ஆனால் நீங்கள் எந்த தமிழ் வகுப்பிலாவது இந்த மெய்யியல் விவாதத்தை திருக்குறள் சார்ந்து பார்க்க முடியுமா? எல்லா தமிழாசிரியர்களும் குறளை அதன் மொழியழகைக் கடந்து தரிசிப்பதில்லை. இந்த தயக்கத்துக்கும் நமது மாநிலத்தில் உருவான பகுத்தறிவு எழுச்சிக்கும் ஒரு தொடர்பு நிச்சயம் உள்ளது. நவீன விஞ்ஞானத்தை மிகையாக வழிபடும் நோக்கும் இதற்கு பங்காற்றி உள்ளது.

அடுத்து நீங்கள் சொல்கிறீர்கள்:
“கலையே நம்பிக்கையின்மையின் காரணமாக எழும் ஒன்றாக தான் எனக்கு தோன்றுகிறது
 ஆனால் கலை அவநம்பிக்கையில் இருந்து தோன்றுவதில்லை. அது முரண்பாட்டில், மறுப்பில், விசாரணையில் இருந்து தோன்றுகிறது. நீங்கள் உங்களுக்கு உவப்பில்லாத, ஏற்பில்லாத ஒன்றில் ஈடுபாடு காட்டி அதை எதிர்க்கும் போது கலை உருவாகிறது; ஆனால் உதாசீனத்தில், புறக்கணிப்பில் கலை இயங்க முடியாது. இது மூடநம்பிக்கை; இது கிறுக்குத்தனம்; இது படிப்பறிவற்றவனின் செயல் என ஒன்றை மறுத்து கடப்பது ஒரு சிந்தனையாளனின், படைப்பாளியின் செயல் அல்ல. தனக்கு உடன்பாடில்லாதத்தில் ஈடுபாடு காட்டி அதை அறிந்து அதனுடன் பொருதி அதை மறுத்து புதிதாய் ஒன்றாய் அவன் உருவாக்க வேண்டும். நமது நவீன கல்வி மதத்தின் மீது கொண்டுள்ளது ஒரு பகுத்தறிவு தீண்டாமை. அது ஆபத்தானது!Comments

Anonymous said…
சார் முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் விருப்பதினாலேயே இன்றைய நவீன கல்வி கிடைத்தது. அவர் பிரிவினையின் கோரத்தை மதங்களினால் உண்டான பிளவை கருத்தில் கொண்டே இன்றைய நவீன கல்வியை அளித்தார். அவர் அளித்த கல்வியும் நன்மையே அளித்தது வெளியில் பகுத்தறிவு பேசி வீட்டில் தன் சுய மதங்கள் அருள் பாலிக்கின்றன. எனில் நீங்கள் சொல்லும் மத கல்வியை அளித்தால் நாளை அதை விமர்சனம் செய்ய முடியாது. இன்றைய வலது இடது திராவிட தமிழ் தேசிய ஜெ. சாரு வாசகர் போல(பார்க்க ஜெ அவர்களின் தளம் அருண் என்பாரின் கடிதம்) எனில் இன்றைய நிலையில் நவீன கல்வியே நமக்கு போதுமானது என்று கருதுகிறேன் சார். பிழை இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன் சார்