கல்வியில் மதத்தின் இடம் என்ன? (1)


முகநூலில் ஷோபா சக்தி கல்வி நிலையங்களில் மதசார்பு இருக்கக் கூடாது என ஒரு பதிவு இட்டிருந்தார். அவரது பதிவின் பின்னணியுடன் தொடர்பின்றி எனக்கு வேறொரு கருத்து தோன்றியது. இந்திய சூழலில் மதத்தின் மெய்யியலுடன் சற்றும் தொடர்பற்ற ஒரு வறட்டுத்தனமான பகுத்தறிவு கல்வி இங்கே நம் பள்ளி கல்லூரிகளில் அளிக்கப்படுகிறது. அது இங்கே ஒருவித பண்பாட்டு வறுமையை ஏற்படுத்தி உள்ளது. இதைப் பற்றி நான் என் முகநூல் பக்கத்தில் எழுதினேன்.
// மத சார்பின்மை மாணவர்களை மழுங்கடித்து விடுகிறது என்பது என் எண்ணம். அறிவுடன் உணர்ச்சிகரமான கவித்துவமான பிடிப்பு ஏற்பட ஒரு மீபொருண்மை ஆர்வம் வேண்டும். அதை மதம் தரலாம். மத ஈடுபாடின்மை ஒரு வறட்டுத்தனமான தட்டையான தர்க்க கல்விக்கு மட்டுமே வழிவகுக்கும்.//

இதைத் தொடர்ந்து என் முகநூல் பக்கத்தில் எனக்கும் தேவா சத்யாவுக்கும் மற்றும் பூவண்ணன் கணபதிக்கும் நடந்த சிறு விவாதம் இது. இரு பகுதிகளாய் அதை உங்களுடன் பகிர்கிறேன்.

தேவா சத்யன்: மதச் சார்பும் மாணவர்களை சிந்திக்க விடுவதில்லை எனவும் யோசிக்கலாம் இல்லையா?
நான்: அது மிகுதியான உணவு வியாதியை வரவழைப்பது போல. அதற்காக நாம் பட்டினி கிடப்பதில்லையே
தேவா சத்யன்: லேசானதை சாப்பிடச் சொல்கிறீர்களா
நான்:  Deva Sathyan ஒரு சமநிலை, மையமான போக்கு நல்லது என்கிறேன்.
தேவா சத்யன்: அனைத்தையும் கடவுள் தந்த பரிசு என்றும், கடவுள் தந்த தண்டனை என்றும் நினைத்துக் கொண்டு வாழ்வதில் என்ன பெரிய அர்த்தம் இருக்கிறது? அனைத்தும் இம்மண்ணில் இயற்கையாக நிகழ்வதுதானே?
நான்:  Deva Sathyan வாழ்வின் இருப்பு பற்றின கேள்விகளை பரிசீலிக்க கடவுள் ஒரு கதாபாத்திரமாக ஏனும், குறைந்தபட்சம் ஒரு சிந்தனைத் தரப்பாக வேண்டும். எந்த மதமும் இவ்வாழ்வை கடவுள் நேரடியாய் கட்டுப்படுத்துவதாய், தர்க்க நியாயத்துடன் வழிநடத்துவதாய் கூறவில்லை. பழைய ஏற்பாட்டில் ஜோப்பின் கதையை கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுள் அவனை ஏன் அப்படி நோகடிக்கிறார் என்பதற்கு விடையில்லை. உலகின் பல கொடூரமான துன்பங்களுக்கும் விடையில்லை. அறிவியலில் கூட. ஆக, அவற்றை பரிசீலிக்க இறையியலும் தத்துவமும் அவசியம்.
 கடவுள் நம்பிக்கை தேவை என நான் கூறவில்லை. மதம் இந்த மீபொருண்மை சிந்தனைக்கான ஒரு வலுவான தளத்தை நமக்குத் தருகிறது. உங்களுக்கு கீதாவையும், யோகாவையும், தியான முறைமைகளையும் இயல்பாகவே கற்றுத் தருகிறது. நம் பள்ளி, கல்லூரிகள் இந்த தரப்பை முழுக்க நிராகரிக்கின்றன. ஒரு மாணவனின் அப்பா காலமாகும் போது அவன் தத்தளிக்கிறான். அவனது தடுமாற்றத்திற்கு பள்ளி / கல்லூரி கல்வியில் எந்த தீர்வும் இல்லை. நாளை அவன் வளர்ந்து திருமணம் செய்து கொண்ட பின் அவன் மனைவி அவனை கைவிட்டு பிரிந்து செல்லும் போது, அல்லது அவனுக்கு மூளை வளர்ச்சியற்ற குழந்தை பிறக்கும் போது அவன் மனம் கலங்கி தவிக்கிறான். அப்போது அவனை தவிக்க செய்வது ஏன் எனக்கு இப்படி ஆகிறது? ஏன் இந்த துன்பம்? எனும் கேள்விகள் தாம்; அக்கேள்விகளுக்கு அவனால் விடை காண முடியாதது தான் அவனை பித்தாக்குகிறது. குடித்து சீரழிவதைத் தவிர அவனுக்கு அப்போது வேறு வழிகள் இராது; ஏனெனில் அப்பிரச்சனைகளை யோசிப்பதற்கான, எதிர்கொள்வதற்கான எளிய உபாயங்களை கூட நம் கல்வி அமைப்பு அவனுக்கு சொல்லித் தருவதில்லை. இதைப் பற்றி தான் நான் இந்த சந்தர்பத்தில் யோசிக்கிறேன்.
தேவா சத்யன்: மதத்தினால் மாத்திரம்தான் ஒரு மனநிலை சமநிலைத் தன்மையை அடையும் என்றால் அதிதீவிர மத பக்தியை கற்றுக் கொடுக்கும் ஒரு வழிபாட்டுத்தலத்தில் நின்றுகொண்டு நாம் சமநிலையை எவ்வாறு கற்க முடியும்? நாம் சூழ்நிலைக்கு தக்கபடி அந்தந்த பகுதியிலுள்ள மதவழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வோம். சில இடங்களில் 24 மணிநேரமும் மதத்தையே கவனித்துக் கிடக்கிறார்கள். நல்லதோ கெட்டதோ அனைத்திற்கும் கடவுள்தான் காரணம். கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை. இப்போது மதம் மனிதனை விழுங்க அல்லவா செய்கிறது. சமநிலையுடன் ரசிப்பதற்கு மாத்திரம் இங்கு யாரும் மதத்தை பயன்படுத்தவில்லை.
நான்: Deva Sathyan எதையும் நாம் உள்வாங்கி பயன்படுத்துவதில் தான் இருக்கிறது. நான் கோயில் பூஜை புன்ஸ்காரங்களை குறிப்பிடவில்லை. மதநூல்களை நீங்கள் இன்றைய லௌகீகமான மொழியிலே கூட விவாதிக்கலாம்.
தேவா சத்யன்: மதத்திற்காக மாத்திரமே உதவும் சிலரை கண்டிருக்கிறேன் சார். ஒருவன் மரணம் சார்ந்த இழப்பில் இருக்கும்போதுகூட மதம் சார்ந்த சுயநலவாதிகளின் ஆறுதலைவிட பிற மதத்தைச் சார்ந்த நண்பனே போதுமானது
நான்: மிதமிஞ்சிய மத ஈடுபாடு ஒரு சமூகமாக்கல் செயல்பாடு தான். அது சாதிய ஈடுபாடு போன்றது.
அதேபோல பிராந்தியம் சார்ந்த பாசம் உள்ளது. சமூகத் தொண்டிலும் குருட்டுத்தனம் உள்ளது. நான் ஒரு நண்பரிடம் எனக்கு சக்கரநாற்காலி வாங்க உதவி கேட்டேன். அவர் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். அவர் சொன்னார் “நாங்கள் இளைஞர்கள் கல்விக்கு மட்டுமே உதவி செய்வோம்.” இதுவும் ஒரு குறுகின நிலைப்பாடு என எனக்குத் தோன்றியது. மனிதன் தன்னை குறுக்கிக் கொள்ளாத இடமே இல்லை.
இது உண்மையில் மதத்தின் பிரச்சனை அல்ல. மதம் நம்மை குறுங்குழுவாதம் நோக்கி செலுத்துவதில்லை; மாறாக நாம் மதத்தை அவ்வாறு பயன்படுத்துகிறோம். கல்வித்துறை மதத்தை ஒரு அறிவியக்கமாக பார்ப்பது, நமது முக்கியமான மதப்பிரதிகளை மாணவர்களுக்கு ஆழமாய் கற்றுத் தருவதுப்பிரச்சனைக்கு தீர்வளிக்கும்.Comments