ரஜினி: நீ நடந்தால் நடை அழகு! -


Image result for அண்ணாமலை + ஒரு பெண் புறா

கடந்த ஐம்பதாண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் நடிப்பை பொறுத்த மட்டில் இரு தெளிவான பாணிகள் வெற்றி கண்டுள்ளன. ஒன்று ஆரவாரமான நாடகீயமான நடிப்பு. நமது கூத்து மற்றும் மேடை நாடக மரபில் இருந்து முகிழ்த்த சிவாஜி துவங்கி, அவர் பாணியில் கமல்ஹாசன், பின் அவரைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ், விக்ரம், சூர்யா ஆகியோர் இத்தடத்தில் வருகிறார்கள். மலையாளத்தில் மம்முட்டி இதே மரபை சேர்ந்தவர். (இப்பாணி நடிகர்களுக்கு உடம்பை வருத்தி மாறுவேடங்களில் தோன்றவும் புதுப்புது விதங்களில் பேசவும் விருப்பம் இருக்கும்.)

 எம்.ஆர். ராதா சிவாஜியின் காலத்தவர், மேடை நடிகர் என்றாலும் அவர் சினிமா மொழியை நன்கு உணர்ந்தவர். குளோசப், மிட் ஷாட் மூலம் படக்கருவியால் மிக அருகில் சென்று நம் சிறு முகபாவங்களை, இமை அசைவை, உதட்டு நடுக்கத்தை, உடல் மொழியின் சிறு நுணுக்கங்களை பெரிய திரையில் இன்னும் பிரம்மாண்டமாய் பார்வையாளனுக்கு காட்ட முடியும். இதனோடு பின்னணி இசை, பிற நடிகர்களின் பங்களிப்பு ஆகியவையும் சேர ஒரு திரை நடிகன் கால் ஸ்பூன் நடித்தாலே அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எம்.ஆர் ராதா அறிந்திருந்தார். “ரத்தக் கண்ணீர்படத்தின் பல காட்சிகளை அவரது மிகையற்ற, சன்னமான, அடங்கின தொனியிலான நடிப்புக்கு உதாரணமாக காண முடியும். இதை ஒரு ஹாலிவுட் பாணி நடிப்பு எனலாம்.
இந்த பாணியில் இன்று வருபவர் விஜய் சேதுபதி மற்றும் தனுஷ். மலையாளத்தில் மோகன்லால் மற்றும் பகத் பாஸில்.
முதல் பாணியை பின்பற்றியவர்கள் பெரும் நட்சத்திரங்களாக ஆனார்கள். இரண்டாவது பாணியை சேர்ந்தவர்கள் பாராட்டப்படும் நடிகர்கள் மட்டுமே ஆனார்கள். தமிழில் விஜய், அஜித் இடத்தை விஜய் சேதுபதி மற்றும் தனுஷால் சுலபத்தில் பிடிக்க முடியாது. (மோகன்லால் கூட தன் வணிகப் படங்களுக்கு வேறு மாதிரியாக நடிக்க வேண்டி வந்தது.)
ஆனால் இந்த ரெண்டு பாணிகளையும் ஒன்றிணைத்து ஆகப்பெரிய நட்சத்திரமாய் உச்சத்தை அடைய முடியும் என நிரூபித்தவர் ஒருவர் மட்டுமே: ரஜினி. ஒரே படத்தில் அவர் நாடகீயமாகவும் நாடகத்தன்மை இன்றி ஹாலிவுட் பாணியிலும் நடிப்பார். இரண்டும் தனித்தனியாய் தெரியாத வண்ணம் நுணுக்கமாய் அதை செய்வார். ஆட்டம், பாட்டம், அடிதடி உள்ளிட்ட ஹீரோயிச காட்சிகளில் நீங்கள் காணும் ரஜினிக்கு முழுக்க மாறுபட்ட ஒரு ரஜினியை உணர்ச்சிகரமான காட்சிகளில் காண முடியும். ஒரு நிமிடம் விஜய் சேதுபதியாகவும் மறுநிமிடம் ரஜினியாகவும் அவரால் ஒரே படத்தில் இயங்க முடியும்.
 ரஜினியின் நடிப்பின் அனைத்து பரிமாணங்களையும் அலச இது இடம் அல்ல என்பதால் அவர் நடையின் சிறப்பு, அது எப்படி தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் உளவியல் போக்குகளை, மனநிலை மாற்றங்களை உணர்த்த ஒரு கருவியாக ரஜினிக்கு பயன்பட்டது என அடுத்து சொல்கிறேன். ரஜினியின் நடை - அதன் ஸ்டைல்ரஜினியின் ஹீரோயிசத்தின் அடிப்படை. ஆனால் அதே நடையின் ஸ்டைல் கொண்டு தான் அவர் தானேற்ற பாத்திரங்களின் மனநிலை மாற்றங்களையும் நுணுக்கமாய் பிரதிபலித்திருக்கிறார். இது தான் அவரது தனிச்சிறப்பு. அஜித், விஜய் போன்ற நட்சத்திரங்களுக்கு இன்னும் வாய்க்காத தனித்திறன்.
அடுத்து சில உதாரணங்களைப் பார்ப்போம்.
விதிவசத்தில் ஜென்ம விரோதிகளாய் மாற நேர்கிற அண்ணாமலை, அசோக் எனும் இரு நண்பர்களின் கதை அண்ணாமலை”. ஆரம்பத்தில் பால்க்கார அண்ணாமலையாக இருக்கும் ரஜினியின் எளிமை, ஆக்ரோசம், வெகுளித்தனம், துடுக்குத்தனம் பிற்பாடு பெரும்பணக்கார அண்ணாமலையாக மாறும் ரஜினியிடம் இருக்காது. அவன் கோபத்தையும் துயரத்தையும் தனக்குள் அடக்கி மௌனமாய் வெளிப்படுத்துகிறவனாய், அழுத்தமான் ஆளாய் இருப்பான். இதை மிக நுட்பமாய் அழகாய் ரஜினி தன் உடல்மொழி மற்றும் நடை மூலம் காட்டி இருப்பார். ஆரம்பத்தில் வருகிற அண்ணாமலை நடக்கும் போது ஒரு கார்டூன் பாத்திரம் போல் கைகால்களை உதறிக் கொண்டு, துள்ளும் பந்து போல் கிட்டத்தட்ட இருப்பான். அவன் பேச்சும் படபடவென இருக்கும். ஆனால் பணக்கார அண்ணாமலை நிதானமாய் நடப்பான். அவன் கைகள் உடம்போடு ஒட்டி ஒரு எந்திரத்தின் பாகம் போல் கச்சிதமாய் இருக்கும். இது அவன் கண்ணியத்தையோ கம்பீரத்தையோ காட்டவில்லை. மாறாக அவனுக்குள் பொருமும் இறுக்கத்தை காட்டுகிறது.
 தன் நண்பனை தோற்கடித்து அவனது சாம்ராஜ்யத்தை அழிக்க வேண்டும் எனும் தவிப்பில் வெறித்தனமாய் உழைத்து அசுர வளர்ச்சி பெறும் அண்ணாமலை மகிழ்ச்சியாய் இல்லை. ஏனெனில் அவன் மனதை வெறுப்பு சூழ்ந்திருக்கிறது. தன் மகள் அசோக்கின் மகனை நேசிக்கிறாள் என அறிய வரும் போது அவன் நொறுங்கிப் போகிறான். அந்த விரக்தியில் அவன் பாடும் பாடற்காட்சி தான்ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட…”.
படத்தளம் அண்ணாமலையின் பங்களா. மகள் சோபாவில் கண்கலங்கி அமர்ந்திருக்க, மனைவியும் அம்மாவின் தனித்தனியே நிற்கிறார்கள். ஒவ்வொருவரிடம் சென்று பாடல் வரிகளை பாடும் போதும் ரஜினியின் உடல்மொழி மிக நுணுக்கமாய் மாறும். மகளிடம் செல்லும் போது நெகிழ்ந்து நாணலாய் வளைவார். அடுத்த நொடியில் மனைவியருகே செல்லும் போது ஸ்டைலாய் உடல் விரைப்பு கொண்டு தலைதூக்கிஎன் தன் நிம்மதி போனதேஎன்பார். அம்மாவிடம் சென்றதும் சட்டென தலைகுனிந்து ஒரு குழந்தையாக உடலை குறுக்கிமனம் வாடுதே”. முதல் பார்வையில் இது உங்களுக்கு தென்படாது. ஏனெனில் மூஞ்சியில் அடிக்கும் படி (சிவாஜி பாணியில்) ரஜினி இதை நடித்திருக்க மாட்டார். ஒரு மனிதன் தன் குடும்பத்துடன் நான்கு சுவர்களுக்குள் இருக்கையில் ஒவ்வொருவர் முன்னிலையிலும் ஒவ்வொரு பாத்திரத்தை வகிக்கிறான் என்பதை ரஜினி தத்ரூபமாய் ஒரு வணிக சினிமாவில் செண்டிமெண்டான பாடலில் காட்டி இருப்பார்.
அதிசயப் பிறவிஎம்.ஜி.ஆரின்எங்க வீட்டுப் பிள்ளைடெம்பிளேட்டில் உருவான படம். ஒரே தோற்றம் கொண்ட வெகுளியான பாலுவாகவும் முரட்டுத்தனமான காளையாகவும் ரஜினி வருவார், பாலுவை அவனது சித்தப்பாவின் குடும்பத்தினர் கொன்று விட, ஏற்கனவே தவறுதலாய் எமனால் உயிர் பறிக்கப்பட்ட காளை அவ்வுடலில் புகுந்து சித்தப்பாவையும் குடும்பத்தினரை பழிவாங்குகிறான். இப்படி பாலுவின் உடலில் புகுந்த காளை சுபாவத்தில் யாராக இருப்பான் என சித்திரகுப்தன் கேட்க எமன் சொல்கிறார்: “அவன் அடிப்படையான சுபாவம் பாலுவுடையது. ஆனால் வீரம் காளையுடையது.” இந்த இரட்டை ஆளுமையை ரஜினி அனாயசமாய் நடித்து வெளிப்படுத்துவார். பாலுவைப் போன்று மெல்ல ஆடியபடியே நடந்து வரும் ரஜினி நொடியில்காளையாகஆக்ரோசமானவனாய் மாறுவார். அதுவும் சின்ன ஜெயந்தை மிரட்டும் ஒரு இடத்தில் இடுப்பை ஆட்டியபடியேஉடனே தோட்டத்துக்கு போய் தேங்காயை எல்லாம் உரிச்சு இங்க கொண்டு வாரேஎன கட்டளையிடும் போது அதில் விளையாட்டும் இருக்கும், முரட்டுத்தனமும் தென்படும். அடுத்து தன் காதலி கௌரியை பார்க்க தோட்டத்துக்கு செல்கிறார். அங்கே அவரது கம்பீர நடையும் கூலிங்கிளாஸ் அணிந்த ஸ்டைலும் மிடுக்கான கை அசைவுகளும் காளையுடையதாக இருக்கும். ஆனால் கௌரியைக் கண்டதும் சட்டென ரெண்டு கைகளையும் அடைப்புக்குறி போல் மெல்ல வளைத்து பாலுவாய் கிராமிய வெகுளித்தன்மையை காட்டுவார் ரஜினி. இந்த மாற்றமெல்லாம் கால்நொடி அவகாசத்தில், சுலபத்தில் புலப்படாதபடி வெகு நுண்மையாய் நிகழ்த்தியிருப்பார் ரஜினி.
சிகரெட் தூக்கிப் போட்டு வாயில் பிடிக்கும் ஸ்டைல், கோபத்தில் முறைப்பது உட்பட்ட பல மேனரிசம்களில், பின்னணி இசை, அறிமுகப்பாடல், சண்டைக்காட்சி, பஞ்ச் வசனம் என ஒரு புறம் ரஜினியிடம் ஆக்ரோசமான நாடகீயம் தெரியும். இது தான் ரஜினியை ஒரு சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவின் உச்சாணிக் கொம்புக்கு கொண்டு சென்றது. ஆனால் திரைச்சட்டகத்துக்கு தோதான உடல்மொழியை கச்சிதமாய் பயன்படுத்தும் ரஜினியும் இன்னொரு பக்கம் இந்த பிம்பத்துக்கு பின்னால் இருந்து கொண்டு தான் இருக்கிறார்.
 இப்படி இரண்டு எதிரெதிர் நடிப்பு பாணிகளை ஒன்று சேர்த்த சாமர்த்தியம் ரஜினியின் வெற்றியின் மூல காரணங்களில் ஒன்று எனலாம்.

நன்றி: குமுதம்

Comments