லக்கான் பற்றி ஒரு நூல்
கிரைஸ்ட் பல்கலையில் நான் கோட்பாடுகள் கற்பிக்கும் இரண்டாம் வருட இளங்கலை மாணவர்கள் (PS Eng [Psychology, Sociology, English]) கொண்டு வரும் புத்தகம் இது. முக்கியமான பிரஞ்சு உளவியலாளர் லக்கானின் கோட்பாடுகளின் அடிப்படையில் கடந்த ஐநூறு வருடங்களில் ஐரோப்பாவில் தோன்றின பல முக்கியமான படைப்பாளிகளை (ஷேக்ஸ்பியர், ஆல்பர்ட் காமு, பாப்லோ நெருடா, ஈ.ஈ கம்மிங்ஸ்) அலசி இருக்கிறார்கள். இந்த சிறிய தொகுப்பு நுட்பமான ஆழமான விவாதங்கள் அடங்கியது.

சமூக உறவாடல்கள் வழி எப்படி நமது மனம், நமது சுயம், உருவாகிறது என்பதை லக்கான் வியப்பூட்ட்டும் வகையில் பேசியிருக்கிறார். உதாரணமாய், நமது இச்சை எப்படி செயல்படுகிறது என பேசும் அவர் நாம் அசலான ஒன்றை விட நகல்களைத் தான் அதிகம் விழைகிறோம். ஒரு நகல் மீதான இச்சை நம்மை இன்னொரு நகலை நோக்கி இட்டு செல்கிறது. அசல் எப்போதுமே நம் கையருகே வராது என்பதால் நகல்களின் உலகில் மாட்டிக் கொள்கிறோம். இதனால் நகல்கள் எப்படி நம்மை தொடர்ந்து அதிருப்தி நிலையில் வைக்கின்றன என விளக்குகிறார் லக்கான். இந்த விசயம் எப்படி காதலில் தத்தளிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ஷேக்ஸ்பியர் மற்றும் நெருடாவை முன்வைத்து சில கட்டுரைகள் இத்தொகுப்பில் பேசுகின்றன.


இதே சிக்கல் எப்படி சேமுவல் பெக்கெட், ஆல்பர்ட் காமு ஆகியோரின் நாடகம் (Waiting for Godot) மற்றும் நாவலில் (The Stranger) அபத்தச் சூழல்களை தோற்றுவிக்கிறது என்பதை வேறு சில கட்டுரைகள் பேசுகின்றன. குறிப்பாக காமு பற்றின கட்டுரைகள் தமிழ் வாசகர்கள் நிச்சயம் படிக்க வேண்டியவை.


அர்த்தங்களின் தளைகளை அறுத்து நமது அதர்க்க மனம் நோக்கி கவிதையை நகர்த்த ஈ.ஈ கமிங்ஸ் எப்படி கவிதை வடிவை ஒரு உத்தியாய் பயன்படுத்துகிறார் என விவாதிக்கும் கட்டுரையும் முக்கியமானது.


இத்தொகுப்பில் நான் இரு கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இன்னொரு கட்டுரையை இணைந்து எழுதியிருக்கிறேன்.


இன்னும் சில நாட்களில் நூல் வெளியாகி விடும். விலை 35 ரூபாய்க்குள் தான் இருக்கும் (விரைவில் உறுதி செய்கிறேன்). வாங்க விரும்பும் நண்பர்கள் என்னை இன்பாக்ஸிலோ abilashchandran70@gmail.com மெயிலிலோ தொடர்பு கொள்ளலாம்.


Comments