உன்னைக் கொல்லும் முன் சற்றே தயாரிக்கட்டுமா? (2)


 Image result for kaakha kaakha
 Foreshadowing தொழில்நுட்பம் இலக்கிய புனைவிலும்  சினிமாவிலும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. ஒரு வாசகன் / பார்வையாளனுக்கு ஒரு முக்கியமான வெளிப்பாட்டை செய்யும் முன் அவனை அதற்கு அவனது ஆழ்மனதில் நுணுக்கமாய் தயாரிப்பதே foreshadowing (கவிதையில் இதை பெரும்பாலும் தொனி மூலம் செய்கிறோம்).
 முதலில் ஒரு சினிமா உதாரணம். ”காக்க காக்க” - தன் காதலியை மீட்க வில்லனைக் கொல்லும் நாயகன், அம்மோதலின் வழி தன் பலவீனங்களை உணரும் (ராமாயணக்) கதை இது. ராமாயணத்தில் சீதை கடத்தப்பட்ட பின்பு தான் ராமனின் பலவீனங்கள் ஒவ்வொன்றாய் வெளிப்பட்டு அவனது இமேஜ் களங்கப்படுகிறது. வாலியைக் கொன்று அவன் நல்லறத்தை மீறுகிறான். சீதையின் அற ஒழுக்கத்தை கேள்வி கேட்டு அவளை திரும்ப அனுப்பி ஒரு ஆண்மகனாய் மேலும் பலவீனப்படுகிறான். இப்படி களங்கப்பட்ட ராமனாகத் தான் அன்புச்செல்வன் இப்படத்தில் (துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட, முதலிரவு அறையில் இருந்து வெளியே எறியப்பட்டு) முதல் காட்சியில் அறிமுகமாகிறான்.

 அதன் பிறகுஇந்த வீழ்ச்சியில் இருந்துஅவனுக்கு மீட்சியே இல்லை. மாயாவை (சீதையை) மீட்ட பின்பும் கூட! தேவ்தத் பட்நாயக்கின்சீதாராமாயணத்தை, அதன் பல்வேறு பிராந்திய, நாட்டார் வடிவங்களை ஒட்டி, மீள்கூறும் புத்தகம். அதன் முதல் அத்தியாயத்தில் தன் ஆட்சியில் ஆர்வம் குன்றி, வாழ்க்கையில் பற்றறுந்து, மனம் வெறுத்த நிலையில் ராமன் தன் இளவலுடன் நதியில் இறங்கி வாளால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்கிறான்.
 லட்சியவாதியாகிய ராமனின் வீழ்ச்சி சீதையை ராவணனிடம் முதலில் இழப்பதில் துவங்குகிறது. ஒரு பெண் அவன் வாழ்க்கையில் குறுக்கே வருவதில் துவங்குகிறது. அதன் பிறகு அவன் வாழ்வில் நிம்மதியும் திருப்தியும் அறவே இருப்பதில்லை. சீதை குறுக்கிடாவிட்டால் தன் மனைவியின் கற்பைக் காப்பாற்ற, காப்பாற்றிய பின் உண்மையில் அவள் கற்பு காப்பாற்றப்பட்டதா எனும் சந்தேகத்தை ராமன் எதிர்கொள்ள நேர்ந்திராது. அவலமான முடிவும் ஏற்பட்டிராது. “காக்க காக்கபடத்தில் அன்புச்செல்வனும் தன்னை யாரும் எதுவும் முறியடிக்க முடியாத உறுதியான கோட்டையாக வைத்துக் கொள்கிறான். மாயா எனும் பெண் அவனை ஊடுருவி நுழையும் வரை. அதன் பின் அவன் பலவீனமாகிறான். தொடர்ந்து அஞ்சி நடுங்குகிறான். துரத்தப்படுகிறான். ”சீதாநூலின் துவக்கமும்காக்க காக்கவின்துவக்கமும் கிட்டத்தட்ட ஒன்று தான். இருவருக்கும் பெண் ஒருமாயா” (மாயை) தான். இந்த கோணத்தில் கௌதம் மேனனின் இந்த படத்தை பார்த்தோம் என்றால் அன்புச்செல்வன் மாயாவை சந்தித்துப் பழகும் கணிசமான காட்சிகளில் ஆரம்ப கிளைமேக்ஸ் foreshadow ஆவதைப் பார்க்கலாம்.
 மாயா அன்புச்செல்வனிடம் உதவி கோரும் முதல் காட்சியிலேயே அவன் கிட்டத்தட்ட அமிலத்தாக்குதலுக்கு உள்ளாகிறான். ஒரு காட்சியில் மாயாவுக்கு விபத்தாகிறது. இன்னொன்றில் மாயா அன்புச்செல்வனில் வீட்டில் இருக்கையில் கேங்க்ஸ்டர்கள் தாக்குகிறார்கள். அவளுடன் அவன் ஊர் சுற்றும் போது கேங்க்ஸ்டர்கள் பின் தொடர்கிறார்கள். மாயா அவன் வாழ்க்கைக்குள் வர வர பதற்றமும் ஆபத்தும் அதிகமாகுகின்றன. கிளைமேக்ஸுக்குக்கான foreshadowing ஆக ஒவ்வொன்றும் அமைகின்றது. நுணுக்கமாய், நளினமாய் அன்புச்செல்வனின் அவலமான வீழ்ச்சிக்கு, இறுதி வெறுமைக்கு இவை நம்மை தயாரிக்கிறது.
தேவர் மகனில்இறுதியில் தன் சமூகத்துக்காக கொலை செய்து தியாகியாகும் காட்சியை foreshadow செய்யும் வண்ணம் முந்தின காட்சிகள் இருக்கின்றன: அவன் தன் காதலியை துறக்கிறான், எதிர்காலக் கனவுகளைத் கைவிடுகிறான், தோற்றத்தை மாற்றுகிறான், பிடிக்காத பெண்ணை காதலிக்க துவங்குகிறான். ஒவ்வொன்றாய் இழந்து அல்லது தியாகம் செய்து அவன் ஆகிருதியில் குன்றியபடியே வருகிறான். (அதேவேளை அவனது தியாகத்தின் மகத்துவமும் அதிகரித்து வருகிறது.) அவனது ஒவ்வொரு இழப்பும் இன்னொன்றை நியாயப்படுத்துகிறது. காதலியை அவன் துறக்கும் காட்சியின் நியாயப்பாடு இன்றி இறுதியில் அவன் நாசரின் தலையை துண்டிக்கும் காட்சியை வைக்க முடியாது. “இந்த சக்தியா அப்படி?” என நம்மை கேட்க விடாத வண்ணம் நாம் ஆரம்பத்தில் இருந்தே தயாரிக்கப்படுகிறோம்.
Foreshadowing ஒரு நுணுக்கமான உத்தி என்றால் telegraphing சற்றே மலினமான, ஆனால் அதே நோக்கம் கொண்ட, உத்தி. ”பாட்ஷாவில்ரஜினியை முதலில் காணும் கமிஷனர் தன்னிச்சையாய் எழுந்து நிற்பது, கல்லூரி நிறுவனர் அவர் பெயரைக் கேட்டதும் நடுங்கி அவர் தங்கைக்கு படிக்க இடம் கொடுக்கும் காட்சிகள் இண்டெர்வெலுக்கு முந்தைய காட்சியில் ஆனந்தராஜை அவர் பாட்ஷாவாக மாறி அடித்து துவைக்கும் காட்சியை telegraph செய்கின்றன. மெல்லிய திகைப்பு, திகில் ஆகிய உணர்வுகளைத் தூண்டுவது, மேலோட்டமாய் நம்மை தயார்படுத்துவதன் இக்காட்சிகள் நின்று கொள்கின்றன.
  இலக்கியத்தில் foreshadowing உத்தியை ஒரு கதைக்களனாகவே மாற்றியவர் மார்க்வெஸ். அவரதுமுன்கூறப்பட்ட மரணத்தின் வரலாறுநாவலில் மையப் பாத்திரம் கொல்லப்பட போகிறான் என ஊரில் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. யார் அதைத் தடுக்க நினைத்தாலும், கொல்லப்பட போகிறவன் எங்கு தப்பிக்க முயன்றாலும், கொலைகாரர்களே மனம் மாறினாலும் கொலை நடந்தே விடுகிறது. இதில்முன்குறிப்பாக்கம்” (foreshadowing) வாழ்க்கையில் ஒன்று கலந்து விடுகிறது.
மேலே பேசிய நிஜக்கொலை சம்பவத்தை எடுத்துக் கொண்டால் பிரியங்காவுக்கு தன்னை தன் கணவன் கொல்லப் போகிறார் என யாரோ தெரிவிக்கிறார்கள் என்று வைப்போம். ஆனால் அவளுக்கு அவரை ஐயப்பட மனம் வரவில்லை. அந்த நாடகத்தனமான காதலை நம்பவே மனம் ஏங்குகிறது. ஆக, தன் கணவனே சந்தேகத்துக்குரிய விதமாய் பேசினாலும் அவள் அதை உதாசீனித்து, கண்ணைக் கட்டிக் கொண்டு தயாராகி விடுவாள். தான் foreshadowing செய்யப்படுகிறோம் என அறிந்த பின்னரும் ஒரு வாசகன்இல்லை அது உண்மையேஎன மயங்கும், தன்னைத் தானே foreshadow செய்யும் நிலை இது.
Foreshadow செய்வதற்கு பதிலாய் சதீஷ் telegraphing செய்திருந்தால் என்னவாகி இருக்கும்? பிரியங்கா தப்பித்திருப்பார்!
ஏனென்றால் நிஜவாழ்வில்உன்னை ஒருநாள் வெட்டிப்பொளந்து போடப் போறேன்என பேச்சுவாக்கில் சொல்பவர்கள் அதை செய்வதில்லை. பேச்சிலேயே அக்கொலை நடந்து முடிந்து போய் விடும். நினைப்பதற்கு நேர்மாறாய் பேசி, உண்மைக்கும் கற்பனைக்குமான கோடு அழியும் வண்ணம் மயங்கிப் போய், “நீ என் தேவதை, உன்னை கோயில் சிலை போல வைத்து அபிஷேகம் செய்வேன்என சொல்பவர்கள் தான் ஒருநாள் கல்லைத் தூக்கி தலையில் போட்டு விடுகிறார்கள். அப்போதும் அப்பெண் குனிந்து தலையை காட்டிக் கொண்டிருப்பார்.
நிஜவாழ்வில் எப்படி முன்குறிப்பாக்கம் நடக்கிறது என்பதற்கு நான் கொடுத்த உதாரணம் கொடூரமானது தான். ஆனால் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு சிறுசெயலிலும் நாம் யாருக்காவது முன்குறிப்பு தந்து கொண்டு தானே இருக்கிறோம்.
 நீங்கள் அதிகம் உணர்ச்சிகளைக் காட்டாத, சற்றே இறுக்கமான கணவன். ஒருநாள் மாலை வீட்டுக்குப் போனதும் மனைவியை கட்டிக் கொண்டு பயங்கரமாய் அன்பைப் பொழிகிறீர்கள். என்னவாகும்? அவர் மனதில் நினைப்பார்: (1) இவருக்கு மரை கழன்று விட்டது. (2) என்னை ஏமாற்றுவதற்காக எதையோ திட்டமிடுகிறார். உஷாராய் இருக்க வேண்டும் (3) சும்மா நாடகம் போடுகிறார். அந்த அன்பு உண்மையாகவே இருக்கும். ஆனால் அவர் அதை திடீரெனக் காட்டுவதால் மனைவியால் ஏற்றுக் கொள்ள முடியாது. தினம் தினம் கொஞ்ச கொஞ்சமாய் பகிங்கரமாய் அன்பைக் காட்டக் கூடியவர்கள் ஒருநாள் ஆரவாரமாய் அன்பை வெளிப்படுத்தினால் அது விசித்திரமாய் தெரியாது. அவர்கள் வேட்டியை கழற்றி தலைக்கு மேல் சுற்றினாலும், உங்களை அள்ளி தட்டாமாலை சுற்றினாலும், ஊரே கேட்கும்படி கத்தினாலும் அது ரொம்ப ரொம்ப இயல்பாகவே இருக்கும். நமக்கு எல்லா விசயங்களிலும் ஒரு தொடர்ச்சி அவசியம். இந்த தொடர்ச்சி ஒருவரின் செயல்பாடு பற்றி, சுபாவம் பற்றி ஒரு பிம்பத்தை ஏற்படுத்த உதவும்.
 உங்களுக்கு ஒரு நண்பரைப் பார்த்து தினமும் வணக்கம் வைக்கத் தோன்றாது. ஆனால் என்றோ ஒருநாள் நல்ல மனநிலையில் இருக்கும் போது அவரை நோக்கி வணங்குவீர்கள். அவர் குழம்பி விடுவார். அவரால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. உங்களைப் பொறுத்த மட்டில் அன்றைய நாள் வணங்கிய போது நீங்கள் முழுக்க ஆத்மார்த்தமாய் இருந்தீர்கள். அதில் சற்றும் பொய்யில்லை. ஆனால் உங்கள் நண்பருக்கோ அது போலியாகத் தெரியும். அவருக்கு அன்றைய நாள் ஒரு நிஜமான வணக்கம் வைக்க நீங்கள் அதற்கு முந்தின நாட்களில் ஒவ்வொன்றிலும் நீங்கள் (ஆத்மார்த்தம் இன்றி) போலியாய் வணக்கம் வைக்க வேண்டும்.
இதனாலே அன்றாட வாழ்வில் மரியாதை நிமித்தமான தொலைபேசி அழைப்புகள், வீட்டுக்கு சென்று சந்திப்பது, வாழ்த்துக்கள், பேஸ்புக் லைக்குகள் முக்கியமாக இருக்கின்றன. ஒருவருடன் உங்கள் தொடர்பு விட்டுப் போயிருக்கும். அவருடன் மானசீகமாய் ஒரு உறவில் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் சந்திக்கவில்லை, பேசவில்லை என்ற காரணத்துக்காகவே நீங்கள் அவரை விட்டு விலகி விட்டீர்கள் என அவர் நினைப்பார். ஒரு கட்டத்தில் உங்களை ஒரு விரோதியாகவே கற்பனை பண்ணி விடுவார். இந்த மாதிரி விரோதங்கள் இலக்கிய வட்டாரங்களில் அதிகம்.
 உங்களது உண்மையான மரியாதையை ஒருவருக்கு காண்பிக்க அவரை பல நாட்களாய் தொடர்ந்து போலியாய் தயாரிக்க (foreshadow செய்ய) வேண்டும். அந்த உண்மையான அன்பை நீங்கள் கடைசி வரை தெரிவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் பிரியத்துடன் உள்ளதாகவே அவர் நம்புவார். 


Comments