உன்னைக் கொல்லும் முன் சற்றே தயாரிக்கட்டுமா? (1)

Related image 
குற்றப்புனைவு படங்கள் மற்றும் நாவல்களால் தூண்டப்பட்டு நடந்த குற்றங்கள் பற்றி தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. சமீபமாய் இந்தியாவில் நடக்கும் கொலைக்குற்றங்களை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகள் குறிப்பாய் சொல்வது என்னவென்றால் குற்றவாளிகள் குற்றத்தை எப்படி சாமர்த்தியமாய் செய்து தப்பிப்பது என்பது பற்றி சினிமாவில் கற்றுக் கொள்கிறார்கள் என்று.
 நான் சமீபத்தைய நாளிதழில் ஒரு செய்தி படித்தேன். ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை அது. இன்போஸிஸில் வேலை பார்த்த பெங்களூரை சேர்ந்த சதீஷ் குமார் குப்தா தன் மனைவி பிரியங்காவை கொன்ற வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளார். கொலைக்கான காரணம் சற்று அபத்தமானது; அற்பமானது. பிரியங்கா தன் மாமனார் மற்றும் மாமியாரை வெறுத்துள்ளார். அவர்கள் தன் வீட்டுக்கு வரக் கூடாது என கண்டிப்பாய் கணவன் சதீஷுடம் கூறி விட்டார். சதீஷ் தன் பெற்றோரிடம் மிதமிஞ்சிய பாசம் கொண்டவர். அவர்களின் படம் கொண்ட லாக்கெட்டை மாலையில் கோர்த்து அணிபவர் என போலீஸ் தரப்பு கூறுகிறது. இதெல்லாம் ஒரு கொலைக் காரணமா என்றே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் இவ்வழக்கில் சுவாரஸ்யம் கொலைக்காரணம் அல்ல, சதீஷ் கொலைக்கு முன்பு தன் மனைவியை தயாரிக்க செய்த காரியங்களே பிரதான சுவாரஸ்யம்!

சினிமா ஸ்டைலில் தன் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி தருவதற்காய் அவள் கண்களைக் கட்டி ஹாலுக்கு அழைத்துப் போகிறார் சதீஷ். பிரியங்காவின் கைகளில் தம் திருமணத்தின் இனிய நினைவுகளை தொகுக்கும் ஆல்பம் ஒன்றைத் தருகிறார் அவர். இதைக் கண்ட பிரியங்கா மகிழ்ச்சியில் புல்லரிக்கிறார். உற்சாகத்தில் துள்ளுகிறார். அடுத்த மாதம் இதை விட பெரிய இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருப்பதாய் அவளிடம் சதீஷ் சொல்கிறார். இம்முறை தனக்கு எதிர்பாரா பரிசாக வைர மோதிரம் கிடைக்கிறப் போகிறது என பிரியங்கா நினைக்கிறார். அது தானா என கணவனிடம் கேட்கிறார். அவர் பிரியங்காவின் ஆர்வத்தை தூண்டும் விதம்இருக்கலாம். ஏன் வியப்பை இப்போதே கலைக்க வேண்டும்?” என்கிறார். சொன்னபடியே, பிரியங்காவை ஒரு மாதம் கழித்து மீண்டும் கண்களை கட்டி அழைத்துப் போய் ஒரு நாற்காலியில் அமர வைக்கிறார். அடுத்து தான் கொண்டு வந்திருந்த நைலான கயிறால் அவரது கழுத்து நெரிக்கிறார். பிரியங்கா இறந்த பின்னரும் அதை உறுதிப்படுத்துவதற்காய் (இதற்காய் வாங்கி வைத்திருந்த) புதுக் கத்தியால் கழுத்தை அறுக்கிறார். இதை அடுத்து தன் கால் அளவை விட பெரிய ஷூக்களை (இதையும் முன்கூட்டியே திட்டமிட்டிருக்கிறார்) அணிந்து அந்த ஹால் முழுக்க நடக்கிறார். சிகரெட்டுகளை புகைத்து துண்டுகளை அங்கங்கே வீசுகிறார். தடயங்களை விடுகிறார். கொள்ளையர்கள் பிரியங்காவை கொன்று பணத்தை திருடிப் போனதாய் கதைகட்டுகிறார்.
காவல் துறையினர் சும்மாவே கணவனைத் தான் சந்தேகப் படுவார்கள். இந்த வழக்கில் பிரியங்காவின் நகைகள் திருடுபோகாமல் இருந்தது (எல்லவற்றையும் கச்சிதமாய் செய்தவர் கொண்டையை மறந்து விட்டார்) அவர்களின் சந்தேகத்தை தூண்டுகிறது. தொடர்ந்து விசாரணையில் சதீஷ் வசதியாய் மாட்டுகிறார்.  
சதீஷ் கொலை செய்வது ஒரு ஆச்சரியம் இல்லை. உலகில் தினமும் யாராவது ஒருவர் உணர்ச்சிவயப்பட்டு கொலை செய்கிறார்; பணத்துக்காக, ஏதாவது ஆதாயத்துக்காக யாருடைய கழுத்தையாவது அறுக்கிறார். கொலைக்கு முன் சதீஷ் உருவாக்கிய கற்பனையான உலகம் தான் நாம் பேச வேண்டியது.
 இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கையில் காட்சிபூர்வமான விசயங்கள் எவ்வளவு முக்கியமான இடம் வகிக்கின்றன என இகொலை காட்டுகிறது. நான் எதையும் நேரடியாய் சொல்லும், எளிமையாய் காட்டும் ஆள். படோபமாய் பேசி உணர்ச்சிகளை நெருப்பாய் வளர செய்து, நாடகீயமாய் சொற்களை வீசி, ஆடம்பரமாய் நடிக்க மாட்டேன். நண்பர்களின் பிறந்த நாளின் போதுஉனக்கு என்ன பரிசு வேண்டும்?” என கேணத்தனமாய் அவர்களிடமே கேட்டு விடுவேன். அப்போது அவர்கள் “உனக்கு அன்பைக் காட்டவே தெரியாதா? என்னை ஆச்சரியப்படுத்தும் விதமாய் ஒரு பரிசைத் தரத் தெரியாதா?” என கடிந்து கொள்வார்கள்.
 நான் ரொம்ப பழைய ஆள். இன்றைய தலைமுறையின் உளவியல் எனக்கில்லை. இன்றைய தலைமுறையின் அன்பு காட்சிபூர்வமானது. அது சொற்களில் இல்லை; வண்ணமயமான, உணர்வுப்பெருக்கான பிம்பங்களில் உறைந்திருக்கிறது. சதீஷ் தன் மனைவியை கொல்வதற்கு தயாரித்த அந்த ஒரு மாதத்தில் அப்படியாக முழுக்க காட்சிபூர்வமாய் தன் அன்பைக் காட்டுகிறார்.
 சதீஷ் தன் மனைவிக்கு கண்ணைக் கட்டி அழைத்து வந்து ஒரு ஆச்சரியப்படுத்தும் பரிசை அவர் கையில் கொடுக்கும் போது அந்த புனைவின் மகிழ்ச்சியில் அவரும் தானே பங்கேற்கிறார்? அவர் ஏன் அப்போதே அவளை கொல்லவில்லை? ஏன் அவளை இந்த கற்பனைக் காட்சி மூலம் தயாரித்து இதை விட பரவசம் தரும் அடுத்த கண்கட்டு பரிசளிப்புக்கு காத்திருக்க வைக்கிறார்? அவளை ஏன் ஒரு மாதம் மகிழ்ச்சியில் திளைத்திருக்க வைக்கிறார்? ”அடுத்த முறை வைர மோதிரம் தருவாயா?” என அவளை ஏன் ஏங்கிக் கேட்க வைக்கிறார்? சதீஷ் தன்னையும் அறியாது ஒரு ரொமாண்டிக்கான கனவுலகில் அந்த குறுகிய காலகட்டத்தில் திளைத்திருக்கக் கூடும். அதுவே அவரை முதல் முறை அவளைக் கொல்லாமல் ஒரு நாடகத்தை நிகழ்த்த செய்கிறது. பிரியங்காவை கொல்லும் முன் அவளை ஒரு முறை தீரக் காதலிக்க அவர் முயன்றிருக்கிறார் எனச் சொல்லலாம்.
 ஒரு பொய்யை ஆடம்பரமாய் சித்தரிக்கும் போது அதை செய்யும் நாமும் அதை ஒரு கட்டத்தில் நம்பி விடுவோம் (அப்போது தான் நம்மால் நன்றாய் நடிக்க முடியும்). தனது காதல் நாடகத்தை சதீஷின் மனமும் ஒரு பக்கம் நம்பி இளகி மகிழ்ந்ததா?
 ஆனால் சதீஷுக்கு உள்ளுக்குள் இது நாடகம், உண்மையல்ல எனத் தெரியும். இது தான் பிரச்சனை. நாமாகத் தெரியாமல் ஒரு நாடகக் காட்சியை நிகழ்த்தும் போது அதை உண்மை என நம்பி உன்மத்த மகிழ்ச்சியில் திளைக்கிறோம். ஆனால் அதன் சூத்திரதாரி நாமே எனும் போது ஒரு பிரச்சனை தோன்றுகிறது: நம்மால் அப்போது முழுமனதாய் அப்பொய்யில் திளைக்க முடிவதில்லை. முதன்முறையாய் வாழ்வில்இது காதல் அல்ல; இது நாடகம்என தோன்றி விடுகிறது. இந்த உறுத்தல், இடறல், அவருக்கு தன் மனைவியின் நடத்தை மீது கடும் கசப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அவளைக் கொல்லும் வெறி அப்போது தான் அதிகமாகி இருக்க வேண்டும். தான் நடத்தும் நாடகத்தை முடித்து வைக்கும் பொறுப்பும் இப்போது தான் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். முதல் காட்சியை எழுதினால் கிளைமேக்ஸையும் எழுதித் தானே ஆக வேண்டும்?
 அவருடைய பிரச்சனை மாமனார் மாமியாரை கடிந்து கொள்ளும் தன் மனைவியின் கோபமூட்டும் நடவடிக்கைகள் மட்டும் அல்ல. அவரது கோபம் தான் ஏமாற்றும் போது மனைவி காட்டும் அந்த சினிமாத்தனமான மனத்திளைப்பும் (கொண்டாட்டம், ஆச்சரியங்கள், ஆடம்பரமான அன்பு வெளிப்படுத்தல்) தான். ஏன் அத்தகையதொரு மனத்திளைப்பு தன் நிஜவாழ்வில் இல்லை என அவர் வியந்திருக்கலாம். இந்த போதாமை உணர்வே அவரை அந்த உணர்ச்சியை, பிரியத்தை, அணுக்கத்தை செயற்கையாய் உருவாக்கி ஒரு காட்சியாக சித்தரித்து அரங்கேற்றி தன் மனைவியை நம்ப செய்திருக்கலாம். ஆனால் அதேவேளை இந்த நாடக அரங்கேற்றம் அவரை வெஞ்சினம் கொள்ளவும் வைக்கிறது.
ஆனால் தான் அரங்கேற்றிய காதல் காட்சிகள் உண்மை இல்லை, வெறும் நாடகம் என்பது எப்படி அவருக்கு உறுதியாகத் தெரியும்? உண்மையான காதலின் போதும் கூட நாம் இது போல் பல காட்சிகளை அரங்கேற்றத் தானே செய்கிறோம்? தன் நாடகக் காட்சியில் மனைவி உணர்வுபூர்வமாய் ஒன்றுவது காணும் போது அவருக்கு எப்படி இருந்திருக்கும்? அவளை அப்படி உளவியல்பூர்வமாய் தயாரித்து அடுத்த முறை இதே போல் அவளை கண்ணைக் கட்டி அழைத்து வரும் போது அவருக்குள் ஒரு விசித்திரமான மகிழ்ச்சி தோன்றியிருக்குமா?

 பொய் சொல்லும் போதும், பாசாங்கு செய்யும் போதும் எதிர்க்கட்சி நம் கட்டுப்பாட்டில் முழுக்க உள்ளதை அறியும் போதும் நம் மனம் கொள்ளும் விநோதமான துள்ளல், களிப்பு அவருக்கு அப்போது ஏற்பட்டிருக்குமா? சதீஷ் நிஜவாழ்வில் புனைவை கட்டமைத்து தன் மனைவியை நம்ப வைத்த விதம் எனக்கு Foreshadowing (முன்குறிப்பாக்கம்) எனும் ஒரு முக்கியமான புனைவு உத்தியை நினைவுபடுத்தியது. சதீஷ் தன் மனைவியை கண்ணைக் கட்டி கொலைக்கத்தியின் முன் அமர வைத்தது போன்றே தான் வாசகனையும் பார்வையாளனையும் நாம் ஒரு படைப்பை எதிர்கொள்ளுவதற்காக தயார் செய்கிறோம்.
நன்றி: தீராநதி

Comments