நமக்கு வாய்த்த அடிமைகள் திறமையாளர்கள்: KFCயில் இருந்து அதிமுக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வரை

Image result for jayalalitha ministers prostate
கார்ப்பரேட்கள் தம் ஊழியர்கள் தனி அடையாளத்துடன், தனி வேலைத் திறனுடன், குறிப்பிட்ட ஒரு துறையில் நிபுணத்துவத்துடன் இருப்பதை விரும்புவதில்லை. நான் சொல்வது கூகிள் / ஆப்பிள் நிறுவனத்தில் அல்ல. நம்மைப் போன்றவர்கள் வேலை பார்க்கும் சாதாரண கார்ப்பரேட் கூலி நிறுவனங்களில்.
 உங்கள் கார்ப்பரேட் நிறுவனத்தை ஒரு சலூனுடன் ஒப்பிடுங்கள். நீங்கள் விதவிதமாய் முடிவெட்டுவதில் விற்பன்னர். உங்கள் கை பட வேண்டும் என்றே வாடிக்கையாளர்கள் கூடுகிறார்கள். இதுவே உங்கள் முகம். இதற்காகவே உங்களுக்கு எங்கு போனாலும் வேலை கிடைக்கும். இதற்காகவே உங்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்து இருத்தி இருக்கிறார்கள். ஆனால் உங்கள் சலூனை ஒருநாள் நவீனப்படுத்த முடிவெடுக்கிறார்கள்.
கடையை ஏஸி பண்ணி, நல்ல இருக்கைகள் அமைத்து, வரவேற்பறை கட்டி, வண்ணமடித்து, வெளியே பெரிய முகப்பு பெயர் பலகை வைத்து பிரமாதப்படுத்துகிறார்கள். கூடுதலாய், புது ஊழியர்களையும் இருத்துகிறார்கள். எல்லாம் சரி. சிறப்பு. ஆனால் இப்போது தான் திருப்பம் ஒன்று வருகிறது.

 இனிமேல் அனைத்து ஊழியர்களுக்கும் செய்ய வேண்டிய பணிகளை நிர்வாகம் தீர்மானிக்கப் போகிறது. இனிமேல் எல்லா ஊழியர்களும் சவரம் செய்ய வேண்டும், எல்லாரும் மீசை திருத்த வேண்டும், எல்லாரும் முடிக்கு சாயம் தேய்க்க வேண்டும். எல்லாரும் அவ்வப்போது வரவேற்பு மேஜையில் அமர்ந்து கைகூப்பி வணங்கிவாங்க வாங்க சார்என்று சொல்ல வேண்டும். கல்லாவை கவனிக்க வேண்டும். ஓய்வாக இருக்கும் போதுகடையை பெருக்கி துடைக்கவும் வேண்டும். இது போக எல்லாரும் சீருடையும் அணிய வேண்டும். எல்லாருக்கும் ஒரே பயிற்சி, ஒரே திறன்கள், ஒரே வித பொறுப்புகள்.
 மேலே சொன்னவர் இருக்கிறார் அல்லவா, அவர் தான் பாவம். அவர் பெரிய நெருக்கடியை சந்திக்கிறார். அவரிடம் நிர்வாகம் சொல்லும், “தம்பி, நீ இனிமேல் பெரிய நிபுணன் ஒன்றும் இல்லை, நீயும் மற்றவர்களும் ஒன்றே, நீ செய்வதை அவர்களும் செய்வார்கள், அவர்கள் செய்வதை நீயும் செய்வாய். நான் சவரம் பண்ண மாட்டேன், மசாஜ் பண்ண மாட்டேன் என்றெல்லாம் பிகு பண்ணக் கூடாது. உன் இடத்தில் எங்களுக்கு ஆயிரம் பேர் கிடைப்பார்கள். ரோட்டில் போகிற கழுதையை பிடித்து ஒரே மாதம் பயிற்சி கொடுத்து உன் வேலையை உன்னை விட சிறப்பாய் பண்ண வைக்க எங்களால் முடியும்.”
இன்று ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் ராட்சஸ வளர்ச்சி பெற்று வரும் நிலையில், அனைவர் விரல் நுனியிலும் இணையம் வந்து விட்ட நிலையில், இப்பிரச்சனை மேலும் உக்கிரமாகி வருகிறது. சிக்கலான எந்த வேலையையும் மென்பொருள் மூலம் சுலபத்தில் சாதிக்கலாம் என நிர்வாகங்கள் இன்று நம்புகின்றன. இந்த ஆட்டோமேஷன் மென்பொருட்களை கவனிக்கவும் கையாளவுமே இன்று ஆட்கள் தேவை.
அது எப்படி மிகச்சிக்கலான, சிரமமான வேலைகளை ஒரு மென்பொருள் செய்ய முடியும் என நீங்கள் கேட்கலாம். .தா, ஒரு மென்பொருளால் இலக்கண, எழுத்து, தகவல் பிழைகள் மலிந்த ஒரு பிரதியை மெய்ப்பு நோக்க முடியுமா? முடியும். 50% பிழைகளை பொறுக்கி எடுக்க முடியும். இதன் மூலம், அனுபவமே அற்ற ஒரு புதுப் பையனைக் கொண்ட நடுத்தர அனுபவம் கொண்ட ஒருவரைக் கொண்டு இடம் மாற்ற முடியும். ஒரு மூத்த பிழை திருத்துநர் இல்லாத குறையை ஓரளவு சமாளிக்க முடியும். ஒருவர் சம்பளத்தில் நான்கு ஆட்களை வேலை வாங்க முடியும். எதிர்காலத்தில் மென்பொருட்களே பத்திரிகைகளுக்கு தோதான கட்டுரைகளை அதிகமாய் எழுதும். அது போதாத போது, போன் செய்து படைப்புகளை எழுத்தாளர்களிடம் கோரும். வடிவமைக்கும். டி.வி நிகழ்ச்சிக்கு பின்னணிக் குரல் நல்கும். காட்சிகளை வெட்டி ஒட்டி ஆவணப்படங்களை உருவாக்கும். இதில் எல்லாம் கற்பனையும் அனுபவமும் ரசனையும் முதிர்ச்சியும் கொண்ட ஒரு மனிதனின் தனித்துவமும், ஆழமும், முத்திரையும் நிச்சயம் இராது. ஆனால் ஒரு பொதுவான தரம், ஒரே வகையான ஒரு தரம் இருக்கும்.
நான் மேலே குறிப்பிட்ட பத்திரிகையில் கார் ஓட்டவும், டீ வாங்கி வரவும் ஆட்கள் சிலர் இருப்பார்கள். இனி அவர்களுக்கு அடிப்படை பயிற்சி அளித்து, மென்பொருட்களை நிர்வகிக்க கற்றுக் கொடுத்தால், அவர்களாலே ஒரு பத்திரிகையை கொண்டு வர முடியும். தனித்திறன்கள் கொண்டவர்கள் அம்போ என நிற்க வேண்டியது தான். அவர்கள் தம் திறமைகளை மேலும் வளர்த்து தயாராக வேண்டும் என சில சிந்தனையாளர்கள் தீர்வு கூறுவார்கள்.
உண்மையே. இதனால் மக்கள் அனைவரும் வேலையிழந்து தவிக்கப் போவதில்லை. நம்மை மேம்படுத்தி போட்டியிடத் தான் போகிறோம். புதுப்புது தேவைகளை முதலாளித்துவம் வாடிக்கையாளர்களிடத்து உருவாக்கிக் கொண்டே இருக்கும். அதோடு நமக்கான வேலைகளும் பெருகித் தான் வரும். ஆக ஆட்டோமேஷன் நம்மை பட்டினி இடப் போவதில்லை.
ஆனால் பிரச்சனை நடைமுறை சார்ந்தது அல்ல. இது மனிதனின் இருப்பின் அடித்தளத்தை நொறுக்கும் பிரச்சனை. இதன் விளைவாக, எதிர்காலத்தில் நாம் கடும் அக நெருக்கடியை எதிர்கொள்ளப் போகிறோம். போதையிலும் கேளிக்கைகளிலும் குற்றங்களிலும் நம்மைத் தொலைக்கப் போகிறோம். மனநல மருத்துவரின் வரவேற்பறையில் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காய் பெருகப் போகிறது. ஏன், எப்படி எனப் பார்ப்போம்.
நமது தனிமனித அடையாளம் நாம் செய்யும் வேலையை பொறுத்து உருவாகிறது. இதில் சிறு குழப்பம், தடுமாற்றம் ஏற்பட்டாலே நம்மால் அதை தாங்க முடிவதில்லை. நம் வேலையை யார் வேண்டுமெனிலும் செய்யலாம், ஒரு மென்பொருள் கூட செய்யலாம் என்பது மட்டுமல்ல, நாம் எந்த வேலையையும் செய்யலாம், நமக்கென்று நிபுணத்துவம், தனித்திறன் என ஒன்று இனி இல்லை எனும் சேதி நாம் எதிர்கொள்ள விரும்பாத, நம்மால் சமாளிக்க முடியாத ஒன்று.
 முதலாளித்துவம் நமது ஆடைகளை, அடையாளப் பட்டியை, உள்ளாடையை உருவி நீ அம்மணமானவன், இனி நீங்கள் அனைவரும் எங்களுக்கு ஒன்றே என சொல்லும் போது மனிதன் இதுவரை கற்றதும் பெற்றதும் அர்த்தமற்றதாகிறது. மையமே இல்லாதவனாய் மனிதன் ஆகிறான். கனமற்ற ஒரு பலூன் போல் அவன் மிதந்து கொண்டே இருக்க வேண்டியதாகிறது. தான் யார் எனும் தெளிவின்றி, தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்க வேண்டியதாகிறது. காற்றடிப்பது நிற்கும் போது பலூன் மெல்ல அசைந்தாடி ஒரு இடம் பார்த்து மெல்ல அமரும். அது அதற்காகத் தான் தவிக்கிறது. கனமில்லாத மனிதனும் அவ்வாறே சமூக வலைதளம், தொடர்புகள், எண்ணற்ற நட்புகள், தகாத உறவுகள், பயணங்கள், சூதாட்டம், கேளிக்கை, போதைப் பழக்கம் என ஈடுபட்டு எங்காவது ஓரிடத்தில் தன்னை இருத்திக் கொள்ள தவிப்பான். ஆனால் முதலாளித்துவம் எனும் காற்று அவனை மீண்டும் எழுந்த பறக்கச் செய்யும்.
கார்ப்பரேட் மயமாகும் எல்லா அமைப்புகளிலும் இந்த எடையிழப்பு அபத்தத்தை நாம் காணலாம். நிலவுடைமை சமூகமான இந்தியாவில் கார்ப்பரேட்மயமாக்கல் மிக தாமதமாகவே நிகழ்ந்தது. அரசியலில் இதை வெற்றிகரமாய் செயல்படுத்தியவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரின் நிர்வாகத்தில் அக்கட்சி ஒரு பெரிய பண்ணையை போல் நடந்தது. எம்.ஜி.ஆரின் நிழலைக் கண்டால் பதுங்கும் பண்ணையாட்கள் நிறைந்திருந்தனர். ஆனால் எந்த நிலப்பிரபுத்துவ அமைப்பிலும் அதிகாரம் தலைமையில் குவிந்திருப்பதால், பண்ணையாட்கள் தம்மை அந்த அதிகாரத்தின் பிரதிபிம்பமாய் காண்பதால், அதிகாரம் தகர்ந்ததும் அடுத்த தலைமை தோன்றும் வரை ஆட்கள் ஆளாளுக்கு முதன்மை இடத்துக்காய் கூச்சலிடுவார்கள். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் நடந்த களேபரங்கள், அதிகார பாய்ச்சல்கள், வன்ம வெளிப்பாடுகளை ஜெயலலிதா நேரில் கண்டார். நிலப்பிரபுத்துவ அமைப்பில் அடிமைகளின் பணிவு என்பது தற்காலிகமானது என அவர் உணர்ந்து கொண்டார். நிலப்பிரபுத்துவ அமைப்பில் நிலம் மட்டுமே முதலாளிக்கு ஆனது. அதை பொன்னாக்கும் தனித்திறனும் உழைப்பும் வேலையாட்களுடையது. அவர்களின் இடத்தை, முக்கியத்துவத்தை ஏற்றுக் கொண்ட பின்னரே பண்ணையார் தன் தலைமை கட்டமைக்கிறார். அவரது இருப்பின் அடித்தளமே அவர்களின் மரியாதையில், போலியான பணிவில் இருக்கிறது. அவர்கள் பண்ணையாருக்காக எதை வேண்டுமெனிலும் செய்வார்கள் என்பது எந்தளவுக்கு உண்மையோ அவர்கள் பண்ணையாரை எப்போது வேண்டுமெனிலும் தூக்கி எறியலாம் என்பதும்  அந்தளவுக்கு உண்மையே.
 ஆக ஜெயலலிதா கட்சித் தலைமையை ஏற்று வெற்றி கண்ட பின் அதிமுகவை அதன் குட்டித் தலைவர்கள் மற்றும் பண்ணையாட்களின் ஆதிக்கத்தில் இருந்து மீட்க முடிவெடுத்தார். கட்சியை அவர் கார்ப்பரேட்மயமாக்கினார். அதுவரை ஒவ்வொரு மாவட்டத்தையும் நிர்வகித்து வாக்குகளை வசமாக்கிய வலுவான குட்டித் தலைவர்களின் இடத்தில் யாரென்றே அறியாத நபர்களை தேர்ந்தெடுத்தார். அடையாளமே அற்றவர்களை தேர்தலில் நிறுத்தி எம்.எல்., மந்திரி ஆக்கினார். ஜெயலலிதா எனும் பிம்பத்துக்கு மட்டுமே வாக்கு, அதிமுக என்றால் ஜெயலலிதா எனும் பிராண்ட் பிம்பம் மட்டுமே எனும் நிலையை உருவாக்கினார். மேடைகளிலும் மீடியா முன்பும் ஜெயலலிதா தன் கட்சி நிர்வாகிகளையும் இடைநிலை தலைவர்களையும்ஊழியர்களைப்போல நடத்தினார். அவர்கள் தன் முன்பு அடிபணிந்து காலடியில் தலையை வைத்து வணங்கும் படி அவர் செய்தது ஒருநிலப்பிரபுத்துவ ஏதேச்சதிகாரமாய்தோன்றினாலும், உண்மையில் அது ஒரு நவமுதலாளித்துவ பிராண்டிங் தந்திரம் மட்டுமே.
ஜெயலலிதா இவ்வாறு செயல்பட்டது ஒரு பெண்ணாய் ஆண்கள் மத்தியில் தன்னை நிலைப்படுத்தவே என கூறப்படுகிறது. இருக்கலாம். ஆனால் அவர் தன்னை ஒரு பிராண்டாக மாற்றிக் கொண்ட பின், கார்ப்பரேட் அமைப்பாய் அதிமுக மாறியபின் அவருக்கு யாராலும் அச்சுறுத்தல் வர வாய்ப்பே இருக்கவில்லை. இன்று அவர் மறைந்து விட்டார். ஆனால் அதிமுக நிர்வாகிகளோ இடைநிலை தலைவர்களோ ஜெயலலிதா எனும் பிராண்டை வணங்கியே ஆட்சியை நடத்துகிறார்கள். அவரது பிராண்டை மீற என்ன அதற்கு இணையாக நிற்கக் கூட யாரும் முயல்வதில்லை. இவ்வாறு கட்சியை மாற்றுவதே அவரது லட்சியமாக இருந்தது எனலாம். ஏன்? அதனால் என்ன பயன்?
ஜெயலலிதா தன் கட்சியை KFC, கோக், சப்வே போல மாற்றினார். நீங்க KFC கடை நடத்த அதன் முகவரானால் போதும். அதற்கு மேல் அதை விளம்பரப்படுத்தி மக்களை அதன் பால் திருப்ப வேண்டியதில்லை. நீங்கள் அதை மேம்படுத்த எதையுமே செய்ய வேண்டியதில்லை. கடையில் அவர்கள் பாணியில் வண்ணமடித்து, விளம்பரப் பலகை வைத்து, அவர்கள் தரும் மூலப்பொருளைக் கொண்டு அவர்கள் அளித்த பயிற்சியைக் கொண்டு சுவை மாறாமல் சிக்கனை பொரித்து வைத்தால் போதும். கூட்டம் முண்டியடிக்கும். சிக்கன் துண்டுகள் தானே விற்கும். மக்கள் கடையின் சமையல்காரருக்காய் வரப் போவதில்லை. பிராண்டுக்காக் வருகிறார்கள். “அந்த ஓட்டலில் பிரியாணி அபாரமாய் இருக்கும்எனச் சொல்லி சென்னையில் என் வீட்டருகே உள்ள மாஸ் ஓட்டலுக்கு தொலைவில் இருந்தெல்லாம் வாடிக்கையாளர்கள் வருவார்கள். அந்த சுவையையும் தரத்தையும் நல்ல பெயரையும் தக்க வைக்க அங்குள்ள மூன்று மாஸ்டர்களுக்கு மாதம் 30,000 சம்பளம் கொடுக்கிறார்கள். தங்க இடம் கொடுத்து நன்றாய் கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் KFCயில் இந்த மாதிரி பருப்பெல்லாம் வேகாது. அங்கே சமைக்கவே தெரியாத ஒரு ஆளை மலிவான சம்பளத்துக்கு இருத்திக் கொண்டு கூட நிர்வாகத்தால் வாடிக்கையாளர்களை இழுக்க முடியும்.
திமுகவுக்கும் அதிமுகவுக்குமான முக்கியமான வித்தியாசம் என இதைச் சொல்வார்கள்: திமுகவின் வெற்றி என்பது ஒவ்வொரு மாவட்டத்திலும் அக்கழகத்துக்காய் உழைக்கும் பெருந்தலைகளை நம்பி உள்ளது. அவர்களை நிராகரித்து அங்கு திமுக ஒரு மாநாட்டை கூட நடத்த முடியாது. ஆனால் அதிமுகவிலோ ஜெயலலிதா எந்த பின்னணியும் இல்லாத ஒருவரை (முகவராய்) நிறுத்தி வெற்றி பெறச் செய்வார். கட்சியின் ஒவ்வொரு செயல்பாடும், ஒவ்வொரு சொல்லும், நிறமும், நிலைப்பாடும் அவர் தீமானித்தார். அவரது கட்சிக்காரர்கள் எங்கு எப்போது எவ்விதம் செல்ல வேண்டும், எதை செய்ய வேண்டும், செய்யக் கூடாது என திட்டவட்டமான வரையறைகள் அளித்தார். இதை வெளியே நின்று காணும் நமக்கு ஜெயலலிதா ஒரு சர்வாதிகாரி, அதிகார மமதை கொண்டவர், அவர் அதிமுக நிர்வாகிகளையும் தலைவர்களையும் முதுகெலும்பற்றவர்களாய் மாற்றி வைத்திருக்கிறார் என ஒரு சித்திரம் ஏற்பட்டது. ஜெயலலிதா தனது பாதுகாப்பின்மையின் விளைவாகவே இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று கூட எண்ணினோம். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது.
 ஜெயலலிதா அதிமுகவை தொடர்ந்து வெற்றிகளை உற்பத்தி செய்யும் ஒரு நேர்த்தியான எந்திரமாக மாற்றிக் கொண்டிருந்தார். கார்ப்பரேட் உலகில் ஒரு முதலீட்டை செய்து எப்படி பலமடங்கு லாபம் பெறுவது என்பதைப் பற்றி சிந்திக்கையில் ரிஸ்க்கை எப்படி முழுக்க நீக்குவது என்பதில் முன்னுரிமை கொடுப்பார்கள். மனித தலையீடு, தனிமனித மனத் தத்தளிப்புகள் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய இடையூறு. தனிமனித மன விசித்திரங்கள், கோணல்கள் ஒரு நிறுவனத்தின் எழுச்சிக்கு காரணமாகக் கூடும். ஸ்டீவ் ஜாப்ஸின் ஆளுமை ஒரு உதாரணம். ஆனால் அதே ஜாப்ஸின் நிலையின்மை நிறுவனத்தை சறுக்க செய்வதாய் பங்குதாரர்கள் கருதின போது 1985இல் அவரையே ஆப்பிளில் இருந்து வெளியேற்றினார்கள்.
 இன்றைய ஆட்டோமேஷன் உலகில் தனிமனித பிறழ்வுகளை முழுக்கவே வியாபாரத்தில் இருந்து அகற்றி, முழுக்க மனிதத்தன்மையை மீறின, அதனாலே மானிட பலவீனங்களைக் கடந்த ஒரு நிலைக்கு நிறுவனங்கள் நகர முயல்கின்றன. அதனாலே இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்கள் தம் ஊழியர்களின் தனித்த சுபாவங்களை அழித்து அந்த இடத்தில் பொதுப்படையான நிறுவன சுபாவம் ஒன்றை ஒவ்வொரு ஊழியனிடத்தும் விதைத்து வளர்க்க முயல்கின்றன. தன்னை முழுக்க அழித்து தானற்று போகும் ஒரு ஊழியனே இன்றைய கார்ப்பரேட் உலகில் வெற்றி கண்டு முன்னேற முடியும். ஜெயலலிதாவும் அதிமுகவில் இதையே முயன்றார். தானற்ற பல சிறந்த ஊழியர்களை உருவாக்கினார். அவர்களைக் கொண்டு ஆச்சரியமான பல தேர்தல் வெற்றிகளை ஈட்டினார். ஜெயலலிதாவின் பட்டறையில் அவ்வாறு உருவான ஒரு லட்சிய ஊழியர் தான் .பி.எஸ்.
 அதிமுகவில் ஜெயலலிதாவையும், அவர் நிழலில் பதுங்கி இருந்து காய்களை நகர்த்திய சசிகலா குடும்பத்தினரையும் தவிர வேறு யாருக்கும் தனிப்பட்ட பிறழ்வுகளை வெளிப்படுத்தவோ அதன் அடிப்படையில் செயல்படவோ அனுமதியில்லை. ஆக, ஆரம்பத்தில் இருந்தே இந்த இருவரும் மட்டுமே அதிமுகவின் வீழ்ச்சிக்கு காரணமாக முடியும் எனும் நிலை இருந்தது. அவ்வாறே நிகழ்ந்தது. இதை உணர்ந்து தன்னையும் சசிகலா குடும்பத்தினரையும் சற்றே கட்டுப்படுத்தி அதிமுக எந்திரத்தை முடுக்கி விட்ட போதெல்லாம் ஜெயலிலதா அபாரமாய் வென்றார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரும் பாஜக குறுக்கிட்டு அதிகார போட்டிகளையும் உட்கட்சி பூசல்களை மூட்டி விட்டிருக்கா விட்டால் அதிமுக தொடர்ந்து அதன்பாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்திருக்கும். தானற்ற அதிமுக தலைவர்கள் எவ்வளவு கராறான கச்சிதமான ஊழியர்களாய் தம் காதுகளையும் வாயையும் பொத்திக் கொண்டு கடமையே லட்சியம் என இருக்க முடியும் என்பதை நாம் கூவத்தூர் அத்தியாயத்தின் போது கண்டோம். அதிமுகவினரைப் பொறுத்தமட்டில் ஜெயலிலதாவின் மறைவு, அதன் விளைவான தலைமை வெற்றிடம் ஆகியவை பெயரளவிலானவை தாம். ஜெயலலிதா இல்லாவிட்டாலும், அவருக்குக் கீழ் அவர்கள் செயல்பட்ட பாணி இன்றும் அப்படியே தான் இருக்கிறது. பாஜக தலைமையின் கீழ் அதிமுகவினர் எந்த சிரமமும் இன்றி எண்ணெய் விட்ட சக்கரங்கள் போல் ஓடுவதை கவனியுங்கள்.
 அதிமுகவினருக்கு ஜெயலலிதாவை பார்க்கவோ அவர் குரலை கேட்கவோ தேவையில்லை. அக்கட்சியின் நுண் அதிகாரத்தில், வழமைகளில், கட்சி மொழியில், சடங்குகளில், அஜெண்டாவில் ஜெயலலிதா தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறார். உண்மையில் இந்த கட்சிக்காரர்கள் நேரடியாக ஜெயலலிதாவை சந்திக்க வேண்டியதே இல்லை. ஜெ தன்னை கட்சியின் ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொரு கையசைவிலும், கண்ணிமைப்பிலும் உருமாற்றி வைத்திருக்கிறார். அக்கட்சியில் இருப்பவர் சொல்லிலும் செயலிலும் அவர் உருவேற அதிக சமயம் பிடிக்காது. அந்தளவுக்கு கட்சியை கார்ப்பரேட்மயமாக்கியவர் அவர். அவரது மறைவுக்குப் பின் தமிழகத்துக்கு சம்மந்தமே இல்லாத சக்திகள் மிக சுலபமாய் அக்கட்சியை கட்டுப்படுத்த முடிவதற்கு காரணம் அக்கட்சியினரின் ஊழல் செய்யும் சுபாவம், அதிகார பேராசை மட்டுமல்ல. பிரதான காரணம் அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் என்பதே. நாளையே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகளை ஒரு சீன நிறுவனம் வாங்கி விட்டால் அதனால் மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு எந்த சிக்கலும் இராது. அவர்கள் அந்த மாற்றத்தையே உணர மாட்டார்கள். முகமற்ற மனிதர்களுக்கு தாம் யார், தமக்கு என்ன நிகழ்கிறது என்பவை எல்லாம் பொருட்டல்ல.
இந்த முகமற்ற மனிதர்கள் பணமும் அதிகாரமும் படைத்தவர்களாய், தளுக்காய் நாசூக்காய் தெரிந்தாலும் அவர்கள் அனுதினமும் எதிர்கொள்ளும் நெருக்கடி நெருப்பில் நிற்பதற்கு இணையானது.
 முன்பு டிவியில் ஒரு கிரிக்கெட் தொடர் ஒளிபரப்பாகும் போது அந்தந்த நாடுகளின் முன்னாள் வீரர்களை வர்ணனைக்கு கொண்டு வருவார்கள். இருநாட்டு வர்ணனையாளர்களையும் ஒருவரோடு ஒருவர் மோத விடுவார்கள். அவர்களும் உணர்வுபூர்வமாய் இதைச் செய்வார்கள். 1998இல் ஆஸ்திரேலியா இந்தியா வந்த போது கவாஸ்கரும் இயன் போத்தமும் அவ்வாறு மோதிக் கொண்டது பார்வையாளர்களை பரவசமூட்டியது. இதன் பொருட்டு எந்த நாடு சர்வதேச ஆட்டம் ஆடினாலும் அந்நாட்டின் முன்னாள் வீரர்களுக்கு தம் குரலை பதிவு செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஜிம்பாப்வே, வங்கதேசம் போன்ற ஆளே இல்லாத ஊர்களின் வர்ணனையாளர்களும் தம் உணர்வுத் தளத்தில் இருந்து தம் அரசியலைப் பேசினார்கள். ஒவ்வொரு நாட்டினரின் சுபாவத்தை, பண்பாட்டு நிலையை கவனிக்க பார்வையாளர்களான நமக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக இது அமைந்தது. உதாரணமாய், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே போன்ற ஆப்பிரிக்க தேசத்து வெள்ளையின வீரர்கள் வெறித்தனமான தேசப்பற்றுடன் தம் நாட்டு வீர்ர்களை ஆதரித்துப் பேசுவார்கள். மே. தீவுகளின் வீர்ர்களோ தேசப்பற்றைப் பற்றி அலட்டிக் கொள்ள மாட்டார்கள். யார் ஆவேசமாய் ஆடினாலும் அதைக் கொண்டாடுவார்கள், அதிகம் உணர்ச்சிவயப்படாமல் அலட்சியமாய் பேசுவார்கள், என்றாலும் அவர்கள் கூர்மையானவர்கள் எனக் கண்டோம். ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களும் இவ்வாறு தான். ஆனால் இங்கிலாந்து மற்றும் இலங்கை வர்ணனையாளர்கள் நாசூக்காய், கவனமாய், புத்திசாலித்தனாய், நுணுக்கமாய் பேச எத்தனிப்பார்கள். இந்தியர்களும் பாகிஸ்தானியரும் ஒரே வகை உணர்வுக்கொழுந்துகள், ஒரேநான் நான்என வர்ணனையாளன் தன்னையே முன்னிறுத்த நினைக்கும் பேச்சு.
ஆனால் இவ்வளவு மாறுபட்ட தன்மைகளும் இன்று காணாமல் போய் விட்டன என்பதை சமீபமாய் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பை கவனித்த போது கவனித்தேன். தனித்தன்மையான வர்ணனையாளர்கள் நீக்கப்பட்டு, அவர்களின் இடத்தில் பொதுவான நட்சத்திர அந்தஸ்து கொண்ட வர்ணனையாளர்கள் வருகிறார்கள். இவர்கள் எந்த நாடு கிரிக்கெட் ஆடினாலும் வர்ணிக்க டையையும் கோட்டையும் மாட்டிக் கொண்டு வந்து விடுகிறார்கள். இந்தியா, நியுசிலாந்த், இங்கிலாந்து, இலங்கை என யாருடன் ஆடினாலும் ஹெய்டன், ஹஸ்ஸி போன்ற நடுநிலை வர்ணனையாளர்கள் தமக்கு சம்மந்தமில்லாத நாடுகளின் ஆட்டம் பற்றி பொத்தாம் பொதுவாய் பேசி விட்டு போய் விடுகிறார்கள். அவர்களின் பேச்சில் நேர்த்தியும் வாத நுணுக்கமும் உண்டு, ஆனால் உணர்ச்சி ஆழமும் ஆவேசமும் இல்லை. சச்சினின் ஆட்டத்தை நம்மால் கவாஸ்கரின் பின்னணி வர்ணனை இன்றி தனித்து கற்பனை செய்ய முடியுமா? சச்சினை ஒரு பெரும் பிம்பமாய் வளர்த்தெடுத்ததில், அவரது ஆட்டத்தின் நுணுக்கங்களை, மேதைமையை மக்களின் மனதில் நிறுவியதில் கவாஸ்கரின் குரலுக்கு முக்கிய பங்கு உண்டு அல்லவா. ஆனால் சச்சின் இன்று ஆடியிருந்தால், அவரைப் பற்றி வறட்டுத்தனமான குரலில் ஒரு இயன் போத்தம் பேசிக் கொண்டிருந்திருப்பார், கவாஸ்கர் அல்ல. ஏன் இப்படி ஒரு அபத்தமான நிலைப்பாட்டை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் எடுக்கிறது என நான் யோசித்தேன். இல்லை, இது அபத்தம் அல்ல, இன்று எல்லா கார்ப்பரேட்டுகளும் செய்வதையே ஸ்டார் ஸ்போர்ட்ஸும் செய்கிறது என உடனே எனக்குத் தோன்றியது.
கவாஸ்கர், சச்சின் போன்ற தனிமனித நட்சத்திரங்களை புரொமோட் செய்த காலம் முடிந்து விட்டது. முன்பு போல் அன்றி இன்று மிக அதிக எண்ணிக்கையில் ஆட்டங்கள் நடக்கின்றன. இவற்றில் எந்த ஆட்டத்தில் யார் ஆடுகிறார்கள், எது சிறப்பானது என்பது ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு முக்கியமல்ல. எல்லா ஆட்டங்களில் இருந்தும் பணம் கொட்ட வேண்டும். எல்லா ஆட்டங்களையும் தரமாக மாற்ற வேண்டும். அதற்காய், எல்லா ஆட்டங்களிலும் பிரசித்தமான சில முன்னாள் வீர்ர்களை பேச வைக்கிறார்கள். இவர்களுக்கு இந்த ஆட்டங்களில் மனப்பூர்வமான ஈடுபாடு உண்டா என்பதெல்லாம் ஒரு கார்ப்பரேட் நிர்வாகத்துக்கு அவசியமற்ற விசயம். எந்த ஒரு ஆட்டம் நடந்தாலும் அதை அதிகம் பேர் பார்க்கும் ஒன்றாய் மாற்ற வேண்டும். அப்பணியை செய்யும் பொதுவான ஊழியர்களே இந்த வர்ணனையாளர்கள். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் காட்டப்படும் எல்லா ஆட்டங்களும் ஒன்றே. அங்கு பணி செய்யும் ஒவ்வொரு வர்ணனையாளரும் ஒருவரே. இதன் மூலம் லாபத்தை பெருக்குவதே ஒரே நோக்கம். ஜெயலலிதா அதிமுகவுக்கு செய்ததையே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சற்று தாமதமாய் தம் கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கு இப்போது செய்கிறது.
ஆனால் இந்த அடையாளமற்ற பணியில் ஈடுபடும் வர்ணனையாளர்களின் தத்தளிப்புகள் காண உண்மையில் பாவமாய் உள்ளது. இலங்கையை விராத் கோலி ஒட விட்டு அடிப்பதைப் பார்க்க ஒரு ஆஸ்திரேலிய முன்னாள் வீர்ரான ஹெய்டனுக்கு எந்த ஆர்வமும் ஏற்படாது. ஆனாலும் அவர் அது குறித்து எச்சில் முழுங்கி ஏதாவது ஒரு கருத்தை சொல்லியே ஆக வேண்டும் எனும் நிலை ஏற்படும் போது டிவியில் அவர்களைப் பார்க்க பரிதாபமாய் உள்ளது.
இந்த கார்ப்பரேட் பண்பாட்டை மிக நுட்பமாய் பகடி செய்யும் காட்சி ஒன்று ஆயிரத்தில் ஒருவனில்வரும். அடிமைகள் கடுமையாய் உழைப்பதை இளவரசி பூங்கொடி (ஜெயலலிதா) ரசித்து செங்கப்பனிடம் அவர்களைப் பாராட்டுவாள். உடனே செங்கப்பன் அமோதிப்பார்: “ஆம் நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்.” அடிமைத்தனமும் திறமையும் எப்படி ஒன்றோடு ஒன்று முரண்படும் விசயங்கள் பாருங்கள். அடிமை முகமற்றவன், ஆனால் திறமை தனித்தன்மையுடன், சுயேச்சையுடன் தொடர்பு கொண்டது. வெறும் அடிமையினால் பயனில்லை, சுயேச்சையான திறமையாளனை சுலபமாய் வேலை வாங்க முடியாது. திறமை மிக்க ஆனால் தன்னை இழந்த ஒருவனே சிறந்த ஊழியன். அதனாலே நம் அடிமைகள் திறமைசாலிகள் என பாராட்டும் போதே அவர்களை செங்கப்பன் அடையாளம் அழிக்கிறார்.
ஆம், இந்த உலகின் அத்தனை அடிமைகளும் மிக மிக திறமைசாலிகள். அதனாலே அவர்கள் உள்ளுக்குள் நிம்மதியாக இல்லை!

Comments

Anonymous said…
Great write up and a thought provoking article. Worth reading it multiple times. Keep it up! Thanks for this.Sampath
Gowrisankar Krishnamurthy said…
Corporate to politics to cricket.. wow... Amazing... Nicely scripted.. kudos !
கார்ப்ரேட் கலாசாரம் இடைநிலை உழியர்களை உருவாக்கும் நோக்கு புரிகிறது ஆனால் அடிப்படை அறிவெழுட்சி சார்ந்த கட்டமைப்பு உருவாக கல்வி தர மேம்பாடு அவசியம் என்று எண்ணுகிறேன்.. அங்கும் கார்ப்பரேட் அநாயசமாக நுழைந்திருப்பது வருத்தமளிக்கிறது..மிக முக்கியமான பதிவு ..நன்றி
MANOHARAN1980 said…
In-depth Analysis. Great Effort